ஒரு வார காலமாக மன்னராட்சிக்கு எதிராக கொந்தளிப்பில் இருந்து வரும் வளைகுடா நாடான பஹ்ரைனில் ஞாயிற்றுக்கிழமை பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதற்கு நாடு முழுதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடபகுதியில் உள்ள துனீசியா, எகிப்து நாடுகளைத் தொடர்ந்து ஆட்சிமாற்றம் எனும் அலை அரேபிய வளைகுடாவின் கரையைத் தொட்டது. இதில் பாதிக்கப்பட்ட முதல் நாடு பஹ்ரைன். மன்னராட்சி நடந்து வரும் இங்கு கடந்த ஒரு வார காலமாக ஆளும் அரசை எதிர்த்து நாடுதழுவிய மக்கள் போராட்டம் நடந்துவருகிறது. இந்தப் போராட்டங்களில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இங்கு முழு கதவடைப்பு நடத்த ஆட்சி எதிர்ப்பாளர்களும், தொழிலாளர் அமைப்புகளும் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு அந்நாட்டில் அதிக அளவில் மக்கள் வரவேற்புள்ளது என்று காட்டும்விதமாக கிட்டத்தட்ட எல்லா பணிகளும் முடங்கியது. பஹ்ரைனில் ஆட்சிபுரிந்துவரும் ராஜகுடும்பத்தினர் சொகுசாக வாழவும் மக்கள் கொடும் வறுமையில் வாடவுமான ஏற்றத்தாழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மன்னராட்சி ஒழிய வேண்டும் மக்களாட்சி மலர வேண்டும் என்பது அம்மக்களின் கோரிக்கையாகும் . ஆனால் எந்த பேச்சுவார்த்தைக்கும் இன்னும் ராஜகுடும்பம் தயாராகவில்லை. சர்வதேச அரசியல் ரீதியாக இந்தப் பிரதேசம் அமெரிக்காவுக்கு மிக முக்கியமானது. அண்டை நாடான ஈரான் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. அதனை சரிகட்ட இந்தப் பகுதியில் கப்பற்படை தளம் அமைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்க கப்பற்படையின் ஐந்தாம் பிரிவின் தலைமையிடம் பஹ்ரைனில் அமைந்துள்ளது. அந்த வகையில் முக்கிய பிராந்தியமான பக்ரைனில் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதை அடுத்து மக்கள் உற்சாகமாக போராட்டதிற்கு தயாராகி வருகின்றனர். அதை உலகில் உள்ள உழைக்கும் வர்க்கம் அனைத்தும் வரவேற்க தயாராகி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக