சனி, 26 பிப்ரவரி, 2011

வாக்கு வங்கி இல்லாத வள்ளுவரும் தொல்காப்பியரும் இப்போது எதற்கு?


"விளம்பரங்கள் என்ற பெயரில் வள்ளுவரோடும் தொல்காப்பியரோடும் என்னை ஒப்பிடக் கூடாது. அவர்களுக்கு எந்த வகையிலும் நான் பொருத்தமானவன் அல்ல. என்னை வள்ளுவரே என்றும் தொல்காப்பியரே என்றும் சொல்லி என் மனதைப் புண்படுத்தாதீர்கள். ஒருவரைப் புகழ்வதற்கும் அளவு இருக்கிறது"

இப்படிச் சொல்லியிருப்பது யாரோ புகழ்ச்சியை விரும்பாத முற்றும் துறந்த ஞானி ஒருவர் என்று அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். இவர் தமிழ்நாட்டில் சுயவிளம்பரக் கலாச்சாரம் எனும் விஷத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் விஷவிருட்சம் போன்றதொரு இயக்கத்தின் தலைவர், எப்போதும் யாராவது ஒருவர் தன்னைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக கூடவே காக்காக் கூட்டங்களை வைத்திருப்பவர். இக்காக்காக் கூட்டங்களுக்குத் தீனியாக அவ்வப்போது வாரியத் தலைவர், தேர்வுக்குழு உறுப்பினர் பதவிகள், துண்டுப்பிரசுரங்கள் வினியோகிப்பது போல் கலைமாமணி விருதுகள் என இரை தூவிக் கொண்டிருப்பவர்..... அட நம்ம முதல்வர் கருணாநிதிதாங்க அது! அமைச்சர் வேலுவின் இல்லத் திருமண விழாவில்தான் அவர் அப்படிப் பேசியுள்ளார் (தினமணி 24.02.11). என்ன இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் திடீர்னு திருந்திட்டாரே என்று நினத்து விடாதீர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

வாழும் வள்ளுவர், எங்க காலத் தொல்காப்பியர் என அவரது அல்லக் கைகள் (அதாங்க தொண்டர்கள்) அடிக்கடி ஃப்ளக்ஸ் வைப்பதும் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுப்பதும் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கமான வேடிக்கைகள்தான். இப்படிவரும் விளம்பரங்களைப் பார்வையிட்டு எந்த வட்டம், மாவட்டம் அதிகமாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார் என்று பார்த்து 'தலைவரின்' கவன‌த்திற்குக் கொண்டு வருவதெற்கென்றே பதினோரு பேர் கொண்ட குழு இருப்பதாகவும் கேள்வி.

இப்படிப் புகழ்ச்சிக்காக ஏங்கும், யாரும் புகழாமல் விடுபட்டுப் போன தன்னிடமிருக்கும் அம்சங்களை (!!??) தானே கண்டு புகழும் தற்புகழ்ச்சிக்கும் தயங்காத இவர் இன்று புகழ்ச்சி தாங்காமல் கூச்சத்தில் நெளிவது போல் தெரிகிறதே. ஒருவேளை புகழ்ச்சி புளித்துச் சலித்துவிட்டதோ. கடைசிக் காலத்தில் புகழையே வெறுக்கும் யோகியாகி விட்டாரோ. அதுதான் இல்லை.  அவர் புகழ்ச்சியை வெறுக்கவில்லை. சட்டசபைத் தேர்தல் வரும் நேரத்தில் இதுபோன்ற திருமணவிழா விளம்பரங்களின் மூலம் வாக்குச் சேகரிக்கும் வாய்ப்புப் போச்சே என்ற ஆதங்கம்தான் அவருக்கு. தனக்கு வந்துவிட்ட தேர்தல் காய்ச்சல் அமைச்சர் வேலுவுக்கும் தொண்டர்களுக்கும் வரவில்லையே என்ற கோபம் வேறு.

வள்ளுவரே, தொல்காப்பியரே என்றால் யார் ஓட்டுப் போடுவார்கள்? வள்ளுவருக்கும் தொல்காப்பியருக்கும் எந்த ஜாதிச் செல்வாக்கும் இல்லையே. அதனால்தான் முதல்வர் கருணாநிதி அந்த விழாவிலேயே "என்மீது என்னதான் ஆசை இருந்தாலும் அன்பு இருந்தாலும் என்னைப் பாராட்ட வேண்டும் என்று கருதினால் ஏழைகளுக்குத் தோழர், ஆதிதிராவிடர்களுக்கு, அனாதைக் குழந்தைகளுக்கு, நோயுள்ள குழந்தைகளுக்கு இந்த அரசு ஆற்றும் பணிகளை ஒன்று திரட்டி அந்த வடிவத்தில் என்னைப் புகழுங்கள்" என்று தேர்தல் காலப் புகழுரைகளுக்கு அடியெடுத்துக் கொடுத்துள்ளார். கவனித்தீர்களா, புகழ வேண்டாம் என்று சொல்லவில்லை. தேர்தல் காலத்தில் எப்படிப் புகழ வேண்டும் என்று தான் சொல்கிறார். அதுமட்டுமல்ல. இந்த எச்சரிக்கையை திமுக தோழர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். ஆக இனி கழக உடன்பிறப்புகளின் இல்லத் திருமணவிழாக்களுக்கு வைக்கப்படும் விளம்பரங்களிலும் அரசின் சாதனைகளின் பட்டியலை நாம் காணலாம்.

வள்ளுவரும் தொல்காப்பியரும் தேர்தல் இல்லாக் காலங்களில் புகழ்வதற்கு இருப்பில் வைக்கப்பட வேண்டியவர்கள். இதுவோ தேர்தல் காலம். வாக்கு வங்கி இல்லாத வள்ளுவரும் தொல்காப்பியரும் இப்போது எதற்கு? 

எது எப்படி இருந்தாலும் வள்ளுவரும் தொல்காப்பியரும் இனிக் கொஞ்சகாலத்திற்கு நிம்மதியாக இருப்பார்கள் என்பதை நினைக்கும் போது மனதுக்குச் சற்று ஆறுதலாகத்தான் இருக்கிறது. தேர்தலுக்கு நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்