திங்கள், 12 டிசம்பர், 2011

அச்சுதானந்தனின் பொய் பிரச்சாரங்களை முறியடிப்போம் , முல்லை பெரியாறு அணையை காப்போம்


கம்யூனிஸ்டுகள் சர்வதேசியவாதிகளாக இருக்க வேண்டும். ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் அரசியல் ஆதாயங்களுக்கு அப்பாற்ப்பட்டு எந்த சூழ்நிலையிலும் நியாயத்தின் பக்கம் தான் நிற்க வேண்டும். ஆனால் கேரளா மாநில சி.பி.எம். தலைவர் அச்சுதானந்தனோ தமிழக மக்களின் வாழ்வாதாரமாகவும், வலுவோடும் உள்ள , முல்லை பெரியாறு அணையை தனது அரசியல் சுயலாபங்களுக்காக பொய் பிரசாரங்களை இடைவிடாது மேற்கொண்டு  கேரளா மக்களிடம்  பிராந்திய வாத வெறியை தூண்டும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே இப்படி இருக்கும் போது அங்குள்ள மற்ற கட்சிகளான காங்கிரஸ் , பி.ஜே.பி., மற்றுமுள்ள உதிரி கட்சிகளை பற்றி சொல்லவே தேவையில்லை.

கேரளாவில் உள்ள சி.பி.ஐ.(எம்.எல்)  போன்ற ஓட்டு அரசியலில் எந்த ஆதாயத்தையும் அடைய முடியாத கட்சிகள் கூட ஒருமித்த குரலில் அணையை இடிக்க வேண்டும் என்று கூப்பாடு போட்டு வருகின்றன.கேரளா சட்டமன்றத்தில் அணையை இடிக்க வேண்டும், புது அணை கட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் பேசிய கேரளா அமைச்சர் ஒருவர் ஜனவரி 1 அன்று  புதிய அணைக்கு அடிக்கல் நாட்டவேண்டும் என்று பேசியுள்ளார். கேரளாவில் உள்ள அனைத்து மீடியாக்களும் அணை குறித்த பீதியை இடைவிடாது பரப்பி வருகின்றன.
 
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தில் கைவைக்கிறோம் என்பதை பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் பிரிவினைவாத தீயை பற்றவைப்பதில் முன்னணியில் இருக்கும் சி.பி.எம். செயல்பாடு அந்த கட்சி கேடு கெட்டுபோய் விட்டது என்பதற்கு வலுவான சாட்சியாகும்.

முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளது என்பது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பல்வேறு நிபுணர் குழுவால் நிருபிக்கப்பட்டுள்ளது. 152 அடி தண்ணீர் தேக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கைகளை இன்று வரை கேரளா அரசு காது கொடுத்து கூட கேட்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவான 142  அடி தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இன்று வரை கேரளா மாநில அரசு ஒழுங்காக நிறைவேற்றவில்லை. தற்போது ஒட்டுமொத்தமாக அணையை இடிக்க வேண்டும் என்று கேரளா அரசு களம் இறங்கியுள்ளது.

பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டு மக்களிடையே பிரிவினை வாதத்தை தூண்டி விட்டு சந்தர்ப்பவாத  அரசியல் நடத்தும்  சி.பி.எம்.,சி.பி.ஐ. பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டு சதியினை முறியடிக்க ஜனநாயக சக்திகளை ஓன்று திரட்டுவோம். கூட்டு போராட்டங்களை முன்னெடுப்போம். தமிழக மக்களின் வாழ்வாதாரமாக உள்ள முல்லை பெரியாறு அணையை காப்போம்.
 
தமிழ்நாடு பொதுபணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள முல்லை பெரியாறு அணை பிரச்சினையும் தீர்வும்  என்ற குறும்படம் முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மையின் உண்மையினை நமக்கு வெளிச்சம் போட்டு  காட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்