சனி, 19 பிப்ரவரி, 2011

அடுத்த எகிப்து - பஹ்ரைன் நாட்டில் மன்னராட்சிக்கு எதிராக புரட்சி வலுவடைந்துள்ளது



 பஹ்ரைன் நாட்டில் மன்னர் குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் போராட்டத்தை ஆரம்பித்து உள்ளனர்.  பிரதமர்  பதவி விலக வேண்டும் என்றுதான்  முதலில் மக்கள் கோரி வந்தனர் எகிப்து புரட்சிக்கு பிறகு மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது.  இப்போது மன்னர் குடும்பமே கூண்டோடு அகற்றப்படும் வரை ஓயமாட்டோம் மக்கள்  அறிவித்து உள்ளனர்.  சிறிய வளைகுடா நாடான பஹ்ரைனில் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இப்போது ஹமாத் பின் இசா அல் கலிஃபா மன்னராக உள்ளார். அண்மையில் எகிப்தில் முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற புரட்சி  வெற்றி பெற்றதை அடுத்து பல அரபு நாடுகளில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து வருகின்றன. சிறிய தீவு நாடான பஹ்ரைனிலும் இப்போது கிளர்ச்சி வெடித்துள்ளது.  கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் புரட்சியை  போலீஸ் மூலம் அடக்க அரசு தரப்பினர் முயன்று வருகின்றனர். போலீசார் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள்  இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.  போராடும் மக்களை காவல்துறை   கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தாக்கி  3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் . இதைத் தொடர்ந்து போராடும் மக்கள்  தலைநகர் மனாமாவில் உள்ள முத்து சதுக்கத்தில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் அரசுக்கு எதிராக, பதாகைகளோடு முழக்கம் எழுப்பி வந்தனர். இரவு பகலாக அங்கே முகாமிட்டு போராடி வரும் மக்களை  ஒடுக்கும் பொருட்டு வியாழக்கிழமை அதிகாலை அந்த சதுக்கத்தை காவல் துறையினர்  சுற்றி வளைத்தனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கிருந்தவர்களை அடித்து விரட்டினர். எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டை பயன்படுத்தினர்.  இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காவல் துரையின் இந்த அராஜக போக்கினால் அனைத்து தரப்பு மக்களிடமும் போராட்டகுரல் உயர்ந்து வருகிறது. போலீஸ் அடக்குமுறையில் உயிரிழந்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை இறுதி சடங்குகள் நடைபெற்றன. இந்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.  அவர்கள் பலர் அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பகிரங்கமாக தெரிவித்தனர். மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பலர் தெரிவித்தனர்.  இதனிடையே கிளர்ச்சியை ஒடுக்க தலைநகர் மனாமாவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் ராணுவ டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும்   பக்ரைன் மக்கள் அடக்கு முறைக்கு அஞ்சாமல் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அந்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாமும் குரல் கொடுப்போம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்