புதன், 29 டிசம்பர், 2010

அநீதிகளுக்கு எதிராக களம் இறங்கிய டாக்டர் . பினாயக் சென்னை அநீதியின் கரங்களில் இருந்து மீட்போம்

மனிதஉரிமை ஆர்வலரும் , சல்வா ஜூடும் அநீதிகளுக்கு எதிராக போர்குரல் கொடுத்தவரும் மருத்துவருமான திரு.பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை கொடுத்ததன் மூலம் இந்திய நீதித்துறையின் அசல் முகம் அம்பலமாகி உள்ளது இந்தியாவில் ஊழல் செய்யாத மந்திரிகளும், லஞ்சம் வாங்காத அதிகாரிகளும் இல்லை என்றே கூறலாம் அந்த அளவிற்கு இங்கு ஊழலானது தனது அகன்ற எல்லையை விரித்து இந்தியாவை ஆட்டி படைக்கிறது. ஆனாலும் இன்று வரை எந்த அரசியல் வாதிகளுமே ஊழலுக்காக தண்டிக்கபட்டு சிறை சென்றதில்லை என்ற அளவிற்கு ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு தரும் களமாக இந்திய நீதித்துறை மாறியுள்ளது என்றால் அது மிகை இல்லை. அப்படிப்பட்ட நீதித்துறையிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். 

திங்கள், 27 டிசம்பர், 2010

ஆளும் வர்க்க நலன்களை உயர்த்தி பிடிக்கும் ஊடகங்களை கண்டிப்போம்

ஆதிதிராவிட மாணவர்கள் 22.12.2010 அன்று அண்ணா சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக இருக்கும் வேலையில்  மறியல் செய்தனர் , சில ஊடகங்கள் மாணவர்கள் மறியல் செய்த நோக்கத்தை கணக்கில் எடுத்து கொள்ளாமல் மாணவர்கள் மறியல் செய்ததை கண்டித்து செய்திகள் வெளியிட்டன. ஆதி திராவிட மாணவர்கள் வசிக்கும் விடுதிகள் மிகவும் மோசமாகவே பராமரிக்க படுகின்றன. இங்கு வழங்கும் உணவு சாப்பிடவே  முடியாத அளவிற்கு கொடுமையாக இருக்கும் என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அரசு நிர்வாகத்தால் மாணவர்கள் எந்த அளவிற்கு மோசமாக நடத்தப்படுகிறார்கள்  என்றால் அந்த மாணவர்களின் மறியல் அன்று மாணவர்கள் கொடுத்த பேட்டியை பார்த்தாலே நன்கு தெரியும். மாணவர்களுக்கு கல்வி அளிப்பது என்பது அரசின் அடிப்படை கடமை ஆகும், கல்வி மட்டும் அல்ல முறையான  தங்கும் , உணவு வழங்கும் விடுதிகள் அமைத்து அதை முறையாக பராமரிக்கவேண்டியதும் அரசின் கடமை ஆகும்.அது எதையும் செய்யாத இந்த அரசு அவர்களின் வாக்கு வங்கியை மட்டும் குறிவைத்து ஆட்சி நடத்துவது நாம் கண்கூட பார்க்கும் உண்மை ஆகும். மாணவர்கள் மறியல் செய்ததை ஏதோ ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தது போல கண்டிக்கும் ஊடகங்கள் அந்த மாணவர்கள் பல முறை கோரிக்கை வைத்தும் அது கணக்கில் எடுத்துகொள்ளாததால் தான் மாணவர்கள் கடைசி தேர்வாக மறியல் செய்தார்கள் என்பதை மூடி மறைக்கின்றன . இவ்வாறு ஆளும் வர்க்க நலன்களுக்கு ஆதரவாக செயல்படும் ஊடகங்களையும் , மாணவர்களுக்கு உரிய வசதி செய்து தராத அரசையும் கண்டிப்பது இன்றைய ஜனநாயக வாதிகளின் தலையாய கடமை ஆகும் 





வியாழன், 23 டிசம்பர், 2010

நெருப்பாய் வருகிறேன் என்னை ஏந்தி கொள்ளுங்கள்


ஆதி மனிதன் கண்ட முதல் நெருப்பு !
ரோமபுரி வீரனிடம் பற்றிய அடிமை எதிர்ப்பு  நெருப்பு!
ஜெர்மனியில் மீண்டும் துளிர் விட்ட சிவப்பு நெருப்பு !
பாரிகம்யூனில்  படர்ந்த கொழுந்துவிட்டெரிந்த  நெருப்பு!

ரசியாவில் பற்றி மக்கள் பசி தீர எறிந்த எழுச்சி  நெருப்பு!
மக்கள் சீனத்தில் மலர்ந்து  பூத்த பெரும் நெருப்பு !
வியட்நாமில் தலைகாட்டிய ஏகாதிபத்திய எதிர்ப்பு நெருப்பு!
அமெரிக்காவின் காலடியில் பற்றி எறிந்த கியூபா நெருப்பு !
இந்தியாவின் தலைக்கருகே  எரிந்து கொண்டிருக்கும் நேபாள நெருப்பு!
இந்தியாவில் கனன்று கொண்டுள்ள அடர் நெருப்பு!

இதோ நான் ஏந்தி வருகிறேன் இந்த இனிய நெருப்பை!
இந்த நெருப்பு தான் சோசலிச நெருப்பு !
இது தான் வெறி பிடித்து பேயாட்டம் போடும் முதலாளித்துவத்தை
 கொளுத்த கூடிய ஒரே வழியுமாக உள்ள நம்மை காக்கும் நெருப்பு

இளைஞர்களே, தொழிலாளர்களே, இந்த ஈர நெருப்பை உங்கள் நெஞ்சத்தில் ஏந்தி கொள்ளுங்கள் பல நெஞ்சகளுக்கு இடம் மாற்றுங்கள்!
உலகம் முழுவதும் பரப்புங்கள்! வெற்றி நமக்கே வாருங்கள்  தோழர்களே!









ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் நம்முன் உள்ள கடமைகள் என்ன?




இன்று எங்கு திரும்பினாலும் ஸ்பெக்ட்ரத்தை பற்றி தான் பேச்சு ஏனெனில் அதில் சம்பாத்தபட்ட தொகையானது 1.76 லட்சம் கோடி இன்றுஉள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சாதரணமாக  ஏன்   பெரிய தொழில் அதிபர்கள் கூட இவ்வளவு தொகையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த அளவிற்கு மிகபிரமாண்டமான ஊழலை நமது திமுக , காங்கிரஸ் கூட்டணி நிகழ்த்தி உள்ளது. இது போன்ற சாதனைகளை இனி வரும் அரசுகளால் முறியடிக்க முடியாத அளவிற்கு உலகத்திலையே மிகப்பெரிய ஊழலை நிகழ்த்தி உள்ளன நமது திருவாளர் பரிசுத்தம் பிரதமராக உள்ள அரசு. இதில் ஆச்சரியமான  விஷயம் என்னவென்றால் இன்றைய மக்கள் அனைத்தையும் சகித்து கொள்கின்றனர் இவ்வளவு பெரிய ஊழல் நடந்து முடிந்துள்ளது ஊழலில் சம்பத்தப்பட்டவர்கள் அனைவரும் தமிழக அரசியலில் உள்ளவர்கள் என்றபோதும் இந்தியாவில் மற்ற அனைத்து பகுதிகளிலும் நடக்கும் போராட்டங்களை ஒப்பிடும் பொது இங்கு மக்கள் தூங்கி கொண்டிருப்பது வெட்கக் கேடான விஷயம் ஆகும். மக்கள் அனைவரும் தம்மை புத்திசாலிகள் என்றும் தாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் தாங்கள் எந்த அரசியல் விஷத்திலும் தலையிடப்போவத்தில்லை என்றும் இது ஏதோ எதிர்கட்சிகளின் விவகாரம் என்றும் நினைப்பார்களையானால் நம்பை போல அடிமுட்டாள்கள் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும். 


திங்கள், 20 டிசம்பர், 2010

மாற்றத்திற்கான ஆரம்பம் மதுரையில் - CWP யின் முதல் அமைப்பு மாநாட்டு பொதுக்கூட்டம்

மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் காவியத்தின் முதல் அத்தியாயம் தான் நம் கண் முன்னே காட்சியாக விரிகிறது. அந்த நாவலில் வரும் தாயின் வாழ்க்கையானது கிட்டத்தட்ட ஒரு நரகத்தின் வாசலை தான் நமக்கு காட்டும் அந்த அளவிற்கு தொழிலாளிகளின் இரத்தம் முதலாளிகளால் உறிஞ்சப்படும்.அதை போலதான் இன்றும் நம்முடிய வாழ்க்கை பேரவலமாக உள்ளது இந்தியாவை மிகப்பெரிய  ஜனநாயக நாடு என்றும் அது உலகின் வல்லரசாக உருமாறி வருகிறது என்றும் அது தெற்காசியாவின் மிகப்பெரிய தாதா என்றும் அமெரிக்க அதிபர் திரு. ஒபாமா கூறுகிறார். நம்முடிய பாரதப் பிரதமர் மிகப்பெரிய பொருளாதார மேதை என்று அகிலமெல்லாம் போற்றப்படுகிறார். ஆனாலும் விண்ணைமுட்டும் அளவிற்கு 27  மாடிகள் கொண்ட மிகப்பெரிய பங்களா ஒருவருக்குமாகவும் வெறும் தார்ப்பாயை மட்டும் மேற்கூரையாக கொண்டு வாழக்கூடிய பலகோடி மக்கள் ஒருபுறமாகவும் இந்த இந்தியா இரண்டு கூறுகளாக பிரிந்து கிடக்கின்றது . ரத்தன் டாட்டா விடியோ டேப் விவகாரத்தில் உடனடியாக அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கிறது ஆனால் பல்லாயிரக்கானக்கான மக்கள் எந்த நீதியும் கிடைக்காமல் புறக்கணிக்கப்படுகின்றனர்.

சனி, 18 டிசம்பர், 2010

பொய்யர்களின் முகத்திரை கிழிய வேண்டும்

விக்கிலீக்ஸ் நிறுவனர் திரு ஜூலியன் அசாஞ்சு மீது தொடுக்கப்படும் வன்முறையை தடுக்க குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஊடக நண்பர்கள் மற்றும் பொதுவுடைமை தோழர்கள் ,ஜனநாயக  வாதிகளின் கடமை ஆகும். அமெரிக்க போன்ற ஏகாதிபத்திய வெறி கொண்ட நாடுகளின் முகத்திரையை கிழித்த விக்கிலீக்ஸ் அதிபரையும் அதை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களையும் பாராட்டும் அதே நேரம் இவ்வளவு வெளிப்படையாக அநீதி நடந்தும் தட்டி கேட்க நாதி இல்லாமல் உழைக்கும் வர்க்கம் ஒரு அமைப்பாக மாறாமல் இருபது என்பது நம்முடிய மிகப்பெரிய கடமையை நினைவுறுத்துகிறது  

கலாசார சீர்கேடுகளை அழிக்க பரந்து வந்துள்ள பெரு நெருப்பு இயக்குனர் சசிகுமாரின் ஈசன்

இன்றைய இளைஞர்கள் நாகரிகம் என்ற பெயரில் தங்கள் வாழ்க்கையையும் மற்றவர்கள் வாழ்க்கையையும் எப்படி சீரளிக்கிரார்கள் என்பதை படம் பிடித்து காட்டி இருக்கிறார் இயக்குனர் இன்றைக்கு காலத்தேவை ஒரு கலாசார புரட்சி ஈசன் திரையுலக புரட்சி 

புதன், 15 டிசம்பர், 2010

பகத்சிங்கும், சே-வும் தான் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டி



சிலர் எழுத்திலும், பேச்சிலும் மட்டுமே மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்று நினைத்து கொண்டு செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். இவர்கள் இந்த நாட்டில் முதலாளித்துவம் உருவாக்கி உள்ள அனைத்து விதமான கலாச்சார சீர்கேடுகளிலும் சிக்கி கொண்டும் அதை அனுபவித்து கொண்டும் ,உருண்டு பிரண்டு கொண்டு  இந்த சமூகத்தை  மாற்றி விடமுடியும் என்று வீணாக புலம்பி கொண்டு வெட்டியாக பேசித்திரியும் காகிதபுலிகளால்   இந்த சமூகத்தின் உதிர்ந்து விலப் போகும்  நகத்தை கூட அசைக்க முடியாது என்பது தான் உண்மை. அனைத்து மக்களிடமும் பரஸ்பரம் புரிதல் , நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்காமல் நாம் இவற்றை சாதிக்க முடியாது. பகத் சிங்  போன்றவர்களிடம் இருக்கும் தியாக உணர்ச்சியானது இன்று நம் யாரிடமும் இல்லை என்பதுவே உண்மை ஆகும். பகத் சிங்,  சேகுவேர போன்ற தனது நலனை பற்றி சிறிதும் சிந்திக்காத தனது மரணத்தின் மூலம் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்றால் மனமகிழ்ச்சியோடு தனது உயிரையும் கொடுத்து இந்த சமூகம் வாழ வாழ்ந்த மாவீரர்களை  ஆணிவேராக பற்றி கொண்டு கடுமையாக மக்கள் தொண்டு ஆற்றினால் ஒளிய புரட்சி என்பது இந்திய மண்ணில் சாத்தியமில்லை என்பதே கசப்பான உண்மை ஆகும். 

ராஜாவின் கொடிய கரம் நீதித்துறை வரை நீண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா ஸ்பெக் ட்ரம் அலை கற்றை இட ஒதிக்கீடு சம்பதமாக அவர் வகித்து வந்த தொலைதொடர்ப்பு துறையிலிருந்து ராஜினாமா செய்தார். அத்தோடு அவர் மீது அடுத்தடுத்த புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இவை அனைத்தும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இப்போது  புதிதாக நீதிபதியை தனது நண்பரின் குற்றவியல் பிணை வழக்கிற்காக அந்த வழக்கில் ஆ.ராஜாவின் நண்பருக்கு சாதகமாக தீர்ப்பை பெறுவதற்காக தனது பதவியை துஸ்பிரயோகம் செய்து அவரை மிரட்டியதாக உயர்நீதிமன்ற நீதிபதி திரு.ரகுபதியும் உச்சநிதிமன்ற நீதிபதி திரு . கோகலேயும் அமைச்சர் ராஜா மீது புகார் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதியையே தனது பதவியை காரணம் காட்டி மிரட்டப்படும் போது சாதாரண மக்கள் எப்படி அரசிற்கு எதிராக வழக்கு தொடரமுடியும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது ஆ,ராஜா கண்டிக்கபடவேண்டியவர் மட்டுமல்ல சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டியவர் என்பது நமது கோரிக்கை ஆகும்.

திங்கள், 13 டிசம்பர், 2010

இங்கிலாந்தின் சமீபத்திய எழுச்சிமிகு மாணவர் போராட்டம்

  
                           இங்கிலாந்தின் சமீபத்திய எழுச்சிமிகு மாணவர் போராட்டம்


            நவம்பர் 10 மற்றும் 24 ஆம் தேதிகளில், பொருளாதார மந்தநிலை எனும் காரிருள் சூழ்ந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக சூரியன் மறையாத தேசமாய் இருந்த மாபெரும் இங்கிலாந்தில் ஒர் ஒளிக்கற்றை அக்காரிருளை கிழித்துக்கொண்டு வீசத் தொடங்கியுள்ளது.

        ஆம். இங்கிலாந்தின் தற்போதைய கல்விக்கட்டண உயர்வு, கல்விச்சலுகை விலக்கு மசோதாக்களை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்களால் நவம்பர் 10 அன்று துவங்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர் இயக்கம் நவம்பர் 24 அன்று 10 வயது நிரம்பியுள்ள பள்ளி மாணவர்களையும் தன்னுள்ளே ஈர்த்துக்கொண்டுள்ள ஒரு மாபெரும் மாணவர் இயக்கமாக உருவெடுத்துள்ளது.

             மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று கன்சர்வேடிவ் கட்சி அலுவலகத்தையும், பாராளுமன்ற வளாகத்தையும் முற்றுகையிடுகிறார்கள்.கல்வி விரோத மசோதாக்களை எதிர்த்த கோசங்களை எழுப்புகிறார்கள். எதிர்ப்பு கோ­சம் பொருந்திய அட்டைகளை உயர்த்திப் பிடித்து முன்னேறிச் செல்கிறார்கள்.

            இனப்பாகுபாடின்றி அனைத்து மாணவர்களும் போராட்டத்தில் பங்கு பெறுகிறார்கள். புரட்சி கீதங்களை இசைக்கிறார்கள். ஆளும் வர்க்க கருவியான போலீசாருடன் மோதுகிறார்கள். இங்கிலாந்து பாராளுமன்ற வீதி பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள் குவிந்த மாணவர் சமுத்திரமாக காட்சி தருகிறது. ஒவ்வொரு மாணவனும் திரத்தன்மையுடன் பங்கு கொள்கிறான்.


மரணத்தின் பிடியில் முதலாளித்துவ சமூக அமைப்பு

        உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் முன்னிலும் தீவிரமான தற்போதைய பொருளாதார மந்தநிலை ‡ அமெரிக்காவில் தொடங்கி இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா என வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகளைனைத்திலும் கோர உருவமாக உருவெடுத்துள்ளது. இப்பொருளாதார மந்த நிலையின் தீவிர இழப்பீடனைத்தும் மாணவர் உட்பட சமூகத்தின் அனைத்து அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தின் மீதும் திணிக்கப்படுகிறது.

         கொள்ளை லாபம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட இம்முதலாளித்துவ சமூக அமைப்பு மக்களுக்கு இனி எதுவுமே வழங்க முடியாத சமூக அமைப்பாக மாறி விட்டது. அதன் எதிரொலியாகவே கீரிஸ் நாடு மீளமுடியாத பொருளாதார பிரச்னையில் சிக்கியுள்ளது. அமெரிக்காவில் தொடங்கி இந்தியா வரை இப்பொரளாதார மந்த நிலையால் பாதிக்கப்படாத நாடு உலகில் எதுவுமில்லை.
 
          உலகம் முழுவதும் நிலவும் இப்பொருளாதார மந்த நிலை முதலாளித்துவத்தின் பிற்போக்கு மற்றும் செல்லுபடியாகாத்தன்மையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ஓடி ஒளிய வழி தெரியாமல் மரணத்தின் வாயிலில் ஊசலாடிக்கொண்டிருக்கும் இம்முதலாளித்துவ சமூக அமைப்பு தாங்கொண்ணாச் சுரண்டலையும், அடக்குமுறையையும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு மரணப் பெருமூச்சு வாங்கிக் கொண்டுள்ளது.

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரை


       இவையனைத்தும் சேர்ந்துதான் மக்கள் நல அரசாங்கங்கள் என்ற பெயரில் கல்வி, மருத்துவம் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை ஓரளவையினும் சலுகை அளவில் வழங்கிக் கொண்டிருந்த இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட மாணவ, மக்கள் விரோத நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன.

         இவற்றிற்கு எள்ளளவைனும் குறையாமல் இந்தியாவிலும் சரி கல்வி விரோத, தொழிலாளர் விரோத மநோதாக்களும், நடவடிக்கைகளும் ஒவ்வொரு நாளும் அமலாக்கப் படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ‡ இக்கல்வியாண்டு தொடங்கிய காலத்தில் இருந்தே தமிழக அரசாங்கத்தின் கல்வி கட்டண உயர்வு, கல்வி விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மாணவர்களும், பெற்றோர்களும் போராடுவதைக் காண்கிறோம்.

இங்கிலாந்து மாணவர் போராட்டம் வலுப்பெறட்டும்! வெல்லட்டும்!


          நண்பர்களே! தோழர்களே! இனி உலகிற்கு உருப்படியாக ஒன்றுமே வழங்க முடியாத இந்த லாப நோக்க உற்பத்தி முறைக்கு முடிவு கட்ட இயக்கமாக அணி திரள்வோம். பிழைக்கவே பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் இம்முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு சாவு மணி அடிக்க ஒன்றுபடுவோம். போராடுவோம்.

           கிளர்ந்தெழுந்துள்ள இங்கிலாந்து மாணவர் போராட்டத்திற்கு நம் கைகளையும் உயர்த்தி வலுச்சேர்ப்போம். போராட்டம் வலுப்பெற, வெற்றி பெற உரக்க வாழ்த்துவோம்.

                                                                                                            ம. பிரேம் குமார்

நண்பர்களே!

நண்பர்களே!
       

            பல்வேறு இன்னல்கள் சமூகத்தை - சமூக வாழ்க்கையை கடினப்படுத்திக் கொண்டுள்ளது. இச்சமூகத்தில் மிகவும் அழகாக உருவெடுக்க வேண்டிய மனித வாழ்க்கை மிகப்பெரும் சுமையாக மாறிக்கொண்டுள்ளது. மனிதனை ஒரு தனிமனித பிண்டமாகவும், சமூகத்கன்மை இழந்து அழையும் ஒரு வெற்று ஜீவியாகவும் ஆக்கும் போக்கு மிகத்தீவிரமாக வளர்த்தெடுக்கப் படுகிறது. சமுதாய விலங்கான மனிதன் தன்னலவாதியாக சுருக்கப்படுகிறான். மாணவனோ,
தொழிலாளியோ அல்லது விவசாயியோ இத்தன்னல வட்டத்திற்குள் சிக்காதவர்கள் எவரும் இல்லை இச்சமூகத்தில். கோடிக்கால் பூதமென உருவெடுக்க வேண்டிய அடித்தட்டு உழைக்கும் வர்க்கம் பொதுநல சிந்தனைக்கு அப்பாற்பட்டு பிரச்னைக்கு தீர்வை தன்னுள்ளே தேடிக் கொண்டுள்ளது.
      

              தன்னலத்தை விசிறிவிடும் இக்கேடுகெட்ட சமுதாயத்தில் பொதுநலத்தை விதைக்கும் நோக்குடனும், மனிதன் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரச்னையின் சமூகப் பிண்ணணியை பகுப்காயும் நோக்குடனும் உருவெடுத்ததே இந்த இயக்கம்.
        

           அவ்வகையில் செயல்புரிந்து உழைக்கும் வர்க்க இயக்கங்கள் உருப்பெற தன்கை தருவீர்!
      
        
          கோடிக்கால் பூதமென கிளர்ந்தெழுவீர்!


           நடைபயில்வோம் சமூக விடியலுக்கான பாதையில்!

                                                                             


                                                                                                                   ம. பிரேம் குமார்
       
         

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம்

ஸ்பெக்ட்ரம் என்பது சாதாரண ஊழல் அல்ல மனிதகுலமே இதுவரை காணாத மிகப்பெரிய ஊழல். இந்த ஊழல் செய்தவர்கள் சர்வ சுதந்திரமாக இன்று நம்மிடையே  வலம் வருகிறார்கள் அவர்களுக்கு வேண்டுமானால் வெட்கம், மானம் இல்லாமல் இருக்கலாம் நாமும் அப்படியே இருப்பது என்பது நமக்கும் சூடு சுரணை இல்லை என்று தான் அர்த்தம். பகல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது , அடித்த களவாணிகள் யார் என்பதையும் நாம் அறிவோம் . அப்படியும் இதையும் சகித்து கொண்டு வாழ்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஓன்று. நாம் ஸ்பெக்டரம் ஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம். ஊழல் செய்தவர்களுக்கு பாடம் கர்ப்பிக்கவேண்டியது நமது ஒவ்வொருடைய கடமை என்பதை நினைவில் நிறுத்துவோம். 

சனி, 11 டிசம்பர், 2010

அச்சமில்லை அச்சமில்லை

 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்துளோர் எல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
கச்சணிந்த கொங்கை மாந்தர் கண்கள் வீசும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பச்சை யூனியைந்த வேற்படைகள் வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழூகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

பாரதியின் பிறந்த தினத்தை (டிசம்பர் 11 ) முன்னிட்டு லஞ்சம் ஊழலுக்கு எதிராக ஓன்று திரள்வோம்


சுப்ரமணிய பாரதி என்றாலே அனைவருக்கும் ஒரு கம்பீரம் தான் ஞபகத்திற்கு வரும். வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களை தேசிய ஒருமைப்பாடு கொண்டு வீரம் பொங்க எழ செய்த பெருமை வங்கத்தை சார்ந்த ராபின்தரநாத் தாகூருக்கும் , நமது தமிழகத்தை தலை நிமிர செய்த பெருமை தேசிய கவி பாரதிக்கும் சேரும். பாரதி இந்தியர்கள் அனைவரையும் ஓன்றுபட்டு சாதி மத வேறுபாடுகள் களைந்து ஓரணியில் நிற்க செய்ய தமது பாடல்கள் மூலம் இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டார். பெண்ணடிமையை சாடினார் , பெண்கல்வியை போற்றினார் மரபு கவிதைகளை எளிமைபடுத்தி அனைத்து மக்களுக்குமானதாக தனது பாடல்கள் மூலம் ஒரு கவிதை புரட்சி நிகழ்த்தினார். அவரை பின்பற்றி பாரதி தாசன் போன்ற கவிஞர்கள் சமூக அக்கறை கொண்ட பாடல்களை இயற்றத் துவங்கினர். பாரதி தனது எழுத்திலும் பேச்சிலும் இந்த மானுடம் மகிழ்வுற வாழ பெரும்பங்காற்றினார் என்றால் மிகையில்லை.அன்று பாரதி போன்றவர்கள் செய்த தியாகத்தால் பெற்ற சுதந்திரம் இன்று பெரும் முதலாளிகளின் கைகளில் சிக்கிக்கொண்டுள்ளது. இன்று கடும் சுரண்டலை அரகேற்றிகொண்டு உள்ள இந்த முதலாளிவர்க்கம் தங்களது பிரதிநிதியாக அமர வைத்திருக்கும் அரசியல் வாதிகளோ நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக தினம் தினம் பல லட்சம் கோடிகளை மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொள்ளை அடித்த வண்ணம் இருக்கின்றனர். நமது மக்கள் இந்த முதலாளித்துவ கொடும் நுகத்தடியின் கீழ் சிக்கி கொண்டு நரக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு உள்ளனர். அதிகாரிகள் மக்களை லஞ்சம் கேட்டு வருத்துகின்றனர் இவ்வாறு இந்த அதிகாரிகளும் ,அரசியல் வாதிகளும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்பதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது என்பது பாரதியார் போன்றவர்கள் வாழ்ந்த நாட்டில் தான் நாமும் வாழ்கின்றோமா என்ற சத்தேகத்தை கிளப்புகிறது . இந்த வெளிப்படையாக நடக்கும் பகல் கொள்ளையை எதிர்க்க களம் புகுவோம் வாருங்கள் தோழர்களே ஒன்றிணைவோம் , வென்றடைவோம். பாரதி கண்ட கனவு சாம்ராட்சியத்தை மார்க்சிய வழியில் செளுமைப்படுத்துவோம் .

வியாழன், 9 டிசம்பர், 2010

இயக்கம் என்பது உயிரின் அடையாளம்!


இயக்கம் என்பது
உயிரின் அடையாளம்.
இயக்கம் நின்றுபோனால்...
உயிர் நின்றுபோனது என்று பொருள்.

உலகம் இயங்குகிறது.
ஆகு பெயரில் மட்டும் அல்ல.
உலகமும் இயங்குகிறது.
உலகத்து மக்களும் இயங்குகிறார்கள்.
பிரபஞ்சம் அனைத்தும் இயங்குகிறது.
பிரபஞ்சத்தில் அனைத்தும் இயங்குகின்றன‍-
தனித்தனியாக அல்ல‍
ஒன்றையொன்று சார்ந்து...
ஒன்றுடன் ஒன்று இணைந்து...

நாம் மட்டும் ஏன்...
தனியாக,
தனியொரு தீவாக‌-
இயற்கைக்குப் புறம்பாக,
இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

இயக்கம் என்பது
உயிரின் அடையாளம்.
உண்டு, உறங்கி,
உடுத்து, மகிழ்ந்து
இனத்தைப் பெருக்கிவிட்டுப் போவது அல்ல இயக்கம்.

சக மனிதரோடு கை கோர்த்து
உலகத்தை
முன்னோக்கி-
முன்னைவிட மேலான ஒன்றை நோக்கி
நகர்த்திவிட்டுப் போவதே இயக்கம்.

வாருங்கள் நண்பர்களே!
ஊர் கூடித்தேர் இழுப்போம்.
இயக்கம் என்பது
உயிரின் அடையாளம்.

முகப்பு

புதிய பதிவுகள்