திங்கள், 25 ஏப்ரல், 2011

பகத்சிங்கின் கடைசிக் கடிதம்


1930 அக்டோபர் 7ம் நாள் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர் கொள்ள தீரமுடம் காத்திருந்தனர் புரட்சியாளர்கள் மூவரும்.  ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இந்திய நாடே ஒருமித்த குரலில் கோரிக்கை எழுப்பியது.  லட்சக்கணக்கான கையெழுத்துகள் கொண்ட மனுக்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வந்து குவிந்தன.  அநேகம் பேர் இரத்தத்தினாலும் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தனர்.


அப்போது காந்தியடிகளுக்கும் வைஸ்ராய் இர்வினுக்கும் இடையே எட்டப்படவிருந்த காந்தி - இர்வின் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன.  எனவே ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் ஒன்றாக பகத்சிங், ராஜகுரு சுகதேவ் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கை காங்கிரசுக்குள்ளேயே எழுந்தது.  காந்தியடிகள் நினைத்தால் இந்த மூன்று இளைஞர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று நாடே நம்பியது.

பகத்சிங்கின் உயிரைக் காப்பாற்றப்போகும் சமய சஞ்சீவியாக வருமென மக்களால் எதிர்பார்க்கப்பட்ட அந்த காந்தி - இர்வின் ஒப்பந்தமும் வந்தது.  1931 மார்ச் மாதம் 5ம் நாள் கையெழுத்திடப்பட்டது.  ஆனால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று இளைஞர்களின் தூக்குத்தண்டனை பற்றி அந்த ஒப்பந்தத்தில் ஒருவார்த்தை கூட இல்லை.  வன்முறை சாராத குற்றங்களுக்காக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மட்டுமே அவ்வொப்பந்தம் கூறியது.  எனவே, தாய் நாட்டின் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை விடவும் தயாராக இருக்கும் அந்த மூன்று இளைஞர்களின் உயிரைக் காப்பாற்ற காந்தியடிகள் தவறிவிட்டார் என்று மக்கள் கோபம் கொண்டனர்.  காங்கிரஸில் இருந்த இளைஞர்கள் மட்டுமல்லாது பெரும்பான்மையானவர்கள் காந்தியடிகளுக்கு எதிராக கொதித்தெழுந்தனர்.

காந்தி - இர்வின் ஒப்பந்தம் அந்த மாதம் இறுதியில் 1931 மார்ச் 29ல் நடைபெறவிருந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டால்தான் அது செயலுக்கு வரும் என்ற நிலை இருந்தது.  ஒருவேளை, பகத்சிங் உள்ளிட்ட மூன்று இளைஞர்களின் தூக்குத்தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்படவேண்டும் என்ற சரத்து ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டால்தான் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வோம் என்று ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவர்களை ஆட்கொண்டது.  உடனே அவசர அவசரமாக கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னதாக மார்ச் 23 அன்றே அம்மாவீரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் காந்தியடிகளுக்கே இந்திய மக்கள் கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்ததை உலகம் அப்போதுதான் பார்த்தது.  அவர் கராச்சி மாநாட்டிற்குச் செல்லும் வழிநெடுகிலும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு முழக்கங்களுமே அவரை வரவேற்றன.
“தமது மைந்தரிடம் கொண்டிருப்பதைவிட அம்மூவரிடம் மகாத்மா பேரன்பு கொண்டிருந்தார்.  அவருக்கும் லார்டு இர்வினுக்கும் மிகவும் அந்தரங்கமாக பேச்சு நடந்தது.  மூவரையும் உயிர் வாங்காதிருக்க இர்வின் பிரபு இஷ்டப்பட்டார் என்றே நாம் கொள்ளலாம்.  ஆயினும் விதிவலி வேறாக இருந்தது.  அதனால் பஞ்சாப் மாகாண அதிகாரிகள் பிடிவாதமாக இருந்தனர்” என்று காந்தியின் பக்தர்கள், கோபம் கொண்ட மக்களுக்கு சமாதானம் சொல்லியாக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

“அவர்கள் வாழ விரும்பவில்லை” என்பது காந்தியடிகளின் சமாதானம்.  உண்மைதான், தாங்கள் இந்த நாட்டிற்காக செய்யும் தியாகத்தின் மூலம் நாடு முழுவதும் மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.  அவர்கள் விருப்பம், அவர்களின் உன்னதமான தியாகத்தின் உச்சத்தைக் காட்டுகிறது.  ஆனால் அதையே காரணம் காட்டி அவர்களை சாகவிட முடியுமா ? அல்லது அவர்கள் வேண்டுமென்றே சாக விரும்பினார்கள் என்று கூறமுடியுமா ? 
பகத்சிங் உயிர் வாழவேண்டுமென்று விரும்புகிறாரா என்று கேட்டு அவரது சக தோழர்கள் சிறைக்குள் அவருக்கு சீட்டு எழுதி அனுப்பினர்.  அவர்கள் கேட்ட கேள்விக்கு மரணத்தைக் கண்டு அஞ்சாத அந்த மாவீரன் எழுதிய இக்கடைசிக் கடிதத்தைப் பாருங்கள் : 
-------------------------------------------------------------------------------------------------------------


1931   மார்ச் 22
தோழர்களே,
வாழ வேண்டுமென்ற ஆசை இயற்கையானதே.  அது என்னிடமும் உள்ளது.  அதை நான் மறைக்க விரும்பவில்லை.  ஆனால் அந்த ஆசை நிபந்தனைக்குட்பட்டது.

ஒரு சிறைக் கைதியாகவோ நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை.  என் பெயர் இந்தியப் புரட்சியின் அடையாளச் சின்னமாகியுள்ளது.   புரட்சிகரக் கட்சியின் கொள்கையும் தியாகங்களும், ஒரு வேளை நான் உயிர் வாழ்ந்தாலும் என்னால் ஒருபோதும் அடைய முடியாதவொரு உயரத்திற்கும் அப்பால் என்னை ஏற்றி வைத்துள்ளன.

இன்று என் பலவீனங்களை மக்கள் அறியமாட்டார்கள்.  ஒருவேளை தூக்கு மேடையிலிருந்து நான் தப்பிப் பிழைத்தால் அந்த பலவீனங்கள் எல்லாம் அவர்கள் முன்னால் வெளிப்படக்கூடும்.  புரட்சியின் அடையாளச் சின்னம் களங்கப்பட்டு நிற்கலாம் அல்லது ஒருவேளை அது முற்றாக மறைந்தும் போகலாம்.  

அவ்வாறின்றி துணிச்சலோடும் புன்னகையோடும் நான் தூக்குமேடையேறினால், அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும்.  தங்களது பிள்ளைகளும் பகத்சிங்கைப் போல் ஆக வேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள்.  இதன் மூலம், நமது நாட்டின் விடுதலைக்காக தங்களது உயிர்களையும் தியாகம் செய்யச் சித்தமாயிருப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும்.  அதன் பிறகு, புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்.  அதன் முன்னோக்கிய அணிவகுப்பை அவர்களது வாள் வலிமையாலும் எல்லாவகை அசுர முயற்சியாலும் கூட தடுத்து நிறுத்தி விட முடியாது.

ஆம்.  ஒரு விஷயம் இன்றும் கூட என்னைத் துளைத்துக் கொண்டிருக்கிறது.  

மனித குலத்திற்கும் என் நாட்டிற்கும் ஏதாவது செய்ய வேண்டி சில குறிக்கோள்களை எனது இதயத்தில் பேணி வளர்த்தேன்.  அந்தக் குறிக்கோள்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஒரு வேளை நான் உயிரோடிருந்தால் அவற்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கலாம்.  நான் சாகக் கூடாது என்ற எண்ணம் எப்போதாவது என் மனதில் உண்டாகக் கூடுமானால், அது இந்த நோக்கத்தில் இருந்து மட்டுமே உண்டாகும்.

இந்நாட்களில் என்னைப் பார்த்து நானே பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.  கடைசிக் கட்ட சோதனைக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.  அந்த நாள் வெகு சீக்கிரத்தில் வரவேண்டு மென்றும் விரும்புகிறேன்.

உங்கள் தோழன், 
பகத்சிங்.
நன்றி: கேளாத செவிகள் கேட்கட்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்