புதன், 6 ஏப்ரல், 2011

ஊழலுக்கு எதிரான போர் - அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம்




எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று இந்தியாவின்  ஆணிவேர்வரை  ஊழலின் வீச்சு பரவியுள்ளது. சாதரண மக்களிடமிருந்து வசூல் செய்யும் வரிப்பணத்தில்  அரசியல் வாதிகளின் குடும்பம் உல்லாசமாக உலவவும்  ,  சாதாரண ஏழை மக்கள் வறுமையில் வாடவுமான நிலை இந்திய சமுதாயத்தில் நிலவுகிறது. ஊழலின் ஆணிவேர் எதுவென்று பார்த்தால் அது எந்த வெட்கமுமின்றி பல்லிளிக்கும் முதலாளித்துவம் தான் என்பது சமீபத்தில் அம்பலமான  மாபெரும் அலைக்கற்றை ஊழலில் அப்பட்டமாக   வந்தது . மேலும்  ராஜாவின் ஊழலில்  அம்பானிக்கும், டாட்டாவுக்கும் நேரடி தொடர்ப்பு இருப்பது மறைக்கமுடியாமல் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஊழல் என்பது சில லட்சங்கள் என்பதையெல்லாம்  தாண்டி விட்டது. தற்போது  சர்வசாதரணமாக லட்சம் கோடிகளை வாரி சுருட்டி கொண்டிருக்கின்றனர்.

 ஏழை நாடு என்று சொல்லும் இந்தியாவில் தான் தேர்தல் ஆணையத்தால்  5  கோடி ரூபாய்  ஒரு தொகுதியில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் களத்தில் மட்டும் 30 ,000 கோடிகளுக்கு  மேல்    செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுள்ள சட்டங்கள் ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை தண்டிக்ககூடிய எந்த வலுவையும் கொண்டிருக்க வில்லை. அத்தோடு நீதிமன்றங்களும்   ஊழலுக்கு எதிராக எந்த உறுதியான நடவடிக்கையும் எடுப்பதில்லை. அங்கும் படிப்படியாக ஊழல் வேர்பிடித்து வருகிறது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. பால கிருஷ்ணன் மீது பல ஊழல் குற்ற சாட்டுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்துகொண்டுள்ளன, ஒரு நாட்டின் தலைமை நீதிபதியே இப்படி என்றால் ஒட்டுமொத்த நீதி துறையும்  எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது  சொல்லி தெரியவேண்டியதில்லை .

இந்த நிலையில்  முற்றிலுமாக   ஊழலை ஒழிக்காவிட்டாலும்  ஓரளவிற்காவது ஊழலை கட்டுப்படுத்த லோக்பால் மசோதா  கண்டிப்பாக அமுலுக்கு வரவேண்டும்.   கர்நாடகத்தில்  எடியுரப்பா மற்றும் பல சுரங்க தொழில் செய்யும் மாபியா  அமைச்சர்களின்  ஊழல்களை  அம்பலமாக்கியத்தில் லோக்பாலுக்கு  முக்கிய பங்குண்டு.பிரதமரையும் ,அமைச்சர்களையும் இதன் மூலம் நேரடியாகவே சம்மன் அனுப்பி விசாரிக்க முடியும். இந்த மசோதாவை வரைவதில் உண்மையான சமூக அக்கறை  உள்ளவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கோரிக்கை  வைக்கப்பட்டது . ஆனால் ஆளும் மத்திய அரசோ அதை நிராகரித்து விட்டது. அந்த சட்டத்தில்  பல ஓட்டைகளை வைத்தே இந்த ஊழல் திமிங்கலங்கள் லோக்பாலை   சட்டமாக்க   முயற்சி செய்து வருகின்றன.   
ஊழலுக்கு எதிரான   லோக்பால் மசோதாவின் வரைவுப் பணியில் சாமானியர்களுக்கான பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிசமூகப் போராளியும், காந்தியவாதியுமான 72  வயதான  அண்ணா ஹசாரே டெல்லியில் ஜந்தர் மந்தரில்  செவ்வாய் கிழமை(05.04.2011) முதல்   காலவரையற்ற உண்ணா விரதப்போராட்டத்தை  தொடங்கியுள்ளார்.  லோக்பால் மசோதா தயாரிப்பில் குடிமக்களின் பங்களிப்புக்கு  அரசு ஒப்புக்கொள்ளும்வரை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட மாட்டேன் என அவர் உறுதியுடன் கூறியுள்ளார்.  ஊழலுக்கு எதிராக பலமான மக்கள் இயக்கம் இல்லாத இந்த சூழ்நிலையில் அண்ணா ஹசரேவின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இந்திய முழுவதும் கண்டிப்பாக  தீப்பொறியாய்பரவும் . அதை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றவேண்டியது சமூக மாற்றத்திற்காக போராடுபவர்களின் கடமையாகும்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்