ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க இப்படிச் செய்தாலென்ன?

தங்கள் பிள்ளைகளின் வளமான எதிர்காலம் பற்றிய கனவிலிருக்கும் பெற்றோர்களை அட்டையாய் உறிஞ்சும் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளை நாடறிந்ததே. பத்தாண்டுகாலமாக இக்கட்டணக் கொள்ளை அரசின் காதிலேயே விழாமல் இருந்தது. தாங்கமுடியாத கட்டணச் சுமையால் நிதானமிழந்த சில பெற்றோர்கள் ஆங்காங்கே கலகங்களில் ஈடுபடுவதும்; பின்னர் காவல்துறையினரால் ஏமாற்றி - மன்னிக்கவும் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப் படுவதும் வாடிக்கையான ஒன்றாகிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளைக்கு ஒரு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்காக  ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது. அக்கமிட்டியும் சுமார் 10,951 தனியார் பள்ளிகளிடமிருந்து அவர்கள் இப்போது வசூலித்துக் கொண்டிருக்கும் கட்டண விபரங்களைக் கோரிப் பெற்றது. அவற்றை வகைப்படுத்தி அவற்றின் சராசரிக் கட்டணங்களை 'நியாயமான' கட்டணமாக அறிவித்தது. அதையும் எதிர்த்து 6400 தனியார் பள்ளி முதலாளிகள் உயர் நீதிமன்றம் சென்று அதற்குத் தடை உத்தரவும் பெற்றனர். அவர்களது கட்டணத்தை திருத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து நீதிபதி கோவிந்தராஜன் ராஜினாமா செய்துவிட்டார். அவருக்குப் பதிலாக ஓய்வுபெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டியின் தலைவரானார். திருத்தப் பட்ட கட்டணம் வரும்வரை அந்த 6400 பள்ளிகள் 2009-2010 வருடக் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றும் மற்ற பள்ளிகள் கோவிந்தராஜன் கமிட்டி  நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தன் அறிக்கையை சமர்ப்பித்து மாதங்கள் பல உருண்டோடி வருடங்களாகிக் கொண்டுள்ளன. ஆனாலும் அந்தக் கண்துடைப்பான கட்டண நிர்ணயம் கூட உண்மையில் அமலாகுமா? பெற்றோர்களின் வேதனைக்கு விடிவு வருமா? என்பதெல்லாம் சந்தேகத்திற்குரியதே.

ஏனெனில் இது போன்றதொரு கட்டண நிர்ணயம் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் ஏற்படுத்தப் பட்டது. இன்று அதன் நிலை என்ன? வருடா வருடம் தனியார் பொறியியல் கல்லூரி முதலாளிகள், விலைவாசி ஏறிவிட்டதால் கட்டணத்தை இவ்வளவு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். அரசும் அவர்கள் கேட்டதில் ஒரு காக்கா கடி கடித்துக் குறைத்துக் கொண்டு மீதித் தொகையை கட்டண உயர்வாக அறிவிப்பார்கள் (எல்லாம் பேசி வைத்துச் செய்வதுதானே). விளைவு, நம் கண் எதிரில். அதிக மதிப்பெண் இருந்தும் பணமில்லாத ஏழை மாணவர்களுக்கு பொறியியல் கல்வி என்பது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது. ஆனால் போதுமான மதிப்பெண் இல்லாவிட்டாலும் போதுமான பணம் இருந்தால் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். இன்று நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்திருக்கும் தனியார் பள்ளிக் கட்டணத்திற்கும் நாளை இதே கதிதான்.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிடக் கூடுதலாக தனியார் பள்ளி முதலாளிகள் கட்டணம் வசூலித்தால் எத்தனை பெற்றோர்கள் அதுபற்றிப் புகார் அளிக்க முன்வருவார்கள். புகார் அளிக்கும் பெற்றோர்களது பிள்ளைகளின் பிஞ்சு மனங்களைக் காயப்படுத்தக்கூடத் தயங்காத தனியார் பள்ளி முதலாளிகளின் குணம் தெரிந்திருந்தும் எவர் முன்வருவர். ஆனாலும் தமிழக அரசும் அதிகாரிகளும் "அது பற்றிப் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " என்று அறிக்கை கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

பல பொதுத்துறை நிறுவனங்களுக்குப் போட்டியாக தனியார் நிறுவனங்கள் வந்தபோது அப்போட்டியைச் சமாளிக்க அரசு எடுத்த முயற்சிகளும், கல்வித்துறையில் தனியார் நுழைந்து அரசுப் பள்ளி-கல்லூரிகளுக்குப் போட்டியாக உருவானபோது அரசின் அணுகுமுறையும் நம்மைச் சற்று யோசிக்க வைக்கின்றன.  

உதாரணத்திற்கு தொலைத்தொடர்புத் துறையை எடுத்துக் கொள்வோம். அதில் போட்டியாகத் தனியார் நிறுவனங்கள் நுழைந்தவுடன், அரசு தனது தொலைத்தொடர்புத் துறையை BSNL நிறுவனமாக மாற்றி அதன் போட்டியிடும் திறனை அதிகப்படுத்தியது. இப்போது தனியார் தொலைபேசி, செல் போன் நிறுவனங்களுக்கு BSNL நிறுவனம் கடும் சவாலைக் கொடுத்துக் கொண்டுள்ளது. தனியார் சேவையில் இருந்து BSNL சேவைக்கு மாறுவது பற்றிப் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

அதுபோல, அரசுப் பள்ளி-மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித் தரத்தை தனியார் பள்ளிகளின் கல்வித் தரத்திற்கு உயர்த்தி தனியார் பள்ளிகளுக்கு அரசு கடும் போட்டியை ஏற்படுத்தினால், நிச்சயமாக பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு - மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மாற்றுவார்கள். அப்போது தனியார் பள்ளி முதலாளிகள் மாணவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தாங்களாகவே முன்வந்து கட்டணங்களைக் குறைப்பார்கள்.ஒருவேளை தங்கள் பள்ளிகளில் சேர்பவர்களுக்கு இலவசப் பரிசுகளும் விழாக்காலச் சிறப்புத் தள்ளுபடிகளும் அறிவித்தாலும் அறிவிப்பார்கள், சொல்ல முடியாது! 

ஏனெனில் பெரும்பான்மையான பெற்றோர்கள் விரும்பிப் போய் அதிகக் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்க்கவில்லை. அரசுப் பள்ளி-மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித் தரம் சீரழிந்து போனதால், தங்கள் பிள்ளைகள் படித்து ஒரு நல்ல வேலைக்குச் சென்றால்தான் அவர்களுக்கு எதிர்காலம் என்ற நிலையில், தனியார் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் போகத் துவங்கினர்.  தனியார் பள்ளிகளின் அதீதக் கட்டணத்தைச் செலுத்துமளவிற்கு வருமானமில்லாத ஏழை - நடுத்தர வர்க்கப் பெற்றோர்களும்கூட தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தாம் செய்யும் தியாகமாக நினைத்து, குடும்பத்தின் அத்தியாவசியச் செலவுகளைக்கூடக் குறைத்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கின்றனர். (இந்தப் பொறுப்புமிக்க பெற்றோர்களை ஆங்கில மோகம்-தனியார் மோகத்தில் தன்னிலை மறந்தவர்கள் என்று வசைபாடும் பொறுப்பற்றவர்களை விட்டுத்தள்ளுங்கள்). எனவே தனியார் பள்ளிகளில் கிடைக்கும் இதே தரமான கல்வி அரசுப் பள்ளி-மாநகராட்சிப் பள்ளிகளில் கிடைக்குமானால், வேறுவழியின்றி தனியார் பள்ளிகளில் படிக்க வைத்து வரும் எல்லாப் பெற்றோர்களும் அரசு - மாநகராட்சிப் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை நிச்சயம் மாற்றுவார்கள்.

அரசுப் பள்ளி-மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதன் மூலம் ஒரே சமயத்தில் இரண்டு நன்மைகள் நடக்கும். ஒருபக்கம் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து பெரும்பாலான பெற்றோர்களை மீட்க முடியும். அதேசமயம், தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து அந்தளவிற்குச் செலவு செய்து படிக்க வைக்க முடியாத தன் ஏழ்மையை நொந்துகொண்டு தங்கள் பிள்ளைகள் எழுதப் படிக்கத் தெரியும் அளவிற்காவது படிக்க வேண்டுமே என்ற "பேராசையில்"  வேறுவழியின்றி அரசுப் பள்ளிகளிலும் மாநகராட்சிப் பள்ளிகளிலும் படிக்க வைத்து வரும் ஏழைப் பெற்றோர்களும் இதனால் நன்மையடைவார்கள். ஏழை மாணவர்களுக்கு எழுதப் படிக்க மட்டும் தெரிந்த கல்வி - வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புக்கான கல்வி என்று வர்க்கத்திற்கு ஒரு கல்வி என்றிருக்கும் இன்றைய‌ அவல நிலையை ஓரளவிற்காவது மாற்ற முடியும்.

எனவே தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க, அரசுப் பள்ளி-மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித் தரத்தை தனியார் பள்ளிகளின் கல்வித் தரத்திற்கு உயர்த்துமாறு அரசை நிர்பந்திப்போம்! அதுபற்றிய பொதுக் கருத்தைத் திரட்டுவோம்!

இதுபற்றி "இயக்கம்" தன் வலைப்பூவில் துவக்கியுள்ள கருத்துக் கணிப்பில் உங்கள் கருத்தைத் தவறாமல் பதிவு செய்யுங்கள். கடைசிநாள்: 30 ஜூன் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்