ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் குறிப்பிடத்தக்கச் செயல்பாடும் இந்திய முதலாளித்துவத்தின் பகீரதப் பிரயத்தனமும்தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து கொண்டுள்ளது. தமிழகத்தில் 75-80 சதவீத வாக்குப்பதிவுடன் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

 இந்தியாவில் நிகழ்ந்த கடந்த சில தேர்தல்களை குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தல்களையும், பாராளுமன்றத் தேர்தல்களையும் நோக்கும் பொருட்டு இந்தியாவில் தேர்தல் கமிசன் செயல்படுகிறதா? இல்லையா? என்ற கேள்வி மக்கள் மத்தியில்
எழுந்தது. பணபலமும், வன்முறையுமே அத்தேர்தல்களை வழிநடத்துபவனாக விளங்கின. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மீண்டும் ஒருமுறை முதலாளித்துவ ஜனநாயக சமூக அமைப்பின் செல்லுபடித்தன்மை கேள்விக் குறியானது.


   ஆனால் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வன்முறை ஏதுமின்றி, மேலும் வாக்காளருக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போக்கும் ஓரளவிற்கு கட்டுபடுத்தப்பட்ட சூழ்நிலையில் நிகழ்ந்த 80 சதவீத வாக்குப்பதிவானது இந்திய முதலாளித்துவ ஜனநாயக சமூக அமைப்பின் முக்கிய அங்கமான தேர்தல் ஆணையத்தின் மீது ஒரு நம்பிக்கையை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


 உலக அளவில் சமீபத்தில் ஏற்பட்ட மிகத்தீவிரமான முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா உட்பட அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் ஒரு நிலையற்றத் தன்மையைத் தோற்றுவித்துள்ளது. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரமே முதலாளித்துவச் சுரண்டலிலிருந்தான விடுதலையைத் தரும் என்பதை உலகிற்கு உறுதி கூறிய மாமேதை கார்ல் மார்க்ஸ் கூறியதுபோல் தற்போது உலக அளவில் அடுத்தடுத்து தோன்றும் பொருளாதார நெருக்கடிகளின் மூலம் முதலாளித்துவ சமூக அமைப்பு மீளமுடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.


 இக்காலக் கட்டங்களில் முதலாளித்துவ ஜளநாயகமானது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மக்கள் நல அரசாங்கங்களை நடத்துகிறோம் என்ற வகையில் தன் சமூகப் பிடியை இறுக்கிக்கொள்ளும் அல்லது அதன் கடைசி ஆயுதமான பாசிச நடவடிக்கைகளை மேற்கொள்ளும். உலக வரலாற்றில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் பாசிசத்திற்கு கொடுத்த மரண அடியானது முதலாளித்துவ உலகின் மறைக்க முடியாத வடுவாக உள்ள இன்றையச் சூழ்நிலையில் முதலாளித்துவம் பாசிசத்தைத் தன் கடைசி ஆயுதமாகவே எடுக்கத் துணியும்.


 ஆனால் இச்சமூகத்தின் மீதான மக்களின் குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களின் நம்பிக்கையை கைக்கொள்ளும் வண்ணம் சில “நற்செயல்களை ” மேற்கொள்ளும். மக்கள் நல அரசாங்கங்களும் சரி, தற்போதைய இந்திய தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வும் சரி மேற்கூறிய வகையிலினாதே. இடதுசாரிக் கட்சிகள் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு சேவை புரியும் அமைப்புகளாகவே உள்ள இச்சூழ்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய பகீரதப் பிரயத்தனம் - தன் வாழ்நாளை இன்னும் சிறிது காலம் நீட்டிக்கும் முனைப்புடன் இந்திய முதலாளி வர்க்கம் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனமே.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்