ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

ஊழலுக்கெதிரான சமூக ஆர்வலர் திரு. அன்னா ஹசாரே அவர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் சமூக ஜனநாயக சக்திகளின் பங்கு

  
  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுடன் தோன்றிய முதலாளித்துவ ஜனநாயகம் அதன் உண்மையான உள்நோக்கமான -  முதலாளி வர்க்க நலனை மட்டுமே பேணிக்காக்கும் தங்கு தடையில்லாத வாணிபச் சுதந்திரத்தைப் பேணிக் காப்பதாகவே இன்று சுருங்கிப் போயுள்ளது. இம்முதலாளித்துவ சமூக அமைப்பின் அடிப்படைகக் கோட்பாடுகளில் மிகப்பெரிய சறுக்கல்கள் தோன்றும் போது அவற்றிக்கெதிராக கிளர்ச்சிகள் சமூகத்தில் வெடித்துக் கிளம்பும் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டே திரு. அன்னா ஹசாரே அவர்களால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தற்காலங்களில் அரங்கேறும் மாபெரும் ஊழல்களுக்கெதிரான சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாகும்.


 இவ்வகையிலான ஒரு மாபெரும் கிளர்ச்சியானது 1970 களில் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் (ஜே.பி) அவர்களால் தொடங்கப்பட்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்திய அரசியலில் தோற்றுவித்தது. இக்கிளர்ச்சியின் வாயிலாக இன்று திரு. அன்னா ஹசாரே அவர்களை திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் ஒப்பிடும் போக்கு தோன்றியுள்ளதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
 ஊழலுக்கெதிரான லோக்பால் - ஒரு திடமான சட்டவரைவு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் திரு. அன்னா ஹசாரே அவர்களால் துவங்கப்பட்ட இயக்கம், தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில்  நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் பொதுவாக இந்தியர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய உலகக்கோப்பை வெற்றி போன்ற சம்பவங்களுக்கு மத்தியிலும் இந்திய மக்களனைவரையும், குறிப்பாக இந்திய நடுத்தர மக்களனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு மாபெரும் நாடு தழுவிய இயக்கமாக இவ்வியக்கம் உருப்பெற்றது. எங்கே ஜே.பி இயக்கத்தின் 2ஆம் பகுதி தொடங்கிவிட்டதோ என்ற ரீதியில் ஆட்சியாளர்களுக்கு ஒரு மிரட்சியை ஏற்படுத்தியது.


 வரும் குளிர்காலக் கூட்டத்தொடருக்குள் ஊழலுக்கெதிரான திடமான லோக்பால் சட்டவரைவு கொண்டு வரப்படும் நோக்கில் திரு. அன்னா ஹசாரே உட்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் திரு.மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்டு திரு.அன்னா ஹசாரே அவர்களால் தொடங்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜனநாயகப்போராட்டத்திற்கான ஒரு மிகப்பெரிய வெற்றியாகவே சமூக ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது. இக்கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் இப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்ற திரு. அன்னா ஹசாரே அவர்களின் அறிவிப்பு சமூக ஜனநாயக சக்திகளுக்கு ஒரு உத்வேகத்தையும் வழங்கியுள்ளது.


 உண்மையான சமூக ஜனநாயகத்தை இன்றைய சமூக அமைப்பை முழுமையாக மாற்றியமைப்பதின் மூலமே நிறுவமுடியும் என்ற மார்க்சிய பொதுவுடமைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டு செயல்படும் சமூக ஜனநாயகவாதிகள் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பவர்களாக திரு. அன்னா ஹசாரே அவர்களின் கரங்களை வலுப்படுத்த முழுவீச்சில் முன்வர வேண்டும். அதே சமயத்தில் சமூக மாற்றத்தை இந்திய மண்ணில் நிலைநாட்ட இவ்வகையிலானப் போராட்டங்கள் தங்கு தடையில்லாமல் தொடர வேண்டும். சமூக மாற்றத்தை நிலை நிறுத்துவதற்கு ஒரு சரியான கருவியான இவ்வியக்கத்தில் முழுவீச்சுடன் பங்கு பெற வேண்டும். தொடர்ந்து செயல்பட வேண்டும். கோடிக்கால் பூதமென கிளர்ந்தெழ வேண்டும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்