"உண்மை" எனும் இணைய உலாவி ஒரு நல்லெண்ணத்துடன் "போராட்டம்" எனும் ப்ளாக்கில் 'உங்களைப் பற்றிய பதிவு' என நமது "பகத்சிங்கை ஓட்டு அரசியலுக்கு இழுக்கும் DYFI-ம் தன் அரசியலுக்கு இழுக்கும் மகஇக-வும்" எனும் பதிவிற்கான இணைப்பை வழங்க, "போராட்டம்" நிர்வாகி (அவரது உண்மைப் பெயரை அறிய முடியவில்லை) நமக்கான பதில் ஒன்றை
அவரது தளத்திலேயே போட, நண்பர் பகத் அப்பதிலை நாம் அறியுமாறு செய்துள்ளார். "போராட்டம்" நிர்வாகி யாரென்றே தெரியாத போதும் அவர் அவரது தளத்திலேயே அப்பதிலைப் போட்டுக் கொண்டுள்ள போதும் நண்பர்கள் "உண்மை" மற்றும் பகத் (இருவரும் ஒருவராகக் கூட இருக்கலாம்) ஆகியோருக்காகவாவது அதற்கான நம் பதிலைச் சொல்வது அவசியம் என்று கருதியதால் இந்தப் பதிவு:
அவரது தளத்திலேயே போட, நண்பர் பகத் அப்பதிலை நாம் அறியுமாறு செய்துள்ளார். "போராட்டம்" நிர்வாகி யாரென்றே தெரியாத போதும் அவர் அவரது தளத்திலேயே அப்பதிலைப் போட்டுக் கொண்டுள்ள போதும் நண்பர்கள் "உண்மை" மற்றும் பகத் (இருவரும் ஒருவராகக் கூட இருக்கலாம்) ஆகியோருக்காகவாவது அதற்கான நம் பதிலைச் சொல்வது அவசியம் என்று கருதியதால் இந்தப் பதிவு:
பகத்சிங் நினைவுநாளில் மதுரையில் DYFI-ம் மகஇக-வும் பகத்சிங்கின் அரசியலை மக்களிடம் கொண்டுசெல்லாமல், தங்கள் அரசியலைக் கொண்டு செல்லப் பகத்சிங்கைப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் அந்தப்பதிவில் நாம் பதிவு செய்திருந்த நமது ஆதங்கமும் விமர்சனமும் ஆகும். ஆனால் "போராட்டம்" நிர்வாகி இதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.
மாறாக அவர் //SUCI-ன் புளித்துப் போன அரசியலை இன்றும் கைவிடாமல், அமைப்பின் பெயரை மட்டும் மாற்றிக் கொண்டுள்ள உங்களின் பார்வை எமக்குப் புதியதல்ல.// என்று எழுதுகிறார். அதற்காக நாமும் உடனே, SUCI முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சியை நடத்தாது என்ற முடிவுக்கு வந்த பின்னர் அந்தப் புரட்சியை நடத்துவதற்காக CWP எனும் புதிய அமைப்பை உருவாக்கியுள்ள நாங்கள் அதே முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சியினடிப்படையிலான அரசியலைப் பேசுவது புளித்துப் போன அரசியல் என்றால், மா.லெ-யிலிருந்து பிரிந்து SOC எனும் புதிய அமைப்பை உருவாக்கிய பின்னரும் மா.லெ-யின் அதே புதிய ஜனநாயகப் புரட்சியினடிப்படையிலான அரசியலை நீங்கள் பேசுவது புளித்துப் போன அரசியல் இல்லையா என்று நாங்கள் கேட்க...... உடனே நீங்கள் அந்தப் புரட்சிக்கும் இந்தப் புரட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று காட்டத்தொடங்கினால்.....இந்த விவாதம் "பகத்சிங் நினைவுநாளில் பகத்சிங்கின் அரசியலை ஏன் மக்களிடம் கொண்டுசெல்லவில்லை" என்ற அந்தப் பதிவின் மையமான விமர்சனத்திற்கான பதிலைத் தருமா?
//சி.பி.எம்-ன் நீட்சியான “சிப்தாஸ் கோஷின்” வாரிசுகள், தமக்குள் முரண்பட்டுப் பிரிந்தாலும், அரசியலில் தமது அதே வாய்ஜாலங்களுடன் தமது ப்ழைய மொன்னைத்தனத்தையே தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள். //("மொன்னைத்தனம்" -மார்க்சிய விமர்சன அகராதியில் மறக்காமல் சேர்த்து வைக்க வேண்டிய மதிப்புமிக்க சொல்லாடல்) என்று "போராட்டம்" நிர்வாகி சொல்வதைப் படித்தவுடன், நாமும் வேகமாக சிப்தாஸ் கோஷால் SUCI உருவாக்கப் பட்டது 1948ல்; சி.பி.எம் உருவானது 1964ல். சுமார் 16 வருடங்களுக்கு முந்தய சிப்தாஸ் கோஷை 16 வருடங்களுக்குப் பின் உருவான சி.பி.எம்-ன் நீட்சி என்று சொல்வது வேடிக்கையாக இல்லையா? கட்சிகளின் வரலாறு தெரியாமல் பேசலாமா நண்பரே என்று சொல்ல.... கட்சிகளின் வரலாறுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் சொல்ல.... இந்த விவாதம் "பகத்சிங் நினைவுநாளில் பகத்சிங்கின் அரசியலை ஏன் மக்களிடம் கொண்டுசெல்லவில்லை" என்ற அந்தப் பதிவின் மையமான விமர்சனத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிடுமே.
அடுத்ததாக "போராட்டம்" நிர்வாகி //ஒரு முழக்கம் மற்றும் ஒப்புமை அடிப்படையில் “அன்று:கிழக்கிந்தியக் கம்பெனி/ இன்று:பன்னாட்டுக் கம்பெனிகள்” என எழுதப்பட்ட முழக்கத்திற்கு, “இவர்கள், பகத்சிங் அன்று எதிர்த்துப் போராடியது கிழக்கிந்தியக் கம்பெனியையே என்றும்; அதனால் இன்று நாம் எதிர்க்க வேண்டியது பன்னாட்டுக் கம்பெனிகளையே என்றும் வேண்டுமென்றே தங்களது அரசியலுக்காக வரலாற்றையே திரித்துக் கூறக் கூடத் தயங்காதவர்கள். ஏனெனில் பகத்சிங் அன்று எதிர்த்துப் போராடியது ஆங்கில ஏகாதிபத்திய “அரசை”த்தானே தவிர, கிழக்கிந்தியக் கம்பெனியை அல்ல.” என வியாக்கியானம் செய்த அழகிலேயே தங்களது விவாத முறை விளங்குகிறது.// என்று சொல்வதைப் படித்துவிட்டு, நண்பரே, ஒப்புமைக்காக வரலாற்றில் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியையும் 75 ஆண்டுகளுக்குப் பின்வந்து ஆங்கில ஏகாதிபத்திய “அரசை” எதிர்த்துப் போராடிய பகத்சிங்கையும் சமகாலத்தவர் போல் ஒன்றாகப் பொருத்திக் காட்டுவது வரலாற்றுத் தவறு இல்லையா என்று நாம் கேட்டால்.....அதிலென்ன தவறு என்று நம் விவாதம் தொடர்ந்தால்.......இந்த விவாதத்தில் "பகத்சிங் நினைவுநாளில் பகத்சிங்கின் அரசியலை ஏன் மக்களிடம் கொண்டுசெல்லவில்லை" என்ற அந்தப் பதிவின் மையமான விமர்சனத்தின் விளிம்பையாவது நாம் தொடமுடியுமா?
கடைசியாக //“அதனை உணர்ந்து உணர்வு பெற்ற உழைக்கும் மக்கள் தி.மு.கழகக் கூட்டணிக்கு எதிராக இத்தேர்தலில் வாக்களித்து மக்கள் இயக்கங்களுக்கான வாய்ப்பை ஓரளவிற்கேனும் காப்பாற்ற முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.” அபாரம்! இதற்கு நேரடியாக அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்லியிருக்கலாமே!// என்று "போராட்டம்" நிர்வாகி பதிவு போட்டதைப் பார்த்துவிட்டு, அப்படியானால் திமுக-வே மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் வந்துவிட்டுப் போகட்டும் என்று கண்ணைப் பொத்திக் கொண்டு இருந்துவிடுவோமா நண்பரே என்று நாம் கேட்டால்.....மாமேதை மாவோ, நேற்று வரை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக இருந்த சியாங்கே ஷேக்குடன் கூட்டுச் சேரமாட்டேன்; ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்தால் ஆக்கிரமித்துவிட்டுப் போகட்டும் என்று ஏன் சும்மா இருக்கவில்லை என்று நாம் கேட்டால்..... அதற்கு மாவோவோடு ஒப்பிட்டுக் கொள்ள உங்களுக்கு என்ன துணிச்சல் என்று நீங்கள் பதில் கேள்வி போட்டால்..... ஒரு ஒப்புமைக்காகச் சொன்னதைப் போய்.... என்று நாம் சொன்னால்......இந்த விவாதத்தின் மூலம் "பகத்சிங் நினைவுநாளில் பகத்சிங்கின் அரசியலை ஏன் மக்களிடம் கொண்டுசெல்லவில்லை" என்ற அந்தப் பதிவின் மையமான விமர்சனத்தைப் பொறுத்து நாம் ஏதேனும் முடிவுக்கு வர இயலுமா?
ஆகவே நண்பரே!
அந்தப் பதிவின் மையமான விமர்சனமான (மையத்திலிருந்து விலகிச் சென்றுவிடாமல் இருப்பதற்காக இத்தனை தடவை இதனை மறுபதிப்புச் செய்ய வேண்டியதாகி விட்டது. கூறியது கூறல் குற்றத்திற்காக மன்னிக்கவும்) பகத்சிங் நினைவுநாளில் பகத்சிங்கின் அரசியலை மக்களிடம் கொண்டு செல்லாமல், உங்கள் அரசியலைக் கொண்டு செல்லப் பகத்சிங்கைப் பயன்படுத்தியது பற்றிய விமர்சனத்தின் மீது (விமர்சனம் செய்த நபர்களின் மீது அல்ல) நமது ஆக்கப் பூர்வமான விவாதத்தைத் தொடர்வோம்.
நமது இலக்கு, நமது புலமையின் மேன்மையைக் காட்டுவது அல்ல; பல்வேறு பார்வைக் கோணங்களுடன் பல்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் நேர்மையான, சமூக மாற்றம் விரும்பும் பலரையும் ஒருதிசை நோக்கிப் பயணிக்க வைப்பதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக