தியாகி பகத் சிங் 1931 வது வருடம் மார்ச் மாதம் 23 நாள் அன்று வெள்ளை அரசால் தாய் நாட்டின் விடுதலைக்காக போராடியதற்காக துக்கிலிடப்படார். அந்த மாவீரனின் நினைவு நாளான மார்ச் 23 அன்று ஒவ்வொரு வருடமும் கம்யுனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பாரம் (CWP ) அமைப்பு பகத்சிங்கின் வாசகங்கள் அடங்கிய ஸ்தூபியை அமைத்தும் ,பொதுக்கூட்டம் நடத்தியும் பகத்சிங் விட்டுச்சென்ற வரலாற்றுக்கடமையை ஆற்றி வருகிறது. இந்த ஆண்டும் சிவகாசி ,ஆலங்குளம் , சமயநல்லூர் ஆகிய இடங்களில் பகத்சிங் நினைவு ஸ்தூபியை அமைத்து பகத்சிங்கின் நினைவு தினத்தை அனுசரித்ததோடு, கடந்த ஞயிற்றுக்கிழமை (27 .03 .2011 )அன்று சமயநல்லூர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் தியாகி.பகத்சிங்கின் 80 வதாவது நினைவு தினப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனுமதி கடிதம் கொடுத்தபோதும் அக்கூட்டம் நடைபெறாமல் தடுக்க காவல் துறை எல்லா முயற்சியும் செய்தது,இந்திய தேச விடுதலைக்காக போராடிய தியாகி பகத்சிங்கின் நினைவு தினக்கூட்டதிற்கு அனுமதி கிடைப்பதற்கு கூட நாம் கடுமையாக போராடவேண்டி உள்ளது என்பது ஒன்றே ‘ஒரு பணிக்கு ஒரு சோறு பதமாக’ இந்த சமுதாயத்தின் அவல நிலையை நாம் பார்க்கலாம்.
கூட்டம் மாலை ஆறுமணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது. கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பர்மின் தோழர்கள், பொதுமக்கள் உட்பட சுமார் நூறுபேருக்கு மேல் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கூட்டம் மிக சிறப்பான ஒழுங்குடன் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாணவர் ஜனநாயக இயக்கத்தின் (SDM) தலைவர் தோழர். டேவிட் வினோத் குமார் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) பொது செயலாளர் (தெற்கு) தோழர்.ஆ.ஆனந்தன் , ‘மாற்றுக்கருத்து’ இருமாத மார்க்சிய இதழின் ஆசிரியரும், பகத்சிங்கின் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய ‘கேளாத செவிகள் கேட்கட்டும்’ புத்தகத்தின் ஆசிரியரும், கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) அமைப்பின் தமிழக மாநில செயலாளருமான தோழர். த.சிவகுமார் , உழைக்கும் மக்கள் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர். வரதராஜ் , விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர். தங்கராஜ் , மாணவர் ஜனநாயக இயக்கத்தை(SDM) சேர்ந்த தோழர் .கோபி , மற்றும் கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பாரம் (CWP) அமைப்பை சேர்ந்த தோழர். ‘இடிமுழக்கம்’ மகாதேவன், ஆகியோர்கள் கலந்து கொண்டு பகத்சிங்கின் நினைவை அனுசரிப்பதன் நோக்கத்தையும் அந்த வீரத்தியாகிகளின் பாததடங்களில் நாம் நடைபயில வேண்டியதன் வரலாற்றுக்கடைமையும் எடுத்துரைத்தனர்.
தோழர்.த. சிவகுமார் தனது உரையில் 1931 அடிமை இந்தியாவில் என்ன நிலைமை இருந்ததோ அதே நிலைமை தற்போதும் நீடிப்பது என்பதுமான மோசமான நிலைமையில், பகத்சிங்கின் நினைவு தின கூட்டத்திற்கு அனுமதி கிடைப்பதற்கு கூட எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்பதை பதிவு செய்தார். தோழர் .ஆ.ஆனந்தன் தனது உரையில் பகத் சிங்கை மாவீரன் என்று ஏன் நாம் குறிப்பிடுகிறோம் என்பதற்கான காரணங்களை குறிப்பிடுகையில் சிறை சாலைகளில் சீர்திருத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்த போது அந்த மாவீரர்கள் காட்டிய நிதானமும் , உறுதியும் அவர்களின் மனவலிமையை பறை சாற்றுவதாக அமைந்தது என்பதை விரிவாக பேசினார். பரபரப்பான தேர்தல் நேரத்தில் தியாகி.பகத்சிங்கின் நினைவு தினக்கூட்டம் செம்மையாக நடந்து முடிந்தது .