திங்கள், 3 ஆகஸ்ட், 2020

இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகள் அல்ல; ஏகாதிபத்திய முதலாளிகளே

இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகள் அல்ல;

ஏகாதிபத்திய முதலாளிகளே


தோழர்கள் ஈரோடு செங்கதிர், அலெக்சாண்டர், கதிரவன் மற்றும் குழுவினர்களுக்கு: இப்பதிவின் பின்னூட்டத்தில் உள்ள இரண்டு லிங்குகளில் உள்ள பதிவுகளில் நீங்கள்முன்வைத்த கருத்துக்களின் சாராம்சம் இவைதான்: * நமது சமூகம் பெரும் முதலாளியத்தால் உருவானது அல்ல; தரகுமுதலாளியத்தால் உருவானதே. * பெரும் முதலாளியம் என்கின்ற வரையரை ஏகாதிபத்திய மறு உருவம் என்பதே. * இந்தியத்தில் பெரும் முதலாளியம் வளர்ந்து அது ஏகாதிபத்தியமாக பரிணமிக்கிறது என்று வரையரை செய்வது தவறானது. *** ஆனால் அதே சமயத்தில் இந்தியாவில் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் ஆளும் வர்க்கம் தரகு முதலாளித்துவ வர்க்கமே என்பதற்கு நீங்கள் எந்த ஆய்வையும் ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. மாறாக உலக வரலாற்று ஆதாரங்களுக்கு முரணாகவும் மார்க்சிய இயக்கவியலுக்கு முரணாகவும் உங்களது மாலெமா முன்னோடிகள் 1968-ல் வரையறுத்த வரையறுப்பையே உங்கள் வேத புத்தகமாகவும் கொண்டு உங்கள் வாதங்களை முன் வைக்கிறீர்கள். இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகள் தான் என்பதற்கு நீங்கள் முன்வைக்கும் வாதங்கள் இவைதான்: 1) இதுகாறும் நமக்கு கிடைக்கப்பெற்ற வரலாற்று தகவல்களின் அடிப்படையில் உலகத்தில் காலனியப்படுத்தப்பட்ட நாடுகளில் பெரும் முதலாளியம் (அதாவது ஏகாதிபத்தியம்) உருவாகியதில்லை. இது இந்தியாவிற்கு மட்டுமல்ல காலனியப்படுத்தப்பட்ட ஆப்ரிக்கா, இலத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் மற்றும் ஆசிய நாடுகளுக்கும் பொருந்தும்.! நிலமை இவ்வாறு இருக்க இந்தியாவில் பெரும் முதலாளியம் (அதாவது ஏகாதிபத்தியம்) எங்கிருந்து முளைத்தது? அத்துடன் தரகு முதலாளியம் என்பதற்கு ஒரு வினோதமான வரையறையையும் முன்வைக்கிறீர்கள்: " தரகுமுதலாளியம் என்பதின் வரையரை எந்தெ தேசத்தில் முதலாளியம் உருவாகவில்லையோ அந்த தேசங்களில் தரகுமுதலாளியம் உருவாகும் அல்லது ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்படும் என்பது இயங்கியல் விதி.! " அதாவது சாராம்சத்தில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றால் ஒரு ஏகாதிபத்திய நாட்டின் கீழ் காலனி நாடாக இருக்கும் ஒரு நாட்டில் சொந்த முதலாளித்துவம் வளராது. அப்படி சொந்த முதலாளித்துவம் வளராத காலனி நாடுகளில் உருவாகும் முதலாளித்துவம் தரகு முதலாளித்துவம் ஆகத்தான் இருக்கும்; அது ஒரு காலத்திலும் ஏகாதிபத்திய முதலாளித்துவமாக வளர்ச்சியடைய முடியாது என்பதே. 2) பெரும் முதலாளியத்தின் (அதாவது ஏகாதிபத்தியத்தின்) பொருளாதார வரையரை என்பது தன் சொந்த தேசியத்தின் சந்தையை மட்டுமல்ல பிற தேசத்தின் சந்தைகளையும் கைப்பற்ற நாடு பிடிக்கும் அளவிற்கு போர் புரியும் வல்லமை பெற்றதாகும்.! இதுவே முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நமக்கழித்த சான்றாகும்.! உண்மைநிலமை இவ்வாறு இருக்க 1950,முதல் 2020, வரை இந்தியத்தில் உருவான முதலாளிய தன்மை என்பது முழுக்க முழுக்க தரகுத்தன்மை வாய்ந்ததாகவும், தேசிய தன்மை இழந்ததாவும் உள்ளது என்பதை நமது மாபெரும் மா.லெ.மா. முன்னோடிகள் தெள்ளத் தெளிவாக இடித்துரைத்ததோடு அல்லாமல் இந்தியத்தில் நிலவும் முதலாளிய தன்மை என்பது தரகுப்பார்பனிய முதலாளிய தன்மைவாய்ந்ததாகவே உள்ளது என்பதை ஆணித்தரமாக வரையரை செய்துவிட்டனர்.! அதாவது சாராம்சத்தில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றால் இந்திய முதலாளித்துவம் ஏகாதிபத்திய முதலாளித்துவம் ஆக இருக்க வேண்டுமென்றால் அது தன் சொந்த தேசியத்தின் சந்தையை மட்டுமல்லாது பிற தேசியத்தின் சந்தைகளையும் கைப்பற்றுவதற்கு போர் நடத்தி இருக்க வேண்டும். இந்தியா இதுவரையில் சந்தையை பிடிப்பதற்காக போர் நடத்தவில்லை. அதனால் இது ஏகாதிபத்தியம் அல்ல என்பது உங்களுடைய வாதமாக இருக்கிறது. 3) பெரும் முதலாளியம் (ஏகாதிபத்தியம்) என்கிற வரையரை கோட்பாட்டின்படி சரியானதென்றால் இந்தியா ஒரு முழுமையான தேசமாக இருக்க வேண்டும் மேலும் அதை சார்ந்து சுயசார்பு முதலாளியமும் உருவாகி இருக்க வேண்டும்.! ஆனால் இந்தியா என்பது பல தேசிய இனங்களை பலாத்காரமாக அடிமைப்படுத்தி கட்டமைக்கப்பட்டஅரசாகும்.! நிலவும் அரசே தரகுமுதலாளிகளையும், ஏகாதிபத்தியங்களையும் தூக்கிப்பிடித்து நிலவுடைமையை தக்கவைக்கும்போது சொந்த முதலாளிய வளர்வதற்கு வாய்பு இல்லை.! ஆக இப்படியான அரசை கொண்ட நிலப்பிராந்தியத்தில் ஒரு சுயசார்போடு வளர்ந்த பெரும் முதலாளியம் எப்படி சாத்தியமாகும்.? அதாவது சாராம்சத்தில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றால் i) ஒரு முழுமையான தேசமாக இருந்தால்தான் அங்கு வளரும் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர முடியும். ஆனால் இந்தியா என்பது பல தேசிய இனங்களை பலாத்காரமாக அடிமைப்படுத்தி கட்டமைக்கப்பட்டஅரசாகும். எனவே இந்தியாவில் வளரும் முதலாளித்துவம் தரகு முதலாளித்துவமாகத்தான் இருக்க முடியும். ii) ஒரு நாட்டில் சுயசார்பு முதலாளித்துவம் உருவாகி இருந்தால்தான் அந்த நாட்டில் முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்தியமாக ஆக முடியும். இந்தியாவில் நிலவும் அரசே தரகுமுதலாளிகளையும், ஏகாதிபத்தியங்களையும் தூக்கிப்பிடித்து நிலவுடைமையை தக்கவைக்கும்போது சொந்த முதலாளியம் வளர்வதற்கு வாய்பு இல்லை.! இந்தியாவில் உருவாகி வளர்ந்திருக்கும் முதலாளித்துவம் தரகு முதலாளித்துவமே. முடிவாக முத்தாய்ப்பாக நீங்கள் சொல்வது இதுதான்: //எனவே அரைக்காலனிய, அரைநிலவுடமை நிலவுகின்ற இந்தியாவில் 1968,ம் ஆண்டே 5, அம்சங்கள் தீர்மாணிக்கப்பட்டு விட்டது.! அதன் முதல் அம்சம் இந்தியாவில் தரகுமுதலாளியம்தான் நிலவுகிறது.!// *** தோழர்களே இந்தியாவில் தலைமை வர்க்கமாக இருக்கும் வர்க்கம் இந்திய ஏகாதிபத்திய முதலாளி வர்க்கம் அல்ல; அது ஏகாதிபத்திய நாடுகளின் தரகு முதலாளி வர்க்கமே என்ற உங்களது வாதங்களை நிலைப்பாடுகளை மறுத்து வாதிடும் முன் இந்த வரையறுப்புகளுக்கு நீங்கள் முழுமுதல் ஆதாரமாக கொள்ளும் 1968 மாலெமா முன்னோடிகளின் வரையறுப்பை உண்மையில் மார்க்சிய இயக்கவியல் படியான மறுக்க முடியாத ஆய்வு முடிவாக எடுத்துக் கொள்ள முடியுமா? அந்த 1968 களின் வரையறுப்பை முன்வைத்த மாலெமா முன்னோடிகள் உண்மையில் மார்க்சிய இயக்கவியல் பார்வையில் - மார்க்சியம் லெனினியத்தின் அடிப்படையில் இந்திய சமூகத்தை முறையாக ஆய்வு செய்து அந்த ஆய்வின் முடிவில் இந்த வரையறுப்புக்கு வந்தார்களா? அல்லது புரட்சிக்கு முந்தைய சீன சமூகம் பற்றிய மாவோவின் ஆய்வுகளை அப்படியே காப்பியடித்து இந்திய சமூகம் பற்றிய தங்கள் ஆய்வுகளாக முன்வைத்தார்களா? என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் நம்பும் மாலெமா முன்னோடிகள் முன்வைத்த 1968 ஆய்வு முடிவு இந்திய சமூகத்தைப் பற்றிய ஸ்தூலமான ஆய்வுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட முடிவு அல்ல; சீன சமூகத்தை காப்பி அடித்து எடுக்கப்பட்ட முடிவுதான் என்று ஆகிவிட்டால் தயவுதாட்சன்யமில்லாமல் அதை தூக்கி எறிந்து விட்டு, இன்றைய இந்திய சமூகத்தின் ஆய்வை நாம் புதிதாக தான் செய்தாக வேண்டும். அதையே ஒரு வேத புத்தகம் போல பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

தரகு முதலாளித்துவம் என்பது
ஆய்வுகளற்ற அகநிலை முடிவே

மா லெ மா முன்னோடிகளின் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கும் தியாகங்களுக்கும் உரிய மதிப்பையும் மரியாதையையும் வழங்கும் அதே சமயத்தில் அவர்கள் இந்திய சமூகத்தை ஆய்வு செய்து தரகு முதலாளித்துவம் என்ற முடிவுக்கு வரவில்லை; புரட்சிக்கு முந்தைய சீனாவில் கடைப்பிடித்த அதே செயல் தந்திரங்களை யுத்த தந்திரங்களை இந்தியாவிலும் அப்படியே காப்பியடித்து களத்தில் இறங்கிய பிறகுதான் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தை பற்றிய தரகு முதலாளித்துவம் என்ற வரையறுப்புக்கே வருகிறார்கள். அதுவும் எப்படி நடைமுறை செயல் தந்திரங்களை மாவோ விடமிருந்து காப்பியடித்தார்களோ அதுபோலவே சீன சமூகம் பற்றிய மாவோவின் வரையறையையும் காப்பியடித்து கொண்டார்கள் என்பதே வரலாற்று உண்மை. மாலெமா வழித்தோன்றல்கள் மத்தியில் இன்றுவரை அந்த காப்பியடித்தல் தொடர்கிறது என்பதும் வருந்தத்தக்க உண்மையே. அதிலும் இன்னும் அதிர்ச்சி தரக்கூடியது என்னவென்றால் புரட்சிக்கு முந்தைய சீன சமுதாயம் பற்றிய மாவோவின் வரையறுப்புகளை காப்பியடித்த பின்னர், அந்த வரையறுப்புகளுக்கு உகந்த விதத்தில் மாவோ கடைபிடித்த செயல் தந்திரங்களை காப்பியடிக்கவில்லை. காப்பியடித்ததையும்கூட வரிசைப்படி செய்யாமல் தலைகீழாகத்தான் செய்திருகிறார்கள். முதலில் புரட்சிக்கு முந்திய சீனாவில் மாவோ கடைபிடித்த செயல் தந்திரங்களை காப்பியடித்த பிறகு தான் அவருடைய சீன சமூகம் பற்றிய வரையறைகளை காப்பியடித்திருக்கிறார்கள். விளைவு, பத்தாம் வகுப்பு வரலாற்று பாடத்தில் பரீட்சை எழுத வேண்டிய மாணவன் தேர்வறையில் தனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவன் ஏற்கனவே எழுதியிருந்த பனிரெண்டாம் வகுப்பு வரலாற்று பாடத்திற்கான விடைத்தாளை காப்பியடித்து எழுதினால் அந்த பத்தாம் வகுப்பு மாணவன் தேர்வில் எப்படித் தோற்பானோ அப்படியே இவர்களும் தோற்றார்கள். இன்று வரை அவர்கள் தனக்குக் கொடுக்கப்பட்ட இந்திய சமூகம் என்னும் பத்தாம் வகுப்பு வரலாற்று பாடத்திற்கான கேள்வித்தாளை படித்துப் பார்க்காமல் தன் முன்னோடிகள் ஏற்கனவே தவறாக எழுதிய விடைத்தாளிலேயே மாற்றி மாற்றி திருத்தங்கள் செய்து கொண்டு மீண்டும் மீண்டும் தோல்வியை சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதற்குள் வரலாற்றுப் பாடத்திட்டமும் மாறிவிட்டது என்பதைக்கூட அவர்கள் இன்னமும் உணரவில்லை. மாலெமா முன்னோடிகளில் முதன்மையானவர் ஆகிய சாரு மஜூம்தார், 1965 முதல் 1966 வரை எழுதிய அவரது "எட்டு ஆவணங்கள்" என்று அழைக்கப்படும் ஆவணங்களிலும்... நக்சல்பாரி எழுச்சி துவங்கிய 1967 மே - ஜூன் காலத்திற்கு பிறகு 1972இல் அவர் இறக்கும்வரை அவர் எழுதிய ஆவணங்களிலும் ... 1970இல் சிபிஐ எம் எல் கட்சியின் முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கட்சி திட்டத்திலும்... -தரகு முதலாளி என்பதற்கான வரையறை எங்குமே சொல்லப்படவில்லை. நானறிந்தவரை 1985 ஆம் ஆண்டு சுனிதி குமார் கோஷ் இந்திய பெரு முதலாளி வர்க்கம் பற்றிய நூல் எழுதும் வரை மாலெமா இயக்கத்தில் இந்தியாவில் தரகு முதலாளித்துவம் பற்றிய விரிவான ஆய்வுகள் இல்லை என்றே கூறலாம். சுனிதி குமாரும் கூட இந்திய சமூகத்தை பற்றிய எந்த ஆய்வும் செய்யாமல் மாவோவின் சீன சமூகம் பற்றிய ஆய்வை காப்பியடித்து மாலெமா இயக்கம் வெகு தூரம் சென்று பல பின்னடைவுகளை சந்தித்த பிறகு அன்று ஆய்வின்றி எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை நிலைநாட்டுவதற்காக மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கே விரோதமான தர்க்க முறைகளை பயன்படுத்தி அதை நிறுவ முயன்றிருக்கிறார். அதன் மூலம் அவர் சாரு மஜூம்தார் செய்த நடைமுறை தவறை சாசுவதமானதாக ஆக்கி அந்த இயக்கம் என்றுமே அதிலிருந்து மீள முடியாத அளவிற்கு அந்த தவறை நிரந்தரப் படுத்திவிட்டார். உண்மை நிலைமை இவ்வாறு இருக்க நீங்களோ இந்தியாவில் 1968,ம் ஆண்டே இந்தியாவில் தரகுமுதலாளியம்தான் நிலவுகிறது என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று அடித்துச் சொல்கிறீர்கள். உங்கள் வாதத்திற்கு உண்மையில் ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள 1968 ஆவணங்களில் சாரு மஜூம்தார் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தை எப்படி வரையறுக்கிறார் என்பதை பார்த்தாலே விஷயம் தெளிவாகிவிடும்: 1965 முதல் 1966 வரை சாரு மஜூம்தார் எழுதிய அவரது "எட்டு ஆவணங்கள்" என்று அழைக்கப்படும் ஆவணங்களில் அவர் எந்த இடத்திலும் இந்திய முதலாளிகளை தரகு முதலாளிகள் என்று வரையறுக்கவில்லை. மாறாக அவர் இந்திய முதலாளிகளை ஏகபோக முதலாளிகள் (Monopoly Capitalists) என்றே வரையறுக்கிறார். இன்னும் ஒருபடி மேலே போய் இந்திய ஆளும் வர்க்கம் தனது நெருக்கடியை ஏகாதிபத்திய செயல் தந்திர வழிமுறைகளின் மூலம் தீர்க்க முயல்கிறது. அதற்காகவே இந்தியா-பாகிஸ்தான் போரை துவக்கி உள்ளது. இந்த ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறார். முத்தாய்ப்பாக இந்திய அரசு ஏகாதிபத்தியம் நிலப்பிரபுத்துவம் மற்றும் பெரும் ஏகபோகங்கள் இன் அரசு என்று வரையறுக்கிறார். அதுமட்டுமின்றி நக்சல்பாரி எழுச்சி துவங்கிய 1967 மே - ஜூன் முதல் 1972இல் அவர் இறக்கும்வரை அவர் எழுதிய எந்த ஆவணங்களிலும் இந்திய சமூகத்தைப் பற்றிய ஆய்வையோ தரகு முதலாளி என்பதற்கான வரையறையையோ அவர் முன்வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நக்சல்பாரி எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் துவங்கப்பட்டு ஓராண்டுக்கு பின்னர்தான் புதிய ஜனநாயகப் புரட்சி என்ற வார்த்தையையே சாரு மஜூம்தார் பயன்படுத்துகிறார். அதற்கு முந்தைய ஆவணங்கள் அனைத்திலும் மக்கள் ஜனநாயக புரட்சி பற்றியே பேசுகிறார். 1968 ஜூன் மாதம் எழுதிய இரண்டு ஆவணங்களில் ஒன்றில் புதிய ஜனநாயகப் புரட்சி என்றால் என்ன என்பதை வரையறுக்கிறார். அதிலும்கூட ஆளும் வர்க்கத்தை தரகு முதலாளி வர்க்கம் என்று அவர் சொல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அவர் "அயல்நாட்டு மற்றும் உள்நாட்டுப் பிற்போக்காளர்களுக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் பரந்துபட்ட விவசாய மக்களின் கூட்டணியுடன் ஆயுதப்போராட்டம் மூலம் வென்றெடுக்கப்படும் புரட்சியே புதிய ஜனநாயகப் புரட்சி என்று புதிய ஜனநாயகப் புரட்சியை வரையறுக்கிறார். புதிய ஜனநாயகப் புரட்சிக்கான வரையறையில் ஆளும் வர்க்கத்தை அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு பிற்போக்காளர்கள் என்றுதான் வரையறுக்கிறார். தரகு முதலாளித்துவ வர்க்கம் என்று அவர் சொல்லவில்லை. ஆனால் அதே மாதத்தில் (1968 ஜூன்) அவர் எழுதிய இன்னொரு ஆவணத்தில் "மத்திய காங்கிரஸ் அரசாங்கம் அதிகார வர்க்கம் மற்றும் தரகு முதலாளி வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறது" என்று சொல்கிறார். 1968 இல் எழுதப்பட்ட ஆவணங்களில் இந்த ஒரு ஆவணத்தில் மட்டும் தான் தரகு முதலாளி என்ற வார்த்தையே இருக்கிறது. இந்த ஒரு இடத்தில் தவிர சாரு மஜூம்தார் இறக்கும் வரையில் எழுதிய எந்த ஆவணத்திலும் தரகு முதலாளி என்ற வார்த்தையையே அவர் பயன்படுத்தவில்லை. இந்த ஆவணத்தில் கூட போகிறபோக்கில் தரகு முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக மத்திய காங்கிரஸ் அரசு இருக்கிறது என்று சொல்கிறாரே தவிர தரகு முதலாளி என்பதற்கான வரையறை எதையும் சொல்லவில்லை.

இடது திருத்தல்வாதம்

1967 இல் விவசாயிகளின் ஜனநாயக கோரிக்கையான நிலச்சீர்திருத்த திற்காக எழுந்த ஆயுதம் தாங்கிய விவசாயிகளின் எழுச்சியை புரட்சி என்று தவறாக புரிந்து கொண்டு அந்தப் புரட்சியை நாடு முழுமைக்கும் உரிய புரட்சியாக விரிவுபடுத்திய சாரு மஜும்தாரும் அவருடன் இணைந்த தோழர்களால் 1970இல் உருவாக்கப்பட்ட சிபிஐ எம்எல் கட்சியும் அதன் கட்சி திட்டமும் மார்க்சிய லெனினிய அடிப்படைகளின் படி ஓர் இடது திருத்தல் வாதம் என்றால் மிகையில்லை. லெனின் தனது மார்க்சியமும் திருத்தல் வாதமும் எனும் நூலில் மார்க்சியத்திற்குள் இருக்கும் எந்தெந்த போக்குகள் திருத்தல் வாதம் என்று சொன்னாரோ திருத்தல் வாதத்தின் குண அடையாளங்களாக எதை எதையெல்லாம் சொன்னாரோ அவை அனைத்தும் இந்த மாலெமா இயக்கங்களுக்கும் மிகச் சரியாக பொருந்தும். லெனின் "லத்தீனிய நாடுகளில் புரட்சிகர சிண்டிகலிச வாதத்தால் உருவாகியுள்ள அந்த இடது திருத்தல் வாதமும் கூட தன்னை மார்க்சியத்திற்குத் தகவமைத்து மார்க்சியத்தை திருத்தி வருகிறது" என்று சொல்கிறார். லெனின் இடது திருத்தல் வாதம் என்று சொன்ன புரட்சிகர சிண்டிகலிசத்திற்கும் இந்த மாலெமா இயக்கத்திற்கும் சாராம்சத்தில் பல ஒற்றுமைகளைக் காண முடியும். சிண்டிகலிஸ்டுகள் செய்த முதன்மையான திருத்தம் என்னவென்றால் புரட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரத்தை மறுப்பது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் புரட்சி நடத்தாமல் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம் மூலம் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து உற்பத்தியின் மீதான கட்டுப்பாட்டை கைப்பற்றி விட முடியும் என்பது சிண்டிகலிஸ்டுகளின் இடது திருத்தல் வாதம் ஆகும். சி பி ஐ எம் எல் கட்சியும் சாரு மஜூம்தாரும் புரட்சிக்கு ஒரு புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சிதான் தலைமை தாங்க முடியும் என்பதையும் அந்தக் கட்சி லெனினிய அடிப்படையில் ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் தொழிலாளி வர்க்க கட்சியாக கட்டி அமைக்கப்படவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் பொருள் அது தேவையில்லை என்று அவர்கள் வாய்மொழியாக அறிவித்தார்கள் என்பதல்ல. ஒரு ஆயுதம் தாங்கிய புரட்சியை அறிவிப்பதற்கும் நடத்துவதற்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை அவர்கள் நடைமுறை மூலமாக அறிவித்தார்கள். 1967 ஜூன் மாதம் நக்சல்பாரி எழுச்சி துவங்கி அதுவே புரட்சி என நம்பி இந்தியாவின் பல பகுதிகளுக்கு அது ஆயுதப் புரட்சியாக பரப்பிய பிறகு, பல பகுதிகளில் அகில இந்திய அளவிலான ஒருங்கிணைப்பு இன்றி பல்வேறு இடங்களில் அவரவர் புரிதலின்படி நடந்து கொண்டிருந்த புரட்சியை ஒருங்கிணைப்பதற்காக பல்வேறு பகுதிகளின் குழுக்களையும் ஒன்றிணைத்து ஒரு அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு, அந்த ஒருங்கிணைப்புக் குழுவே 1970இல் சிபிஎம் எம் எல் கட்சியாக மாற்றப்பட்டது. உலகில் எந்த ஒரு நாட்டிலும் புரட்சிக்கான வர்க்க சக்திகளை ஒருங்கிணைக்காமல், அப்படி அதை ஒருங்கிணைப்பதற்கான ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவ பலத்துடன் இருக்கும் அரசு இயந்திரத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டம் மூலமான புரட்சியை துவக்கிய முன்னுதாரணத்தை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் காட்ட முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தையும் அதன் முன்னணிப் படை ஆகிய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியத்தையும் புரிந்து கொள்ளாமல் அல்லது நடைமுறையில் மறுத்து தன் உயிரை விடவும் தயாராக உள்ள வெகுசில குட்டி முதலாளித்துவ இளைஞர்களை மட்டுமே வைத்து ஆயுதப் புரட்சியை நடத்திவிட முடியும் என்றும் அந்த புரட்சியை நடத்திக் கொண்டே தேவைக்கு ஏற்ற விதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிக் கொள்ளலாம் என்ற குதிரைக்கு முன்னால் வண்டியை நிறுத்திய மாலெமா இயக்க முன்னோடிகள் லெனின் சொன்ன இடது திருத்தல் வாதிகளே அன்றி வேறல்ல. மாலெமா கட்சி உருவாக்கத்தில் ஏற்பட்ட இந்த முதல் கோணல் முற்றும் கோணல் ஆகி இன்று அது எண்ணிலடங்காத குழுக்களாக தொடர்ந்து சிதறிக் கொண்டே இருப்பதற்கும் மூல காரணம் இந்த இடது திருத்தல்வாதமே. அதுமட்டுமின்றி ஒரு பாட்டாளி வர்க்க கட்சிக்கு இன்றியமையாத மாக்சிய வர்க்கப்பார்வை யான அனைத்தும் பாட்டாளி வர்க்க நலனுக்கு கீழ்ப்பட்டதே என்ற அணுகுமுறைக்கு மாறாக, அனைத்தும் ஏற்கனவே துவங்கி விட்ட ஆயுதப்போராட்டத்தை பாதுகாப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் கீழ்ப்பட்டதே; பாட்டாளி வர்க்க நலனை விட ஆயுதப்போராட்ட நலனே பிரதானமானது என்பதாக சீரழிந்து விட்ட இன்றைய மாலெமா இயக்கத்தின் இன்றைய திருத்தல்வாத சிந்தனைக்கும் இந்த இடது திருத்தல் வாதமே காரணமாகும். மாலெமா இயக்க முன்னோடிகள் முன்வைத்த இன்னொரு திருத்தல் வாதம் மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடான வர்க்கப் போராட்டம் பற்றியது. லெனின் தனது மார்க்சியமும் திருத்தல் வாதமும் என்ற நூலில் "அரசியல் அரங்கில் திருத்தல் வாதம் மார்க்சியத்தின் அடிப்படையான வர்க்கப் போராட்டம் பற்றிய கோட்பாட்டை திருத்த முயல்கிறது" என்று சொல்கிறார். வர்க்கப் போராட்டத்தை திருத்துவது என்பது வர்க்கப் போராட்டம் தேவையில்லை என்று மறுதலிப்பது மட்டுமல்ல; வர்க்கப் போராட்டம் அல்லாத ஒன்றை இதுதான் வர்க்கப் போராட்டம் என்று மார்க்சியத்தின் பெயராலேயே முன்வைத்து வர்க்கப் போராட்டத்துடன் தொடர்பில்லாத ஒன்றை நோக்கி பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய பகுதியினரை திசை திருப்பி விடுவதும் திருத்தல்வாதம் தான். மாலெமா முன்னோடிகள் 1970இல் முன்வைத்த சிபிஐ எம்எல் கட்சித் திட்டத்தில் "வர்க்கப் போராட்டம் என்றால் வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பது. வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் வர்க்கப் போராட்டமே நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தரும்" வரையறுக்கப்படுகிறது. இது வர்க்கப் போராட்டம் பற்றிய மார்க்சிய லெனினிய அடிப்படை புரிதல் இல்லாத பார்வை என்பதை இன்றைய நடைமுறை தெளிவாக நிரூபித்து விட்டது நாங்கள் அது தவறு என்று உணர்ந்து விட்டோம் என்று ஒரு தீர்மானத்தின் மூலம் தப்பித்துக் கொள்ள முடியாது. தவறு என்று எப்போது உணர்ந்தீர்கள்? பாறையில் முட்டிக்கொண்டு ரத்தம் வழிந்த பிறகுதானே அங்கே பாதை இல்லை; பாறை இருக்கிறது என்று புரிந்து கொண்டீர்கள். முட்டி ரத்தம் வருவதற்கு முன்பே அங்கு பாறை இருக்கிறது; பாதை இல்லை என்பதை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்கான உண்மைக் காரணமாகிய நமக்குப் "பார்வை இல்லை" என்ற காரணத்தை புரிந்து கொள்ளாமல் கையால் தடவி தடவி எத்தனை பாதையில் திரும்பினாலும் ஏதோ ஒரு முட்டுச்சந்தில் முட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கும். இன்றுவரை ஒன்றிலிருந்து ஒன்று என உருவாகும் எல்லா மாலெமா இயக்கங்களும் ஏதோஒரு முட்டுச் சந்தில் தொடர்ந்து முட்டிக்கொண்டு நிற்பதற்கு காரணமும் அதுதான். இன்னும் லெனின் தனது மார்க்சியமும் திருத்தல் வாதமும் எனும் நூலில் திருத்தல் வாதப்போக்கு களை அடையாளம் காண்பதற்காக அவர் முன்வைத்த திருத்தல் வாத்திற்கு உரிய நடைமுறை குணாதிசயங்களை பட்டியலிட்டு அவை ஒவ்வொன்றையும் இன்றைய மாலெமா இயக்கத்தின் நடைமுறைச் செயல்பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மாலெமா இயக்க முன்னோடிகளில் தொடங்கி இன்று வரை இருக்கும் அனைத்து மாலெமா இயக்கங்களும் திருத்தல்வாத இயக்கங்களே என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதையெல்லாம் தனி ஒரு கட்டுரையாக தான் எழுத முடியும். இங்கே விரித்து எழுதினால் இப்பதிவு இன்னும் நீளமாகி விடும் என்பதால் விரிவஞ்சி அதை தவிர்க்கிறேன்.

இனியாவது மாவோவை காப்பியடிக்காமல்
சுயமாக ஆய்வு செய்வோம்

உண்மை வரலாறு இப்படி இருக்கும்போது நீங்கள் //....இந்தியாவில் 1968,ம் ஆண்டே 5, அம்சங்கள் தீர்மாணிக்கப்பட்டு விட்டது.! அதன் முதல் அம்சம் இந்தியாவில் தரகுமுதலாளியம்தான் நிலவுகிறது.!// என்று அடித்துச் சொல்வது இல்லாத கடவுளை இருக்கிறார் என்று அடித்துச் சொல்லும் ஒரு கடவுள் நம்பிக்கையாளரின் கடவுள் நம்பிக்கையை போன்ற ஒரு மூட நம்பிக்கையே தவிர வேறு எதுவும் இல்லை. எனவே இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகளா? ஏகாதிபத்திய முதலாளிகளா? என்பதை வரையறுப்பதற்கு உங்கள் மாலெமா முன்னோடிகளின் எந்த வரையறையும் நமக்கு உதவ உதவாது. ஏனென்றால் மாலெமா முன்னோடிகள் புரட்சிக்கு முந்தைய சீன நிலைமைகளுக்கு மாவோ கடைபிடித்த யுத்த தந்திரங்களை அப்படியே நகலெடுத்து இந்திய சமூகத்தில் நடைமுறைப்படுத்தி விட்டு, அது சரிதான்; இந்திய சமூக நிலைமையும் சீன சமூக நிலைமையும் ஒன்றுதான் என்று நிலைநாட்டுவதற்காக மீண்டும் அதே சீன நிலைமைகள் பற்றிய மாவோவின் வர்க்க ஆய்வுகளையும் வரையறைகளையும் அப்படியே நகலெடுத்தனர். அப்போது தரகு முதலாளி என்ற கருத்தையும் அவ்வாறே நகலெடுத்துள்ளார்கள். 1949 சீனப் புரட்சிக்கு முந்தைய சீன சமுதாய நிலைமைகளும் வர்க்க நிலைமைகளும் இன்றைய 2020 ஆம் ஆண்டில் இந்திய சமுதாய நிலைமைகளும் வர்க்க நிலைமைகளும் ஒன்று அல்ல என்பது மார்க்சியத்தின் அடிப்படை எதுவுமே தெரியாத சாதாரண அறிவு உள்ளவர் எவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான். மாலெமா தோழர்களும் இந்த சாதாரண அறிவுள்ள பொதுமக்களை விட அறிவில் எந்த அளவிலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு பிரச்சினை என்னவென்றால் மதவாதிகளுக்கு இருக்கும் அதே பிரச்சனைதான் முகமது நபிகள் சொன்னதை - இயேசுபிரான் சொன்னதை நாம் எப்படி மாற்றிச் சொல்வது என்ற அதே மனத்தடைதான் இவர்களையும் ஆட்டிப் படைக்கிறது. அதனால்தான் 1960 -70களில் மாலெமா முன்னோடிகளின் இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகள் என்ற வரையறையை பொய்யாக்கும் விதத்தில் சமூக வளர்ச்சிப் போக்குகள் எத்தனை நிதர்சனமாக கண்முன் தோன்றினாலும் அந்த புதிய முதலாளித்துவ சமூக வளர்ச்சிப் போக்குகளுக்கு மார்க்சிய அடிப்படைக்கே விரோதமான புதிய புதிய விளக்கங்களைக் கொடுத்து அந்த முதலாளித்துவ போக்குகளை தரகு முதலாளித்துவம் அல்லது நவகாலனியாதிக்கம் எனும் சிமிழுக்குள் அடைத்து விடுகின்றனர். ஒரு திருத்தல் வாத முடிவை மார்க்சியம் லெனினியம் என்று நிரூபிப்பதற்காக இன்னொரு திருத்தல் வாதம் இன்னொரு திருத்தல் வாதம் என்று தங்களது பேச்சு செயல் சிந்தனை அனைத்தையும் திருத்தல்வாத சிந்தனை முறையாகவே மாற்றிக் கொண்டுவிட்டனர். அதனால் இந்திய சமூகம் எத்தனை மாறினாலும் எங்கள் வரையறை இன்னும் மாறவில்லை என்பதை நிரூபிப்பதிலேயே இவர்களின் காலம் அனைத்தும் விரயமாகி கொண்டிருக்கிறது. ஒன்றிலிருந்து ஒன்று என எத்தனை குழுக்கள் பிரிந்தாலும் அத்தனைக் குழுக்களின் திட்டங்களிலும் தவறாமல் இடம்பெறும் வாசகம் "இந்திய சமூகம் பற்றிய மாலெமாவின் அடிப்படை வரையறுப்புகளில் எந்த மாற்றமும் இல்லை" என்றுதான் திட்டத்தை எழுதுவதற்கே தொடங்குவார்கள். ஏனென்றால் அந்த அடிப்படை வரையறுப்பு முறையான ஆய்வுகள் இல்லாமல் சீனத்தை.காப்பியடித்து உருவாக்கப்பட்டது என்பது இவர்களுக்கு தெரியாது. அதுமட்டுமின்றி இந்திய சமூகத்தை புதிய பார்வையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒரு குழுகூட நினைப்பதில்லை. எனவே மேலே நீங்கள் முன்வைக்கும் வாதங்கள் அனைத்தும் இந்திய சமூகம் பற்றிய ஆய்வுகள் எதுவுமின்றி மாலெமா முன்னோடிகள் மாவோவை நகலெடுத்து முன்வைத்த தரகு முதலாளித்துவம் என்ற தவறான வரையறுப்பை சரியென நிலைநாட்டுவதற்காக வலிந்து முன்வைக்கப்படும் மார்க்சிய அடிப்படைகளுக்கே விரோதமான செயற்கை வாதங்களே. எனவே அந்த பழைய மாலெமா வரையறையை எப்பாடுபட்டாவது நிரூபிக்க வேண்டும் என்ற முரட்டுப் பிடிவாதத்தைவிட்டுவிட்டு இன்றைய இந்திய சமூக யதார்த்தங்களை மார்க்சிய அடிப்படையில் விவாதிப்போம்.

காலனிய நிழலில் வளர்ந்தாலும் இந்திய முதலாளிகள் தேசிய முதலாளிகளேயன்றி தரகு முதலாளிகள் அல்ல

இன்றைய சமூக யதார்த்தங்களை மார்க்சிய அடிப்படையில் விவாதிப்போம் என்றால் மாவோவின் தரகு முதலாளித்துவம் என்ற வரையறுப்பும் மார்க்சிய அடிப்படைதானே என்று நீங்கள் வாதிடலாம். தரகு முதலாளித்துவம் என்பது சீன சமூகத்தில் முதலாளித்துவமே உருவாவதற்கு முன்னால் உண்டான அரை காலனி அரை நிலபிரபுத்துவ சமுதாயத்தின் பிரத்தியேகமான சமூக சூழ்நிலையில் மாவோ அவர்களால் வகைப்படுத்தப்பட்ட சீன நிலைமைகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய வரையறையே தரகு முதலாளித்துவம் பற்றிய மாவோவின் வரையறுப்பாகும். ஆனால் இந்தியா அதன் வரலாற்றில் எந்த காலகட்டத்திலும் சீனாவைப் போல் அரை காலனி அரை நிலப்பிரபுத்துவ நாடாக இருந்ததில்லை என்பது வரலாறு அறிந்தவர் அனைவருக்கும் தெரியும். அது ஒரு கட்டம் வரை முழு நிலப்பிரபுத்துவ நாடாக இருந்தது. அதன்பிறகு முழு காலனி நாடாக ஆனது. அதன் பிறகு 1947 ஆகஸ்ட்15க்குப் பிறகு அது பொருளாதார அடித்தளத்திலும் அரசியல் மேற் கட்டுமானத்திலும் முழு முதலாளித்துவ நாடாக மாறியது. எனவே அரை காலனி அரை நிலபிரபுத்துவ சீனாவில் உருவான தரகு முதலாளித்துவ வர்க்கம் என்ற ஒரு வகை வர்க்கம் முழு காலனியாக இருந்த இந்தியாவில் உருவாவதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. இந்தியாவில் ஆரம்பத்தில் மிகக் குறுகிய காலத்திற்கு ஏகாதிபத்திய ஆலை முதலாளிகளுக்கு மூலப்பொருட்களை இந்திய விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்கும் தரகு வியாபாரிகளாக இந்திய முதலாளிகளில் சிலர் இருந்திருக்கலாம். அதன் பிறகு தானே தொழில் தொடங்கும் அளவிற்கு கையில் மூலதனம் சேர்ந்த பிறகு சுயமாக சுதேசி தொழில்கள் தொடங்குவதற்கு இந்திய முதலாளிகள் முனைந்தனர். ஆனால் ஆங்கில ஏகாதிபத்திய அரசும் ஏகாதிபத்திய முதலாளிகளும் இந்திய சுதேசி முதலாளிகள் நவீன ஆலைகள் துவங்குவதை அனுமதிக்கவில்லை. உள்நாட்டு தேசிய முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடு வெளிப்படையாக தலைதூக்கத் துவங்கியது. மகாகவி பாரதியாரின் தந்தை போன்றோர் எடுத்த நவீன நூற்பாலை முயற்சிகள் தோல்வி அடைந்ததும் திலகர் வஉசி போன்றோரின் சுதேசி கப்பல் முயற்சிகள் தோல்வி அடைந்ததும் 1900களின் முதல் பத்தாண்டுகளில் வீச்சுடன் எழுந்த சுதேசி இயக்கமும் இந்த வர்க்க முரண்பாடுகளின் அதாவது இந்திய தேசிய முதலாளிகளுக்கும் ஆங்கில ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளின் அரசியல் பொருளாதார வெளிப்பாடுகளே ஆகும். அதன் பிறகு ஏகாதிபத்திய உலகம் முதல் உலகப் பொது நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. 1914ல் முதல் உலகப் போர் மூண்டது. ஆங்கில ஏகாதிபத்தியம் தலைமை தாங்கிய அந்த உலகப்போரில் ஆங்கில ஏகாதிபத்திய அரசும் ஏகாதிபத்திய முதலாளிகளும் முழுக்கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அதனால் அதன் மிகப்பெரிய காலனி ஆகிய இந்தியாவில் வளர துடித்துக்கொண்டிருந்த தேசிய முதலாளிகளின் வளர்ச்சியை தடுப்பதற்காக தான் போட்டிருந்த கட்டுப்பாடுகள் விதிகள் அனைத்தையும் தளர்த்த வேண்டிய கட்டாய சூழல் அதற்கு ஏற்பட்டது. போரில் ஈடுபட்டிருக்கும் படைகளுக்கு தேவையான ஆயுத தளவாடங்கள் உள்ளிட்ட கனரக உற்பத்தியில் ஆங்கில ஏகாதிபத்திய முதலாளிகள் ஈடுபட்டிருக்கும்போது பின்புலத்தில் உணவுத் தேவை மற்றும் உடை தேவைகளை அவர்களே பூர்த்தி செய்ய முடியவில்லை. அதற்காக இந்திய முதலாளிகள் மீது நவீன ஆலைத்தொழில்கள் தொடங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டிய நிர்பந்தம் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்டது. அதன் விளைவாக இந்திய முதலாளிகள் நவீன நூற்பாலைகள், பருத்தியிலிருந்து பஞ்சை பிரித்தெடுக்கும் ஜின்னிங் பேக்டரி போன்றவை தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. அதாவது இதை மிக எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இதற்கு முன்பு பாரதியின் தந்தை இதே நவீன நூற்பாலையை நிறுவுவதற்காக எடுத்த முயற்சிகளை திட்டமிட்டு குலைத்த அதே ஏகாதிபத்தியவாதிகள் அதே ஆலையை இந்திய முதலாளிகள் திறந்து கொள்ளலாம் என்று இப்போது அனுமதி அளிக்கிறார்கள் என்பதை பொருத்திப் பார்த்தால் நிலைமைகளில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம். இப்படி முதல் உலகப்போர் சூழல் ஏற்படுத்திய இந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட இந்திய தேசிய முதலாளிகள் நாடெங்கும் பஞ்சாலை களையும் இதர உப தொழில்களையும் தொடங்கினர். இந்தச் சூழலில்தான் முதல் உலகப்போரில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் படைக்கு ஆள் சேர்க்கும் வேலையையும் அகிம்சையின் பிதாமகனான காந்தியடிகள் செய்தார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்திய முதலாளிகள் வளர்வதற்கு திறந்துவிடப்பட்ட புதிய வாய்ப்புகளுக்கு பிரதிபலன் ஆகவே இந்தியர்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய படைகளில் சேர்த்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு போர் புரிவதற்கும் இந்தியப் படைவீரர்கள் உற்சாகத்துடன் அனுப்பப்பட்டனர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த மூலதன வளர்ச்சியை ஆதாரமாகக்கொண்டு இந்திய தேசிய முதலாளிகள் சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஏகபோக முதலாளிகளாக எப்படி வளர்ச்சியடைந்தனர் என்பதை விரிவாக அறிவதற்கு மார்க்சிய ஆய்வாளர் ஏ ஆர் தேசாய் அவர்கள் எழுதிய "சோசியல் பேக்ரவுண்ட் ஆஃப் இன்டியன் நேஷனலிசம்" என்ற நூலையும் மற்றொரு முக்கியமான மார்க்சிய ஆய்வாளர் ஆகிய டி டி கோசாம்பி அவர்களின் இந்திய சமூகம் பற்றிய ஆய்வு நூல்களையும் படிக்க வேண்டும். அத்துடன் முதல் உலகப்போரில் தனக்கு தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பளித்த தற்கு பிரதிபலனாக முதல் உலக யுத்தத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் போர் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருந்து ஆதரவளித்த இந்திய முதலாளிகளும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளும் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஏகபோக முதலாளிகளாக வளர்ச்சியடைந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்தி ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு நெருக்கடி கொடுத்து அரசியல் அதிகாரத்தை வெல்லும் நேரெதிரான அரசியல் நிலைபாட்டுக்கு வளர்ச்சி அடைந்தது எப்படி என்பதையும் சுயமாக சிந்தித்து பார்க்க வேண்டும்.

முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை நடத்தினால்தான்
தேசிய முதலாளிகளா?

உடனடியாக நீங்கள் இன்னொன்றை கேட்கலாம். இந்திய முதலாளிகள் காலனி ஆட்சியின் கீழ் தனியாக தொழில் தொடங்கினாலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் சமரசமற்ற முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை நடத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வில்லையே. அதனால் இவர்கள் தரகு முதலாளிகள்தானே என்று நீங்கள் வாதிடலாம். ஆனால் அது மார்க்சிய இயக்கவியல் பார்வை அல்ல. இயக்க மறுப்பியல் திருத்தல்வாத சிந்தனையே. எந்த ஒரு பொருளையும் அது இயங்கும் சூழலின் பின்னணியில் இருந்து பிரித்து எடுத்து தனியே இயங்காமல் நிறுத்திவைத்து அதை ஆய்வு செய்வது இயக்கவியல் அணுகுமுறை அல்ல. மாறாக அது இயக்க மறுப்பியல் சிந்தனை முறையாகும். அதைப்போலவே சமூகத்தின் வளர்ச்சியையும் அது வளரும் வரலாற்றுச் சூழலின் பின்னணியில் இருந்து ஆய்வு செய்யாமல் அந்தச் சூழலில் இருந்து தனித்து எடுத்து நிறுத்தி வைத்துக் கொண்டு வரலாற்றின் வேறொரு காலகட்டத்தில் உள்ள மாதிரியை வரலாற்று சூழலிலிருந்து தனியே எடுத்து நிறுத்தி வைத்துக் கொண்டு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து இது போல் அது இல்லை; அதனால் இது வேறு அது வேறு என்று முடிவுக்கு வருவது திட்டவட்டமான இயக்க மறுப்பியல் சிந்தனையே. லெனின் தனது மார்க்சியமும் திருத்தல் வாதமும் எனும் நூலில் திருத்தல் வாதிகளின் குணாம்சங்களில் ஒன்றாக முதலாளித்துவத்தின் முழு அமைப்பின், முதலாளித்துவத்தின் அனைத்துப் படிநிலை வளர்ச்சிகளின் அடிப்படைக் கூறுகளையும் முழுமையாக பார்க்க மறுப்பதையும் சொல்வார். உங்களது பார்வை திருத்தல் வாதப் பார்வை என்பதையே இது அசலும் நகலும் நிரூபிக்கிறது.
அதாவது இந்திய முதலாளித்துவம் வளர்ந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய வரலாற்று காலகட்ட சூழலின் பின்னணியில் இருந்து இந்திய முதலாளித்துவ வளர்ச்சியை ஆய்வு செய்யாமல், அதை அந்தச் சூழலில் இருந்து தனித்து எடுத்து நிறுத்தி வைத்துக் கொண்டு, வரலாற்றின் வேறொரு காலகட்டத்தில் அதாவது முதலாளி வர்க்கம் புரட்சிகரமான வர்க்கமாக இருக்கும் போது நடத்திய முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை அதன் வரலாற்று சூழலிலிருந்து தனியே எடுத்து நிறுத்தி வைத்துக் கொண்டு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து அந்தக் காலத்தில் உருவான ஐரோப்பிய முதலாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியது போல் இந்திய முதலாளிகள் ஜனநாயகப் புரட்சி நடத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வில்லை; நிலப்பிரபுத்துவ வர்கத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் செய்துகொண்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். அதனால் இது வேறு அது வேறு. இந்தியாவில் 1947இல் அரசியல் அதிகாரத்திற்கு வந்தது தேசிய முதலாளிகள் அல்ல; தரகு முதலாளிகளே என்று முடிவுக்கு வருவது திட்டவட்டமான இயக்க மறுப்பியல் சிந்தனையே. திருத்தல்வாதப்போக்கே. ஏனென்றால் உலக அளவில் முதலாளித்துவம் உலகப்பொது நெருக்கடியை சந்தித்து பிற்போக்கு ஆகிவிட்ட பிறகு தான் இந்திய முதலாளித்துவம் வளரத் துவங்குகிறது. வரலாற்று ரீதியில் முதலாளித்துவ வர்க்கமே புரட்சிகர தன்மை இழந்து பிற்போக்காக மாறிவிட்ட சூழ்நிலையில் வளரும் இந்திய முதலாளிகளிடம் மட்டும் புரட்சிகர குணத்தையும் முதலாளித்துவப் புரட்சியையும் எதிர்பார்ப்பது வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாத குறைபாடே ஆகும். இன்றுவரை உலகத்தில் சமரசமில்லாத ஜனநாயக புரட்சியின் மூலம் முதலாளித்துவம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஒரே நாடு பிரான்ஸ் மட்டும்தான். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு நிலப்பிரபுத்துவ வர்கத்துடன் எந்த சமரசமும் இல்லாமல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்திய எந்த நாட்டையும் உலகில் நீங்கள் காட்ட முடியாது. காரணம் என்னவென்றால் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசமில்லாமல் பிரெஞ்சுப் புரட்சியை நடத்திய தன் விளைவு மிகக் குறுகிய காலத்தில் பாட்டாளி வர்க்கப் புரட்சி ஆகிய பாரி கம்யூன் ஏற்பட்டு முதலாளித்துவ அரசு முற்றாக தூக்கி எறியப்பட்டு பாட்டாளி வர்க்க அரசு உருவாகும் பாதை செப்பனிடப்பட்டு இருந்தது. இதை அனுபவத்தில் கண்ட எந்த நாட்டின் முதலாளி வர்க்கமும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான சமரசமற்ற போராட்டத்தை நடத்த தயாராக இல்லை. இவ்வளவு ஏன் இங்கிலாந்து முதலாளிகள் கூட நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொண்டு தான் முதலாளித்துவ அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். இங்கிலாந்து முதலாளித்துவ ஆட்சியை இங்கிலாந்து ராணியின் பெயரில்தான் நடத்தினார்கள். ஆரம்பத்தில் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்யும் போது இங்கிலாந்து மன்னருக்கு (ராணிக்கு) அதிக அதிகாரங்கள் பகிரப்பட்டு இருந்தாலும் அது படிப்படியாக குறைக்கப்பட்டு இப்போது பெயர் அளவிற்கான அதிகாரப் பதவி யாக சுருக்கப்பட்டு விட்டது. நெருக்கடி இல்லாத காலகட்டத்தில் முதலாளித்துவம் வளர்ந்த பிரிட்டிஷ் ஆங்கில ஏகாதிபத்திய முதலாளிகளே நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்து கொண்டுதான் அரசியல் அதிகாரத்திற்கு வந்து இருக்கிறார்கள் என்ற வரலாற்றைப் பார்க்கும்போது, உலக அளவில் முதலாளித்துவம் ஏகாதிபத்தியம் ஆக வளர்ந்து பிற்போக்கு ஆகி இதற்கு மேல் வளர முடியாது என்ற அளவில் முதல் உலகப் பொது நெருக்கடியை சந்தித்து விட்ட சூழலில் வளர்ந்த இந்திய தேசிய முதலாளிகள் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக ஒருபக்கம் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துடனும் மறுபக்கம் தன் மூலதனத்தை வளர்த்து பெருக்குவதற்காக அவ்வப்போது ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுதந்திர போர் முழக்கங்களும் அந்த நெருக்கடியின் மூலம் கிடைக்கும் சலுகைகளுக்காக ஆங்கில ஏகாதிபத்தியத்துடன் அவ்வப்போது சில சமரசங்களும் செய்தும் இறுதியில் அரசியல் அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டனர் என்பது வரலாற்றில் புதுமையும் இல்லை; புரியாத புதிரும் இல்லை. இங்கிலாந்து முதலாளிகள் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொண்டு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி வளர்ந்தாலும் இங்கிலாந்து முதலாளிகள் ஏகாதிபத்தியமாக வளரமுடியும் என்பது எப்படி மறுக்க முடியாத வரலாற்று உண்மையோ அப்படியே இந்தியாவிலும் நிலப்பிரபுத்துவத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் செய்துகொண்டு அரசியல் அதிகாரத்தை இந்திய முதலாளிகள் கைப்பற்றி இருந்தாலும் அவர்களும் ஏகாதிபத்திய முதலாளிகளாக வளரமுடியும் என்பதும் மறுக்க முடியாத வரலாற்று உண்மையே. இதுவே வரலாற்றை இயக்கவியல் ரீதியாகப் பார்க்கும் சரியான வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையாகும். ஏனென்றால் வரலாற்றின் இயக்கவியல்விதி என்பது ஒரு பொதுவான விதி. அது இங்கிலாந்து முதலாளிகளுக்கு பொருந்தும்; ஆனால் இந்திய முதலாளிகளுக்கு பொருந்தாது என்பது இயக்க மறுப்பியல் சிந்தனையே.

சீனாவின் தரகு முதலாளிகளுக்கும் இந்தியாவின் தேசிய முதலாளிகளுக்கும் உள்ள வேறுபாடு

புரட்சிக்கு முந்திய சீன சமூகத்தின் வர்க்க ஆய்வுகளில் மாவோ தரகு முதலாளி வர்க்கத்தை எதிரி வர்க்கமாகவும் தேசிய முதலாளி வர்க்கத்தை நேச சக்தியாகவும் வரையறுப்பார். அவர் தரகு முதலாளிகள் என்று வரையறுத்தது சீனாவில் ஏகாதிபத்தியங்கள் தங்கள் சிறப்பு சலுகை மண்டலங்களில் நிறுவியிருந்த ஏகாதிபத்திய நிறுவனங்களின் சீன நிர்வாக அதிகாரிகள் பங்குதாரர்களையே. அவர்களுடைய வாழ்வும் நலனும் ஏகாதிபத்திய நலனைச் சார்ந்ததாக இருந்தது. இந்தியாவில் தேசிய முதலாளிகள் எவரும் ஆங்கில ஏகாதிபத்திய நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளாகவும் பங்குதாரர்களாகவும் இருந்ததில்லை. இவர்கள் சுயமாக முதலீடு செய்து தங்கள் சொந்த தொழில்களுக்கு அதிபதிகளாக இருந்தனர். இவர்கள் தொழிலை வளர்ப்பதற்கும் மூலதனத்தை பெருக்குவதற்கும் ஆங்கில ஏகாதிபத்திய அரசு தடையாக இருந்தது. அதனால் இவர்களுடைய நலனும் ஏகாதிபத்தியங்களின் நலனும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருந்தது. சீனாவின் தரகு முதலாளிகளைப் போல் இந்திய தேசிய முதலாளிகள் ஏகாதிபத்திய நலனை சார்ந்து இருக்கவில்லை. ஏகாதிபத்திய நலனுக்கு எதிராக இருந்தார்கள். அதன் அரசியல் வெளிப்பாடே இந்திய சுதந்திரப் போராட்டம். இந்திய தேசிய முதலாளிகள் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியதை போல சீனாவில் மாவோ வரையறுத்த தரகு முதலாளிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒருநாளும் போராடியது இல்லை. மாறாக ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக நடந்த சீன மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதில் ஏகாதிபத்தியங்களை விட அதிக முனைப்புடன் இருந்தார்கள் சீனாவின் தரகு முதலாளிகள். இந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் சீனாவில் மாவோ வரையறுத்த தரகு முதலாளிகளின் குணாம்சங்கள் வேறு; இந்தியாவின் தேசிய முதலாளிகளின் குணாம்சங்கள் வேறு என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம். அதனால் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் உருவாகி வளர்ந்த முதலாளிகள் தரகு முதலாளிகள் அல்ல; தேசிய முதலாளிகளே.

சீனாவின் தேசிய முதலாளிகளுக்கும் இந்தியாவின் தேசிய முதலாளிகளுக்கும் உள்ள வேறுபாடு

சீனாவின் தரகு முதலாளிகள் வேறு இந்தியாவின் தேசிய முதலாளிகள் வேறு என்றால் சீனாவின் தேசிய முதலாளிகளுக்கும் இந்தியாவின் தேசிய முதலாளிகளுக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா என்றால் அதுவும் இல்லை என்பதே உண்மை. சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சியின் நேச சக்தி என்று மாவோ வரையறுத்த தேசிய முதலாளிகள் என்பவர்கள் பெரும் முதலீடு செய்து சீனாவின் இயற்கை வளங்களையும் பெரும் எண்ணிக்கையில் சீனத் தொழிலாளர்களையும் சுரண்டும் வல்லமை பெற்ற தேசிய முதலாளிகள் அல்ல. உண்மையில் அப்படியொரு தேசிய முதலாளி வர்க்கத்தினர் சீன சமூகத்தில் அப்போது வரை உருவாகி இருக்கவே இல்லை.

மாறாக அப்படியொரு தேசிய முதலாளியாக உருவாக துடித்துக்கொண்டிருந்த - ஆனால் சீனாவின் அரைக் காலனிய அரை நிலபிரபுத்துவ சமூக நிலைமைகள் அப்படி தன்னை வளர அனுமதிக்க வில்லையே என்று கொதித்துக் கொண்டிருந்த வணிக முதலாளி வர்க்கத்தையே மாவோ தேசிய முதலாளிகள் என்று வரையறுத்தார். புரட்சியின் நேச சக்தியாகவும் வகைப்படுத்தினார். ஆனால் இந்தியாவின் தேசிய முதலாளிகள் மாவோ வரையறுத்த சீனாவின் தேசிய முதலாளிகளை போல் அத்தனை பலவீனமானவர்கள் அல்ல. அவர்கள் நாம் மேலே விவாதித்தது போல் வலுவான மூலதன அடித்தளத்துடன் இந்தியாவின் இயற்கை வளங்களையும் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் கணிசமான பகுதியினரையும் சுரண்டிக் கொண்டிருந்தனர். இன்னும் அதிகமதிகம் சுரண்டி தான் ஏகபோக முதலாளியாக வளர்வதற்கு தடையாக இருக்கும் ஆங்கில ஏகாதிபத்திய அரசை விரட்டிவிட்டு தன் கையில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி மேலும் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக முனைப்புடன் சுதந்திரப் போராட்டங்களை தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தது இந்தியாவின் தேசிய முதலாளி வர்க்கம். ஆனால் சீனாவின் தேசிய முதலாளி வர்க்கமாக மாவோ வரையறுத்த வணிக முதலாளி வர்க்கமோ அந்த அளவிற்கு வளர்ச்சியடையாத காரணத்தால், சீனாவில் முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்கு தலைமையேற்று அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கும் சக்தியற்றதாக இருந்தது. எனவே அதைவிட அரசியல் ரீதியில் முன்னேறிய வர்க்கமான தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் தலைமையை ஏற்றுக் கொண்டால்தான் தன் வாழ்நிலைமையில் எந்த ஒரு முன்னேற்றமும் சாத்தியம் என்ற நிலையில்தான் இருந்தது. அதனால்தான் மாவோ அந்த வர்க்கத்தைப் புரட்சியின் நேச சக்தியாக சேர்த்துக்கொண்டார். மாவோ சீனப் புரட்சியின் நேசசக்தியாக வரையறுத்த குணங்களையுடைய தேசிய முதலாளிகளை இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பும் சரி சுதந்திரத்திற்கு பின்னரும் சரி எங்குமே காண முடியாது. அதனால்தான் மாவோவை காப்பியடித்து இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியின் நேச சக்தியாக தேசிய முதலாளிகளை சேர்த்துக்கொண்ட மாலெமா இயக்கங்கள், அவர்களோடு புதிய ஜனநாயகப் புரட்சியில் நேசசக்தியாக கைகோர்க்க ஒரு தேசிய முதலாளி கூட வரவில்லையே, வரவில்லையே என்று காத்திருந்து, காத்திருந்து இலவு காத்த கிளிகளாக ஏமாந்து போனார்கள். ஆனால் மனம் தளராமல் இன்னமும் காத்துக்கிடக்கிறார்கள். அந்த இல்லாத தேசிய முதலாளிகளை புரட்சியின் பக்கம் இழுப்பதற்காக என்னென்ன செயல் தந்திரங்களை வகுக்கலாம் என்று மூளையை போட்டு கசக்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவிலிருந்த தேசிய முதலாளிகள் எல்லாம் இன்று ஏகபோக முதலாளிகளாக வளர்ந்து ஏகாதிபத்தியங்கள் ஆகவும் ஆகிவிட்டதைப் பார்க்கத் தவறி அவர்களை தரகு முதலாளிகள் என்று வகைப்படுத்தி ஓரங்கட்டி வைத்துவிட்டு, இவர்கள் கற்பனையில் வரையறுத்த தேசிய முதலாளிகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். வேறு வழியின்றி சிறிய முதலாளிகளை எல்லாம் தேசிய முதலாளிகளாக வரையறுத்து பார்க்கிறார்கள். ஆனால் அந்த சிறிய முதலாளிகளால் சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்திற்கும் அந்த சிறிய முதலாளிகளுக்கும் இடையிலான வர்க்க முரண்பாட்டை எப்படித் தீர்ப்பது என்பதற்கு எந்த வழியும் அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அதற்கு காப்பியடிப்பதற்கு மாவோவின் படைப்புகளில் யுத்த தந்திரம் செயல் தந்திரம் என்று எதுவும் இல்லை. காரணம் மாவோ புரட்சியின் நேச சக்தி என்று வரையறுத்த தேசிய முதலாளிகளான வணிக முதலாளி வர்க்கத்தால் சுரண்டப்படும் சீனத் தொழிலாளி வர்க்கம் அங்கே எதுவும் இல்லை. சீனத் தொழிலாளி வர்க்கம் முழுவதும் பெரும்பாலும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் தரகு முதலாளிகளின் சுரண்டலில் தான் ஆட்பட்டு கிடந்தார்கள். அதனால் மாவோவுக்கு சீனாவின் தேசிய முதலாளிகளை புரட்சியின் நேச சக்தியாக சேர்க்கும்போது அந்த தேசிய முதலாளிகளுக்கும் அந்த நேச சக்திகளால் சுரண்டப்படும் புரட்சியின் தலைமை வர்க்கமான தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு பற்றிய கேள்வியே அவருக்கு எழவில்லை. அதனால் அதை கையாள்வது பற்றி அவர் எதுவும் எழுதவில்லை. அதனால் இந்த இடத்தில்தான் இந்திய மாலெக்கள் சொந்தமாக யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டார்கள். இவர்களும் "பாவம் சின்ன முதலாளி; அவரே பெரிய முதலாளிகளின் தரகு முதலாளிகளின் சுரண்டலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்; அவருக்கு எதிராக தொழிலாளர்கள் போராடினால் அவர் தொழிலையே இழுத்து மூடிவிட்டு போய் விடுவார்" என்று வர்க்க சமரசம் செய்து வைக்கப் பார்க்கிறார்கள். அப்படியாவது அந்த சின்ன முதலாளி எனும் "தேசிய முதலாளி"களை நேச சக்தியாக இழுத்துவிட முடியுமா என்று பார்க்கிறார்கள். அதாவது புரட்சியின் தலைமை வர்க்கமான தொழிலாளி வர்க்கத்தின் நலனைக் காவு கொடுத்து அந்த சின்ன முதலாளியை புரட்சியின் நேச சக்தியாக இழுத்து விட முடியுமா என்று படாதபாடு படுகிறார்கள். ஆனால் அந்த சின்ன முதலாளிகள் "ஆமாம் நான் பாவம் தான்; உங்கள் தொழிலாளிகளை சம்பள உயர்வு கேட்காமல், முடிந்தால் கொஞ்சம் சம்பள வெட்டும் செய்துகொண்டு, சில சலுகைகளை விட்டுக்கொடுத்து, ஓவர்டைம் சம்பளம் இல்லாமல் ஓரிரு மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்து கொடுத்து என்னை கைதூக்கி விடுங்கள்" என்று சொல்லி தன் சுரண்டலை அதிகப்படுத்தி தன் மூலதனத்தை வளர்ப்பதற்கு இவர்களை அந்த சின்ன முதலாளிகள் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர புரட்சிக்கு ஆதரவாக தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் அந்த சின்ன முதலாளிகள் ஒருநாளும் வர மாட்டார்கள். மார்க்ஸ் சொன்னது போல முதலாளித்துவத்தின் விதியின்படி பெரும் மூலதனத்துடன் போட்டியிட முடியாமல் மூலதனத்தை இழந்து தொழிலாளி வர்க்க அணிகளுக்குள் தள்ளப்படும்போது வேண்டுமானால் அந்த சின்ன முதலாளி தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் வருவார்.

ஒரு ஏகாதிபத்திய நாட்டின் காலனி நாட்டில் சொந்த முதலாளித்துவம் வளராதா? அது ஏகாதிபத்தியமாகவும் ஆகாதா?

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றால் ஒரு ஏகாதிபத்திய நாட்டின் கீழ் காலனி நாடாக இருக்கும் ஒரு நாட்டில் சொந்த முதலாளித்துவம் வளராது. அதனால் அப்படி சொந்த முதலாளித்துவம் வளராத காலனி நாடுகளில் உருவாகும் முதலாளித்துவம் தரகு முதலாளித்துவம் ஆகத்தான் இருக்கும்; அது ஒரு காலத்திலும் ஏகாதிபத்திய முதலாளித்துவமாக வளர்ச்சியடைய முடியாது. அதனால் இந்தியாவில் வளர்ந்து இருக்கும் முதலாளித்துவமும் தரகு முதலாளித்துவமே என்று சொல்கிறீர்கள். அதற்கு ஆதரவாக தரகு முதலாளியம் என்பதற்கு நீங்களாக உருவாக்கிய ஒரு வினோதமான வரையறையையும் முன்வைக்கிறீர்கள்: " தரகுமுதலாளியம் என்பதின் வரையரை எந்தெ தேசத்தில் முதலாளியம் உருவாகவில்லையோ அந்த தேசங்களில் தரகுமுதலாளியம் உருவாகும் அல்லது ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்படும் என்பது இயங்கியல் விதி.! " இந்த வரையறை மார்க்சிய ஆசான்கள் முன்வைத்த எந்த வரலாற்றுப் பொருள்முதல்வாத கோட்பாடுகளுக்கும் உட்பட்டதல்ல. அது இயக்கவியலும் அல்ல. தரகு முதலாளித்துவம் பற்றிய ஆழமான மார்க்சிய ஆய்வுகளுக்கு சொந்தக்காரரான மாவோவின் படைப்புகளிலும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது உங்களுடைய சொந்த கண்டுபிடிப்பே. உங்களின் இந்த சொந்த கண்டுபிடிப்பு சரியான வரையறையாக இருக்க வேண்டுமென்றால் எந்த ஒரு காலனி நாட்டிலும் முதலாளித்துவம் வளர்ந்து அது ஏகாதிபத்தியமாக ஆகி இருக்கக்கூடாது. அதனால்தான் நீங்கள் அதற்கும் ஒரு வாதம் வைத்திருக்கிறீர்கள். //இதுகாறும் நமக்கு கிடைக்கப்பெற்ற வரலாற்று தகவல்களின் அடிப்படையில் உலகத்தில் காலனியப்படுத்தப்பட்ட நாடுகளில் பெரும் முதலாளியம் (அதாவது ஏகாதிபத்தியம்) உருவாகியதில்லை. ... நிலமை இவ்வாறு இருக்க இந்தியாவில் பெரும் முதலாளியம் (அதாவது ஏகாதிபத்தியம்) எங்கிருந்து முளைத்தது?// -என்று கேட்கிறீர்கள். ஆங்கில ஏகாதிபத்திய காலனி ஆட்சியின் கீழ் இந்தியாவில் முதலாளித்துவம் எப்படி வளர்ந்தது, அது எப்படி ஏகபோகமாக வளர்ந்து ஏகாதிபத்தியமாக ஆனது என்பது பற்றி மேலே வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். இருந்தாலும் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் வரலாற்றில் "உலகத்தில் காலனியப்படுத்தப்பட்ட நாடுகளில் முதலாளித்துவம் வளர்ந்து, அது ஏகாதிபத்தியமாக உருவாகியதா?" என்பதற்கு வரலாற்று ஆதாரம் வேண்டும் என்று கேட்பீர்கள். அமெரிக்கா, அமெரிக்கா என்று ஒரு ஏகாதிபத்தியம் இருக்கிறது அல்லவா? அந்த ஏகாதிபத்தியம் இதற்கு முன்பு அதாவது அது ஏகாதிபத்தியமாக ஆவதற்கு முன்பு இந்தியாவைப் போலவே பிரிட்டன் எனும் ஏகாதிபத்திய நாட்டின் காலனி நாடாக இருந்தது என்பதும்; அந்தக் காலனி நாடுதான் இந்தியாவைப் போலவே பிரிட்டனின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தை நடத்தி சுதந்திரமடைந்து இன்று ஏகாதிபத்திய நாடாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் வரலாறு. அதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரு ஏகாதிபத்திய நாட்டின் காலனி நாட்டின் அடிமை சூழலில் வளர்ந்த ஒரு முதலாளி கடைசிவரை தரகு முதலாளி ஆகவே அடிமை முதலாளி ஆகவே இருந்து விடுவான் என்பது வரலாறு அல்ல. வாய்ப்பு கிடைக்கும் போது தானும் ஒரு சுதந்திர முதலாளியாக மாறி ஒரு ஏகாதிபத்தியமாக மாறி தன்னை அடிமைப்படுத்திய ஏகாதிபத்தியத்தையே சுரண்டும் ஏகாதிபத்தியமாகவும் வளருவான் என்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியமே வரலாற்றின் முதல் சாட்சி. இந்திய ஏகாதிபத்தியம் அடுத்த சாட்சி. இந்த வரலாற்று சாட்சியை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆனாலும் இதை ஏற்றுக்கொண்டால் இந்திய முதலாளித்துவம் தரகு முதலாளித்துவம் அல்ல; அது ஒரு முதலாளித்துவ ஏகாதிபத்தியம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் அதை மறுப்பதற்கு உரிய வரலாற்று ஆதாரம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் சிறுபிள்ளைத்தனமான வாதத்திற்கு போகிறீர்கள். // பெரும் முதலாளிகள் யார் என்ற கேள்விக்கு நாங்கள் கொடுத்த விளக்கம் என்பது முதல் மற்றும் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு எல்லோருக்கும் தெறிந்த சான்றுகளின் அடிப்படையிலேயேதான் விளக்கினோம்.! நாங்கள் 1750,ல் இருந்து விடுதலைக்கு போராடிய அமெரிக்காவை பற்றியோ, அதன் உள்நாட்டு போரைப்பற்றியோ நாங்கள் சொல்லவில்லை.! // என்று பிரிட்டன் காலனியில் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவான வரலாற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கடந்து போக முயற்சி செய்கிறீர்கள். இந்தியாவின் இன்றைய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சியை ஆய்வு செய்வதற்கு முதலாளித்துவ சகாப்தத்தின் ஒட்டுமொத்த மனித குல வரலாற்றையும்தானே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி முழுமையாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள மாட்டோம்; முதல் இரண்டு உலகப் போருக்குப் பிந்தைய வரலாறுகளைத் தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம் என்று சொல்வது எந்த வகையான இயக்கவியல் அணுகுமுறை என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். அப்படி முழுமையான வரலாற்றை அதாவது பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் காலனி ஆதிக்கத்திலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி உருவாக முடிந்தது என்ற வரலாற்றையும் சேர்த்து ஆய்வுக்கு எடுத்துக் கொண்டால் பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியாவிலும் முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்தியமாக ஆக முடியும் என்ற தவிர்க்க முடியாத முடிவுக்கு வர வேண்டியிருக்கும். ஆனால் அந்த முடிவு உங்கள் மனதுக்கு விருப்பமான முடிவு அல்ல. நீங்கள் விரும்பும் ஆய்வு முடிவு காலனி நாடுகளில் முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்தியமாக ஆக முடியாது என்பதற்கு வரலாற்றில் ஆதாரத்தை காட்ட வேண்டும். அதற்காக வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு உங்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறீர்கள். அப்படி எடுத்துக்கொண்டு உங்களுக்கு சாதகமாக இந்தியாவில் முதலாளித்துவம் பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் உருவானதால் அது தரகு முதலாளித்துவமே என்று முடிவுக்கு வருகிறீர்கள். இதன்மூலம் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? எங்கள் மாலெமா முன்னோடிகள் அன்று வரையறுத்த வரையறை சரிதான் என்ற வாதத்தில் ஜெயிக்க விரும்புகிறீர்களா? அப்படி ஜெயிப்பதனால் இந்தியாவில் சமூக மாற்றத்திற்கு என்ன பயன்? ஏற்கனவே அந்த வரையறையை முன்வைத்த மாலெமா முன்னோடிகளின் காலமும் நேரமும் உழைப்பும் தியாகமும் வீணடிக்கப்பட்டது போல உங்களுடைய காலமும் நேரமும் உழைப்பும் தியாகமும் தவறான வேலைத்திட்டத்தில் மீண்டும் ஒருமுறை வீணடிக்கப்படுவதைத்தவிர வேறென்ன ஆக்கபூர்வமாக நடந்து விடப்போகிறது.

பல்தேசிய இன அரசில் முதலாளித்துவம் வளர்ந்து
ஏகாதிபத்தியம் ஆகாதா?

இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகளே என்பதற்கு நீங்கள் சொல்லும் இன்னொரு வினோதமான வாதம்:
"ஒரு முழுமையான தேசமாக இருந்தால்தான் அங்கு வளரும் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர முடியும். ஆனால் இந்தியா என்பது பல தேசிய இனங்களை பலாத்காரமாக அடிமைப்படுத்தி கட்டமைக்கப்பட்டஅரசாகும். எனவே இந்தியாவில் வளரும் முதலாளித்துவம் தரகு முதலாளித்துவமாகத்தான் இருக்க முடியும்." இந்தியா என்றொரு நாடு பல தேசிய இனங்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலனி ஆட்சியின் கீழ் பலாத்காரத்தின் மூலம் அடிமைப்படுத்தி ஒன்றிணைக்கப்பட்டது தான். அது வரலாற்று உண்மை. அதை மறுப்பதற்கு எதுவும் இல்லை. அது புரட்சிக்கு முந்தைய ஜாரிச ரஷ்யாவில் தேசிய இனங்கள் பற்றி லெனின் சொன்னது போல இந்தியாவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலனி ஆட்சியின் கீழ் தேசிய இனங்களின் சிறைக் கூடமாக தான் இருந்தது என்பதையும் மறப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் எப்படி தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இருந்த ரஷ்யாவில் முதலாளித்துவம் வளர்ந்து 1917 பிப்ரவரியில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியதோ அது போல பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இருந்த இந்தியாவிலும் முதலாளித்துவம் வளர்ந்து 1947 ஆகஸ்ட் 15இல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது என்பதும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஒவ்வொரு தேசிய இனங்களில் வளர்ந்த முதலாளிகளும் தங்கள் தங்கள் தேசிய இன சந்தையை தனி நாடாக பிரித்து தாமே சுதந்திரமாக சுரண்டுவதற்கு ஆசை இல்லாமல் இருக்கவில்லை. அப்படி எந்த ஒரு தேசிய முதலாளிகள் ஆசைப்படவில்லை என்று சொன்னால் அது முதலாளி வர்க்க குணாம்சங்கள் பற்றிய வர்க்க புரிலையே மறுப்பதாகும். ஆனால் வலிமையான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனியாக போராடி விடுதலை பெற முடியாது என்பதை ஒவ்வொரு தேசிய இன முதலாளிகளும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளும் புரிந்து கொண்டனர்.
எனவே அனைத்து தேசிய இனங்களும் சேர்ந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தை நடத்தினர். எந்த அளவிற்கு அகில இந்திய அளவிலான சுதந்திரப் போராட்டங்கள் நடந்ததோ அந்த அளவிற்கு போராட்டங்களில் ஈடுபட்ட தேசிய இனங்களுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும் நாம் அனைவரும் இந்திய மக்கள் என்ற உணர்வும் தேசிய உணர்வும் வளர்ந்தது. அந்த அடிப்படையில் போராடி சுதந்திரம் பெற்ற இந்தியா இன்று ஒரு பல்தேசிய இன முதலாளித்துவ ஏகாதிபத்திய அரசாக நிலவுகிறது. இந்தியாவில் இருந்த ஒவ்வொரு தேசிய இன முதலாளிகளும் பின்பற்றிய அதே நடைமுறையை பின்பற்றி இன்று வலிமையான இந்திய அரசுக்கு எதிராக தனித்தனி தேசிய இனங்களின் தொழிலாளி வர்க்கம் தனித்தனியாகப் போராடி சோசலிச சமூகத்தைப் படைக்க முடியாது; அதனால் அகில இந்திய அளவில் அனைத்து தேசிய இனங்களின் தொழிலாளி வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் ஒரே கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் ஒன்றிணைத்து அகில இந்திய அளவிலான புரட்சி நடத்த வேண்டும் என்று சொன்னால், அதே தேசிய முதலாளிகளின் குட்டி முதலாளித்துவ பகுதியினர் கம்யூனிச வேடம் போட்டுக் கொண்டு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டை திரித்து ஒவ்வொரு தேசிய இனங்களின் தொழிலாளி வர்க்கமும் மற்ற தேசிய இனங்களுடன் ஒன்று சேர்ந்து விட முடியாதபடி தொழிலாளி வர்க்க இயக்கத்தை குழப்பிக் கொண்டுள்ளனர்.
அவ்வாறு குழப்பிக் கொண்டிருப்பவர்களில் முதன்மையானவர்களாக இருப்பவர்கள் மாலெமா இயக்கத்தைச் சேர்ந்த தமிழ் தேசியவாதிகளாக தான் இருக்கிறார்கள். மாலெமா இயக்கங்களின் திருத்தல் வாதத்தின் பல போக்குகளில் ஒன்றான இந்தப் போக்கும் தனியாக விவாதிக்கப்பட வேண்டும். இந்த விவாதத்தை பொருத்தவரையில் வரலாற்றின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் பலாத்காரமாக ஒன்றிணைக்கப்பட்ட பல தேசிய இனங்கள் ஒன்று சேர்ந்து தேசிய இனங்களின் சிறைக் கூடமான சூழலில் இருந்தும் முதலாளித்துவம் வளரும்; அந்த சிறைக் கூடங்களில் இருந்து வெளியேறுவதற்காக நடத்தப்பட்ட பல தேசிய இனங்களின் ஒன்றுபட்ட போராட்டங்களின் விளைவாக உருவான பல்தேசிய இன அரசின் பின்புலத்துடன் அந்த முதலாளிகள் ஏகாதிபத்திய முதலாளிகள் ஆகவும் வளர்வார்கள். இதை மறுக்க வேண்டுமானால் நீங்கள் முதலில் தேசிய இனங்களின் சிறைக் கூடமாக இருந்த ரஷ்யாவில் முதலாளித்துவம் வளரவே இல்லை; லெனின் பொய் சொல்லிவிட்டார் என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும்.

முதலாளித்துவம் என்றால் சுயசார்பானதா?

இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகளே என்பதற்கு நீங்கள் சொல்லும் இன்னொரு மார்க்கிய விரோத திரிபு வாதம்: ஒரு நாட்டில் சுயசார்பு முதலாளித்துவம் உருவாகி இருந்தால்தான் அந்த நாட்டில் முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்தியமாக ஆக முடியும் என்ற வாதமாகும். முதலாளித்துவம் என்றால் சுயசார்பானதா? இல்லை சார்புடையதா என்பதை முதலாளித்துவத்தின் குணங்கள் பற்றி மார்க்ஸ் தனது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் என்ன சொல்கிறார் என்பதை பார்த்தால்தான் நீங்கள் சொல்வது மார்க்சியமா? இல்லை மார்க்ஸ் சொல்வது மார்க்சியமா? என்பதை புரிந்து கொள்ள முடியும். மார்க்ஸ் " பிற்போக்காளர்கள் கடும்கோபம் கொள்ளும்படி முதலாளித்துவம் தொழில்களது காலுக்கு அடியில் இருந்து அவற்றின் தேசிய அடி நிலத்தை அகற்றியுள்ளது" என்கிறார். அதாவது முதலாளித்துவம் என்றால் தேசிய அளவிலானது தேச வரையறைகளுக்கு உட்பட்டது என்ற இந்திய மாலெமா வினரிடம் இன்று பொதுவாக நிலவி வரும் புரிதல் என்பது தவறான புரிதல் ஆகும். முதலாளித்துவம் என்றாலே தேச எல்லைகளைக் கடந்தது தான். முதலாளித்துவ தொழில்கள் மற்ற தேசங்களையும் தேச சந்தைகளையும் தொழில்நுட்பங்களையும் சாராமல் சுயமாக வளர முடியாது என்பதே மார்க்சியத்தின் அடிப்படை புரிதல். மார்க்ஸ் மேலும் சொல்கிறார், "முன்பிருந்தவற்றை போல் இந்த புதிய தொழில்கள் உள்நாட்டு மூலப் பொருள்களை மட்டும் உபயோகிப்பவை அல்ல. தொலை தூர பிரதேசங்களில் இருந்து தருவிக்கப்படும் மூலப் பொருட்களை உபயோகிப்பவை. இவற்றின் உற்பத்தி பொருட்கள் தாய் நாட்டில் மட்டுமின்றி உலகமெங்கும் எடுத்துச்செல்லப்பட்டு எல்லாப் பகுதிகளிலும் நுகரப்படுகிறவை. தாய் நாட்டு உற்பத்தி பொருட்களால் பூர்த்தி செய்யப்படும் பழைய தேவைகளுக்குப் பதில் தொலைதூர நாடுகள் மண்டலங்களது உற்பத்தி பொருட்களால் பூர்த்தி செய்யப்படும் புதிய தேவைகள் எழுகின்றன. வட்டாரங்கள் நாடுகள் இவற்றின் பழைய ஒதுக்க நிலைக்கும் தன்னிறைவுக்கும் பதில் எல்லாத் திசைகளிலும் ஆன நெருங்கிய தொடர்பும் உலக அளவில் நாடுகளுக்கிடையிலான சார்புடைமையும் ஏற்படுகின்றன". அதாவது உள்நாட்டு மூலப் பொருட்களையும் உள்நாட்டுச் சந்தையையும் மட்டும் நம்பி சுயசார்பானதாகவும் தன்னிறைவு பெற்றதாகவும் இருந்தவை முதலாளித்துவத்திற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ தொழில்களே அன்றி முதலாளித்துவ தொழில்கள் அல்ல. மாறாக முதலாளித்துவத்தில் தொழில்கள் வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்களையும் வேறு தேசங்களின் சந்தையையும் சார்ந்து இருக்கின்றன. உதாரணத்திற்கு இந்தியாவின் ருசி ஊறுகாய் தொழிற்சாலைக்கு தேவையான மூலப் பொருட்களான மிளகாய்வற்றல் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் ஊறுகாய் உள்நாட்டிலும் உலகெங்கும் மற்ற நாடுகளிலும் விற்கப்படுகிறது. தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டிவிஎஸ் 50 வாகனங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் விற்கப்படுகிறது. நிலப்பிரபுத்துவத்தில் மக்களின் தேவைகள் உள்நாட்டு உற்பத்தி பொருட்களாலேயே பூர்த்தி செய்யப்படும். முதலாளித்துவ நாடுகளின் சந்தை தேவைகள் தொலைதூர நாடுகளின் மண்டலங்களின் உற்பத்திப் பொருட்களால் மட்டுமே பூர்த்தி செய்யப்படும் புதிய தேவைகள் எழுகின்றன. முத்தாய்ப்பாக மார்க்ஸ் சொல்கிறார்: "முதலாளித்துவத்தில் உலகளவில் நாடுகளுக்கிடையிலான சார்புடைமை ஏற்படுகிறது". அதாவது முதலாளித்துவம் என்றாலே, முதலாளித்துவத்தின் சிறப்பு குணமே உலகில் உள்ள மற்ற நாடுகளை சார்ந்து இருப்பதும் சார்ந்து வளர்வதும் தான்.
ஆனால் மாலெமாவினரோ முதலாளித்துவத்தின் சிறப்பு குணமாக மார்க்ஸ் சொன்ன அந்த சார்புடைமையையே முதலாளித்துவத்தின் குறைபாடாகச் சொல்கின்றனர். அதுவே அவர்களின் மார்க்சியப் பார்வைக் குறைபாடாகவும் இருக்கிறது. அத்தோடு அவர்கள் விடவில்லை குதிரை கீழே தள்ளிதுமில்லாமல் குழியும் பறித்த கதையாக அவர்கள் உள்நாட்டு மூலப் பொருட்களையும் உள்நாட்டுச் சந்தையையும் மட்டும் நம்பி சுயசார்பானதாகவும் தன்னிறைவு பெற்றதாகவும் இருந்த பழைய நிலப்பிரபுத்துவ தொழில்களையே சுயசார்புடைய முதலாளித்துவம் என்று திரித்துச் சொல்கின்றனர்.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் மாலெமாவினருக்கு நிலப்பிரபுத்துவம் பற்றிய புரிதலும் இல்லை; முதலாளித்துவம் பற்றிய புரிதலும் இல்லை என்பதே. நாம் ஏற்கனவே இவர்களுக்கு வர்க்கப் போராட்டம் பற்றிய புரிதலும் இல்லை; கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய புரிதலும் இல்லை; புரட்சி பற்றிய புரிதலும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியதையும் சேர்த்துப் பார்த்தால் இவர்களுக்கு ஒட்டுமொத்தத்தில் மார்க்சியம் பற்றிய புரிதலே இல்லை என்பது தெளிவாகப் புரிந்துவிடும்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் சொன்ன முதலாளித்துவத்தின் சார்புடைமை பற்றி எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் பிரதான ஏகாதிபத்திய எதிரி என்று சொல்லும் அமெரிக்க ஏகாதிபத்தியமே மற்ற உலக நாடுகளை சார்ந்துதான் இருக்கிறது என்ற உலக எதார்த்தத்தை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். சீனா இந்தியா பிரேசில் போன்ற முதலாளித்துவ நாடுகள் ஒட்டுமொத்தமாக அமெரிக்காவிற்கு பொருளாதாரத் தடை விதித்தால் அமெரிக்க ஏகாதிபத்தியம் பசி பட்டினியாலேயே அழிந்துவிடும். அந்த அளவிற்கு அந்த நாடு மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்கிறது. அதற்காக அமெரிக்க முதலாளிகளை சார்பு முதலாளிகள் என்றும் அமெரிக்கா ஒரு சார்பு நாடு என்றும் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. அதே சமயத்தில் சீனா இந்தியா பிரேசில் போன்ற முதலாளித்துவ நாடுகளால் அப்படி ஒரே அடியாக அமெரிக்காவிற்கு பொருளாதார தடையும் விதிக்க முடியாது. ஏனென்றால் மார்க்ஸ் சொன்ன முதலாளித்துவ விதிப்படி இந்த முதலாளித்துவ நாடுகளும் அமெரிக்க சந்தையை சார்ந்தே இருக்கின்றன. அதற்காக இந்தியா உள்ளிட்ட இந்த முதலாளித்துவ நாடுகள் எல்லாம் சார்பு முதலாளிகள் என்றும் சார்பு நாடுகள் என்றும் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. இதைத்தான் மார்க்ஸ் சொல்கிறார்: "வட்டாரங்கள் நாடுகள் இவற்றின் பழைய ஒதுக்க நிலைக்கும் தன்னிறைவுக்கும் பதில் எல்லாத் திசைகளிலும் ஆன நெருங்கிய தொடர்பும் உலக அளவில் நாடுகளுக்கிடையிலான சார்புடைமையும் ஏற்படுகின்றன". எனவே முதலாளித்துவத்தில் சார்பற்ற சுய சார்புடைய முதலாளி என்றும் சார்பு முதலாளி என்றும் எந்த வகைப்பாடும் மார்க்சிய அகராதியில் கிடையாது. முதலாளித்துவம் என்றாலே ஒன்றையொன்று சார்புடையது தான் என்பதுதான் முதலாளித்துவம் பற்றிய மார்க்சிய புரிதல். மார்க்ஸ் சொன்னது போல் எல்லா முதலாளித்துவ நாடுகளையும் போலவே இந்திய முதலாளிகளும் சார்பு முதலாளிகளே; எல்லா முதலாளித்துவ நாடுகளையும் போலவே இந்தியாவும் மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் சார்பு முதலாளித்துவ நாடே. ஏனென்றால் முதலாளித்துவத்தால் சார்பில்லாமல் ஒதுங்கிய நிலையில் வாழ முடியாது என்பதே மார்க்சியம். அப்படியில்லை என்பது முதலாளித்துவம் என்றால் சுயசார்பும் தன்னிறைவும் இருக்க வேண்டும் என் நிலப்பிரபுத்துவத்தை முதலாளித்துவம் என்று திருத்தி சொல்லும் திருத்தல் வாதமே.
புரட்சிக்கு முந்தைய சீனத்தில் மாவோ ஏகாதிபத்திய முதலாளிகளை சார்ந்து இருந்த தரகு முதலாளிகளை வணிக முதலாளிகளான தேசிய முதலாளிகளிடம் இருந்து பிரித்துக் காட்டுவதற்காக தரகு முதலாளிகளை ஏகாதிபத்திய சார்பு முதலாளிகள் என்று விளக்கினார். நாம் ஏற்கனவே தரகு முதலாளி என்ற மாவோவின் வரையறை பொதுவான முதலாளித்துவ வளர்ச்சி கட்டம் கிடையாது; அது சீனாவின் பிரத்தியேக சூழ்நிலையில் உருவான ஒரு வர்க்கம்; இந்தியாவில் தரகு முதலாளிகள் என்ற வர்க்கம் உருவாகவேயில்லை என்பதை தெளிவாக விவாதித்து விட்டோம். சீனாவில் மாவோ வரையறுத்த தரகு முதலாளி பற்றிய வரையறையை மாலெமா முன்னோடிகள் இந்தியா பற்றிய எந்த ஆய்வும் இன்றி காப்பி அடித்ததால் வந்த வினையே இந்திய முதலாளிகள் மற்ற நாட்டு முதலாளிகளை சார்ந்து இருக்கும் சார்பு முதலாளிகள் என்பதால் அவர்களும் தரகு முதலாளிகள் என்ற மார்க்சிய விரோத கண்ணோட்டமாகும். அதாவது இந்தியாவில் இல்லாத தரகு முதலாளிகளை மாவோவின் சீன தரகு முதலாளி பற்றிய வரையறையை வைத்து நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்டிருப்பதால் மாவோவின் வரையறையில் உள்ள சார்புத்தன்மை என்பதை ஒட்டுமொத்த முதலாளித்துவத்தின் சார்புத் தன்மையாக காட்ட முயன்று கடைசியில் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொன்ன முதலாளித்துவம் பற்றிய வரையறுப்புக்கே விரோதமாக வந்து நிற்கின்றீர்கள்.

போர்களை நடத்தி சந்தைகளை கைப்பற்றினால்தான் ஏகாதிபத்தியமா?

அடுத்ததாக, இந்திய முதலாளித்துவம் ஏகாதிபத்திய முதலாளித்துவம் ஆக இருக்க வேண்டுமென்றால் அது தன் சொந்த தேசியத்தின் சந்தையை மட்டுமல்லாது பிற தேசியத்தின் சந்தைகளையும் கைப்பற்றுவதற்கு போர் நடத்தி இருக்க வேண்டும். இந்தியா இதுவரையில் சந்தையை பிடிப்பதற்காக போர் நடத்தவில்லை. அதனால் இது ஏகாதிபத்தியம் அல்ல என்பது உங்களுடைய வாதமாக இருக்கிறது. உங்களுடைய இந்த வாதம் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினுடைய அடிப்படை வரையறுப்புக்கே முற்றிலும் விரோதமானது. லெனின் தனது ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் உலகப் போர்களை ஏகாதிபத்தியத்தின் தனி சிறப்பு வாய்ந்த கூறாக கூறவில்லை. மூலதன ஏற்றுமதியை தான் சிறப்பு வாய்ந்த தனிமுதல் கூறாக கூறுகிறார். அந்த மூலதன ஏற்றுமதி லெனின் காலத்தில் போர்கள் மூலமாக நடந்தது; இப்போது உலக ஒப்பந்தங்கள் மூலமாக நடக்கிறது. ஒரு நாடு ஏகாதிபத்திய நாடா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான காரணி அந்த நாடு எந்த வழிமுறையில் மூலதன ஏற்றுமதியை செய்கிறது என்பது அல்ல . மாறாக அந்த நாடு மூலதன ஏற்றுமதி செய்கிறதா இல்லையா என்பதுதான் ஏகாதிபத்தியத்தை தீர்மானிப்பதற்கான காரணி. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகச் சூழலில் ஒரு நாட்டின் சந்தைகளை பிடிப்பதற்கு உலகப் போர்கள் தேவையில்லை. உலக ஒப்பந்தங்களே போதுமானது.

பாதி திறந்திருக்கும் கதவு பாதி மூடியிருக்கும் கதவே

ஆனால் நீங்கள் இந்திய முதலாளிகள் ஒப்பந்தங்கள் மூலம் பிற நாடுகளை சுரண்டினாலும் அவர்கள் தரகு முதலாளிகள்தான் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று சொல்கிறீர்கள். அதற்கு நீங்கள் சொல்லும் காரணமும் வினோதமானதாக இருக்கிறது. //தரகுமுதலாளிகள் ஏகாதிபத்தியங்களோடு கூட்டு சேர்ந்து உலகம் முலுவதும் கொள்ளையடிக்கின்றனர் என்பது உண்மை.! உதாரணத்திற்கு இலங்கை இரப்பர் தோட்டங்களிலும், இந்தோனியசியாவின் பாமாயில் பணைமரக்காடுகளில் பயிற் செய்து சுற்றுப்புறச்சூழலையும், காற்று மாசுப்பாட்டையும் தொழிலாளர்களை சுரண்டுவதையும் தாங்கள் கூரியதைப்போல் ஒப்பந்தங்களின் வாயிலாகத்தான் நடைபெறுகிறது என்பது உண்மை.! ... (அதேசமயத்தில்) நீங்கள் கூறும் ஏகாதிபத்தியங்களின் ஒப்பந்தத்தின் வாயிலாகத்தான் சப்பான், தென்கொரியா, சீனா, அமெரிக்கா போன்ற அனைத்து நாடுகளின் முதலாளிகள் இந்தியாவிற்குள் வந்து தொடர்ச்சியாக சந்தைப்படுத்தும் நிகழ்வுகள் நடப்பதற்கு நீங்கள் கூறும் விளக்கம் என்ன? // என்று நீங்கள் என்னைத் திருப்பிக் கேட்கிறீர்கள். இதற்கு என்ன பதில் சொல்வது? சுருக்கமாகச் சொல்வதென்றால் "பாதி திறந்திருக்கும் கதவு என்றால் பாதி மூடி இருக்கும் கதவு என்றும் அர்த்தம்" என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய ஏகாதிபத்திய முதலாளிகள் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் இயற்கை வளங்களை சுரண்ட வேண்டும் என்று ஆசைப்பட்டால் தன்னாட்டு இயற்கை வளங்களில் கொஞ்சத்தையாவது மற்ற நாடுகளும் சுரண்டிக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் போர்களே இல்லாமல் இந்திய ஏகாதிபத்திய முதலாளிகளால் மற்ற நாடுகளின் சந்தைகளை சுரண்டுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இதுதான் உலகமயத்தின் தாத்பர்யம்.

புறநிலை யதார்த்தத்துக்குப் பொருந்தாத வரையறை

எனவே உங்களுடைய வாதப்படி போர்களின் மூலம் வேறொரு நாட்டின் சந்தையைக் கைப்பற்றி மூலதனத்தை ஏற்றுமதி செய்து இயற்கை வளங்களை சுரண்டி னால்தான் ஏகாதிபத்தியம் என்றால் உங்கள் மா-லெ-மா முன்னோடிகள் சொன்ன வரையறை படி உலகில் ஒரு நாடும் ஏகாதிபத்திய நாடாக இருக்க முடியாது. இன்று அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் போன்ற நாடுகளும்கூட ஏகாதிபத்திய நாடாக இருக்க முடியாது. இது ஒன்றே உங்களது ஏகாதிபத்தியத்திற்கான வரையறை பொருத்தமற்றது; புறநிலை யதார்த்தத்துடன் பொருந்தி வராதது என்பதை நிரூபித்து போதுமானதாகும். ஆக இன்றைய உலகமயச் சூழலில் போர்கள் மூலம் அல்லாமல் ஒப்பந்தங்கள் மூலம் சந்தையை பிடிக்கும் அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஜப்பான் ஜெர்மனி இத்தாலி போன்ற நாடுகள் ஏகாதிபத்திய நாடுகள் என்றால் இந்தியாவும் ஏகாதிபத்திய நாடே. அப்படியில்லை; இந்தியா ஏகாதிபத்திய நாடு அல்ல என்று நீங்கள் சொல்வீர்களேயானால் அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஜப்பான் ஜெர்மனி இத்தாலி போன்ற நாடுகளும் ஏகாதிபத்திய நாடு அல்ல என்று தான் நீங்கள் சொல்ல வேண்டியது வரும். இப்போது மீண்டும் நீங்கள் உங்கள் பழைய பாணியில் இரண்டாம் உலகப் போருக்கு முன்பு ஏகாதிபத்தியமாக ஆன பழைய ஏகாதிபத்தியங்கள் போர்கள் இல்லாமல் ஒப்பந்தங்கள் மூலம் மூலதன ஏற்றுமதி செய்தாலும் அவைகள் ஏகாதிபத்தியம் ஆகவே நீடிக்கும்; இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் புதிதாக மூலதன ஏற்றுமதி செய்யும் நாட்டு முதலாளிகள் போர்கள் மூலம் ஏற்றுமதி செய்தால் தான் அவர்களை ஏகாதிபத்தியமாக ஒப்புக் கொள்வோம் என்று மட்டையடி வாதம் செய்யாதீர்கள். ஏனெனில் லெனினுடைய ஏகாதிபத்தியம் பற்றிய வரையறை பற்றி தெரிந்தவர்கள் மட்டுமல்ல குறைந்தபட்ச தர்க்க ஞானம் உள்ளவர்களும் கூட உங்களைப் பார்த்து சிரிப்பார்கள்.

காலனிகள் வைத்திருந்தால்தான் ஏகாதிபத்தியமா?

போர்கள் மூலம் சந்தையை பிடித்தால்தான் அது ஏகாதிபத்தியம் என்ற உங்களுடைய இந்த வாதத்தை நீட்டித்தால் அது இன்னொரு வாதத்திற்கும் இட்டுச்செல்லும். அதாவது மற்ற நாடுகளை காலனிகளாக கொண்டிருந்தால்தான் ஒரு நாடு ஏகாதிபத்திய நாடு என்று சொல்லமுடியும். இந்தியாவிற்கு என்று எந்த காலனியும் கிடையாது. அதனால் இந்தியா ஒரு ஏகாதிபத்திய நாடு அல்ல என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது இந்த வாதமும் முந்தைய போர்பற்றிய பார்வையைப் போலவே சமூகத்தின் வளர்ச்சிப் போக்கை அந்த சமூகத்தின் இயக்கத்தோடு படிக்கும் இயக்கவியல் அணுகுமுறைக்கு பதிலாக அதை தனியாக நிறுத்தி வைத்து ஆய்வு செய்யும் இயந்திர கதியிலான அணுகுமுறையே தவிர வேறொன்றுமில்லை. அதற்குரிய பதிலே இதற்கும். இந்த வாதத்தை ஏகாதிபத்தியங்களை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக வைத்து உலக ஏகாதிபத்தியங்களை வரையறை செய்தால் உலகில் எந்த ஒரு நாடும் இன்று ஏகாதிபத்திய நாடாக இருக்க முடியாது. இன்று அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஜப்பான் ஜெர்மனி இத்தாலி போன்ற எந்த ஏகாதிபத்திய நாட்டுக்கும் காலனி கிடையாது. அப்படியானால் இந்த நாடுகள் எல்லாம் ஏகாதிபத்திய நாடுகள் அல்ல என்று நம்மால் சொல்லிவிட முடியுமா? முடியாது என்பதே உண்மை.

இந்தியா, அமெரிக்கா பிரிட்டனின் நவகாலனியா? அல்லது அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தியாவின் நவகாலனியா?

இந்திய முதலாளிகளின் உலகளாவிய வளர்ச்சி கண்ணுக்கு முன்னால் எத்தனை நிதர்சனமாக இருந்தாலும் இந்தியா ஒரு தரகு முதலாளித்துவ நாடுதான் என்பதை நிறுவுவதற்காக மாலெமா கட்சிகள் - குழுக்கள் மட்டுமல்ல; சிபிஐ சிபிஎம் கட்சிகளை சேர்ந்தவர்களும் முன் வைக்கும் மற்றொரு வாதம் இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனி ஆதிக்கச் சுரண்டலில் அல்லது நவ காலனி யாக இருக்கிறது என்பதை தொடர்ந்து கூறி வருகிறார்கள். அவர்களிடம் இந்தியாவை எப்படி அமெரிக்கா பிரிட்டனின் காலனி நாடாக சொல்லமுடியும்? இந்தியாவில் அமெரிக்கா பிரிட்டன் ராணுவமோ அமெரிக்கா பிரிட்டனின் ஆட்சியோ இல்லையே என்று கேட்டால், அமெரிக்க பிரிட்டன் ஏகாதிபத்தியங்களின் மூலதனம் இந்தியாவில் பங்குச்சந்தைகள் மூலமும் அந்நிய முதலீடுகள் மூலமும் குவிந்து கிடக்கின்றன; அதனால் இந்தியா அமெரிக்கா பிரிட்டனின் நவ காலனியாக அல்லது புதிய காலனியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். நல்லது. அவர்களது வாதப்படி இந்தியா அமெரிக்கா பிரிட்டனின் நவ காலனி அல்லது புதிய காலனி என்பதை வரையறுப்பதற்கு இந்தியாவிலுள்ள அமெரிக்கா பிரிட்டன் நாடுகளின் முதலீடுகளை ஆதாரமாகச் சொல்கிறார்கள். ஆனால் அதே அளவுகோலை கொண்டு அமெரிக்கா பிரிட்டனில் இருக்கும் இந்திய முதலீடுகளை வைத்து அமெரிக்காவும் பிரிட்டனுமே இந்தியாவின் நவ காலனி அல்லது புதிய காலனி என்றும் சொல்ல முடியும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

அந்நிய மூலதனம் குவிந்தால் புதியகாலனி என்றால் அமெரிக்காவும் புதிய காலனியே

உதாரணத்திற்கு, கடந்த 2016ஆம் ஆண்டின் ஐ,நா,சபையின் உலக முதலீட்டு அறிக்கை இன்படி, கடந்த 2015இல் அமெரிக்காவின் மொத்த நிலையான மூலதனத்தில் 10.8 சதவீதம் அந்நிய மூலதனம் ஆகும்.
அதே ஆண்டில் இந்தியாவின் மொத்த நிலையான மூலதனத்தில் 7 சதவீதம்தான் அந்நிய மூலதனம். அதுபோல அதே 2015இல் அமெரிக்காவின் பங்குச் சந்தையில் குவிந்திருந்த அந்நிய மூலதனம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31.1 சதவீதம். அதே ஆண்டில் இந்தியாவின் பங்குச் சந்தையில் குவிந்திருந்த அந்நிய மூலதனம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.5 சதவீதம்தான். அப்படிப் பார்த்தால், இவர்களது பார்வையில் இந்தியாவைவிட அமெரிக்காதான் அதிகளவு புதிய காலனியாதிக்கத்தில் இருப்பதாக இவர்கள் கூறவேண்டும். அல்லது குறைந்தபட்சம் அமெரிக்கா, இந்தியா இரண்டுமே புதிய காலனியாதிக்கத்தில் இருப்பதாகவாவது கூற வேண்டும். மாறாக எந்தவிதமான தர்க்க நியாயமும் இன்றி இந்தியா அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அமெரிக்கா இந்தியா ஆகிய இரண்டு ஏகாதிபத்திய நாடுகளின் ஏகாதிபத்திய முதலாளிகளும் பரஸ்பரம் அவரவர் சக்திக்கேற்ப பரஸ்பரம் ஒருவர் மற்றவரது நாட்டின் இயற்கை வளங்களையும் உழைப்பையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள். அவ்வளவுதான்.

இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகள் அல்ல;
ஏகாதிபத்திய முதலாளிகளே

மேலே விவாதித்தது போல பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் உருவாகி ஏகபோகமாக வளர்ந்து 1947 இல் அரசியல் அதிகாரத்திற்கு வந்த இந்திய முதலாளித்துவம் இந்த காலகட்டத்தில் எவ்வளவு வேகமாக எவ்வளவு தூரம் வளர முடியுமோ அவ்வளவு வேகமாக அவ்வளவு தூரம் வளர்ந்து உலக நாடுகளுக்கு தன் சரக்குகளை மட்டுமல்ல மூலதனத்தையும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு ஒரு ஏகாதிபத்தியமாக இன்று வளர்ந்து நிற்கின்றது. இந்த உண்மையை காண மறுப்பது இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல இந்திய ஏகாதிபத்திய முதலாளிகள் உலகில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் போய் சுரண்டுகிறார்களோ அந்த நாட்டின் தொழிலாளி வர்க்கத்திற்கும் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். ஏகாதிபத்தியம்-முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற தனது நூலில் மாமேதை லெனின், "தடையில்லாப் போட்டி தனியாட்சி புரிந்த பழைய முதலாளித்துவத்தின் குறிப் பண்பாய் இருந்தது பண்டங்களின் (சரக்குகளின்) ஏற்றுமதி. ஏகபோகங்கள் ஆட்சி புரியும் முதலாளித்துவத்தின் இன்றய (ஏகாதிபத்தியக்) கட்டத்தின் குறிப் பண்பாய் இருப்பது மூலதனத்தின் ஏற்றுமதி என்று சொல்கிறார். இன்று இந்திய முதலாளிகள் தன்னை விட பின்தங்கிய ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளுக்கும் குறிப்பாக தன்னை காலனியாக வைத்திருந்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளுக்கும் தங்கள் மூலதனங்களை ஏற்றுமதி செய்துகொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் இந்திய மூலதனம்

அமெரிக்காவில் குவிந்து இருக்கும் இந்திய ஏகாதிபத்திய மூலதனங்கள் பற்றிய புள்ளிவிவரங்களை பட்டியலிடுவதை விட கடந்த 2008 இல் அமெரிக்க பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்த குமிழிவெடிப்பு என்று சொல்லப்படும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த அமெரிக்க பொருளாதாரத்தை இந்திய ஏகாதிபத்திய முதலாளிகள் பெரும் மூலதனங்களை பாய்ச்சி அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தியதற்காக வெள்ளை மாளிகை 2010 ஆம் ஆண்டில் வெளியிட்ட பாராட்டு அறிக்கையை சொன்னாலே போதுமானது என்று நினைக்கிறேன். அதன் அறிக்கையின் ஒருபகுதி: "இந்திய நிறுவன‌ங்கள் தத்தளித்துக் கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்களைத் தூக்கி நிறுத்தி, வேலைகளைப் பாதுகாத்து அமெரிக்கப் பொருளாதாரத்தில் உற்பத்தியைத் தூண்டிவிட்டுள்ளன. இந்தியாவின் எஸ்ஸார் குழும நிறுவனம் அமெரிக்காவின் மின்னசொட்டா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 17 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்து 12 மாகாணங்களில் 7200 பேருக்கு வேலை வழங்கிக் கொண்டுள்ளது. இந்தியாவின் டாடா குழுமம் அமெரிக்காவில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்து நாடு முழுவதும் 19,000 பேரை வேலைக்கு வைத்துள்ளது. இந்தியாவின் ஜுப்லியன்ட் ஆர்கன்ஸி நிறுவனம் அமெரிக்காவில் 246 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்து நாடு முழுவதும் 900 பேரை வேலைக்கு வைத்துள்ளது. Wockhardt எனும் இந்தியாவின் மருந்து நிறுவனம் அமெரிக்காவின் மோர்டன் க்ரோவ் எனும் மருந்து நிறுவனத்தை 37 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைக்கு வாங்கி அந்நிறுவனத்தின் 200 தொழிலாளர்களையும் வேலைக்கு வைத்துக் கொண்டுள்ளது. இந்தியாவின் அவந்தா குழுமத்தின் க்ராம்ப்டன் க்ரீவ்ஸ் நிறுவனம் அல்பேனி பல்கலைக் கழகத்துடன் இணைந்து.... ... இப்படி போகிறது அந்த வெள்ளை மாளிகை இன் அறிக்கை.

இங்கிலாந்தில் இந்திய மூலதனம்

இங்கிலாந்தில் குவிந்து இருக்கும் இந்திய ஏகாதிபத்திய மூலதனங்கள் பற்றிய புள்ளிவிவரங்களை பட்டியலிடுவதை விட சமீபத்தில் 2019ஏப்ரலில் இங்கிலாந்து ஏகாதிபத்திய அரசாங்கம் இந்திய ஏகாதிபத்தியநிறுவனங்கள் இங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதற்காக வெளியிட்ட பாராட்டு அறிக்கையில் வெளியிட்ட புள்ளி விபரங்களைச் சொன்னாலே போதுமானது என்று நினைக்கிறேன். அதன்படி 2019 காலகட்டத்தில் ஏறத்தாழ 850 இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் கார்ப்பரேட் நிறுவனங்களை இந்திய ஏகாதிபத்திய முதலாளிகள் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். அது தவிர 842 இந்திய ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கிலாந்தில் தனது மூலதனத்தை முதலீடு செய்து தொழில் நடத்தி வருகின்றன. அவற்றின் மொத்த ஆண்டு வருமானம் 48 பில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரத்து 55 கோடியே 20 லட்சம் ஆகும். இதுவே 2018இல் 800 இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகவும் அவற்றின் மொத்த ஆண்டு வருமானம் 46.4 பில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகவும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் 2018இல் 360 மில்லியன் பவுண்ட் (ரூபாய் 3375 கோடியே 38 லட்சத்து 96 ஆயிரத்து 600) தொகையை கார்ப்பரேட் வரியாக இங்கிலாந்து அரசிற்கு செலுத்தியதாகவும்; அதுவே 2019இல் இரண்டு மடங்காகி 684 பில்லியன் பவுண்ட் (ரூபாய் 6398 கோடியே 50 லட்சத்து 32 ஆயிரத்து 741) ரூபாய் தொகையை கார்ப்பரேட் வரியாகச் செலுத்தி உள்ளதாகவும்; இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், 2018இல் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 952 வேலைவாய்ப்புகளையும் 2019இல் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 753 வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளதாக இங்கிலாந்து ஏகாதிபத்திய அரசாங்கம் இந்திய ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களை பற்றி பெருமையாக அறிவித்துக் கொள்கிறது.

தோராயமான புள்ளி விபரங்களை வைத்து இந்தியாவை
ஏகாதிபத்திய நாடு என்று சொல்ல முடியுமா?

இந்தக் கேள்விக்கான பதிலை லெனின் தனது ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் தனக்கு கிடைத்த புள்ளிவிவரங்களின் பயன்படுத்தி முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய கட்டத்தைய நிலைநாட்டிய பிறகு லெனின் சொன்ன பின்வரும் வார்த்தைளிலேயே நாமும் சொல்லலாம்:
"வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் மூலதனம் பல்வேறு நாடுகளுக்கிடையில் எவ்வாறு வினியோகமாகியிருக்கிறது? இம்மூலதனம் எங்கு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது? இக்கேள்விகளுக்குத் தோராயமான பதில்தான் அளிக்க முடியும்; ஆயினும் தற்கால ஏகாதிபத்தியத்தின் பொதுவான சில உறவுகளையும் தொடர்புகளையும் தெளிவுபடுத்த இந்தப் பதில் போதுமானதாகும்." -லெனின் ஆகவே இந்திய முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சிக் கட்டத்தை நிலைநாட்டவும் இவை போதுமானவையே.

தரகு பங்குக்காக அல்ல; முழுப் பங்குக்காகவே மூலதன ஏற்றுமதி

உங்கள் வாதப்படி இந்திய முதலாளிகள் மூலதன ஏற்றுமதி செய்தாலும் அவர்கள் ஏகாதிபத்தியத்தின் தரகு முதலாளிகள்ளே என்றால் அவர்கள் எந்த ஏகாதிபத்தியத்தின் தரகு முதலாளிகள் என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டும்? குறிப்பாக எந்த ஏகாதிபத்தியத்தின் தரகு முதலாளிகள் என்று சொல்ல முடியாது; ஆனால் அவர்கள் எல்லா ஏகாதிபத்தியங்களின் தரகு முதலாளிகள் என்று மட்டையடி யாக வாதம் செய்து தப்பிக்க முடியாது. மார்க்சிய அரசியல் பொருளாதார கோட்பாடுகளின் அடிப்படையில் இன்றைய உலக யதார்த்த நிலைமைகளை ஆய்வு செய்து அதனடிப்படையில் குறிப்பாக சொல்ல வேண்டும். ஏற்கனவே இந்திய சமூகம் பற்றிய எந்த ஆய்வுகளும் இன்றி நீங்கள் முன்வைத்த திருத்தல் வாதக் கோட்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக மீண்டும் மீண்டும் எந்த ஆய்வுகளும் இல்லாத புதிய புதிய திருத்தல் வாத கருத்தாக்கங்களை உற்பத்தி செய்து கொண்டே இருப்பது இந்திய புரட்சிக்கும் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கும் மாமேதை மார்க்சுக்கும் நீங்கள் செய்யும் துரோகமாகும். ஒரு தரகு முதலாளி தன்னை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்திய நாட்டு முதலாளிகளையும் தொழிலாளி வர்க்கத்தையும் இயற்கை வளங்களையும் சுரண்ட முடியாது என்பதை என்ற எளிய உண்மையை புரிந்து கொள்வதற்கு மார்க்சியம் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்திய முதலாளிகள் தன்னைச்சுற்றியுள்ள ஆசிய ஆப்பிரிக்க பின்தங்கிய நாடுகளில் மட்டுமல்லாது பிரிட்டன் பிரான்ஸ் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளிலும் தனது நிதி மூலதனத்தை ஏற்றுமதி செய்து அங்குள்ள தொழிலாளி வர்க்கத்தையும் இயற்கை வளங்களையும் சுரண்டுகின்றனர் என்பது கண்கூடான உண்மை. நீங்கள் சொல்லும் "தரகு முதலாளிகள்" அவர்களது ஏகாதிபத்திய எஜமானர்களின் ஏகாதிபத்திய நாட்டின் இயற்கை வளங்களையும் அங்குள்ள தொழிலாளிகளின் உழைப்பையும் சுரண்டுவது சாத்தியம் என்றால் அந்த முதலாளி எப்படி தன்னால் சுரண்டப்படும் ஒரு ஏகாதிபத்திய நாட்டின் தரகு முதலாளியாக - அடிமை முதலாளியாக இருக்க முடியும் என்ற இந்த எளிய தர்க்க உண்மையை புரிந்து கொள்வதற்கு மார்க்ஸியம் படித்திருக்க வேண்டுமா என்ன?
ஆனால் உங்கள் வாதங்களில் உள்ள பலவீனங்களை மறைப்பதற்காக தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனைப் போல்கூசாமல் பொய் சொல்கிறீர்கள். //மேலும் மேற்கூரிய தரகுமுதலாளிய நாடுகள் அனைத்தும் உலக ஏகாதிபத்தியங்களோடு ஒப்பத்தங்களின் அடிப்படையில் உலக வங்கிக்கும் உலமயமாக்கலுக்கும் வால்பிடித்து தன் சொந்த நாட்டு தொழிலாளர்களை மட்டுமல்லாது ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கும் உலகின் அனைத்து நாடுகளிலும் கூட்டனி அமைத்துக்கொண்டு சரி நிகர் கொள்ளைப் பங்கிற்காக இல்லாமல் தங்களின் தரகு சேவை பங்காக சில சலுகைகளை பெற்றுக்கொண்டு உலகில் இவர்களுக்கு வாய்பு உள்ள அனைத்து நாட்டு தொழிலாளார்களையும் சுரண்டி வருகின்றனர்.!// -என்று சொல்கிறீர்கள். இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் இதையெல்லாம் இன்றைய இளம் தலைமுறையினரிடம் இருந்து மறைக்க முடியாது என்பதற்காக தரகு முதலாளிகளின் மூலதன ஏற்றுமதி பற்றிய உண்மைகளை ஒப்புக் கொள்வது போல் ஒப்புக்கொண்டு ஆனால் அவர்கள் சரிநிகர் பங்கிற்காக இல்லை தரகு பங்கிற்காகவே மூலதன ஏற்றுமதி செய்வதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கவே முயற்சிக்கிறீர்கள். இதன்மூலம் மீண்டும் மீண்டும் நீங்கள் திருத்தல் வாதிகள் என்பதையே நிரூபிக்கிறீர்கள்.
நான் மேலே இந்திய ஏகாதிபத்திய முதலாளிகள் பிரிட்டன் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்களையே கைப்பற்றி சுரண்டுகிறார்கள்; தனி நிறுவனங்களை அமைத்தும் சுரண்டுகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் சொல்லியிருக்கிறேன். ஆனால் நீங்கள் எந்த ஆய்வுகளும் இன்றி உங்கள் முன்னோடிகளின் ஆய்வுகள் இல்லாத திருத்தல்வாத வரையறுப்புகளை நியாயப்படுத்துவதற்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்தியப் புரட்சியின் கட்டம்

புதிய ஜனநாயகப் புரட்சி அல்ல; சோசலிசப் புரட்சியே

இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகள் அல்ல. ஏகாதிபத்திய முதலாளிகளே என்பதை மேலே நான் மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள் முதல்வாத கோட்பாடுகளின் படியும் அரசியல் பொருளாதார கோட்பாடுகளின்படியும் சுருக்கமாக விவாதித்துள்ளேன்.

இந்திய முதலாளிகள் ஏகாதிபத்திய முதலாளிகள் என்றால் அமெரிக்கா பிரிட்டன் முதலாளிகள் அளவிற்கு வளர்ச்சி அடைந்த முதலாளிகளா? என்றால் பழைய ஏகாதிபத்தியங்கள் அளவிற்கு வளர்ச்சியடைந்த பெரிய ஏகாதிபத்தியங்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனாலும் இவர்கள் லெனின் வரையறுத்த ஏகாதிபத்தியங்களின் அனைத்து குணங்களையும் கொண்ட சிறிய ஏகாதிபத்திய முதலாளிகளே. இந்திய முதலாளிகள் பெரிய ஏகாதிபத்திய முதலாளிகளா? சிறிய ஏகாதிபத்திய முதலாளிகளா? என்பது அவர்களின் அளவு ரீதியான வேறுபாடுகளே தவிர குணாம்ச ரீதியான வேறுபாடுகள் அல்ல. அளவு ரீதியான மாறுபாடுகள் குணாம்ச ரீதியான மாறுபாடுகளுக்கு இட்டுச் செல்லும் என்ற இயக்கவியல் பொருள்முதல்வாத விதியை விரிவஞ்சி விரித்துச் சொல்லாமல் சுருக்கமாக இத்துடன் முடிக்கிறேன். எனவே இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகள் அல்ல; இந்தியப் புரட்சியின் கட்டம் புதிய ஜனநாயகப் புரட்சியும் அல்ல. இந்திய முதலாளிகள் ஏகாதிபத்திய முதலாளிகளே; இந்தியப் புரட்சியின் கட்டம் சோசலிசப் புரட்சியே. உங்கள் பதில் விவாதக் கருத்துக்களை எதிர்பார்த்து தோழமையுடன் த.சிவக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்