பாஸிசத் தன்மைவாய்ந்த தனிநபர்வாத , லும்பன் கலாச்சாரப் போக்குகளுக்கெதிரான போரட்டத்தை சமூகத்தை ஜனநாயக மயப்படுத்தும் கலாச்சாரப் போராட்டங்களோடு இணைக்க வேண்டும்
இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படக் கூடிய கட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் ஒன்றாயிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்தவையே. நுணுகிப் பார்த்தால் அவை இத்தனை பிரிவுகளாக பிரிந்து கிடப்பதற்கு சரியான காரணம் எதுவுமே இல்லை. ஏனெனில் இக்கட்சிகள் அனைத்திலும் இந்திய அரசு அதிகாரம் எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்களின் கையில் உள்ளது என்ற வரையறையில் அடிப்படையான வேறுபாடு என்பது எதுவும் கிடையாது.
குழு முரண்பாடே பிளவுக்குக் காரணம்
இந்த அனைத்துக் கட்சிகளுமே பெரிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கைகளிலேயே ஆட்சி அதிகாரம் உள்ளது என்று நம்பக்கூடியவை. மேலும் இக்கட்சிகள் அனைத்தின் திட்டத்திலுமே நிலச் சீர்திருத்தம் ஒரு மிகமுக்கிய கோரிக்கையாகவும் அது நாட்டின் பிரச்னைகளுக்கு ஒரு அடிப்படையான தீர்வாகவும் முன்வைக்கப்படுகிறது.
இந்த அடிப்படையான ஒற்றுமையை மனதிற்கொண்டு பார்த்தால் இக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுவதே சரியானதாகவும் பொருத்தமுடையதாகவும் இருக்கும். ஆனாலும் அவை இத்தனை பிரிவுகளாகப் பிரிந்துள்ளது ஒரே ஒரு காரணத்தால் தான். அதாவது அவற்றின் பிளவு அடிப்படை அரசியல் வழியிலோ அதுபோன்ற கோட்பாடு ரீதியான விசயங்களிலோ நடைபெறவில்லை. குழு முரண்பாட்டின் காரணத்தால்தான் இந்தப் பிளவு நிகழ்ந்துள்ளது.
இக்கட்சிகள் அனைத்தின் வழிமுறையிலும் தேசிய முதலாளிகள் ஏதாவது ஒரு வகையில் நேச சக்திகளாக முன் வைக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் நடைமுறையில் நடத்தும் போராட்டங்கள் எதிலும் அந்த தேசிய முதலாளிகளாகிய நேசசக்தி ஒருபோதும் கலந்து கொண்டதில்லை.