இந்த 62- வது குடியரசு தினத்தினை நாம் கொண்டாடா விட்டாலும் நம்மை ஆளும் வர்க்கமும் அவர்களின் ஊதுகுழலான ஊடகங்களும் கொண்டாடும் வேலையில் அதை முன்னிட்டு நமது தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினமாக ஜனவரி 25ம் நாளை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதை ஒட்டி கடந்த ஆறு மாத காலமாகவே தேர்தல் ஆணையம் "கண்ணியமான தேர்தல்" ,” ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது எப்படி", "வன்முறை அற்ற தேர்தல்களை நடத்துவது நமது கடமை" ,” ஓட்டப்பளிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு" என்று அரசு சார அமைப்புகளோடு இணைந்து கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. அத்தோடு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக நேர்மையான ஆணையர்களை நியமித்து தேர்தல் குறித்து ஒரு நல்ல கண்ணோட்டத்தை கொண்டு வர அயராது பல நிகழ்சிகளை நடத்தி உள்ளது. அதன் இறுதி வடிவமாக ஜனவரி 25 வது நாளை தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து உள்ளது. இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. ஆனால் இது போல வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் எந்த பிரச்சாரத்தையும் செய்ததில்லை, முதன் முதலில் ஏன் இவ்வாறு தேர்தல் ஆணையம் செய்கின்றது என்றால் தேர்தலை நேர்மையான முறையில் நடத்தி இந்தியாவின் புகழை நிலை நாட்ட வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம்.
மக்களிடம் அருகி வரும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மேல் உள்ள நம்பிக்கை
தேர்தல், மக்களாட்சி ஆகிய கருத்துக்கள் பார்ப்பதற்கு அழகானதாகவும் நடைமுறையில் அவை எல் முனையளவும் மக்களுக்கு நன்மை பயப்பதாக இல்லை என்பதுவே இங்கு நிலவும் நிதர்சனமான உண்மை ஆகும். இந்த அரசும் , அதை ஆளும் வர்க்கங்களும் சாதாரண மக்களை எந்த அளவிற்கு சுரண்ட முடியுமோ அந்த அளவிற்கு சுரண்டி தங்களை வளப்படுத்தி கொண்டுள்ளன. பல பெரிய நிறுவனங்கள் இந்த மண்ணில் உள்ள இயற்கை வளங்கள், நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் உழைப்பு, என அனைத்தையும் தங்கு தடையின்றி சுரண்டி தங்களின் லாபத்தை பெருக்கிக்கொண்டே போகின்றன. ஆனால் சாதாரண மனிதர்கள் அடுத்த வேலை சோற்றுக்கும் நாதியற்று தெருவில் நிற்கின்றனர். இது தான் இந்த அறுபதாண்டு கால ஜனநாயகம் நிகழ்த்திய கூத்து. இதில் எங்கிருந்து மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை பிறக்கும் இந்த அரசின் நிர்வாகம், காவல் துறையில் தான் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை, நீதிதுறையிலாவது அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நாம் பார்த்தோமானால் அங்கும் பணம் படைத்தவனுக்கும் அதிகாரங்களை கையில் வைத்துள்ளவனுக்கும் சாதகமாகத்தான் இருக்கின்றன. இவ்வாறு ஒட்டுமொத்தமாக இந்த அமைப்பு முறையே சாதாரன மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காத போது எப்படி இந்த அமைப்பு முறையை தாங்கள் ஒட்டு போட்டு மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று மக்கள் நம்புவார்கள்.
அரசை தீர்மானிப்பது அரசியல்வாதிகளே, மக்கள் அல்ல
இன்றுள்ள அரசு நடைமுறையில் அடுத்த அரசை தீர்மானிப்பது அரசியல் வாதிகளே ஆவார்கள், மக்கள் அல்ல. இந்த வாக்கு சீட்டில் உள்ள எதாவது ஒருவருக்கு தான் நம்மால் வாக்களிக்க முடியும் . ‘எரிகிற கொல்லியில் எந்த கொல்லி நல்ல கொல்லி’ என்று தேர்வு செய்வதை போன்றது தான் இது ஆகும். இன்று வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது தனிநபருக்கு உள்ள செல்வாக்கும் அவரின் பணபலமுமே ஆகுமே அல்லாமல் வேறென்ன. அதுவும் இன்று ஒரு வாக்குக்கு ரூபாய்.3,000/- வரை கொடுக்க எந்த அரசியல் வாதி முன்வருகிராரோ அவர் தான் வெற்றி வேட்பாளராக இருப்பார் என்பதில் ஐயமில்லை.
சந்தை வாய்ப்புள்ள நல்ல வியாபாரம் - அரசியல்
இன்று யாரிடம் பணம் அதிகமாக புழங்குகிறது என்றால் அரசியல்வாதிகளிடம் தான் அதிகம் என்பது யாருக்கும் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இன்று அரசியல் என்பது அப்பட்டமாக லாபம் தரக்கூடிய தொழிலாக மாறிவிட்டது, எந்த திறமையும் இல்லாமல் எதாவது ஒரு கட்சியில் இணைந்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்க அதிகாரிகளோடு கூட்டு சேர்ந்து ஒரு பகல் கொள்ளை கூட்டத்தினரின் கூடாரமாக இன்று அரசியல் காட்சி தருகிறது . தேர்தல் என்பது ஒரு அப்பட்டமான முதலீடாக மாறிவிட்டது முன்பெல்லாம் அடி தடிகள் , கள்ள ஒட்டு போடுவது என்பது தான் பிரதானமாக இருந்தது இன்று வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதன் மூலம் வாக்காளர்களையும் அவர்களின் ஊழலில் பங்குதாரர்களாக்கி அவர்களின் தார்மீக போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் வேலையை ஆளும் அரசுகள் தெளிவாக செய்து வருகின்றன .
சென்ற பாராளுமன்ற தேர்தலில் கற்ற அரசியல் பாடம்
சென்ற பாரளுமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட முடிவு என்னவென்றால் அ.தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையாக வெல்லும் என்பதே ஆகும். ஆனால் நடைமுறையில் நடந்தது என்ன தி.மு.க. கூட்டணி பணத்தை இறக்கி அனைத்து வாக்காளர்களுக்கும் தங்கு தடையின்றி கொடுத்து எளிதில் பெரும்பான்மையாக வென்று விட்டது. ஜனநாயகத்தில் கொஞ்சம் மிச்சமிருக்கும் நம்பிக்கையும் இது சிதைத்து தரைமட்டமாகி விட்டது. இனி வரும் தேர்தல்கள் அனைத்தும் இது போலவே அல்லது இதை விட அதிகமான அளவிற்கு வன்முறைகளும், பணப்பரிவர்த்தனைகளும், என்னவெல்லாம் சாத்தியமோ அனைத்து அராஜகங்களையும் அரங்கேற்றும் களமாக தான் தேர்தல் இருக்கும். இந்த நிலையில் மக்களின் சிந்தனையும் செயல்பாடுகளும் கண்டிப்பாக தேர்தல் ஜனநாயகத்தில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் வேறு மாற்று தேடும் நோக்கத்தில் இருப்பதால் தேர்தல் ஆணையம் இதை ‘மக்கள் குடியரசு’ என்றும் தேர்தல் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசின் இந்த செயல் கண்டிப்பாக மக்களிடம் எந்த மாற்றத்தையும் நம்பிக்கையும் விளைவிக்காது என்பதே நடைமுறையில் உள்ள உண்மையாகும் . ஜெயலலிதாவும் , கருணாநிதியும் மாறி மாறி ஆட்சி செய்து தங்களை வளப்படுத்தி கொண்டார்களே அல்லாமல் தமிழக மக்கள் அனைவரும் எந்த வளமும் இல்லாமல் வறுமையில் தான் வாடிக்கொண்டிருக்கின்றனர்.
புண்ணுக்கு புனுகு பூசும் வேலை
காங்கிரஸ் அரசு 60 ஆண்டுகளுக்கு மேலாக பதவி சுகத்தை அனுபவித்து கொண்டு இருப்பதோடு மேலும் அது நிலை பெற்று எந்த சிக்கலும் இல்லாமல் இந்த பொம்மை ஜனநாயகத்தை காப்பற்றிக்கொள்ள செய்யும் அலங்கார வேலை களில் முக்கியமான வேலையாக தேர்தல் ஆணையத்தை நேர்மையான அமைப்பாக காட்டும் தந்திரத்தை தெளிவாக செய்து வருகிறது .தேர்தல் ஆணையம் தன்னை ஒரு அப்பழுக்கற்ற மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பாக காட்டி கொள்வதும் அரசியல் வாதிகளை விமர்சனம் செய்வதன் மூலம் தான் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல, நாங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் சிறப்பு அதிகாரம் பெற்றவர்கள் என்றும் பிரசாரம் செய்கிறது . அனால் நடைமுறையில் அது அரசையும், அரசின் அமைப்புகளையும் சார்ந்து இயங்கும் ஒரு அமைப்பே ஆகும். அது இந்த ஊழல் அரசுகளின் ஒரு அங்கமே ஆகும். இங்கு தேர்தல் என்பதே அப்பட்டமான ஒரு மோசடியாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறைக்க புண்ணுக்கு புனுகு பூசும் வேலையை கட்சிதமாக செய்து கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சி தான் இந்த ‘தேசிய வாக்களர் தினத்தை’ அறிவித்ததன் நோக்கமாகும். என்ன தான் மாயாஜாலங்களை தேர்தல் ஆணையம் நிகழ்த்தினாலும் இந்த ஊழல்வாதிகளின் அரசியலை தேர்தல் ஆணையம் நியாயப்படுத்த முடியாது என்பதே இங்குள்ள நிதர்சன உண்மை ஆகும்.
என்ன தான் தீர்வு
பறந்து பட்ட பாட்டாளி வர்க்கம் இந்தியா முழுவதும் ஓன்று சேராமல் பிளவு பட்டு கிடக்கிறது. அந்த பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைத்து பாட்டாளிகளுக்கான சோஷலிச அரசை நிறுவுவது ஒன்றே இங்கு நிலவும் அனைத்து வெளிப்படையான அநீதிகளுக்கும் தீர்வாக அமையுமே அல்லாமல் மாயாஜால தேர்தல்கள் இந்த ஏழை மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது .
இந்த கட்டுரை keetru .com வெளியானது
இந்த கட்டுரை keetru .com வெளியானது
அருமை நண்பா
பதிலளிநீக்கு