சமூக நெருக்கடிகள் கிளர்ச்சிகளை உருவாக்கும் சரியான இலக்கை நோக்கியவையாக அவை ஆக அமைப்பு அவசியம்
மதவாதத்தில் மூழ்கி பல வகை பின்தங்கிய போக்குகளின் நிலைக்களனாக விளங்கியதும் உலக நாடுகளின் வளர்ச்சியோடு இணைந்து செல்லாமல் தனித்து விடப்பட்ட தீவுகள் போல் சமூக பொருளாதார கலாச்சார நிலைகளில் பெரும்பான்மை மக்களை வைத்திருந்தவையுமான பல மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்க நாடுகளில் சமீபத்தில் தோன்றி தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜாஸ்மின் புரட்சி என்ற பெயரிலான மக்கள் எழுச்சி சமீபகால வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்நாடுகள் அனைத்திலும் மன்னராட்சி அல்லது ராணுவ ஆட்சிகளே இருந்தன. இந்நாடுகளின் ஒட்டுமொத்த மக்கட்தொகை 33.3 கோடி. அதில் 32.5 கோடி மக்கள் வாழும் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட ஆட்சி இல்லை. அந்நாடுகளின் மிக முக்கிய இயற்கை வளம் எண்ணெய் ஆகும்.
அதனை அந்நாடுகளில் ஆளும் வர்க்கக் குழுமங்கள் தங்களுடையதாக்கி அதன் மூலம் வரும் வருவாய்களை அபகரித்து வைத்துக் கொண்டு அந்நாட்டு மக்களுக்கு ஒருசில சலுகைகளை மட்டும் வழங்கிவிட்டு மீதமுள்ள மிக அதிக வருவாயைத் தங்களது ஆடம்பர வாழ்க்கைக்கும் அந்நிய நாடுகளில் முதலீடுகள் செய்து தங்களது குடும்பத்தினரின் எதிர்காலத்திற்கும் என ஏற்பாடு செய்து செயல்பட்டு வந்தன.ஆட்சியாளர்கள் அவர்களுடைய இத்தகைய எதேச்சதிகாரச் சுரண்டலுக்குச் சாதகமாகக் காலாவதியாகிப் போன மதவாதச் சட்டங்களைப் பயன்படுத்தி வந்தனர். சாதாரண மக்கள் கல்வியின் மூலம் பொதுஅறிவு பெறுவதைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்தி வந்தனர். ஏனெனில் பொதுஅறிவு பெற்றவர்களாக நாட்டு மக்கள் ஆகிவிட்டால் கேள்வி கேட்பாரற்ற சுரண்டலை அவர்களால் நடத்த முடியாதல்லவா? அதற்காகவே அவ்வாறு செய்தனர்.
எதிர்மறை நிலை
ஆனால் பரந்துபட்ட மக்கள் மத்தியில் நிலவிய இந்தப் பின்தங்கிய சமூகச் சூழ்நிலைகளுக்கு எவ்வகையிலும் ஒத்துப் போகாத விதத்திலான ஒருவகை நவீன வளர்ச்சி அந்நாடுகளில் எண்ணெய் வளத்தைக் கொண்டு நிலை நாட்டப்பட்டது. அதாவது வெளிப்படையாகப் பார்க்கும் போது கண்ணுக்கு பளிச்செனப்படும் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த நவீன வளர்ச்சியும் ஆனால் மக்களது கருத்துக்கள் கண்ணோட்டங்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் மிகவும் பின்தங்கிய நிலையும் என்று ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாத ஒரு வினோத நிலை அந்நாடுகளில் நிலவியது.
இஸ்ரேலின் ஏவல் அரசு
அந்நாடுகளில் ஈரான், ஈராக் மற்றும் லிபியா இந்த 3 நாடுகளின் ஆட்சியாளர்களைத் தவிர பிற அனைத்து ஆட்சியாளரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நாடுகளின் எண்ணெய் வளத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் செயற்கையாக யூதர்களுக்கான நாடு என்ற பெயரில் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்கி அந்நாட்டிற்கு அனைத்து வகைப் பொருளாதார ராணுவ உதவிகளையும் செய்து, நவீனரக ஆயுதங்களை வழங்கி தனது நலன்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் ஒரு ஏவல் அரசாக அதனைச் செயல்பட வைத்தது. செயற்கையாக அந்நாட்டை உருவாக்கியதால் பல லட்சக் கணக்கான அப்பகுதிகளில் ஏற்கனவே வாழ்ந்து வந்த பாலஸ்தீனியர்களை இடம் பெயர்க்க வேண்டி வந்தது.
மேலும் படிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக