சனி, 30 ஜூலை, 2011

ஊழல் நீதிபதி தினகரன் பதவி விலகல் : நீதித்துறையில் அங்கமாகிவிட்ட ஊழல்


 சமூகமெங்கும் ஊழல் , லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, சந்தர்ப்பம் கிடைக்கும் இடம் எல்லாம் ஊழல் புகுந்து விளையாடுகிறது. தட்டி கேட்பதற்கு யாரும் இல்லை என்பதால் தான் அனைத்தும் ஊழல் மயமாக இருக்கிறது. ஆளும் மன்மோகன் அரசு ஊழலின் உற்றுக்கண்ணாக காட்சியளிக்கிறது, ஸ்பெக்ட்ரம் ஊழல் , காமன்வெல்த் ஊழல் , எடியுரப்பா மற்றும் ரெட்டிகளின் சுரங்க ஊழல் , ஆதர்ஷ் ஊழல், தமிழகத்தில் நில அபகரிப்பு என்று தினம் தினம் ஊழல் செய்திகளே வலம் வந்து கொண்டுள்ளன. நிர்வாகமும், அரசியலும் இப்படி இருக்க உழைக்கும் மக்களின் கடைசி புகலிடமான நீதித்துறையோ  அதை விட படு மோசமாக இருக்கிறது. 

வெள்ளி, 29 ஜூலை, 2011

ஏ.ஐ.டி.யு.சி. - யின் தொழிலாளர் துரோகம்

கடந்த மாதத்தில் குர்கவுன் மாருதி தொழிற்சாலையில் புதிய தொழிற்சங்கம் அமைத்ததற்காக சில தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கியது மாருதி கார் நிறுவனம். இதனால் அங்கு பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்து கொள்ள கோரியும் ,புதிய தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் வெற்றிகரமாக, ஒற்றுமையோடு நடத்தினார்கள். இந்த வேலை நிறுத்தம் குர்கவுன் பகுதி முழுவதும் பரவி மற்ற தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அங்குள்ள பொதுமக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

வியாழன், 28 ஜூலை, 2011

தொழிலாளர்கள் தங்களை மாற்றி கொள்ளாமல் இந்த உலகை மாற்ற முடியாது.

ஆளும் முதலாளி வர்க்கம் பல்வேறு கலாச்சார சீர்கேடுகளை தொழிலாளர்கள் மேல் திணித்துள்ளது. அதில் ஊறிப்  போயுள்ள தொழிலாளி வர்க்கம் அனைத்து நல்ல குனம்சங்களையும் இழந்து சந்தர்ப்ப வாதம் மற்றும்  சுயநலத்தின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறது. இதைதான் மாமேதை மார்க்ஸ் அன்றே 'தொழிலாளர்கள்  தங்களை முதலில் மாற்றிக்கொள்ளாமல் இந்த சமூக அமைப்பை மாற்ற முடியாது ' என்பதை  தீர்க்கத்தரிசனமாக  சொன்னார். தொழிலாளர்களிடையே இருக்கும் இந்த   சீரழிந்த கலாச்சாரத்தை மாற்ற இடதுசாரிகள் போராட வேண்டும்.

வியாழன், 21 ஜூலை, 2011

சமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் ஆளும் வர்க்கச் சதி

கல்வி அறிவுக்காக என்ற முழக்கத்தை முன்வைத்து அனைவரையும் கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியின் அமுலாக்கத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து அதற்கு எதிராக எழும் குரல்கள் பெரும்பாலும் இடதுசாரி, அதிதீவிர இடதுசாரி என்று அறியப்படும் அணிகளிடமிருந்தே வருகின்றன.

தற்போதைய தமிழக அரசின் அந்நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ.) சி.பி.ஐ(எம்). கட்சியின் மாணவர் அமைப்பாகும். சி.பி.ஐ(எம்). கட்சி இன்றுவரை தமிழகத்தைத் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க-வுடன் உறவு வைத்துக் கொண்டுள்ள கட்சி.

கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும் ஜுலியன் அசான்ஜ்

அடக்குமுறைகள், தாக்குதல்கள், பொய் வழக்குகள் அனைத்தையும் எதிர்கொண்டு கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும் ஜுலியன் அசான்ஜ்

ஜனநாயக அமைப்பில் அதாவது முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் பத்திரிக்கைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகின்றன. மனித குலத்தின் வளர்ச்சிப் போக்கில் தோன்றிய சமூக அமைப்புகள் அனைத்திற்கும் சில அடிப்படை முழக்கங்கள் இருந்தன. நிலவுடமை அமைப்பில் ஆண்டவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற முழக்கம் இருந்தது.

அரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தாத சமச்சீர் கல்வியால் சமச்சீர் வருமா?

அரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தையும் அரசுப்பள்ளி ஆசிரியரின் கற்பிக்கும் திறனையும் மேம்படுத்தாமல் கல்வியின் மேம்பாடு குறித்துப் பேசுவது ஏமாற்று வேலையே இந்த ஆண்டு அமல் செய்யப்படவிருந்த சமச்சீர் கல்விக் கொள்கை பதவிக்கு வந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள் நிபுணர்கள் பல்வேறு பார்ப்பனிய எதிர்ப்பு இடதுசாரி அமைப்புகள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் இவைதவிர சி.பி.ஐ(எம்). கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் இவை அனைத்தும் இவ்வாறு சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பல்வேறு விதங்களில் விமர்சிக்கின்றன.

மாறிவரும் இந்திய வெளிநாட்டுக் கொள்கையும் மாறாத இந்திய இடதுசாரிகளின் பார்வையும்

உலகம் முழுவதிலும் உள்ள ஏறக்குறைய 60 நாடுகளில் ஆட்சியாளர்களின் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் செயல்பாடுகள், போக்குகள் விக்கிலீக்கின் கேபிள் கசிவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளன.

அமெரிக்கா பல நாடுகளின் வி­ஷயங்களில் உள்நோக்குடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதும் விக்கிலீக் மூலம் அம்பலப்பட்டுள்ளது.

உள்ளொன்றும் புறமொன்றும்

ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்றதும், தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான ஜனநாயகத்திற்கான கிளர்ச்சிகளை வெளிப்படையாக ஆதரிப்பது போல் அறிவிப்புகளை அமெரிக்கா வெளியிட்டாலும் அதன் உள்நோக்கம் எவ்வாறு உண்மையான ஜனநாயகம் அந்நாடுகளில் மலர்வதற்கு எதிராக இருக்கிறது என்பதில் தொடங்கி எவ்வாறு அமெரிக்காவின் அதிகார வர்க்க நிர்வாக, ராணுவக் கூட்டு சுதந்திரமானவை என்று கருதப்படும் அந்நாட்டின் பத்திரிக்கைகளையும் வளைத்துப் போட்டுப் பல உண்மைகளை வெளிவரவிடாமல் நாசூக்காகத் தடுக்கிறது என்பது வரை பல விஷ‌யங்கள் கேபிள் கசிவுகள் மூலமும் ஜீலியன் அசான்ஜ்-ன் பல்வேறு நேர்காணல்களின் மூலமும் அம்பலமாகிக் கொண்டுள்ளன.

அறிவைப் பரப்ப வேண்டிய ஆசிரியர்கள் அறிவிற்கே முட்டுக்கட்டை ஆகலாமா?

அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைப் பொறுப்புள்ள பெற்றோர் சேர்க்கத் தயங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் அங்கு ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை என்பதே. இன்றைய உலகமயப் பின்னணியில் ஆங்கில அறிவு வேலைச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. அதனைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களாக அப்பள்ளி மாணவர்கள் இருப்பதால் அவர்கள் மேல் படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கியவர்களாக ஆகிவிடுகின்றனர்.நமது ஆசிரியர் சமூகம் பொறுப்புள்ளதாக இருந்தால் மாணவரின் இந்தப் போதாமையைக் கருத்திற் கொண்டு அவர்களது ஆங்கில அறிவை மேம்படுத்தக் கூடுதல் சிரத்தை எடுத்துக் கற்பிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆனால் இங்கோ ஆசிரியர் எனும் குதிரைகள் கீழே தள்ளுவது மட்டுமல்ல: அவை குழியும் பறிக்கின்றன.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது மக்கள் மற்றும் கல்வியின் பால் அக்கறை கொண்ட பலரது முன் முயற்சியினால் ஆங்கில வழியில் கற்பிக்கும் பிரிவொன்று 6‡வது வகுப்பில் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று முதன்முதலில் ஆங்கில வழியல் சேர்ந்த மாணவர்கள் +2 வகுப்புவரை வந்துவிட்டனர். எனவே +2 வகுப்பிலும் ஆங்கிலப் பிரிவு ஒன்றைத் தொடங்க வேண்டிய கட்டாயம் பள்ளிக்கு ஏற்பட்டது.

மேலும் படிக்க

ஆசிரியர் சமூகம் அன்றும் இன்றும்

70-களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரியின் ஆங்கில இலக்கியத் துறையினால் அப்போது நடத்தப்பட்டு வந்த வாய்ஸ் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் என்ற இதழில் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஒருவர் அவரிடம் பயிலும் ஒரு மாணவன் குறித்துக் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். பொதுவாக ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் பேசுவதற்கு நிறைய இருக்கும். ஆனால் அப்போது மாணவர் குறித்த உயர்வான வி­யங்களையும் ஆசிரியர் தயக்கமின்றிப் பேசுவர் என்ற நிலையும் இருந்தது. இது அக்கல்லூரியில் கல்வி ஒரு வாழ்க்கையாக இருந்ததைப் பறைசாற்றியது.

மேலும் படிக்க

வானம்: சகஜமாகிவிட்ட சமூக அபத்தங்களின் படப்பிடிப்பு

“பொய் சொல்றது ஈஸி, உண்மைய சொல்றது தான் கஷ்டம்”

“இந்த உலகத்தில் இரண்டே ஜாதிதான் உண்டு. ஒன்னு பணக்கார ஜாதி இன்னொன்னு ஏழை ஜாதி”

“இங்க யாரு போலீஸ் யாரு திருடன்னே தெரியல”

இதுபோன்ற வசனங்கள் எங்கும் எவரிடமும் எடுபடும். ஏனெனில் இவை இன்று நிலவும் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை.

இந்த சமூகத்தில் தன்னிடமுள்ள திறமைகளை வியாபாரப் பொருளாக்கத் தெரிந்தவன் தான் வாழத் தெரிந்தவன். அவன் தான் வாழ முடிந்தவனாகவும் இருப்பான். வியாபாரம் ஒரு விரும்பத்தகுந்த தொழிலல்ல. அதனைத் திறமையாகச் செய்ய நிறையப் பொய் பேசியாக வேண்டும்.உண்மையை மட்டுமே பேசவும் உண்மையாக வாழவும் விரும்புபவர் எவரும் வியாபாரி ஆக முடியாது. அவர் வியாபாரத்தில் தோற்றுப் போய்விடுவார்.

மார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்

நாகர்கோவில்
மார்க்சிய சிந்தனை மையத்தின் கம்யூனிஸ்ட் அறிக்கை மீதான மாதம் ஒன்று என்ற அடிப்படையில் 3 முறை நடந்த பின் விவாதங்களின் சாரம்சத்தைத் தொகுத்து வழங்கும் 4-வதுகட்ட விவாதக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கடந்த ஜீன் 19-ம் நாள் நடைபெற்றது.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் சாரம்சத்தையும் அதன் இன்றைய பொருத்தத்தையும் தொகுத்து வழங்கும் பொறுப்பினை முற்போக்கு எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் சிறப்புற ஆற்றினார்.
இன்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் கருத்துக்கள் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு வழிகாட்டும் தன்மையைக் கொண்டவையாக எவ்வாறு உள்ளன என்பதை விளக்கும் சீரிய உரை ஒன்றினை அவர் முன்வைத்தார்.

சட்டங்கள் மட்டுமே ஊழலைத் தடுத்து விடாது

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்

இந்திய அரசியல் அரங்கில் சமீப காலத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கப் போக்கு முழுவீச்சுடன் தலைதூக்கி வருகிறது. இந்த இயக்கப் போக்கினைத் தொடங்கி வைத்தது கம்யூனிஸ்ட் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சிகளோ அல்லது பிரதான எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யோ அல்ல.

சமூக ஊழியர் அன்னா ஹசாரே இதனைத் தொடக்கி வைத்தார். அவர் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் தொடங்கிய போது அவருடன் பிரசாந்த் பூசன், சாந்தி பூசன் போன்ற வழக்கறிஞர்களும், மேத்தா பட்கர் போன்ற சமூக இயக்கங்கள் கட்ட முனைவோரும், கிரண்பேடி போன்ற ஓய்வு பெற்ற அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவரும் பங்கேற்றனர். அவர்களோடு ஏராளமான படித்த இளைஞர்கள், மத்தியதர வர்க்கத்தினர், பல மட்டங்களிலான சமூக ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு காரணம் என்ன?

தொழிலாளர் இயக்கமும் சோசலிசமும் இல்லாமற் போயிருப்பதே தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எல்லாம் காரணம் -மேதினக் கூட்டத்தில் தோழர் ஆனந்தன் உரை சி.டபிள்யு.பி., உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் ஆகிய அமைப்புகளின் சார்பாக இந்த ஆண்டின் மேதினம் திருத்தங்கல் ஐயப்பன் அரங்கத்தில் 22.05.2011 மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு கூட்டம் மூலமாகச் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமையேற்றார். உழைக்கும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளான தோழர்கள் தங்கராஜ் (பட்டாசு), செல்வராஜ் (அச்சகம்), சத்தியமூர்த்தி (அரசு ஊழியர்), பாரதி (அரசு ஊழியர்), ஆனந்த் ஜெயக்குமார் (பொதுத்துறை), த.சிவக்குமார் (மாற்றுக் கருத்து இதழ் ஆசிரியர்) ஆகியோரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சி.டபிள்யு.பி-ன் தென் இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் அ.ஆனந்தன் அதில் சிறப்புரை ஆற்றினார். தோழர்களின் உரைகள் தோழர் வரதராஜ் தனது தலைமை உரையில் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்றாகத் தற்போது ஆகியுள்ளது.

தமிழகத் தேர்தல் முடிவுகள்: உழைக்கும் வர்க்க அணிகளிடம் முன்னிறுத்தியுள்ள வாய்ப்புகள்

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்தல்களின் மூலமாக மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப் படுவதில்லை. மேலும் மக்கள் முழுமையான சுதந்திர மனநிலையுடன் அவர்களுடைய பிரச்னைகளை மனதில் வைத்து இந்த அமைப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதுமில்லை.

வெளிப்படையான அடக்குமுறை மூலம் அவர்களுடைய சிந்தனை சுதந்திரமானதாக இல்லாதவாறு ஆக்கப்படாவிட்டாலும் எழுத்து மற்றும் காட்சி ஊடகங்களால் அடிப்படைப் பிரச்னைகளாக இல்லாதவை பிரச்னைகளாக ஆக்கப்படுகின்றன. அனைத்து இல்லங்களிலும் மிகப் பெரும்பாலான சமயங்களில் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் மூலம் ஊடகங்களால் பரப்பப்படும் செய்திகளே மக்களின் மனதைப் பெருமளவு ஆக்கிரமித்து அவர்களது மனதில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவையாக உள்ளன.

அவர்களாகவே சிந்தித்து அவர்களின் பிரச்னைகள் சார்ந்த கருத்துக்களை வகுத்தெடுத்துக் கொள்ள மிகக் குறைந்த வாய்ப்பே இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு உள்ளது. அதனால் பணபலமும் ஆளும்வர்க்க ஆதரவும் கிட்டும் ஊடகங்களின் பின்பலமும் கொண்ட உடைமை வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் கட்சிகளில் ஏதாவதொன்றே ஆட்சிக்கு வரும் என்ற சூழ்நிலையே தற்போது பொதுவாக நிலவுகிறது.

திங்கள், 18 ஜூலை, 2011

தமிழக அரசுக்கு மாணவர்கள் கல்வி மீது அவ்வளவு அக்கறையா ?


இன்று( 18 .07 .2011 ) சென்னை உயர்நீதி மன்றம் சமசீர் கல்வித் திட்டத்தை 1 முதல் 10 வகுப்பு வரை இந்த கல்வி ஆண்டிலையே அமல்படுத்த வேண்டும் , அத்தோடு இந்த மாதம் 22 தேதிக்குள் பாடநூல்களை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகள் துவங்கி இரண்டு மாதங்களாக மாணவர்கள் பாடப்புத்தகத்தையே தொடாமல் உள்ளனர். தமிழக அரசோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக முடிவு செய்துள்ளது .  

ஞாயிறு, 17 ஜூலை, 2011

நாகர்கோவில் : மார்க்சிய சிந்தனை மையம் - இயக்கவியல் பொருள்முதல்வாதம்

17 .07 .2011 அன்று நாகர்கோவில் , தக்கலை லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையம் நடத்தும் 5 வது படிப்பு நடைபெற்றது. கடந்த நான்கு வாரங்களாக மூத்த எழுத்தாளர் தோழர் .பொன்னீலன் அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முழுவதுமாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மூத்த தொழிற்சங்கவாதியும் , கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்மின் தென்மாநிலங்களுக்கான பொது செயலாளருமான தோழர்.ஆனந்தன் அவர்கள் இந்த வகுப்பை நடத்தினார்.

சினிமா வியாபாரத்திற்காக 27 மாவட்ட கிராம மக்களை ஏமாற்றிய கந்தசாமி பட தயாரிப்பாளர் தாணு ,இயக்குனர் சுசி கணேசன்


கந்தசாமி படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அந்த பட பாடல்கள் வெளியீட்டு விழவை ஒட்டி 27 மாவட்டங்களுக்கு ஒரு கிராமம் வீதம் தத்தெடுத்தனர். அந்த கிராமத்தையே மாதிரி கிராமமாக மாற்றுவோம் என்று கூறிய இயக்குனர் சுசி கணேசன் , மற்றும் ,தயாரிப்பாளர் தாணு கந்தசாமி பட பாடல்கள் வெளியீட்டுவிழாவிற்கு 17 .05 .2009 அன்று அனைத்து கிராமத்தினரையும் சென்னைக்கு வரசொன்னார்கள். 

கம்யூனிஸ்டுகளா? தேசபக்தர்களா? வினவு தோழர்களிடமிருந்து பதில் கிடைக்குமா?

வினவு தளத்தில் அம்பானியின் பிரம்மாண்ட ஊழல்! என்ற வினவின் கட்டுரை படித்தேன். அதில் இருந்த சில கருத்துக்கள் வினவு தோழர்கள் கம்யூனிஸ்டுகளா? தேசபக்தர்களா? என்ற சந்தேகத்தை எழுப்பியது.  வினவு தளத்தில் வாசகர்களின் விவாதங்களுடன் வினவு தோழர்களின் அதிகாரப்பூர்வமான பதில்களும் அடிக்கடி பார்த்துள்ளதால் என் சந்தேகத்திற்கும் வினவு தோழர்களின் அதிகாரப்பூர்வமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்து July 3, 2011 at 11:26 pm அன்று பின்வரும் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ஆனால் இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் வினவு தளத்தில் பல புதிய கட்டுரைகள் வந்துவிட்டதில் இக்கட்டுரை பின்னுக்குப் போய் வாசகர்களின் விவாதமும் நின்று விட்டது. எனவே வினவு தோழர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக இங்கே அக்கேள்வியைப் பதிவிடுகிறேன்.

சனி, 16 ஜூலை, 2011

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியும், அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திறனும் தீரா நெருக்கடி கொண்ட முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகளே!

       
  இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக குஜராத் விளங்கி வருகிறது. நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசு ஒரு சிறந்த நிர்வாகத்திறன் வாய்ந்த அரசாக பொதுவாக எல்லோராலும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினராலும் பார்க்கப்படுகிறது. இதேபோன்றதொரு அரசு நிர்வாகத்தை ஏன் நமது மாநில அரசுகளால் மேற்கொள்ள முடிவதில்லை என்ற எதிர்பார்ப்பு இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களிடமும் நிலவுகிறது. ஏன் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வரும்கூட குஜராத் போன்றதொரு தொழில் வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்டுவேன் என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார். ஒரு சமயத்தில் தீவிர மதவெறியாளனாக பார்க்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படுகிறார்.

திங்கள், 11 ஜூலை, 2011

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் மனுக் கொடுக்கும் இயக்கம்:

மனுக் கொடுத்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பு

இ.எம்.ஆர்.ஐ. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (இணைப்பு சி.ஓ.ஐ.டி.யு.) சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கும் இயக்கம் உற்சாகத்துடன் இன்று தொடங்கியது. மதுரை, தேனி, விருதுநகர், கோயமுத்தூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிப்டில் இல்லாத தொழிலாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் குறை தீர்க்கும் நாளாகிய இன்று மனுக்கள் வழங்கினர்.

புதன், 6 ஜூலை, 2011

பொது நூலகத்துறையில் நடந்த ஊழல்களை வெளிக்கொண்டுவந்த அறிவரசு பாண்டியன்


அரசுப்பள்ளி  என்பது மாணவர்களுக்கு ஆரோக்கியமான அறிவையும் ஊட்டக்கூடியதாக இன்று இல்லை. இந்த சூழ்நிலையில் பொதுநூலகங்களே மாணவர்களுக்கான அறிவு வாசலை திறந்து வைப்பவையாக உள்ளன. அதுவும் தினமும் வரும் நாளிதழ்கள் , வார இதழ்கள் தவிர நூலகங்களில் இருக்கும் பல நூல்களின் தரம் கேள்விக்குட்பட்டதே. 

செவ்வாய், 5 ஜூலை, 2011

நாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி !

நாகர்கோவில் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நிர்வாக அதிகாரிகளின்  தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை தடுக்க கோரி மனு அளித்தனர் ஆனால் நிர்வாகமோ பாபு என்ற தொழிலாளியை பணிநீக்கம் செய்தது. நியாயமாக மனு அளித்தவரின் மீது நடவடிக்கை எடுத்த நிர்வாகத்தை கண்டித்து 04 .07 .2011 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் மாவட்ட ஆட்சியரிடம் சென்று பாபுவை பணிக்கு சேர்த்து கொள்ளவேண்டும் என்று போராடினர். 

காட்டுமிராண்டி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்! ஏழைகளின் உயிர் என்ன அவ்வளவு மலிவா ?


சென்னை தீவுத்  திடல் அருகே உள்ள ராணுவ குடியிருப்பிற்கு  ஞாயிறு (03 .07 .2011 )  அன்று  பழம் பறிப்பதற்காக தீவு திடல் இந்திரா நகர்  குமார் - கலைவாணி தம்பதியின் இரண்டாவது மகனான 8 ம் வகுப்பு  படித்து வந்த தில்ஷான் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். சிறுவன் என்று பார்க்காமல் அதுவும் பட்டபகலில்  காஷ்மீர், வடகிழக்கு இந்தியாவில் கேட்பாரில்லாமல் மனித உயிரை வேட்டையாடும் ராணுவ உடைதரித்த காட்டுமிராண்டிகளில்  ஒருவன்  அந்த சிறுவனை  தலையில் சுட்டு கொன்றுள்ளான். தமிழக அரசோ சுட்டு கொன்ற அந்த ராணுவ வீரனை பிடிக்காமல் இந்த கொலைக்கு நடவடிக்கை எடுக்க போராடிய பாதிக்கப்பட்ட  மக்களை அடித்து விரட்டியுள்ளது.   அரசின் ராணுவமும், போலீஸும் உழைக்கும்  மக்களை இரண்டாம் கட்ட குடி மக்களாகவே நடத்துகிறது. இந்த கொடூரமான கொலைக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு , தமிழ்நாடு (LFSM ) கேட்டுக்கொள்கிறது.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

நாகர்கோவில் : ஜி.வி.கே. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் அடக்குமுறை

கன்னியாகுமரி மாவட்ட 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் காட்டுமிராண்டிதனமான  அடக்குமுறையை  கண்டித்தும் , முறைகேடாக செயல்பட்டு அரசின் பணத்தை மோசடி செய்யும் கன்னியாகுமரி மாவட்ட 108 இன் செயல் அலுவலர் சரவணன் , வாகன பராமரிப்பாளர் சீனிவாசன் , மண்டலமேலாளர் மாசிலாமணி ஆகியோர் மனித தன்மையே சிறிதும் இல்லாமல் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவி விடுகின்றனர். இவ்வாறு அரசின் பணத்தில் கொட்டமடிக்கும் இந்த அதிகாரிகளிடம் இருந்து மாற்றி  மாவட்ட சுகாதார துறையின் கீழ் 108 ஆம்புலன்ஸ்  இன் நிர்வாகத்தை கொண்டுவரும்படியும், மேலும்... 

வெள்ளி, 1 ஜூலை, 2011

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ராஜா அண்ணாமலை மன்றத்தில் கருத்தரங்கம்

பெட்ரோல் , டீசல் , சமையல்  எரிவாயு  ஆகியவற்றின் வரலாறு காணாத விலையுயர்வு உழைக்கும் மக்களை கடுமையான பாதித்துள்ளது, இந்த விலை உயர்வை கண்டித்து கடந்த 23 .06 .2011  அன்று மெமோரியல் ஹாலில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களை  சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டார்கள் , தற்போது அதன் தொடர்ச்சியாக 02 .07 .2011   , சனிக்கிழமை , மாலை 4   மணிக்கு சென்னை, பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில்  இது தொடர்ப்பாக கருத்தரங்கத்தை நடத்துகிறது. அனைத்து தொழிலாளர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு COITU  மத்திய தொழிற் சங்கம் அழைப்பு விடுக்கிறது.

முகப்பு

புதிய பதிவுகள்