மத்திய அரசு தற்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது. பொதுவான மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் 2011-ம் ஆண்டிற்குள் முடிக்க உத்தேசித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் கடந்த கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்டது.
அதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் சமாஜ்வாதி மற்றும் ஆர்.ஜே.டி. கட்சியினர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் எந்தவொரு எதிர்க்கட்சியும் இதனை எதிர்க்க முன்வரவில்லை என்பதே. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி முதலில் இதனை ஆதரித்தது. அதற்கு அது முன்வைத்த வாதம் ஒவ்வொரு ஜாதியிலும் உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அதனால் ஜாதி ரீதியாக மக்களின் எண்ணிக்கை குறித்து உண்மையான நிலவரம் தெரிந்துவிடும். அது பலரது மிகைப்படுத்தப்பட்ட அவர்களது ஜாதியினர் எண்ணிக்கை குறித்த அறிவிப்புகளை அம்பலப்படுத்திவிடும் என்பதாகும். ஆனால் அதன் குருபீடம் ஆர்.எஸ்.எஸ். இதனை எதிர்த்தவுடன் இது குறித்து அக்கட்சியின் தலைவர்களுக்கு இரண்டாவது சிந்தனை ஏற்பட்டுவிட்டது.