வியாழன், 21 ஏப்ரல், 2011

கல்வி மற்றும் பயிற்று மொழி குறித்த சில கேள்விகள்


அறிவைப் பெறுவது உரிமையாக முடியுமே தவிர; அதனை அரைகுறையாகப் பெற விரும்புவது உரிமையாகாது


நமக்கு வழங்கப்படும் கல்வி குறித்தும் அது வழங்கப்பட வேண்டிய மொழி குறித்தும் பல விஞ்ஞானப் பூர்வமற்றக் கருத்துக்கள் குறிப்பாக இடதுசாரிகள் என்று தங்களை அறிவித்துக் கொள்பவர்களால் முன் வைக்கப் படுகின்றன. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு கல்விப் பிரச்னைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தீவிரக் கம்யூனிஸ்ட் கட்சி என்று தன்னை அறிவித்துக் கொள்ளக் கூடிய கட்சியின் ஒரு இளம் தலைவர் உரையாற்றுகையில் கம்யூனிஸ்ட்கள் என்று கூறிக் கொள்ளக் கூடிய சில அமைப்புகளே ஆங்கிலக் கல்வியை ஆதரிக்கின்றன என்று ஏதோ ஆங்கிலம் படிப்பதை ஆதரிப்பவர்கள் கம்யூனிஸ்ட்களாகவே இருக்க முடியாது என்பது போல் கருத்துத் தெரிவித்தார்.

வேறு பலரும் நாம் தற்போது பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய கல்வி பிராமணியக் கல்வி என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.
நாம் இந்த இதழின் பக்கங்களில் முன்பு லால்கர் குறித்து எழுதிய கட்டுரையில் மலைவாழ் மக்களுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வரவேற்றிருந்தோம். அதே வேளையில் அந்த பல்கலைக் கழகத்தில் பயிற்று மொழியாக சந்தால் மொழி இருக்க வேண்டும் என்ற கருத்தைச் சில அமைப்புகள் முன் வைத்ததை விமர்சித்திருந்தோம். அதற்கு விடை கூறும் விதத்தில் வந்த கருத்துக்களில் ஒன்று தாங்கள் எந்த மொழியில் கற்க வேண்டும் என்பது மக்களே முடிவு செய்து கொள்ள வேண்டிய வியம். அது அவர்களின் உரிமை. அதனை விமர்சிப்பதற்கு நமக்கு உரிமையில்லை என்பதாகும்.

எழும் கேள்விகள்

இந்த வியங்கள் நம்முன் எழுப்பும் கேள்விகள் அனைவருக்கும் கல்வி என்ற கண்ணோட்டம் உருவானதற்குப் பின்பு நாம் தற்போது பெறும் கல்வியிலும் இதற்கு முன்பு நமக்கு வழங்கப்பட்ட கல்வியிலும் இருக்கும், இருந்த போக்குகளை பிராமணியத்தோடு ஒப்பிட முடியுமா? உயர் கல்வியும் கூட தாய் மொழியில் தான் பெறப்பட வேண்டும் என்பது கட்டாயமா? இதில் உரிமை குறித்த கேள்வி எங்கிருந்து வந்தது? என்பவையாகும்.

உள்ளபடியே இந்தியா மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது வரை கற்பிக்கப்படும் அடிப்படைக் கல்வி எந்திரத் தொழில் உற்பத்தி முறையும் அதனை அறிமுகம் செய்த முதலாளித்துவமும் கொண்டு வந்த கல்வியாகும். அது முதலாளித்துவத் தாராளவாதக் கல்வியாகும். அதற்கு முன்பு உலகின் அனைத்து சமூகங்களிலும் எல்லோருக்கும் கல்வி என்பதே அமலில் இருக்கவில்லை. அனைவருக்கும் கல்வி என்பதற்கான அத்தியாவசியத் தேவையும் சமூகத்தில் அப்போது இருக்கவில்லை.

கல்வியும் சமூக அமைப்பும்

கல்வி என்பது நிலவும் சமூகச் சூழ்நிலைகளோடு தொடர்புடையது. அதாவது குறிப்பாகச் சமூக உற்பத்தி முறையோடு ஒன்றிணைந்தது. பழைய நிலஉடமை சமூக அமைப்பில் சமூகத்திற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வது என்பது மிகவும் எளியதாக இருந்தது. அதில் நிலவிய பொருளாதாரம் சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரம். விவசாயிகள் ஒரு வட்டாரத்தின் மக்கள் அனைவருக்குமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தனர். விவசாயிகளுக்கும் சேர்த்து மக்களுக்குத் தேவையான உடைத் தேவை, உழவடைக் கருவிகள் உற்பத்தியினை நெசவாளர், கொல்லர், தச்சர் போன்ற கைவினைஞர்கள் செய்தனர். அதாவது இன்றிருப்பது போல் தொழிலாளர் தங்களது கண்ணுக்குத் தெரியாத யாருக்காகவோ உற்பத்தி செய்யும் சரக்கு உற்பத்தி முறை அப்போது இல்லை.மன்னர்கள் குறுநில மன்னர்கள் போன்றவர்களுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை வியங்களிலேயே பெரும்பாலும் நாணயம் மூலமான பரிவர்த்தனை என்பது இருந்தது.
இத்தகைய உற்பத்தி முறையில் ஈடுபடுவதற்கு அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் கல்வி என்பது கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அனுபவ அறிவே இந்த உற்பத்தி முறையில் பெரும் பங்கினை ஆற்றியது. குறைந்தபட்சக் கணித மற்றும் எழுத்து அறிவைப் புகட்டுவதற்குத் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் இருந்தன. நாட்டை ஆட்சி செய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு உதவுவதற்காக இருந்த குருக்கள் போன்றவர்களுக்கு ஆட்சி நடத்தும் முறை சமூகத்தை நிர்வகிப்பதற்கு பின்பற்றப்பட வேண்டிய சட்டங்கள் நியதிகள் போர்களை நடத்தும் முறை ஆகியவற்றை கற்பிப்பதற்கு குருக்கள் இருந்தனர். அவர்கள் பிராமணர்களாகப் பெருமளவு இருந்திருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. இவை குறித்த வியங்களைக் கற்பிப்பதே அன்றைய கல்வியின் மையமாக இருந்தது. அந்தக் கல்வியும் அனைத்து மக்களுக்குமானதாக இல்லை.

எந்திரத் தொழில் உற்பத்தி முறையும் அனைவருக்கும் கல்வி என்ற கண்ணோட்டமும்

அதன் பின் எந்திரத் தொழில் உற்பத்திமுறை அறிமுகமான போது உற்பத்தி அத்தனை எளிமையானதாக இல்லை. உற்பத்தியில் ஈடுபடுவோருக்கும் எந்திரங்களைக் கையாளும் மற்றும் அவற்றை பழுதுபார்ப்போருக்கும் எந்திரங்கள் மற்றும் அவற்றின் இயங்கும் முறை குறித்த அறிவு தேவைப்பட்டது. ஏராளமான தொழிலாளர் ஒரு கூரையின் கீழ் வேலை செய்யும் நிலை உருவானதால் அவர்களுக்கு ஊதியம் வழங்க, வருகையைப் பதிவு செய்ய எனப் பல புதுவகைத் தேவைகள் ஏற்பட்டன. இத்தேவைகளை நிறைவேற்றுவதற்கு மக்களில் பலருக்கு கல்வியறிவு கொடுக்க வேண்டியது அவசியமாயிற்று. அந்தப் பின்னணியில் தான் அனைவருக்கும் கல்வி அதாவது குறைந்தளவு அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற கண்ணோட்டம் உருவானது.

உற்பத்திச் செலவை குறைக்கவும் இயற்கையின் பல்வேறு விதிகளைத் தெரிந்து கொண்டு அவற்றைப் பயன்படுத்தி மனித வாழ்க்கையின் பெருகிவரும் தேவைகளை நிறைவேற்றவும் விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு அவசியமாயிற்று. அதற்காக உயர்மட்டத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப கல்வி கற்பிக்கப்பட வேண்டியது தேவையாயிற்று. இந்த எந்திரத் தொழில்நுட்ப முறைக்கு உதவி செய்யும் வகையிலான அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது ஜனநாயகக் கண்ணோட்டங்கள் மலர்வதற்கு வழி வகுத்தது. முன்பு நிலவிய மூட நம்பிக்கைகள் பத்தாம் பசலிப் பழக்க வழக்கங்கள் ஆகியவை எந்திரத் தொழில் உற்பத்தி முறையின் தங்குதடையற்ற வளர்ச்சிக்குக் கருத்து ரீதியான முட்டுக் கட்டைகளாக விளங்கின. எனவே அவற்றைப் போக்கும் விதத்தில் அனைத்தையும் பகுப்பாய்ந்து சோதித்துப் பார்க்கும் விஞ்ஞானபூர்வ அணுகுமுறை கற்பிக்கப்பட வேண்டியது அவசியமாயிற்று. அத்தேவையை நிறைவேற்ற சமூக விஞ்ஞானம் சார்ந்த உயர் கல்வியும் கலை இலக்கியக் கல்வியும் அறிமுகம் செய்யப்பட்டன. இதுதான் முதலாளித்துவ தாராளவாதக் கல்வியின் சாராம்சம்.

மேலும் படிக்க

http://maatrukkaruthu.blogspot.com/2011/04/blog-post_7715.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்