வெள்ளி, 22 ஏப்ரல், 2011

தமிழ்ச் சமூகத்தை ஒட்டுமொத்தச் சீரழிவிலிருந்து காக்க ஆளும் கட்சியின் தோல்வியை உறுதி செய்வதே ஒரே வழி

தமிழகம் உட்பட 5 சட்ட மன்றங்களுக்கான தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சிகளின் அணிச் சேர்க்கைகள் முடிந்து தேர்தல் அறிக்கைகள் பல்வேறு கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ளன. ஆளும் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு இலவசமாக வெட்கிரைண்டர் அல்லது மிக்சி இந்த முறை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சி அவ்விரண்டினையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாகக் காட்டும் விதத்தில் நடவடிக்கைகள் பலவற்றை அறிவித்துச் செயல்படுத்திக் கொண்டுள்ளது. மதுரை மத்தி மற்றும் மேற்குத் தொகுதி இடைத் தேர்தல்களில் ஒத்திகை பார்க்கப்பட்டு திருமங்கலம் இடைத் தேர்தலில் அதன் உச்சகட்ட வடிவில் அரங்கேற்றப்பட்டு கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரப்பட்ட வாக்குகளுக்குப் பணம் வழங்கும்
ஆளும் கட்சியின் போக்கு ஒளிவுமறைவின்றி அம்பலமாகி விட்டதால் அதைத் தடுப்பதற்கான பிரத்யேக நடவடிக்கைகள் என்ற பெயரில் பறக்கும் படை அமைத்துப் பணம் வழங்குவதாகத் தகவல் வந்தால் அவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படும் இடங்களுக்குப் பறந்து சென்று அதைக் கைப்பற்றி தேர்தல் முறையாக நடக்க வழிவகுக்கப் போவதாக தேர்தல் ஆணையம் காட்டிக் கொள்கிறது.

அந்த அடிப்படையில் கூடுதல் பணங்களுடன் பயணிப்பவர்கள் வாகனச் சோதனைகளில் மாட்டிக் கொண்டிருக்கும் செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய செய்திகளில் பல வங்கிகளின் ஏ.டி.எம் களில் வைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பணம் குறித்தவை, பணம் கொண்டு சென்றவர், அதனை ஏற்றிச் சென்ற வாகனம் அத்துடன் மாவட்ட ஆட்சியாளர்கள் நின்று போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் மாநிலப் பத்திரிக்கைகளின் மாவட்டச் செய்திகளின் பக்கங்களை அலங்கரித்துக் கொண்டுள்ளன.

மாறுபட்ட சூழ்நிலை

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த முறை தேர்தல் நடைபெறவுள்ள வேளையில் நிலவும் சூழ்நிலையும் பின்னணியும் இதுவரை இருந்தவற்றிலிருந்து பெரிதும் மாறுபட்டதாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சி தேர்தல் நடைபெறும் சமயங்களில் அவர்களது ஆட்சியில் முறைகேடாகச் செய்தவை, செய்ய வேண்டிய பலவற்றைச் செய்யத் தவறியவை போன்றவற்றிற்கே பெரும்பாலும் பதில் கூற வேண்டிய கட்டாயமும் நிர்ப்பந்தமும் கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த முறை தமிழகத்தின் ஆளும் கட்சி எதிர் கொண்டுள்ள பிரச்னை இதுபோல் சாதாரணமானதல்ல.

2ஜி அலைக்கற்றை ஊழல்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைந்த மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தமிழக ஆளும் கட்சி சார்பில் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட அ.ராசா தொலைத் தொடர்புத் துறையில் இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை உரிமம் வழங்குவதில் முறைகேடாக நடந்து அத்துறைக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பினை ஏற்படுத்தியுள்ளார் என்ற தகவல் இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியினால் வெளியிடப்பட்டது. அந்தப் பின்னணியில் அதனை முறையாக விசாரித்து உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும் என்று பொது நல வழக்குகள் தொடுக்கப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் அவ்விசாரணை பல கட்டங்களாகத் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அ.ராசாவும் அவரிடம் முறைகேடாக உரிமம் பெற்றார் என்று கருதப்படும் ஸ்வான் நிறுவனத் தலைவர் பல்வா என்பவரும் கைதாகிச் சிறையிலடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு  வருகின்றனர்.

மேலும் படிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்