1947 இல் வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் இருந்து பெற்ற சுதந்திரம் இந்திய முதலாளிகளின் கைகளில் சென்று விட்டாலும் அந்த சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து தாய்நாட்டின் அடிமைத்தளையை அறுத்தெறிய களம் இறங்கினர். இந்தியாவின் வடக்கே பகத்சிங் , ராஜகுரு ,சுகதேவ் ,சந்தரசேகர் ஆசாத் போன்ற ஈடு இணையற்ற சுதந்திர போராட்ட வீரர்களை போலவே தெற்கில் பாரதியார், வ.உ.சிதம்பரனார், வா.வே.சு.ஐயர், சுப்ரமணிய சிவா போன்றவர்கள் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். இவர்களுள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ஆஷ்துரை என்ற கொடுங்கோலனை சுட்டுக்கொன்றதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் என்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் தியாகி வாஞ்சிநாதன்.
*ஆங்கிலேயர்களை எதிர்த்த போராட்டம் பல கட்டங்களை உடையது. ஒவ்வொரு காலகட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்களுக்கும் வெவ்வேறு நோக்கங்கள் இருந்தன. அவர்களது நோக்கங்களைப் பற்றி இன்று மதிப்பிடும்போது அன்றைய வரலாற்றுக் காலகட்டத்தின் பின்புலத்தில் வைத்தே மதிப்பிடவேண்டும்.
*வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தானில் தொடங்கி 1957ம் ஆன்டு சிப்பாய் கலகம் எனப்படும் முதல் சுதந்திரப் போர் வரை ஒருகட்டம். கட்டபொம்மனோ, மருது சகோதரர்களோ ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்க்கவில்லை. தங்களது நிலப்பிரபுத்துவச் சுரண்டல் ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே அவர்கள் எதிர்த்தனர். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் கொஞ்சம், கொஞ்சமாக அரசியல் அதிகாரத்தை இழந்து கொண்டிருந்த நிலப் பிரபுத்துவ வர்க்கத்தார், தாங்கள் இழந்த அரசியல் அதிகாரத்தை மீட்பதற்காகச் செய்த கடைசி முயற்சியே 1957ம் ஆண்டு சிப்பாய் கலகம் எனப்படும் முதல் சுதந்திரப் போர். வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தானில் தொடங்கி அம்முதல் சுதந்திரப் போரில் வீரமரணம் எய்தியவர்களின் தியாகங்கள் எவ்விதத்திலும் குறைந்ததல்ல.
*அதன் பின்னர் சுமார் 50 ஆண்டுகள் கழித்து சுதேசி இயக்கத்தை ஒட்டி எழுந்தது அடுத்த காலகட்டம். இக்கலகட்டத்தின் ஆரம்பத்தில் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புணர்விற்கான அடிப்படையை இந்துமத உணர்வே வழிநடத்தியது. "குதிராமில் தொடங்கி முதற்காலகட்ட புரட்சியாளர்கள் அனைவரும் மாபெரும் நாவலாசிரியர் பங்கிம் சந்திரரால், அவரது சாகாவரம் பெற்ற ஆனந்த மடம் நாவலின் மூலம் உருத்தீட்டப் பட்ட சுதந்திரப் போராட்டம் பற்றிய கொள்கைகளில் இருந்து உணர்வு பெற்றவர்கள். எனவே அந்நிய நாட்டின் அடிமைத் தளையில் இருந்து தாய் நாட்டை விடுவிக்க வேண்டு மென்ற அவர்களின் கருத்துக்கள் இந்து மத நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளில் ஊறித் தோய்ந்தனவாகவே இருந்தன. (இதனை ‘நான் ஏன் நாத்திகன்’ எனும் கட்டுரையில் சக புரட்சியாளர்கள் சிலரின் சில நடத்தை முறைகளைப் பற்றி பகத்சிங் எழுதியிருக்கும் குறிப்பே உறுதிப்படுத்தவும் வலுப்படுத்தவும் செய்கின்றது). அம்முதற் காலகட்ட புரட்சியாளர்களின் முழக்கமாக இருந்த “வந்தே மாதரம்”, அந்த ‘ஆனந்தமடம்’ நாவலில் இருந்து எடுக்கப்பட்டதே. அந்நிய சக்திகளின் அடிமைத்தனத்திலிருந்து அடிமைத் தாய் நாட்டை விடுவிப்பது என்பதே அவர்களது கருத்து. ஆனந்தமடம் நாவலில் “அந்நிய சக்திகள்” என்ற கருத்தை குறிப்பிடுவதற்கு பிரிட்டிஷாரை அல்லது மேலை நாட்டு வெள்ளையர்களை மட்டுமல்லாது, முஸ்லீம்கள் உட்பட இந்து அல்லாத அந்நியர்கள் அனைவரையும் குறிக்கும் வகையில் “யவனர்கள்” என்ற வார்த்தையினையே பங்கிம் சந்திரர் பயன்படுத்தினார். அந்த ஆனந்த மடத்தின் கருத்துக்களால் உணர்ச்சியூட்டப்பட்டதனால் முதற்கால கட்டத்தின் இத் தேசபக்தப் புரட்சியாளர்களின் சிந்தனை முறை இயல்பாகவே இம்மத மாச்சரியத்தில் இருந்து விடுபட்டதாக இருக்கவில்லை." [சேர்மன் சங்கர்சிங், CWP, கேளாத செவிகள் கேட்கட்டும்-தியாகி பகத்சிங் நூலுக்கு எழுதிய பகத்சிங் பற்றிய மதிப்பீட்டுரையிலிருந்து]. இக்காலகட்டத்தின் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பில் பிரதிபலித்த இந்து மதவாத தேசியத்தின் பிரதிநிதிகளே வங்காளத்தின் குதிராம் போஸ். தமிழ்நாட்டின் வாஞ்சிநாதன் போன்றோர்.
தியாகி வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் , 1886 ம் ஆண்டு ரகுபதி மற்றும் ருக்மணி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் இவரது இயற்பெயர் சங்கரன் என்றாலும் வாஞ்சி என்றே அனைவரும் அழைத்தனர் . கல்லுரி படிக்கும் போதே பொன்னம்மாளை மணம் முடித்து வனத்துறையில் பணியாற்றினார். 1911 ல் சுதந்திர போராட்டம் உச்சத்தை அடைந்திருந்தது. வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகியோரின் மேடைப்பேச்சுகள் திருநெல்வேலி பகுதியில் சுதந்திர இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதில் ஈர்க்கப்பட்ட வாஞ்சிநாதன் அரசு பணியில் இருந்து விலகி புரட்சிகர இயக்கங்களில் தொடர்ப்பை ஏற்படுத்திக் கொண்டார். பாரத மாத சங்கத்தில் இணைந்து வெள்ளை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்டினார். அப்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ் துரை உத்தரவின் பேரில், சுதேசி கப்பல் கம்பனியை நிறுவிய தியாகி வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அத்தோடு சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் அடக்கு முறைய ஆஷ் துரை கட்டவிழ்த்துவிட்டார். அந்த கொடுங்கோலனை கொள்வதன் மூலம் வெள்ளை அரசுக்கு பாடம் புகட்டவும் , இந்திய மக்களை தட்டியெழுப்பி சுதந்திர தாகத்தை ஊட்டி வெள்ளை அரசுக்கு எதிராக தீரம் மிக்க போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்தனர்.
ஆஷ் துரையை சுட்டுக்கொல்ல சரியான தேர்வாக தியாகி வாஞ்சிநாதனை பாரத மாத சங்கத்தினர் தேர்வு செய்தனர். 1911 ஜூன் 17 , அன்று காலை 10 .45 மணி . திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள மணியாட்சி ரயில்நிலைய சந்திப்பில் தன் மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல் வகுப்பில் பாதுகாப்போடு அமர்ந்திருந்த திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் துரையை தனது கை துப்பாக்கியால் வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றார். சுடும் போது பலரும் வாஞ்சிநாதனை பார்த்துவிட்டதால் தான் கைது செய்யப்பட்டால் ரகசியமாக இயங்கி வந்த தங்களது இயக்கத்தை வெள்ளையர்கள் நசுக்கி விடுவார்கள் உயர்ந்த நோக்கத்தில் அந்த தியாகி தன்னை தானே சுட்டு கொண்டு வீர மரணத்தை தழுவினார். தான் ஏன் ஆஷ் துரையை சுட்டுகொன்றேன் என்று அதற்கான காரணத்தை எழுதி சட்டைப்பையில் வைத்திருந்தார். *அதில், மிலேச்சர்களான ஆங்கிலேயர்களிடமிருந்து இப்புனிதமான தேசத்தின் சுயராஜ்யத்தையும் சனாதன தர்மத்தையும் மீட்பதற்காக உறுதியேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
*வாஞ்சிநாதன் ஒரு கம்யூனிஸ்டோ, புரட்சியாளரோ இல்லை என்றாலும், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிரான இந்திய மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பின் - வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான், ஜான்ஸிராணி, தொடங்கி, குதிராம் போஸ், அரவிந்தர், திலகர், பாரதி, வ.உ.சி., சிவா, கோகலே, மகாத்மா காந்தி, நேதாஜி சூர்யா சென், கல்பனா தத் போன்றோரை உள்ளடக்கி தேர்ந்த கம்யூனிசப் பார்வை கொண்ட இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் பகத்சிங் வரையிலும் தீரமுடன் ஆங்கிலேயரை எதிர்த்த இந்திய மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பின் - ஒரு பகுதியே வாஞ்சிநாதனின் தியாகமும் என்ற வகையில் அவரது தியாகம் நினைவு கூரத்தக்கதே.
இவர்போன்ற பல எண்ணற்ற வீரத் தியாகிகளின் ஒப்பற்ற தியாகத்தால் தான் சுதந்திர போராட்டங்கள் எழுச்சி பெற்றன. வாஞ்சிநாதன் நினைவு நூற்றாண்டு நிறைவு பெறும் இந்த நாளில் தியாகி வாஞ்சிநாதனின் தியாகத்தை நினைவு கூர்வோம்.
குறிப்பு: * குறியிடப்பட்ட வரிகளும் பத்திகளும் "பாஸிஸ்ட்" என்ற புனைப்பெயருடையவர் தன் எதிர்வினையில் சுட்டிக்காட்டிய போதாமையை ஏற்றுக் கொண்டு பின்னர் இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டவை. -"இயக்கம்".
"ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சமய மற்றும் சனாதனப் பிடிப்புகளிலிருந்து விடுபட்ட புரட்சியாளர்களாக இல்லை. இவர்கள் அனைவரும் அன்றைய தமிழ் நாட்டில் சமூக மேலாதிக்கம் செலுத்தி வந்த பிராமணர், வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்களே. ‘ஜார்ஜ் பஞ்சமன்' என்று வாஞ்சியின் கடிதம் ஜார்ஜ் மன்னனைக் குறிப்பிடுகிறது. பஞ்சமர் என்பது தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிடும் இழிவான சொல். ஜார்ஜ் மன்னன் இழிவானவன் என்று குறிக்க, அவனைப் பஞ்சமன் என்றே வாஞ்சி அழைத்துள்ளான். இத்தகைய கருத்தோட்டம் உடையவர்கள் பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவது கடினம்'' என்று குறிப்பிட்டிருந்தேன். வாஞ்சியின் தியாக உணர்வை மதிக்கும் அதே நேரத்தில், அவரது சனாதான உணர்வை மறைக்க வேண்டியதில்லை என்பதே எனது கருத்து" என்கிறார் வரலாறு ஆய்வாளர் பேரா. ஆ.சிவசுப்பிரமணியன்.
பதிலளிநீக்குஇப்படிப்பட்ட சனாதான பாதுகாவலர்களுக்கு சொம்பு தூக்குவது தான் நவீன கம்யூனிஸ்ட்-களின் முக்கிய பணியோ!!!
பாசிஸ்ட் அவர்களே இக்கட்டுரையின் போதாமையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. "வாஞ்சியின் தியாக உணர்வை மதிக்கும் அதே நேரத்தில், அவரது சனாதான உணர்வை மறைக்க வேண்டியதில்லை " என்ற வரலாற்று ஆய்வாளர் பேரா. ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் கருத்தே எங்கள் கருத்தும். சுட்டிக் காட்டியதற்கு மீண்டும் நன்றி.
பதிலளிநீக்குசனாதன உணர்வு உள்ளவர்கள் தியாகம் செய்யக் கூடாது என்று சொல்ல முடியாது, சனாதன உணர்வு உள்ளவர்கள் செய்த தியாகத்தை தியாகம் என்று சொல்லமுடியும். அந்த தியாகத்தை யாரும் வேண்டாம் என்று சொல்ல முடியுமா. அவர்களின் சனாதன உணர்வை விமர்சிக்கலாம். தியாகத்தை மதிக்காதவர் தியாகத்தை பற்றி பேச எனன தகுதியிருக்கிறது. அது மட்டுமல்ல இந்த போக்கு சனாதன உணர்வைவிட மோசமானது,
பதிலளிநீக்கு