நேற்று அதிகாலை மணி 3.20. நம்மைக் கேட்காமலேயே நம் உடலில் ஒரு பாகமாக வந்து ஒட்டிக் கொண்டுவிட்ட செல்போனில் முன்நாளிரவு சொல்லி வைத்த அலாரம் சிணுங்கத் துவங்கும் முன்பே அதை சமாதானப் படுத்தி எழுந்தாகி விட்டது. விழித்துக் கொண்ட மனது உடலின் மற்ற அவயவங்களை எழுப்பி உட்கார வைப்பதற்காக வழக்கமாக எடுத்துக்கொள்ளும் 10 நிமிடங்களும் இன்று எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இன்று மார்ச் 23. தியாகி பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள். 80 ஆண்டுகளுக்கு முன் இதே நாளின் ஓர் அதிகாலைப் பொழுதில்தானே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று உன்னதமான உயிர்கள் ஆங்கில ஏகாதிபத்தியத்தால் பலி கொள்ளப்பட்டன என்ற நினைவு வந்து மனதைக் கனமாக்கியது. பகத்சிங் நினைவு தினச் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு இரவு 12 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றிருந்தாலும் தூங்கியதுபோலும் இல்லை; தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தது போலும் இல்லை. பகத்சிங் நினைவு ஸ்தூபி வேலையாகச் சமயநல்லூர் சென்ற SDM மாணவத் தோழர் வினோத்தை எழுப்புவோம் என்று அவருக்குப் போன் செய்தால், அவர் மதுரைக்குள் வந்துவிட்டதாகச் சொன்னார். பின்னர்தான் தெரிந்தது அவர் தூங்கவே இல்லை என்று. சிவகாசி ஆனைக்கூட்டம் பகுதியிலும், ஆலங்குளம் பகுதியிலும், சமநல்லூரிலும் தோழர்கள் இரவு முழுவதும் பகத்சிங் நினைவு ஸ்தூபி எழுப்பிவிட்டு, அதிகாலையில் சுவரொட்டிகள் ஒட்டக் கிளம்பியிருந்தனர். தேனியிலும் சுவரொட்டிகள் ஒட்டும் வேலைகள் துவங்கியிருந்தன. சென்னை, பொள்ளாச்சி, நாகர்கோவில் பகுதித் தோழர்களுக்குச் சுவரொட்டிகள் அனுப்பாமல் விட்டதால் இந்தப் பணியில் அவர்களது பங்களிப்பை மறுத்த குற்றத்திற்காக வருந்தாமல் இருக்க முடியவில்லை.
தோழர் கே.கே.சாமியை மற்றொரு பகுதிக்கு அனுப்பிவிட்டு தோழர் வினோத்தும் நானும் சுவரொட்டிகள் ஒட்டக் கிளம்பிய நேரத்தில் மதுரை மாநகரம் தன் படுக்கையில் இருந்து எழுந்து சோம்பல் முறிக்கத் துவங்கியிருந்தது. வழக்கமான நாட்களிலேயே பகத்சிங் நினைவு தினத்தை மறந்துவிடும் நம் அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தல் நாட்களில் மறந்து போயிருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. எந்த அமைப்புகளின் சுவரொட்டிகளும் கண்ணில் படவில்லை. ஆரப்பாளையம் பகுதிக்குச் செல்லும்போது பகத்சிங்கின் படம் போட்ட DYFI சுவரொட்டி ஒன்றைக் கண்டு நாம் அகமகிழ்ந்து போனோம். ஆனால் அவர்களும் அச்சுவரொட்டி மூலம் பகத்சிங்கை அவர்களது ஓட்டு அரசியலுக்கு இழுத்து வந்து கேவலப்படுத்தியிருந்ததைப் பார்த்தபோது வேதனைதான் மிஞ்சியது.
அதன் வாசகங்கள் இவைதான்: மார்ச் 23 பகத்சிங் நினைவுதினம்/ 2011-தமிழகத் தேர்தல்/எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல/போரடிப் பெற்ற/வாக்குரிமையை/விற்கமாட்டோ ம்.
சுனாமியே சுற்றியடித்தாலும் தூண்டில்காரனுக்கு மிதப்பில்தான் கண்ணு என்பதை நிரூபித்துவிட்டனர். வாக்குரிமையை விலைக்கு விற்பதை எதிர்க்கக் கூடாது என்பதல்ல. இன்றய தமிழகத் தேர்தல் நிலவரப்படி ஒரு லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்துடன் களம் இறங்கியிருக்கும் திமுக-வை எதிர்கொள்ள வேண்டுமானால் ஒன்று அந்த அளவிற்குப் பணம் இருக்க வேண்டும்; அல்லது கொள்கை இருக்க வேண்டும்.
போன தேர்தல்வரை ஜெயலலிதாவைத் தோற்கடித்தே தீருவோம் என்று கருணாநிதியுடன் "கை" கோர்த்துவிட்டு, இந்தத் தேர்தலில் கருணாநிதியைத் தோற்கடித்தே தீருவோம் என்று ஜெயலலிதாவுடன் "இலை" போட்டுக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜெயலலிதாவுடன் தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை என்றவுடன் வெட்கமே இல்லாமல் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடிகர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு ஓடிவரும்போதே நமக்குத் தெரியும் இவர்களிடம் கொள்கை எதுவும் இல்லை என்று. திமுகவுக்குக் கிடைத்தது போல் வாய்ப்பு இவர்களுக்கு இதுவரை கிடைக்காததால் இவர்கள் கையில் அந்த அளவிற்குப் பணமும் இல்லை.
ஆனால் அதற்காக பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நினைவுநாளில் அவரது அரசியலை மக்களிடம் கொண்டு செல்லாமல் அந்த மாபெரும் தியாகியை தங்களது கேவலமான தேர்தல் அரசியலுக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தும் DYFI-ன் செயல் எவ்வளவு குறைத்துக் கூறினாலும் மன்னிக்க முடியாத குற்றமே.
அப்படியே சுவரொட்டிகள் ஒட்டிக் கொண்டே பெரியார் பேருந்து நிலையம் பக்கம் போனபோது அங்கே மகஇக-வின் பகத்சிங் நினைவுதினச் சுவரொட்டி ஒன்று கண்ணில் பட்டது. இவர்கள்தான் "தேர்தல் பாதை திருடர் பாதை" என்பவர்களாயிற்றே, இவர்களாவது பகத்சிங்கின் அரசியலை முன்னெடுத்துச் சென்றிருப்பார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது.
மகஇக-வின் சுவரொட்டி இதுதான்: மார்ச் 23/பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்/அன்று:கிழக்கிந்தியக் கம்பெனி/ இன்று:பன்னாட்டுக் கம்பெனிகள்/அன்று:எட்டப்பனும் மீர்ஜாபரும்/இன்று:காங்கிரசும் பாஜகவும் அதிமுகவும் திமுகவும்/அன்று: பகத்சிங்/இன்று: நாம்தான் இருக்கிறோம்.
மேலோட்டமாகப் பார்த்தால் பகத்சிங் விட்டுச் சென்ற சுதந்திரப் போராட்டத்தை இன்று இவர்கள் தொடர்வதுபோல் தெரிகிறது. ஆனால் பகத்சிங்கின் அரசியல் இது அல்ல. பகத்சிங் அன்றே சொன்னார்: காங்கிரஸ் தலைமையில் கிடைக்கப் போகும் சுதந்திரம் இந்திய முதலாளிகளின் கைகளுக்கே அரசியல் அதிகாரத்தைக் கொண்டு சேர்க்கும்; இந்திய முதலாளிகளையும் எதிர்த்து சோசலிசக் குடியரசு நிறுவப்படும் வரையிலும் இந்தப் போர் தொடரவேண்டும் என்று. ஆனால் மகஇக-வினரோ பன்னாட்டு நிறுவனங்களே நம் எதிரிகள் என்கிறார்கள்.
இந்திய முதலாளிகளின் மூலதனத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பதற்காக தன் அங்கமெல்லாம் ஆயுதம் தரித்து நிற்கும் இந்திய அரசு நிதர்சனமாக நம் கண்ணுக்கு முன்னால் இருக்கையில் பன்னாட்டு நிறுவனங்களே நம் எதிரிகள் என்று சொல்லும் மகஇக-வினரை என்னவென்று சொல்வது. அரசு என்ற அடக்குமுறைக் கருவியைப் பற்றி மார்க்ஸ் முதல் லெனின் வரை படித்துப் படித்துச் சொல்லிவிட்டுப் போனாலும் இவர்கள் அதையெல்லாம் படித்தார்களா இல்லையா என்றே தெரியவில்லை.
ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. இவர்கள், பகத்சிங் அன்று எதிர்த்துப் போராடியது கிழக்கிந்தியக் கம்பெனியையே என்றும்; அதனால் இன்று நாம் எதிர்க்க வேண்டியது பன்னாட்டுக் கம்பெனிகளையே என்றும் வேண்டுமென்றே தங்களது அரசியலுக்காக வரலாற்றையே திரித்துக் கூறக் கூடத் தயங்காதவர்கள். ஏனெனில் பகத்சிங் அன்று எதிர்த்துப் போராடியது ஆங்கில ஏகாதிபத்திய "அரசை"த்தானே தவிர, கிழக்கிந்தியக் கம்பெனியை அல்ல.
1857ம் ஆண்டு சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்படும் முதல் சுதந்திரப் போர் கொடூரமாக அடக்கி ஒடுக்கப்பட்ட பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆட்சியதிகாரம் பறிக்கப் பட்டு ஆங்கில ஏகாதிபத்திய "அரசின்" நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா கொண்டுவரப்பட்டு விட்டது என்பது வரலாறு. ஆனால் மார்க்சுக்கும் லெனினுக்கும் உண்மையுள்ளவர்களாக இருந்து அடக்குமுறைக் கருவியான அரசை எதிர்க்காமல், நிறுவனங்களை எதிரியாகக் காட்டும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட மகஇக-வினர், தங்களது அரசியல் தேவைக்கேற்ப வரலாற்றையே திருத்தி பகத்சிங் எதிர்த்ததும் அரசை அல்ல; கிழக்கிந்தியக் கம்பெனியைத்தான் என்று கூறி தங்கள் அரசியலின் தரத்திற்கு பகத்சிங்கைத் தாழ்த்திவிட்டனர்.
பகத்சிங் நினைவுநாளில் பகத்சிங்கின் அரசியலை மக்களிடம் கொண்டுசெல்ல ஆளே இல்லாமல் போய்விட்டனரே என்ற மன வேதனையுடன் நாம் ஒட்டிக் கொண்டிருந்த சுவரொட்டியின் வாசகங்களைப் படித்தபோது நாமாவது இருக்கிறோமே என்று ஆறுதலாக இருந்தது. நமது சுவரொட்டியில் இருந்த "பகத்சிங்கின்" வாசகங்கள் இவைதான்:
"இந்த நாட்டில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. இதை உணர்ந்தவர்களின் கடமை சமுதாயத்தை சோசலிசத்தின் அடிப்படையில் புதிதாக மாற்றியமைப்பதே ஆகும்".
மதுரை மாநகரின் பொதுக் கழிப்பிடங்கள் எல்லாம் மாநகராட்சி வரிவசூல் மையங்களாகிப் போனதால் ஆத்திர அவசரத்திற்கு சாலையோரச் சுவர்களை நாறடித்திருந்த மதுரை மக்களின் அவலநிலையை நினைத்து நொந்து கொண்டே சுவர்களை சுத்தம் செய்து நாம் அந்த சுவரொட்டிகளை ஒட்டிவிட்டுப் பார்த்தபோது, பகத்சிங்கின் அரசியலைத் தாங்கியிருந்த அந்தச் சுவரொட்டியை இப்போது தாங்கியிருக்கும் அந்தச் சுவர்களும் கூட நமக்கு அழகாகத்தான் தெரிந்தன.
நீங்கள் முன் வைக்கும் மாற்று வழி என்ன என்பதை தயவு செய்து சொல்லவும்.
பதிலளிநீக்குஉங்களுக்கான பதில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்கள், நன்பரே.
பதிலளிநீக்குhttp://porattamtn.wordpress.com/2011/02/21/lumumba/#comment-213
நண்பர்கள் "மாயவி"மற்றும் பகத்!
பதிலளிநீக்குநண்பர் "மாயவி"க்கு,
பகத்சிங் நினைவுநாளில் மதுரையில் DYFI-ம் மகஇக-வும் பகத்சிங்கின் அரசியலை மக்களிடம் கொண்டுசெல்லாமல், தங்கள் அரசியலைக் கொண்டு செல்லப் பகத்சிங்கைப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் இந்தப்பதிவில் நாம் பதிவு செய்யும் நமது ஆதங்கமும் விமர்சனமும் ஆகும். பகத்சிங்கின் அரசியல் என்ன என்பது பதிவிலேயே உள்ளது.
நண்பர் பகத்-க்கு,
தங்கள் பதிவிற்கு நன்றி! இந்த தொடர்பை பார்க்கவும்.
விமர்சனத்திற்குப் பதில் சொல்லாமல் விமர்சித்தவரை தாக்குவது சரியான அணுகுமுறையா? http://ieyakkam.blogspot.com/2011/04/blog-post_8860.html