செவ்வாய், 29 நவம்பர், 2011

பால் மற்றும் பேருந்து கட்டணத்தின் மீதானக் கடுமையான விலை உயர்வு சமூக மாற்றம் பேணும் சக்திகள் செய்ய வேண்டியது என்ன?

 தமிழக அரசு தற்போது ஆவின் பால் விலையையும், பேருந்து கட்டணத்தையும் மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளது. பால் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய்.7ம், பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் 80 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் கடுமையான பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ள குறிப்பாக ஏழை எளிய மற்றும் மத்தியதர மக்கள் தலையில் பேரிடியாகத் தற்போதைய தமிழக அரசின் பால் விலை, பேருந்து கட்டண உயர்வு இறங்கியுள்ளது. இது போதாதென்று மின் கட்டணமும் கூடிய விரைவில் உயர்த்தப்படும் என்ற தமிழக அரசின்  ‘இனிப்பான’’’ செய்தியை  எப்படிக் கைக்கொள்வதெனத் தெரியாது தமிழக மக்கள் விழிபிதுங்கிக் கொண்டுள்ளனர்.



 வழக்கம்போல் இடதுசாரி கட்சிகள் துவங்கி காங்கிரஸ், ம.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க உட்பட தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகள் துவங்கி நேற்று முழைத்த சின்னஞ்சிறிய அரசியல் கட்சி வரை அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கெதிராக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என போராட்டங்களில் குதித்துள்ளனர். வலுமிக்க அரசாங்க நிர்வாகியாகத் தன்னை வர்ணித்துக் கொள்ளும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தப் பூச்சாண்டித் தனங்களுக்கெள்ளாம் சிறிதும் அசைந்து கொடுக்காமல், கடந்த தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேட்டினால் மூட வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுத்தப் பட்டுள்ள இந்த அரசுப் பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்காகவே தன்னுடைய அரசு இந்நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனக்கூறி பேரிடியான இக்கடுமையான விலை உயர்விற்கு நியாயம் கற்பிக்க முயல்கிறார்.

மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தான் அரசு நிர்வாகத்தில் சிறந்தவர் என்றும் தன்னால் மட்டுமே தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற முடியும் என்ற அடிப்படையில் தன்னுடன் கூட்டணி வைத்துக் கொண்ட இடதுசாரி கட்சிகள் இழுத்து மூடவேண்டிய பேரபாயத்தில் இருந்த இந்த பொதுத்துறைகளைக் காப்பாற்றத் தாம் வேறுவழியின்றி  தன் நிர்வாகத்திறன் அடிப்படையில் எடுக்க வேண்டிய இவ்விலை உயர்விற்கு களங்கம் கற்பிக்கலாம் என இடதுசாரிகளைக் கடிந்து கொள்கிறார்.

 தி.மு.க துவங்கி இடதுசாரிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அரசியலுக்கு வலுவான களம் அமைந்துவிட்டதாக எண்ணி போராட்டங்களைக் கட்டி வருகின்றனர். தி.மு.க.வினால் முழுவதும் சூறையாடப்பட்ட அரசு கஜானாவைச் சீர்ப்படுத்த தான் எடுத்த முடிவு நிர்வாக ரீதியால் மிகச் சரியானதுதான் என்பதை வரும் காலத்தில் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற எண்ணத்தில் உயர்த்தப்பட்ட விலை உயர்வை எத்தருணத்திலும் திரும்பப் பெற இயலாது எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் தமிழக முதல்வர். 

உலகமயம் மற்றும் தற்போதைய அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட அனைத்து நாடுகளிலும் தோன்றியுள்ள மீளமுடியாதப் பொருளாதார நெருக்கடியினால் இந்தியா உட்பட உலகனைத்திலுமே முதலாளித்துவப் பொருளாதாரம் அதன் மரணவாயிலில் ஊசலாடிக் கொண்டுள்ளது. மேலும் அரசியல்வாதிகள் அரங்கேற்றும் மெகா ஊழல்களும், நிர்வாகத்தில் ஒழுங்கின்மையும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியரிடையே நிலைபெற்ற செயல்பாடாகி விட்டதால் மத்திய, மாநில அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழந்து போவதோ அல்லது தனியார் மயமாவதோ இந்தியாவில் புதிய பரிமாணமோ, அரசியல் நிகழ்வோ அல்ல. மாறாக அது மிகச்சீரிய முறையில் அழிந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்த இன்றைய அரசாங்கங்களும், முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் எடுக்கும் பகீரதப் பிரயத்தனங்களாகும்.


 இப்பின்னணியில் தமிழக அரசின் இந்த தடாலடியான விலை உயர்வும் அதற்கு எதிரான போராட்டங்களும் கடந்த சில பத்தாண்டுகளில் இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ அரங்கேறாத புது நிகழ்வுகள் அல்ல. இதைக் கூறுவதனால் இன்று தமிழகம் முழுவதும் மிகத்தீவிரமாக இந்த விலை உயர்விற்கெதிராக நடைபெற்றுக் கொண்டுள்ள போராட்டங்களை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்றல்ல.ஏனெனில் இச்சமூக அமைப்பின் கொடுஞ்சுரண்டலை உள்ளங்கை நெல்லிக்கணி போல உணர்ந்த மக்கள் விலை உயர்வு போன்ற கடுமையான மக்கள் விரோதப் போக்கிற்கெதிராக தானாக அணிதிரள்வார்கள் என்பது வரலாறு நமக்கு படிப்பிக்கும் பாடமாகும். அதே சமயத்தில் இந்நிகழ்வுகள் அனைத்திற்கும் ஊற்றுக் கண்ணாக உள்ள இச்சமூக அமைப்பை மாற்றும் போராட்டங்களாக இப்போராட்டங்கள் மாறும்போதுதான் இப்போராட்டத்திற்கான தீர்வு கிடைக்கும் என்பது திண்ணம். அவ்வகையில் இப்போராட்டங்களை எடுத்துச் செல்லாத, செல்லமுடியாத அரசியல் கட்சிகள் செய்வதனைத்தும் அவை எந்தப் போர்வைக்குள் ஒழிந்திருந்தாலும் இச்சமூக அமைப்பின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்யும் சேவையேயன்றி வேறெதுவுமில்லை.


எனவே மக்களே உங்கள் போராட்டத்தின் உண்மையான தீர்வுகாண  இவ்வகையிலானப் போராட்டங்களைச் சமூக மாற்றப் போராட்டங்களாகப் பரிணாமம் அடையச் செய்வீர்! அத்தகைய அரசியல் பாதையைக் கொண்டிருக்கும் அமைப்புகளின் பின்னால் அணிதிரள்வீர்! சமூக மாற்றத்திற்கான போராட்டத்தைத் துரிதப்படுத்துவீர்!



1 கருத்து:

  1. மக்களுக்கு சகிப்பு தன்மை கூடி சமரச கொள்கையில் இறங்கி உள்ளனர் என்று நினைக்கிறேன்... எந்த கொந்தளிப்பையும் காண முடியவில்லை.. ஆற்றாமை தான் தெரிகிறது...

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்