திங்கள், 28 நவம்பர், 2011

இந்தியாவில் நிலப்பிரபுக்களை எந்த எலிப் பொந்துக்குள் தேடுவது? புதிய ஜனநாயகம் பேசும் புரட்சியாளர்கள் கண்டுபிடித்துச் சொல்வார்களா?


பொய் எதிரிகளும் - நிழல் யுத்தங்களும்
                மார்க்சிஸத்தின் சமூக மாற்றக் கண்ணோட்டத்தின் அடிப்படையே சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தை மாற்றும் வகையில் போராட்டத் திட்டங்களை வகுத்தெடுப்பது குறித்ததுதான். இன்று இந்திய சமூகத்தின் அடித்தளமாக நிலவுகின்ற பொருளாதாரம் முதலாளித்துவ பொருளாதாரமாகும்.  
        இவ்வாறு நாம் குறிப்பிடுகையில் CPICPI(M)CPI(ML) போன்ற கட்சிகள் இந்தியாவில் நிலவுவது முதலாளித்துவப் பொருளாதாரம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லைநாட்டின் பல இடங்களில் நிலபிரபுத்துவ உற்பத்தி முறையே நிலவுகிறது என்பதே தங்களது அரசியல் கணிப்பாகும் எனக்கூறலாம்.  அக்கணிப்பினை தவறானதென்று நிரூபிக்க எத்தனையோ ஆதாரங்களை  முன் வைக்க முடியுமென்றாலும் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையில் இவர்கள் ஒரு கேள்விக்கு விடை கூற வேண்டி வரும்.  
          குறிப்பாக தமிழக அரசு இலவச மின்சாரத்திட்டத்தை ரத்து செய்து சிறு விவசாயிகளுக்கு மட்டும் மின் கட்டணத் தொகை அரசால் மணியார்டர் மூலம் அனுப்பிவைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்ட வேளையில் இவர்கள் எழுப்பிய கோரிக்கை, “அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும்” என்பதாகும்.  இப்படி இவர்கள் அனைத்து விவசாயிகளும்’ என்று கூறும் வேளையில் அந்தப்பட்டியலில் நிலப்பிரபுக்களும் உள்ளடங்குவார்களா என்ற கேள்விக்கும்அவர்களும் உள்ளடங்குவார்கள் என்றால் அவர்களுக்கு இலவச மின்சாரத்தைக் கொடுப்பது நிலபிரபுத்துவத்தை ஒழிப்பதற்கு பதில் வளர்ப்பதாகாதாஎன்ற கேள்விக்கும் விடை கூறவேண்டிய சிக்கலான சூழ்நிலை ஏற்படும்.  
         இல்லையெனில் பம்பு செட்டுகள் வைத்து விவசாயம் செய்பவர்கள் அனைவருமே பணக்கார விவசாயிகள்அதாவது முதலாளித்துவச் சந்தைக்காக விவசாய உற்பத்தியில் ஈடுபடக்கூடியவர்கள்நிலப்பிரப்புக்களல்ல என்ற அடிப்படையில் தான் இந்தக் கோரிக்கையை இவர்கள் எழுப்புகிறார்கள் என்றால் இவர்கள் கூறும் நிலப்பிரபுத்துவத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய நிலப்பிரபுக்கள் வேறு எங்கு எந்த எலிப் பொந்துகளுக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்என்ற இன்னும்  சிக்கலான கேள்விக்கு இவர்கள் விடை கூற வேண்டி வரும்.
                சுதந்திரம் அடையும் தருவாயில் உள்நாட்டுச் சந்தையில் 72 முதல் 73 சதவீதத்தையும் நிறுவனமாக்கப்பட்ட வங்கி மூலதனத்தில் 80 சதவீதத்திற்கும் மேலாகவும் கொண்டு சுயேச்சையான மூலதன அடித்தளத்தை பெற்றிருந்த இந்திய தேசிய முதலாளிகள்தங்களுடைய வளர்ச்சிக்கு மிகவும் சாதகமான ஒரு சுதேசி அரசை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தேச விடுதலைப் போராட்டத்திலும் பெரும்பங்கினை ஆற்றிஅதன் விளைவாக கிடைக்கப் பெற்ற சுதந்திரத்திற்குப்பின் அமைந்த தங்களது ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தக் காலகட்டத்தில் தொழில்மயமாக்கலை எத்தனை தூரம் செய்ய முடியுமோ அத்தனை தூரம் செய்துஏகபோகங்களாக வளர்ந்து இன்று  தங்களைச் சுற்றியுள்ள சிறு நாடுகளை அச்சுறுத்தும் ஏகாதிபத்திய சக்தியாகவும் தங்களது மூலதனத்தை தங்களைச்  சுற்றியுள்ள சிறு நாடுகளுக்கு மட்டுமல்ல தாங்கள் எந்த நாட்டுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தோமோ அந்த நாட்டுக்கே கூட ஏற்றுமதி செய்யக்கூடிய  வேளையில்  (இந்திய தேசிய முதலாளியான கிரிலோஸ்கரின் நிறுவனம்இங்கிலாந்தில் நேரடி மூலதனத்தைக் கொண்டுள்ள இங்கிலாந்து நாட்டு நிறுவனமான SPP பம்ப்ஸ் லிமிடெட் நிறுவத்தை முழுவதுமாக விலைக்கு வாங்கியுள்ளது (ஆதாரம்:  9.11.2003  தேதிய இந்து நாளிதழ்  செய்தி பக்கம் - 13)  
         இது தவிர ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில்  தமிழ் நாட்டு முதலாளிகள் உள்ளடங்கிய இந்திய முதலாளிகளின் மூலதன ஏற்றுமதியை பட்டியலிட ஆரம்பித்தால் அது இன்னும் நீண்டு கொண்டே போகும்.  மிக சமீபத்தில் இந்தியாவின் மென்பொருள் நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனம் ஆஸ் திரேலியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனம் ஒன்றை முழுமையாக விலைக்கு வாங்கியுள்ளதையும் நினைவுகூர்தல் இங்கு அவசியமாகும்).   
         சார்க் நாடுகள் அனைத்தும் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளின் பாணியில் ஒரே நாணயத்தை தங்களுக்கிடையிலான வர்த்தக பரிவர்த்தனைகளுக்காக வைத்துக் கொள்ளலாம் என இந்தியப் பிரதமர் முழங்குகையில் இந்தியாவில் இருப்பது முதலாளித்துவப் பொருளாதார அமைப்புதானா என்ற கேள்வியை யாரேனும் எழுப்பினால்ஒன்று அவர்கள் மார்க்சியப் பொருளாதாரத்தை அடிப்படையில் அறியாதவர்களாக இருப்பார்கள் அல்லது தங்களது சந்தர்ப்பவாத அரசியலுக்கு மிகவும் சாதகமாகப் பயன்படுவதும் பொய் எதிரிகளை முன்னிறுத்தி அவர்களுக்கு எதிரான நிழல்யுத்தத்தை மட்டுமே சாத்தியமாக்கவல்லதுமான ஒரு அடிப்படை அரசியல்வழியினை வேண்டி விரும்பி முன் வைத்துக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.
          இவர்களைத் தவிர உழைக்கும் மக்களின் எதிரி ஆயுதம் தரித்து நிற்கும் ஒடுக்கு முறைக் கருவியான அரசு அல்லஐ.எம்.எப். உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களே என்ற கூற்றை மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போல் முன் வைப்பவர்களுக்கு தர்க்க ரீதியான வாதங்களைக் காட்டிலும் நமது மௌனமே  பொருத்தமான பதிலாக இருக்கும்.


மேலும் படிக்க‌: http://communistworkerspartyindia.blogspot.com/p/blog-page.html

8 கருத்துகள்:

  1. ஆள்வது முதலாளித்துவ பொருளாதாரம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனக்கு...
    நிலப் பிரபுக்கள் இல்லை என்கிறீர்கள், தலைப்பில்... கட்டுரையில் நிலப் பிரபுக்களை வளர்ப்பது என்ற சிக்கலான சூழ்நிலையை உருவாக்காதா என்று கேட்கிறீர்கள்... புரியவில்லை தோழர்...
    சிறு விவசாயிகளுக்கு பணத்தை மணி ஆர்டர் முறையில் அரசு அனுப்புவது உங்களுக்கு உடன்பாடா? இல்லையா? என்ற கருத்தும் புரியவில்லை...

    பதிலளிநீக்கு
  2. தோழர் சூர்ய ஜீவா,
    //நிலப் பிரபுக்கள் இல்லை என்கிறீர்கள், தலைப்பில்... கட்டுரையில் நிலப் பிரபுக்களை வளர்ப்பது என்ற சிக்கலான சூழ்நிலையை உருவாக்காதா என்று கேட்கிறீர்கள்... புரியவில்லை தோழர்...//
    தோழரே இந்தியாவில் நிலப் பிரபுக்கள் இல்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. நிலப்பிரபுக்கள் இந்தியாவில் இருப்பதாகச் சொல்லி ஜனநாயகப் புரட்சி பற்றி பேசும் கம்யூனிஸ்டு கட்சிகள், விவசாயிகள் பிரச்னை என்று வந்தால் நிலப்பிரபுக்களின் நலனைப் பிரித்துப் பார்க்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அப்படி வைப்பதால் அவர்கள் இருப்பதாகச் சொல்லும் நிலப்பிரபுவுக்கும் சேர்த்து கோரிக்கை வைக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். அப்படியானால் எதிரி வர்க்கமாக அவர்கள் சொல்லும் நிலப்பிரபுக்களுக்கும் சேர்த்து அவர்களே இலவச மின்சாரம் வாங்கிக் கொடுத்தால் அவர்கள் இருப்பதாகச் சொல்லும் நிலப்பிரபுக்களை அவர்களே வளர்ப்பதாகத்தானே அர்த்தம். அவர்களது தத்துவத்திற்கும் நடைமுறை யதார்த்தத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதையே இது காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  3. தோழர் சூர்ய ஜீவா,
    //சிறு விவசாயிகளுக்கு பணத்தை மணி ஆர்டர் முறையில் அரசு அனுப்புவது உங்களுக்கு உடன்பாடா? இல்லையா? என்ற கருத்தும் புரியவில்லை...//
    அதாவது சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் என்று இருப்பதை மாற்றி சிறுவிவசாயிகளுக்கு மட்டும் இலவச மின்சாரம் என்றும் அது பணவடிவில் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. இந்த வகைப்பாடு சரியானது என்பதே எங்கள் நிலைப்பாடு. ஏனென்றால் விவசாயிகளில் நிலப்பிரபுக்கள் இல்லை என்றாலும் பணக்கார-பெரிய விவசாயிகள், சிறுவிவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என்ற வர்க்கப் பாகுபாடு இருக்கிறது. வர்க்கங்களாய் பிளவுபட்டுள்ள இந்த விவசாய சமூகத்தை வர்க்கப் பாகுபாடு இன்றி ஒட்டு மொத்த விவசாயிகளுக்கான மானியம் சலுகை என்று அரசு வழங்கும்போது அதன் பலன் முழுவதையும் அனுபவித்துக் கொழுக்கும் வர்க்கமாக பணக்கார-பெரிய விவசாயிகளே உள்ளனர். இவர்களே கிராமப் புறங்களில் வர்க்க எதிரிகளாவர். இவர்களது நலனையும் சிறுவிவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களின் நலனையும் ஒன்றாகப் பார்ப்பதனால்தான் கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டங்கள் நடைபெறுவதில்லை.

    பதிலளிநீக்கு
  4. முதலாளித்துவ விவசாயிகள் என்பதை பணக்கார விவசாயி என்று கூறிப்பிடும் போது நிலப்பிரபுக்கள் ஏழைகள் போல் தோற்றம் காணப்படுகிறது, நிலப்பிரபுகள் பணக்காரர்களே.
    இந்திய விவசாய உற்பத்தியில் பெரும்பான்மையினர் மற்றும் உற்பத்தி பொருட்களை பெரும் அளவில் உற்பத்தி செய்வது யார் என்பதை கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது, அதாவது சிறு துண்டு நிலங்களை வைத்திருப்பவர்கள், அவர்கள் சந்தையை நோக்கியே உற்பத்தி செய்கிறார்கள் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்கள் முதலாளித்துவ உற்பத்தை முறையை மேற்கொள்கிறார்கள் என்பது மிகவும் எளிமைப்படுத்தி புரிந்து கொள்வது போல் தோன்றுகிறது. அதாவது விவசாய உற்பத்தி சக்திகள் முதலாளித்துவ முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பது மிகவும் முதன்மைப் பெற்ற கேள்வியாக எனக்குப் படுகிறது, அதாவது சிறுஉற்பத்தியாளர்கள் எவ்வாறு முதலாளித்துவ உற்பத்தி முறையை கைகொள்கின்றனர் என்று கூறமுடியும்.
    இந்திய விவசாய அமைப்பு முறையை புரிந்து கொள்வதற்கு நிலப்பிரபு மற்றும் முதலாளித்துவம் என்ற வார்த்தைக்குள் விளையாடிக் கொண்டிருந்தால் நமது விவசாய உற்பத்தி முறையை எப்போது எவ்வாறு விளங்கிக் கொள்வது.
    லெனின் "நாட்டுபபுற ஏழை மக்களுக்கு" என்ற நூலை படைத்தது போல் இந்தியாவில் நிலவும் விவசாய உற்பத்தி முறையை புள்ளிவிவரங்களோடு ஆராய்ந்தால் ஒரு வேளை விடையை நோக்கி பயணிப்போம் என்று நான் கருதுகிறேன்.
    அ,கா,ஈஸ்வரன்

    பதிலளிநீக்கு
  5. தோழர் அ,கா,ஈஸ்வரன்,
    "இந்தியாவில் நிலவும் விவசாய உற்பத்தி முறையை புள்ளிவிவரங்களோடு ஆராய்ந்தால் ஒரு வேளை விடையை நோக்கி பயணிப்போம்" என்பது உண்மைதான தோழரே. கட்டாயம் செய்யப்பட வேண்டிய பலமுக்கியப் பணிகளுள் இதுவும் ஒன்று. எங்கெல்ஸின் "இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலமை" என்ற நூலினைப் போல் இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தின் நிலமை பற்றியும் ஒரு மார்க்க்ஸிய ஆய்வு நூலின் தேவையும் உள்ளது.

    "நிலப்பிரபுகள் பணக்காரர்களே" என்று நீங்கள் சொல்வதில் நிலப்பிரபுக்கள் இருந்தால் அவர்கள் பணக்காரர்களாகத்தான் இருப்பார்கள். அதிலொன்றும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள உண்மையில் இருக்கிறார்களா என்பதே இங்கு கேள்வி. கிராமப் புறத்தில் பணக்காரர்களே எண்ணிக்கையில் குறைவு எனும்போது நிலப்பிரபுகள் உண்மையில் இருந்தால் அவர்களை எண்ணிக் கணக்கிடுவது கடினமாக இருக்காது.

    "முதலாளித்துவ விவசாயிகள் என்பதை பணக்கார விவசாயி என்று " குறிப்பிடுவது தவறு என்று கூறுகிறீர்கள். நாங்கள் குறிப்பிடுவது //விவசாயிகளில் நிலப்பிரபுக்கள் இல்லை என்றாலும் பணக்கார-பெரிய விவசாயிகள், சிறுவிவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என்ற வர்க்கப் பாகுபாடு இருக்கிறது.// என்றுதான். முதலாளித்துவ லாபநோக்கத்திற்காக -முதலாளித்துவச் சந்தையை மையப்படுத்தி உற்பத்தி நடக்கும் நம் நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவரும் முதலாளித்துவ விவசாயிகள்தான்; இவர்களைத்தவிர விவசாயத்தில் மீதம் இருப்பவர்கள் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களே. இந்த முதலாளித்துவ விவசாயிகளுக்குள் இருக்கும் வர்க்க பேதங்களை பகுத்தாராயும்போதுதான், முதலாளித்துவ விவசாயிகளை பணக்கார-பெரிய விவசாயிகள் என்றும் சிறுவிவசாயிகள் என்றும் பிரித்துப் பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. தோழரே, "அவர்கள் சந்தையை நோக்கியே உற்பத்தி செய்கிறார்கள் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்கள் முதலாளித்துவ உற்பத்தை முறையை மேற்கொள்கிறார்கள் என்பது மிகவும் எளிமைப்படுத்தி புரிந்து கொள்வது போல் தோன்றுகிறது. " என்று நீங்கள் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தீர்மாணிப்பதில் உற்பத்தி நோக்கமும் உற்பத்தி உறவும் முக்கியமான காரணிகள் இல்லையா? தோழரே தயவுசெய்து விளக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  7. திரும்பவும் கூறுகிறேன், விவசாயிகள் சந்தையை நோக்கியே உற்பத்தி செய்கிறார்கள் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்கள் முதலாளித்துவ உற்பத்தை முறையை மேற்கொள்கிறார்கள் என்பது மிகவும் எளிமைப்படுத்தி புரிந்து கொள்வது போல் தோன்றுகிறது.. ஏன் என்றால் பெருவீத உற்பத்திமுறை நிகழமல், நிலங்கள் ஒருங்கிணைக்கப்படாமல், நிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருநதால் சிறுவிவசாயிகளை ஓட்டாண்டியாக்கி பாட்டாளிகளாக மாற்றம் நிகழ்ந்திருக்கும் அவ்வாறு நிகழாமல் சந்தையை நோக்கி உற்பத்தி என்பதை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றும் உற்பத்தி நோக்கமும் உற்பத்தி உறவையும் மட்டும் சுட்டிக் காட்டி முதலாளித்துவ விவசாய முறை என்பது எளினப்படுததுவதாக இருக்கிறது.

    இதனை ஆசசரியப்படுத்துவதற்காக நான் கூறவில்லை. விளக்கம் பெற விரும்புகிறேன்.

    பழங்குடியினரிடம் சேகரமாகும் தேன் போன்ற பொருட்களுக்கு சந்தை உண்டு, ஏன் சர்வதேச சந்தை கூட உண்டு என்பதால் பழங்குடியினரை முதலாளித்துவ உற்பத்தியாளராக பார்க்க முடியுமா? அவர்களின் பொருளுக்கு முதலாளித்துவ சந்தை இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நான் மீண்டும் மீண்டும் கேட்பது உற்பத்தி முறையில் முதலாளித்துவ அம்சம் இருக்கிறதா ? விளைபொருட்கள் முதலாளித்துவ சந்தையை நோக்கியே செல்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். பெருவீத உற்பத்தி முறையில் விவசாயம் நடை பெறவில்லை என்பதைத்தான் கூறவிரும்புகிறேன். அது மட்டுமல்லாது நமது நாட்டில் துண்டுதுக்கானி நிலங்களை வைத்திருப்பர்களை ஒருங்கிணைந்து கூட்டுறவாக இணைக்க முயற்சிக்க வேண்டுமா? அல்லது முதலாளித்துவ உற்பத்தி முறையை நோக்கி தானே மாற்றம் பெற்று வருகிறதா? என்பதை விளங்கிக் கொள்ள முயற்சிக்கிறேன்.


    முதலாளித்துவ விவசாயம்., நிலப்புத்துவ விவசாயம். அரை நிலப்பிரப்புத்துவ விவசாயம், நிலப்பிரபுத்துவ கூறுகள் என்ற வார்த்தைகளைவிட உண்மை நிலவரங்களை அறியவிரும்புகிறேன். நான் விவசாயி அல்ல. சென்னை நகரத்தின் நடுவில் ஓர் ஒரத்தில் வாழ்கிறேன்.

    விவசாய உற்பத்தியில் முதலாளித்துவ உற்பத்தி முறையை மேற்கொண்டிருப்பது அல்லது மேற்கொள்வது என்பது பற்றி அறியவிருமபுகிறேன்.

    விவசாயத்தில் நிகழும் மாற்றத்தையும், நிகழ்த்த வேண்டிய மாற்றத்தையும் பற்றியே சிந்திக்கிறேன்.

    அ,கா,ஈஸ்வரன்

    பதிலளிநீக்கு
  8. தோழர் அ,கா,ஈஸ்வரன்,
    "பெருவீத உற்பத்திமுறை நிகழாமல், நிலங்கள் ஒருங்கிணைக்கப்படாமல், நிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருநதால் சிறுவிவசாயிகளை ஓட்டாண்டியாக்கி பாட்டாளிகளாக மாற்றம் நிகழ்ந்திருக்கும் அவ்வாறு நிகழாமல் சந்தையை நோக்கி உற்பத்தி என்பதை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றும் உற்பத்தி நோக்கமும் உற்பத்தி உறவையும் மட்டும் சுட்டிக் காட்டி முதலாளித்துவ விவசாய முறை என்பது எளினப்படுததுவதாக இருக்கிறது." என்று பார்ப்பது இயக்கவியலுக்கு முரணான பார்வையாகவே தெரிகிறது. இயக்கவியலில் பொருட்களின் மாற்றத்தை அதன் இயக்கத்திலேயே பார்க்கவேண்டும்; நிலையாக நிறுத்தி வைத்துப் பார்க்கக் கூடாது என்பது தாங்கள் அறியாதது அல்ல. ஆனால் அதை நடைமுறையில் பொருத்திப் பார்க்கும் போதுதான் தவறு நிகழ்வதாகக் கருதுகிறேன்.

    முதலாளித்துவம் முற்போக்கானதாக இருந்தகாலத்தில் தோன்றி வளர்ந்த முதலாளித்துவ நாடுகளை அதன் காலகட்டத்திலிருந்து பிரித்து தனியே நிறுத்தி வைத்துக் கொண்டு, முதலாளித்துவம் பிற்போக்கானதாகி ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்து இரண்டு உலகப் பொதுநெருக்கடிகளைச் சந்தித்து அதன் அந்திமக்காலத்தில் இருக்கும்போது தோன்றி வளர்ந்த இந்தியா போன்ற முதலாளித்துவ நாடுகளை ஒப்பிடுவது இயக்கவியலுக்கு முரணானதே. முதலாளித்துவச் சந்தைக்கான லாபநோக்க உற்பத்தியும் கூலிக்கு தன் உழைப்பை விற்கும் விவசாயக் கூலித்தொழிலாளர்-கூலி கொடுக்கும் விவசாய நிலமுதலாளி என இருக்கும் உற்பத்தி உறவும் முதலாளித்துவ விவசாய முறையின் குணாம்சரீதியான கூறுகளாகும். வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவான பெருவீத உற்பத்தி, குறைவான அளவில் நிலங்கள் ஒருங்கிணைப்பு, குறைவான அளவில் சிறுவிவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்பட்டு பாட்டாளிகளாக மாற்றப்படுதல் ஆகியனவெல்லாம் முதலாளித்துவ விவசாய முறையின் அளவுரீதியான கூறுகளாகும். அளவுரீதியாக அவை குறைவாக இருப்பதற்குக் காரணம் முதலாளித்துவம் பிற்போக்கானதாகி அதன் அந்திமக்காலத்தில் இருக்கும்போது இந்தியாவில் முதலாளித்துவம் தோன்றி வளர்ந்ததே ஆகும். இருப்பினும் இந்த அளவுரீதியான மாற்றமும் கடந்த இந்தியா சுதந்திரம் பெற்ற கடந்த 63 ஆண்டுகளில் அளவில் கூடிக்கொண்டே வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள புள்ளிவிபரங்கள் தேவையில்லை.

    தோழரே இதுசம்பந்தமாக ஆக்கபூர்வமான விவாதம் அரசியல்ரீதியில் தேவையாக இருக்கும் இந்த நேரத்தில் தங்களுடன் இதுபற்றி விவாதிப்பதில் ஆர்வமாக இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்