சனி, 16 ஜூலை, 2011

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியும், அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திறனும் தீரா நெருக்கடி கொண்ட முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகளே!

       
  இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக குஜராத் விளங்கி வருகிறது. நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசு ஒரு சிறந்த நிர்வாகத்திறன் வாய்ந்த அரசாக பொதுவாக எல்லோராலும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினராலும் பார்க்கப்படுகிறது. இதேபோன்றதொரு அரசு நிர்வாகத்தை ஏன் நமது மாநில அரசுகளால் மேற்கொள்ள முடிவதில்லை என்ற எதிர்பார்ப்பு இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களிடமும் நிலவுகிறது. ஏன் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வரும்கூட குஜராத் போன்றதொரு தொழில் வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்டுவேன் என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார். ஒரு சமயத்தில் தீவிர மதவெறியாளனாக பார்க்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படுகிறார்.


         உலக முதலாளித்துவமும் அதன் பங்கும் பகுதியுமான இந்திய முதலாளித்துவமும் மீளமுடியாதப் பொருளாதாரச் சந்தை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில் ஓஹோ! என்று புகழுமளவிற்கு இந்தியாவின் ஒரு சிறிய பகுதியான குஜராத் மாநிலமும் திகழ்வதற்கான காரணமும், நிர்வாக மாட்சிமையுடையவர் என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி புகழப்படுவதற்கான காரணங்களும் என்ன? உண்மையிலேயே குஜராத் மாநிலமும் அங்கு நிகழ்ந்துவரும் தொழில் வளர்ச்சிப் போக்கும் உலகனைத்திலும் தோன்றியுள்ள முன்னைவிட வலுவான முதலாளித்துவச் சந்தை நெருக்கடியிலிருந்தான விதிவிலக்கா? அல்லது சிறந்த நிர்வாகம் என்ற மாயக்கோல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கைகளில் குடிபுகுந்துள்ளதா?


          இந்தியாவின் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் அரபிக் கடற்கரைப் பகுதியில் கட்ச்   போன்ற முப்பதிற்கும் மேற்ப்பட்ட இயற்கை துறைமுகங்கள் உள்ளன. இந்தியாவின் மிகமுக்கிய தொழில் நகரமான மும்பையை தலைநகர் புதுதில்லியோடு இணைக்கும் தங்க நாற்கரச்சாலைப் பகுதியின் பெரும்பகுதி குஜராத் மாநிலத்தின் பெருநகரங்களை மும்பையுடனும், புதுதில்லியுடனும் இணைப்பதாக உள்ளது. இந்தியாவில் மேற்கே அரபிக்கடலை நோக்கிப் பாயும் நர்மதை, தபதி ஆகிய இரண்டு நதிகளும் அதன் பாசனப்பகுதியும் முழுவதுமாக குஜராத் மாநிலத்திலேயே உள்ளன. இது தவிர 1800களிலேயே தொழிற்சாலைகளைக் கொண்ட நகரங்களாக விளங்கிய அமதாபாத்தும், பரோடாவும் இன்று குஜராத் மாநிலத்தின் முக்கிய தொழில் நகரங்களாகும். இவ்வாறாக இயற்கையிலேயே தொழில் துவங்குவதற்கு ஏற்றதொரு மாநிலமாக குஜராத் எப்போதுமே இருந்து வந்துள்ளது.


          இங்கிலாந்து மற்றும் பிரான்சில் தொழிற்புரட்சி துவங்கிய காலகட்டமான கி.பி.1800களிலேயே தற்போதைய குஜராத் மாநிலத்தின் நகரங்களான அமதாபாத் மற்றும் பரோடாவில் ஜவுளித் தொழிற்சாலைகள் துவங்கப் பட்டன. அரை நூற்றாண்டிற்கும் மேலாக குஜராத்தின் சூரத் நகரைச் சுற்றிலும் வைரப் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள் உள்ளன. பொதுவாக குஜராத் மாநிலம் முழுவதிலும் குறிப்பாக ஆனந்த் நகரத்திலும் பால் மற்றும் பால் சார்ந்த உற்பத்தித் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. ஏன் குஜராத் மாநிலத்தின் விவசாயம் முழுவதுமே பால்மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயமாகவே மீப்பெரும் பகுதி உள்ளது. நரேந்திர மோடியின் ஒரு குறிப்பிடத்தக்க திட்டமான நர்மதா நதிநீர்ப் பாசனத் திட்டம் குஜராத்தின் விவசாயத் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளது. ஜாம் நகரில்கண்டறியப்பட்டுள்ள கடலுக்கடியிலான பெட்ரோல் வளம் ரிலையன்ஸ் பெட்ரோல் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் உருவாவதற்கு வாய்ப்பாக உள்ளது. ஹிம்மத் நகர் உள்ளிட்ட வடக்கு குஜராத் மற்றும் செளராஷ்டிராப் பகுதிகளைத் தவிர ஏறக்குறைய குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி நிறைந்தே காணப்படுகிறது. ஆனால் இவ்வளர்ச்சிப் போக்கானது தற்போது தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சிப் போக்கிலிருந்து மிகப் பெரிய அளவில் வேறுபட்டதல்ல.
     

          திரைகடல் ஓடி திரவியம் தேடு என்ற கூற்றிற்கிணங்க பழங்காலம் தொட்டே குஜராத்திகள் உலகின் பல்வேறு நாட்டிற்கு சென்று பொருளீட்டி வந்துள்ளனர். தற்போதும் பொருளீட்டி வருகின்றனர். அவ்வகையில் முந்தைய காலங்களில் மூலதனம் திரட்டிய குஜராத் பட்டேல் மற்றும் ஜெயின் சமூகத்தினரும், பார்சிகளுமே இன்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பாத்தியத்திற்கு உள்ளானவர்கள். இச்சமூகங்களில் தோன்றி வளர்ந்த முதலாளிகளே குஜராத் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை நிர்மாணிப்பவர்கள். அம்பானி, அடானி போன்ற மிகப்பெரிய முதலாளிள் இவ்வளர்ச்சிப் போக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாவர். இவர்களின் வளர்ச்சிக்காகவே மோடி அயராது உழைத்து வருகிறார்.


         தற்போதைய முதல்வர் நரேந்திர மோடி அரசு நிர்வாகத்தில் இச்சமூகத்தினைச் சேர்ந்தவர்களே பெருமளவில் உள்ளனர். அவர்களை தமது அரசு நிர்வாகத்தில் எப்பொழுதுமே தக்க வைத்துக் கொண்டுள்ளதும், அவர்களைப் பாதுகாத்து ஆவண செய்து தருவதுமே திருவாளர் நரேந்திர மோடியின் தலையாய கடமையாக இருந்து வருகிறது. திரு.மோடியின் அரசாங்கத்தின் உள்துறை அமைச்சராக இருந்த திரு.அமித் ஷா அவர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் அதற்காக வக்காலத்து வாங்கிய முதலமைச்சர் மோடியின் செயல்பாடுகளும் மேற்கூறியவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இச்சமூகங்கள் தவிர இதர சமூகங்கள், குறிப்பாக சிறுபாண்மையினரான முஸ்லிம் சமூகத்தினரும் குஜராத் மாநிலத்தின் தற்போதைய தொழில் வளர்ச்சிப் போக்கின் பலன் அடையாது சமூகத்தில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். பட்டேல், ஜெயின் போன்ற முன்னேறிய சமூகத்திலும் முதலாளித்துவச் சமூகத்தின் அடிப்படை விதியின்படி மிகச் சொற்பமானவர்களே முதலாளிகளாக உருப்பெற்றுள்ளனர். 


           இப்பிண்ணனியில் நாம் குறிப்பிட்டு நோக்க வேண்டிய ஒரு விசயம் இதுதான். அதாவது தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ள குஜராத் கல்வி வளர்ச்சியில் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. 31.8 சதவீதத்திற்கும் மேலான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர். நாட்டிலேயே அதிகப் படியான மின் கட்டணம்,  இயற்கை வாயுவை அதிக அளவில் எரிபொருளாக உபயோகித்தும் தமிழ் நாட்டைப் போல மூன்று மடங்கு பேருந்து கட்டணம், தரம் குறைந்த பொதுப் போக்குவரத்து குஜராத் மாநிலத்தலே நிலவுகிறது.  உயர்கல்விற்காக குஜராத் மாணவர்கள் தென்மாநிலங்களுக்கு கணிசமான அளவில் செல்லும் போக்கே உள்ளது. இந்தியாவில் உயர்கல்வி வளர்ச்சியில் குஜராத் மிகவும் பின்தங்கிய இடத்திலேயே உள்ளது. இந்தியாவின் மருந்து உற்பத்தியில் 30 சதவீதத்திற்கும் மேலான உற்பத்தியைக் கொண்டுள்ள குஜராத் மாநிலம் மருத்துவத் துறையில் மிகமிகப் பின்தங்கியள்ளது. 19ஆம் நூற்றாண்டு தொட்டே பிழைப்பிற்காக இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், உலகின் பல பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்த குஜராத்திகள் ஏராளம்.


               இத்துனை தொழில் வளர்ச்சியுடைய அம்மாநிலத்தில் மேற்கூறிய போக்குகள் தோன்ற காரணம் என்ன? குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திறனில் எங்கேனும் ஓட்டை உள்ளதா? அல்ல! அவர் நிர்வாகத் திறனுடையவர்தான். மக்கள் எழுச்சியின் காரணமாக மேற்குவங்கம் சிங்கூரிலிருந்து வெளியேற்றப்பட்ட டாடாவின் நானோ கார் தொழிற்சாலையை திரு. ரத்தன் டாடா அவர்களை குஜராத் மாநிலம் சானந்த் நகருக்கு இடமாற்ற வைத்தது விவசாய, தொழிலாளர் இயக்கங்களை எழும்ப விடாமல் அடக்கி ஒடுக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திறனே! தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும்போதும், முதலாளித்துவத்தின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்கு பங்கம் ஏற்படும்போதும்  மதவாத பாசிச வெறிவாதத்தை கட்டவிழ்த்துவிடுவதும் அவரது சிறந்த நிர்வாகத்திறனே! 2002ல் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பும் அதன் பிண்ணனியில் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்திற்கெதிராக குஜராத் மாநிலம் முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட மதக் கலவரங்கள் முதற்கொண்டு தற்போது அவ்வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் எரிப்புவரை அவரின் நிர்வாகத்திறனை பறைசாற்றுபவையே. இச்செயலுக்காகவே அமெரிக்க அரசு திருவாளர் மோடி அவர்களுக்கு விசா கொடுக்க மறுத்ததை நினைவில் கொள்ள வேண்டும்.


          சமூகம் தொழில் மயமாகும் போது தொழில் வளர்ச்சிக்குகந்த விகிதத்தில் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிக்கையும் உயரும் என்பதும், முதலாளி‡தொழிலாளி இடையிலான அடிப்படை முரண்பாடானது தீவிரமடையும் என்பதே முதலாளித்துவ விதியாகும்.  சமூகம் பயன்பெறும் வகையில் சமூகத்திற்கு எதுவேமே வழங்க முடியாத முதலாளித்துவமானது உலகப் பொது நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில் உலகம் முழுவதிலுமே தொழிலாளர் இயக்கங்களும், போராட்டங்களும் எழுச்சி பெற்று வருகின்றன. இந்நெருக்கடி சூழ்ந்த சூழ்நிலையில் இத்துனை தொழில் வளர்ச்சி அடைந்த குஜராத் மாநிலத்தில் ஏன் தொழிற்சங்க இயக்கங்களே நடைபெறுவதில்லை?


           பொதுவாகவே சுதந்திர இந்தியாவில் தொழிற்சங்கப் போராட்டங்களும், இடதுசாரி கம்யூனிசப் போக்குகளும் மிகக்குறைந்த வீச்சில் உள்ளது குஜராத் மாநிலத்தில்தான். துவக்கத்தில் மகாத்மா காந்தியின் கிராம ராஜ்ய கோட்பாடுகளால் அம்மாநிலத்தில் திசை திருப்பட்ட தொழிலாளர் இயக்கங்கள் தற்போது மத வாத பாசிசத்தால் அடக்கி ஒடுக்கப் படுகின்றன. ஆனால் 1970களில் இந்தியாவையே உலுக்கிய ஜே.பி. இயக்கமானது வீறுகொண்டு எழுந்ததும் குஜராத் மாநிலத்திலேயேதான். அன்றைய காலகட்டங்களில் குஜராத் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் இப்போக்கிலிருந்தான விதிவிலக்காகும்.
 

             சூரத் வைரப் பட்டறைத் தொழிலாளரின் நீண்ட காலப் போராட்டம், அரசின் அரசு ஊழியர் விரோதப் போக்குகளை கண்டித்து நடைபெறும் அரசு ஊழியர் போராட்டங்கள், சமூக ஆர்வலர் மேதா பட்கரால் எழுச்சியடன் நடத்தப்பட்டு வரும் நர்மதா அணையைச் சுற்றியுள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களின் வாழ்வாதாரப் போரட்டம், 2011 மார்ச்சில்  தொழிற்சாலைகளுக்கான நில ஆக்ரமிப்பை எதிர்த்து மதுவாவைச் சேர்ந்த பி.ஜே.பி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கணுபாய் தலைமையிலான முந்த்ரா துறைமுகம் துவங்கி குஜராத் தலைநகர் காந்திநகர் வரை மாநிலம் முழுவதிலேமே நடைபெற்ற பாதயாத்திரைப் போராட்டங்களும் என தற்போது குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்  வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் நெருக்கடி சூழ்ந்த முதலாளித்துவமானது முதலாளி, தொழிலாளி இடையேயான தீர்க்க முடியா வர்க்கப் பகைமையின் காரணமாக தொழிலாளி வர்க்கப் போராட்டங்களை உருவாக்கவே செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டேயாகும் .


            இவ்வாறு தொழிலாளர் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இப்போராட்டங்கள் வெளிச்சத்திற்கு வராமல் மாறாக முதலாளி வர்ககத்தின் ஆதரவாகச் செயல்படும் குஜராத் முதல்வர் குறித்த இத்தகைய புகழாரங்கள் மட்டும் ஏன்? இதற்கான காரணங்கள் இரண்டேதான். ஒன்று தொழிலாளர் போராட்டங்களே குஜராத் மண்ணில் தோன்ற விடாமல் அடக்கி ஒடுக்கும் பாசிசத் தன்மை கொண்ட மதவாதத்தை தன்னுடைய வலுமிக்க ஆயுதமாகக் கொண்ட குஜராத் முதல்வர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நிர்வாகத்திறனும்;மற்றொன்று தீராத நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்திய முதலாளித்துவத்தைக் காக்கும் ஆபத்பாந்தவனாக நரேந்திர மோடியைப் பார்க்கும் இந்திய முதலாளி வர்க்கத்தின் செயலுமேயாகும்.

         
             இதனடிப்பையிலே தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளதைப் போல ஒரு தொழில்துறை வளர்ச்சியை பல்வேறு சாதகமான அம்சங்களின் துணை கொண்டு பெற்றிருந்த போதிலும் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியையும், அதன் பிண்ணனியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் உயர்த்திப் பிடிக்கும் வேலையை முதலாளி வர்க்கத்தின் கைகளில் உள்ள இந்திய தொலைத் தொடர்புச் சாதனங்கள் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டுள்ளன. மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சி ஆட்சியில் இருந்த சமயத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் அவர்களுக்கு குஜராத்தின் கதவுகள் எப்போழுதுமே திறந்து வைக்கப்பட்டுள்ளன போன்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் டாம்பீகமான வார்த்தைகள் தான் வெறுமனே ஒரு பாசிச நோக்கம் கொண்ட  மதவாதி மட்டுமல்ல இந்திய முதலாளி வர்க்கத்தின் நலம் பேணவும், அதன் வாழ்நாளை நீட்டிக்கச் செய்ய தன்னால் சமூக ஜனநாயக முகத்திரையையும் போர்த்திக் கொள்ள முடியும் என்பதையே  வெளிப்படுத்திக் கொண்டுள்ளன.


             என்னதான் வேறுபட்டு தோன்றினாலும் குஜராத் மாநிலத்தில் உள்ளதும் தன்னால் உருவாக்கப்படும் தொழிலாளி வரக்கத்தின் கைகளிலே தன் அழிவைத் தேடிக் கொள்ளும் அழிந்து கொண்டிருக்கும் அழுகி நாற்றமெடுக்கும் முதலாளித்துவப் பொருளுற்பத்தியும், அதன் சமூக அமைப்புமே ஆகும். அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வரும், அவரின் பிரமிக்கத்தக்க நிர்வாகத் திறனும் இம்முதலாளித்துவ நலனைப் பேணிக் காக்கும் ஆயுதங்களே! அவற்றின் போலி முகத்திறையைக் கிளித்தெறிந்து வரலாற்று ரீதியாகவே தொழிலாளர் போராட்டங்களும், இடதுசாரி அரசியலும் குறைந்த வீச்சில் உள்ள குஜராத் மாநிலத்தில் சரியான சமூக மாற்றத்தை கொணரவள்ள இடதுசாரி அரசியலை வலுப்படுத்த சமூக ஜனநாயக சக்திகளே ஒன்றுபடுவோம்.       
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்