வெள்ளி, 11 மார்ச், 2011

ஜப்பானில் கடும் நிலநடுக்கம் - மிகப்பெரிய மனிதப் பேரழிவு

வடகிழக்கு ஜப்பானில் 8.9 என்ற ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜப்பானின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று சுனாமி தாக்கியது. கடற்கரைச் சாலைகளில் ஏராளமான கார்கள் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டன. 8.9 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வுமையம் தெரிவித்தது. டோக்கியோவுக்கு வடகிழக்கே 230 மைல்கள் தொலைவில் 15 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதையடுத்து ஜப்பான், ரஷ்யா, மார்கஸ் தீவு மற்றும் வடக்கு மரியானாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.ஏராளமான கார்கள், கட்டடங்கள், படகுகள் உள்ளிட்டவை கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. நிலநடுக்கத்தால் பல இடங்களில் தீவிபத்தும் ஏற்பட்டன.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசுபிக்கின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.கயாம், தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் அமெரிக்காவின் ஹவாயிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்காண மைல்கள் தொலைவில் உள்ள டோக்கியோவில் கட்டடங்கள் பலமாக அதிர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட 30 நிமிடங்களுக்குப் பின்னரும் டோக்கியோவில் உள்ள உயரமான கட்டடங்கள் அதிர்ந்துகொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு செல்போன் தொடர்புகள் முற்றிலும் செயலிழந்துவிட்டன.டோக்கியோவில் உலகின் மிகவும் பரபரப்பான ஷின்ஜுகு நிலையத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுவிட்டனர். ரயில்கள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன.டோக்கியோவின் முக்கிய விமானநிலையம் மூடப்பட்டது.இது மிகவும் அரிதான நிலநடுக்கம், சேதங்கள் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரிக்கலாம் என ஜப்பான் பேரிடர் மேலாண்மை மையத்தின் அலுவலர் ஜூனிச்சி சவதா தெரிவித்தார்.ஜப்பான் நேரப்படி பிற்பகல் 2.46 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குள் 5 சக்திவாய்ந்த நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. அதன் அளவீடுகள் 7.1 என்ற ரிக்டர் அளவில் இருந்தன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 என்ற அளவில் இருந்தது. எனினும் 8.4 ரிக்டர் அளவில் இருந்ததாக ஜப்பான் தெரிவித்தது.டோக்கியோவின் ஒடைமா மாவட்டத்தில் பெரிய கட்டடம் ஒன்று தீப்பிடித்து, புகைமண்டலமாக காட்சி அளித்தது. மத்திய டோக்கியோவில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அனைவரும் பிளாட்பார்ம்களில் நடந்துசென்றனர்.டோக்கியோவிலும், புறநகரிலும் 40 லட்சத்துக்கும் மேலான கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.பலர் இறந்து விட்டதாக தகவல்கள் வந்து கொண்டுருக்கின்றன. இது போன்ற இயற்கை பேரழிவு தவிர்க்க முடியாததுதான் என்றாலும் அதை வருங்காலங்களிலாவது தடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்