இ.எம்.ஆர்.ஐ. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் (இணைப்பு சி.ஓ.ஐ.டி.யு.) சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கும் இயக்கம் உற்சாகத்துடன் இன்று தொடங்கியது. மதுரை, தேனி, விருதுநகர், கோயமுத்தூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிப்டில் இல்லாத தொழிலாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் குறை தீர்க்கும் நாளாகிய இன்று மனுக்கள் வழங்கினர்.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்ற சராசரி மனுக்களைப் போல் அந்தந்தத் துறையினருக்கு மனுக்களை அனுப்பாமல் தங்களது நேரடிப் பார்வையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கைகள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்காக தங்களிடமே வைத்துக் கொண்டுள்ளனர். அதுபோல் கோயமுத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் தங்களிடம் மனுக் கொடுத்ததற்காக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் எவர் மீதாவது நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நிர்வாகத்தை எச்சரித்தது அந்த மாவட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது மற்ற மாவட்ட தொழிலாளர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது.
இன்று மனுக் கொடுக்காத மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து இனிவரும் நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக் கொடுக்க இருக்கிறார்கள். இன்று நடந்த இயக்கம் ஒரு தொடக்கமே. இதுவரை கோரிக்கை மனுவின் மாதிரி நகல் வரப்பெறாத மாவட்டப் பொறுப்பாளர்கள் நமது சங்கத்தின் நாகர்கோவில் தோழர் மகிழ்ச்சி (செல்- 9443347801) அவர்களை தொடர்புகொண்டு இமெயில் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக் கொடுத்ததால் மட்டும் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் மனுவை தங்களது நேரடி விசாரணையில் வைத்திருப்பதால் மட்டும் அல்லது சில ஆட்சியர்கள் பழிவாங்கும் நடவடிக்கை கூடாது என்று எச்சரித்திருப்பதால் மட்டும் நாம் நம்முடைய கோரிக்கையின் வெற்றியை நோக்கி சென்று விட்டதாக எண்ணி இருந்துவிட முடியாது. ஏனெனில் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இந்த ஆரம்ப இயக்கத்தை நாம் முழு வெற்றியடையச் செய்தால் மட்டுமே நம்முடைய அடுத்தகட்ட போராட்டத்தை மாநில அளவிலான போராட்டமாக கொண்டு செல்ல முடியும். தமிழகத்தின் தென்கோடி முனையில் நாகர்கோவில் தோழர்கள் தொடங்கி வைத்த இம்மனுக் கொடுக்கும் முதல்கட்ட இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவச் செய்ய வேண்டியது நம்முடைய கடமையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக