வெள்ளி, 29 ஜூன், 2012

மார்க்சியத்தை புதைக்க முடியாது



நனைகிறதே ஆடு என 
இப்போது 
நரிகளுக்கென்ன அக்கறை!!! 
சுதந்திரம் விரும்பிய ராஜாளிக்கு ?
திசைகளுண்டா  கட்டுப்பாடுகளுண்டா ?
லெனின் ஒரு மலைக்கழுகு. 


மனசாட்சியின் உச்சியிலிருந்து 
மானுடத்தை காண
கற்றுக்கொண்டவர்  லெனின் 
அதனால் தான்
மனித சமூகத்தின் மனசுக்கு 
ரெக்கை கட்டிவிட்டு அழகு பார்த்தார்  
விரிந்தது  புரட்சி சிறகுகள்.

பழுதுபட்டுப் போன சமூக இதயத்திற்கு
 அறுவைசிகிச்சை நிபுணர்கள் 
 பாட்டாளிகளே  என்று 
 திட்டவட்டமாய் கணித்த
மார்க்சின் வார்த்தையை   
வாழ்க்கையாக்கியவர் லெனின். 
காலத்தின் நெற்றிப்பொட்டில் 
கம்யூனிச தீப்பொறி வைத்தார்  
பாட்டாளிவர்க்கம் வெடித்து கிளம்பியது 
பீரங்கி குண்டுகளாக.

 ஜெர்மன்,லண்டன் என நாடு கடந்தாலும் 
அவர் ஆன்மாவுக்குள் தவழ்ந்தது 
மக்கள் பாசமும் 
மானுட நேசமும்.

சிகப்பு கம்பள விரிப்பில்
நடக்கும்போது கூட 
உழைக்கும் வர்க்கத்தின் இரத்தத்தைத்தான்  
தரிசித்து கொண்டிருந்தார்.

உலகின் அத்தனை
 இயங்கு நிலையிலும் அவருக்கு
இயக்கவியல் தத்துவத்தை 
 பாடம் நடத்திக்கொண்டிருந்தார்  மார்க்ஸ்.

எங்கெங்கு காணினும் சக்தியடா 
அத்தனையும் உன்னால் தான் விருக்தியடா 
இதை உணராமல் போனதே 
நம் புத்தியடாயென
பாட்டாளிகளின் செவிப்பறைக்குள்
அறைகூவல் விடுத்து இயங்கினார் 
தொழிலாளி வர்க்கத்தின் 
நேசமிகு  தொலைஇயக்கியாக 

ஏ! ரஷ்ய முதலாளித்துவமே 
உன் அடிமனமும்
கஜானா  பீடமும் 
ஆட்டம் கண்டுகொண்ட 
அச்சத்தின் பிரதிபலிப்புதான் 
லெனின்  உடலடக்கபேரில்  
உன் நீலிக் கண்ணீர். 
நூற்றாண்டு முதலைக்கண்ணீரை
கண்ட எங்களுக்கு 
முதலாளிகளின்  சூழ்ச்சி கண்ணீர்….  
உணராமலா  போய்விடுவோம் ? 

தெரியாமல் தான் கேட்கிறேன், 
நடைபிணங்களாய் உலவும் 
உழைக்கும்  வர்க்கத்தின் மீது 
வராத அக்கறை,
இறந்துபோன மலைக்கழுகின் மீது 
இப்போது என்ன மானசீக கரிசனம் ?

உயர்ந்துகொண்டிருப்பது
 உலக வெப்பம் அல்ல 
உழைக்கும்  வர்க்கத்தின்
உஷ்ணமூச்சு என்று 
இப்போது தான் கண்டுகொண்டாயா?

அந்த அச்சத்தின் சகுனித்தனமா
இந்த உடலடக்க நரித்தனம்?

லெனின்  உடல் மண்ணுக்குள் 
புதைந்து விட்டால் 
மார்க்சியம் மறைந்துபோகுமென 
எந்த சாமக் கோடாங்கியின் 
பேச்சைக் கேட்டு வந்து 
சட்டமெழுத துணிந்தீர்கள்?

அந்த கண்ணாடிப் பேழைக்குள் 
சரிந்து உறங்கிக் கொண்டிருப்பது 
சரித்திர சம்மட்டி 
அதன் இயக்கவியல் ஓங்கு வீச்சு 
இன்னும் ஓய்ந்துவிடவில்லை 
வர்க்கமழியும்வரை ஓயப்போவதுமில்லை. 

உங்கள் கபாலத்தின்  திண்மையை 
சோதித்துப் பார்க்க 
எங்கள் சம்மட்டிகளுக்கு ஒரு வாய்ப்பை 
நீயே தருவாய் என்றானால் 
இதோ 
எங்கள் தொழிலாளி வர்க்கம் 
உள்ளங்கையில் 
மண் அள்ளி தேய்த்து 
சம்மட்டி கம்புகளை இறுகப்பற்றி 
முன்னேறி வருகிறோம் 

முதலாளிகளின் பணபலமா 
பாட்டாளிகளின் மனபலமா 
இரண்டிலொன்றை 
இப்போதே எழுதி விடலாம் 
வரலாற்றின் தொடர்ச்சியில்.

 கவிஞர். க.அறிவுக்கரசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்