108 ஆம்புலன்ஸ் திட்டம் முழுக்க முழுக்க அரசின் நிதியுதவியுடன் நடைபெறுகிறது, ஆம்புலன்ஸ் வாங்குவது, ஊழியர்களின் சம்பளம், வண்டிக்கு ஆகும் பிற செலவுகள் அனைத்துமே அரசே வழங்குகிறது. ஜி.வி.கே. நிறுவனம் வெறுமனமே அரசின் பணத்தை பெற்று அதை நிர்வாகம் செய்யும் பணியை மட்டும் செய்கிறது. இவ்வாறு செயல்படும் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு அரசு தரும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே ஊழியர்களுக்கு வழங்கிவருகிறது ஜி.வி.கே.நிர்வாகம் . பணி மூப்பின் அடிப்படையில் சம்பள உயர்வை வழங்காமல் அப்ரைசல் என்ற பெயரில் நிர்வாகத்திற்கு சாதகமாக நடந்து கொள்பவர்களுக்கு சற்று கூடுதலாகவும் ( அதுவும் அதிகம் இல்லை ) , மற்றவர்களுக்கு மிக குறைந்த ஊதிய உயர்வையும் வழங்கி வருகிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சங்கம் அமைக்கும் உரிமையின் படி சங்கம் அமைத்து செயல்படும் ( 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் Reg No .1508 / MDU - இணைப்பு COITU ) ஊழியர்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி வருகிறது ஜி.வி.கே நிர்வாகம் . 108 ஆம்புலன்ஸ் வண்டிகளுக்கு ஏற்படும் பழுதுகளை பலமுறை இ.எம்.டி . மற்றும் பைலட்டுகள் மேல் அதிகாரிகளிடம் முறையிட்டும் அவற்றை பழுதி நீக்கி தருவதில்லை. உயிர்காக்கும் கருவிகளை உரியமுறையில்
வழங்குவதுமில்லை. இவ்வாறு தான் அதிகமாக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக ஊழியர்களையும் , பொதுமக்களையும் வஞ்சித்து வருகிறது ஜி.வி.கே நிர்வாகம் . இந்த தவறுகளை தட்டி கேட்கும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மீது கடும் அடக்கு முறையை ஏவி விடுகிறது.
இந்த தொழிலாளர் விரோத மக்கள் விரோத போக்குகளை கண்டிக்கும் விதமாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஓன்று 30 .05 .2012 அன்று மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், COITU மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த தோழர்.சிவக்குமார் , தோழர். KK சாமி , தோழர். பிரேம் குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஜி.வி.கே.நிர்வாகத்தின் அடக்குமுறைகளை கண்டித்தும் , தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வழியுறுத்தியும் உரை நிகழ்த்தினர். ஜி.வி.கே. நிர்வாகத்தின் அடக்குமுறைகளை கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கம் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் படும் துன்பங்களை மக்களுக்கு உணர்த்தும் விதத்திலும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு நம்பிக்கையை தருவதாகவும் அமைந்தது என்றால் அது மிகை அல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக