மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC ) பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஏப்ரல் 21 ,2012 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல சுற்று பேச்சு வார்த்தைகள் நிர்வாகத்திற்கும் , தொழிலாளர்களுக்கும் இடையே நிகழ்ந்தபோதும் தொழிலாளர்களின் நியாயமான எந்தக் கோரிக்கைகளையும் ஏற்க என்.எல்.சி நிர்வாகம் முன்வரவில்லை.
இந்த நிறுவனம் கடந்த வருடம் லாபமாக மட்டும் ரூ.1141 கோடிகளை ஈட்டியுள்ளது. நிரந்தர தன்மை பொருந்திய பணிகளை ஒப்பந்த பணியாளர்களை கொண்டு செய்யக் கூடாது என்று சட்டம் இருந்தும் கூட மத்திய அரசு நிறுவனமே அதை காலில் போட்டு மிதித்தால் மற்ற தனியார் தொழிற்சாலைகளின் நிலையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்.எல்.சி.யில் பணிபுரியும் தொழிலாளர்களில் 70 சதவிதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் (மொத்தம் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள் ) மிகுந்த ஆபத்து தன்மை பொருந்திய சுரங்கத் தொழிலில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ரூ.5000 மட்டுமே ஆகும். ஆனால் என்.எல்.சி. நிர்வாக இயக்குனரின் சம்பளமோ வருடத்திற்கு ரூ.35 லட்சம் ஆகும்.
'சம வேலைக்கு சம ஊதியம்' அதாவது என்.எல்.சியில் பணிபுரியும் நிரந்தத் தொழிலாளி எவ்வளவு சம்பளம் வாங்குகிறாரோ அந்த சம்பளம் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் , அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரமாக்க வேண்டும் என்பவையே ஒப்பந்தத் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகள் ஆகும். 40 நாள்களைத் தாண்டி வேலைநிறுத்தம் சென்று கொண்டு இருந்தாலும் என்.எல்.சி.நிர்வாகம் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க தயாராக இல்லை. தொழிலாளர்களை பட்டினி போட்டு பணியவைக்கும் முறையை கையாளப் பார்க்கிறது என்.எல்.சி. நிர்வாகம்.
இந்த போராட்டம் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களோடு
நின்று விடமால் என்.எல்.சியில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களும் , இந்தியாவெங்கும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கினால் தான் என்.எல்.சி. நிர்வாகத்தை பணிய வைக்க முடியும். அனைத்து தொழிற்சங்கங்களும் ,தொழிலாளர்களும் ஓன்று பட்டு என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற குரல் கொடுக்க வேண்டும் என 'சென்ட்ரல் ஆர்கனிசேசன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) அழைப்பு விடுக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக