திங்கள், 30 ஏப்ரல், 2012

நம்பிக்கை ஒளியை ஏற்றியது: மதுரையில் நடைபெற்ற அச்சகத் தொழிலாளர் கருத்தரங்கம்




மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் கோரிக்கை விளக்கக் கருத்தரங்கம்  மதுரை ,செல்லூர், 50 அடி ரோடு, தியாகி பாலு 2-வது தெருவில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக   19.04.2012  அன்று மாலை 4 மணியளவில்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அச்சகத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தோழர்.கதிரவன் தலைமை தாங்கினார். 


அவர் தனது தலைமையுரையில் அச்சகத் தொழிலாளர்கள் இரவு பகல் பார்க்காமல் மிகக்குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கிறார்கள், ஆனால் தொழிலாளர் நலச்சட்டங்களின் படியான பயன்கள் எதையும் அவர்கள் பெறுவதில்லை. அச்சகத் தொழிலாளர்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர வேண்டுமெனில் அச்சகத் தொழிலாளர்களின் ஓன்று பட்ட போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும் என்று பேசினார். 

விருதுநகர் மாவட்டம் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர்.ஜெகனாதன் பேசும்போது வரலாற்றில் தொழிலாளர்களுக்கு கிடைத்த உரிமைகள் அனைத்துமே தொழிலாளர்களின் ஓன்று பட்ட போராட்டத்தின் மூலம் கிடைத்ததே ஆகும். நாம் ஓன்று பட்டு போராடினால் நமது கோரிக்கைளை அடைவது சாத்தியமே என்று பேசினார். அச்சகத் தொழிலாளர்கள் யாருக்கும் பி.எப்., இ.எஸ்.ஐ. ஆகியவை பிடித்தம் செய்யப்படுவதில்லை, கண்டிப்பாக பி.எப். , இ. எஸ்.ஐ. பிடித்தம் செய்ய வலியுறுத்த வேண்டும். விலை வாசி உயர்வுகேற்றவாறு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் 16 மணி நேரம் உழைக்கும் தொழில்நுட்பம் தெரிந்த அச்சகத் தொழிலாளர்களுக்கு சமபள உயர்வு என்பது கானல் நீராகவே உள்ளது என்று மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கப் பொருளாளர் தோழர். நாகராஜ் பேசினார். 

விருதுநகர் மாவட்ட பட்டாசுத் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர்.தங்கராஜ் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் உழைப்பு , 8 மணி நேரம் ஓய்வு , 8 மணி நேரம் சமூகப் பணி என்பதெல்லாம் கனவாக மாறிவிட்டது. இன்று அச்சகத் தொழிலாளர்கள் மட்டுமல்ல அனைத்து தொழிலாளர்களுக்குமே 8 மணி நேரம் தூக்கம் போக மிச்ச நேரம் முழுவதும் முதலாளிகளுக்கு உழைத்து கொடுப்பதே விதியாகி தொழிலாளர்கள் மீது காட்டுத்தனமான சுரண்டல் கட்டவிழ்த்துவிடப்படுகிறது,இது தடுக்கப்பட வேண்டும் என்று பேசினார். 

மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர்.பாண்டி பேசும் போது அச்சகத் தொழிலாளர்கள் இரவு நேரமும் பணி செய்ய வேண்டியுள்ளது ஆனால் அதற்கு என்று எந்த சிறப்பு ஊதியமும் அளிக்கப்படுவதில்லை. இரவு நேரப்பணிக்கு இரட்டை   ஊதியம் வழங்கும் கோரிக்கையை  முதலாவதாக எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். விருதுநகர் மாவட்டம் அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர், தோழர் செல்வராஜ்    பேசும் போது ,ஒரே மாதிரியான வேலை செய்யும்  ழியர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் படியான சம்பள ஏற்றத்தாழ்வு என்பது நிர்வாகம் தொழிலாளர்களுக்குள் ஒற்றுமை வந்துவிடக்கூடாது என்பதற்காக செய்கிறது. சமூகத்தில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து உலகை அழகுற இயக்குபவர்கள் தொழிலாளர்கள் ஆனால், முதலாளித்துவம் அப்படிப்பட்ட பாட்டாளிகளை பிச்சைகாரர்களை போல கையேந்த வைத்துள்ளது, தொழிலாளர்களின்  உரிமைகள்  காக்கப்பட ஒன்றுபடுவோம் என்று பேசினார். 

மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர். பாலாஜி அவர்கள் பேசும் போது அச்சகத் தொழிலாளர்கள் என்பவர்கள் தொழில்நுட்ப அறிவு மிகுந்தவர்களாக இருந்த போதும் அதற்குரிய ஊதியம் கொடுக்கப்படுவதில்லை இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

 மாற்றுக்கருத்து ஆசிரியரும் இந்த சங்கத்தின் சட்ட ஆலோசகருமான தோழர்.த.சிவக்குமார், சங்கம் பதிவு செய்தல் போன்ற நடைமுறை வேலைகள் மட்டுமே அந்த சங்கத்தை வெற்றிகரமாக ஆக்கிவிடாது. தொழிலாளர்கள் ஓன்று பட்டு முழுமையான அரசியல் புரிதலுடன் படிப்படியாக போராட்டங்களை கைகளில் எடுப்பதன் மூலமே சங்கம் வெற்றிகளை ஈட்டமுடியும் என்று பேசினார். 

சிறப்பு அழைப்பாளராக இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட COITU வின் தென் இந்திய பொது செயலாளர் தோழர்.அ.ஆனந்தன் அவர்கள் தனது சிறப்புரையில் முன்பு தொழிற்சங்க இயக்கங்கள் வலுவாக இருந்த போது, அரசானது முதலாளிகளின் நலனை காப்பதற்காக சமரசம் செய்து வைக்கும் அமைப்பாக  தொழிலாளர் நல அலுவலங்களை  துவங்கியது, ஆனாலும் தொழிற்சங்க இயக்கங்கள் வலுவாக இருந்ததால் தொழிலாளர் நல அலுவலகங்களை சிறப்பாக பயன்படுத்த  தொழிற்சங்கங்களால் முடிந்தது. ஆனால் தற்போது  தொழிற்சங்க இயக்கங்களும் வலுவாக இல்லை. அப்படி இருக்கும் சில தொழிற்சங்கங்களும் சமரசப் பாதையிலையே பயணிக்கின்றன. புதிய வரலாறு படைக்கப்பட்ட வேண்டிய இடத்தில் மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கம் இருக்கிறது.  இந்த சங்கம்  வெற்றிப்பாதையில் அயராமல் பயணிக்கும் என்பதற்கு கட்டியம் கூறும் வகையில் இந்த சங்கத்தின்  செயல்பாடுகள் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துயுள்ளது என்று குறிப்பிட்டதோடு தொழிற்சங்க இயக்கத்தை வளர்த்தெடுக்க கைகொள்ளவேண்டிய விசயங்களை  விரிவாக எடுத்துரைத்தார்.

இறுதியாக கருத்தரங்கத்தில் கீழ் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அச்சகத்தில் வேலைசெய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பி.எப். , இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு தொழிலாளருக்கும் வருடத்திற்கு இரண்டு யூனிபார்ம் கொடுக்கப்பட வேண்டும்

தொழிலாளர்களுக்கு கட்டாயம்  போனஸ் வழக்கப்பட வேண்டும்

பல இடங்களில் நிர்ணக்கப்பட்ட மாத ஊதியம் என்பது இல்லாமல் இருக்கிறது. அனைவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

அரசு விடுமுறை நாள்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

 ஒவ்வொரு வருடத்திற்கும் 15 நாள்கள் கேசுவல் லீவ் விடப்பட வேண்டும்.

அச்சகத் தொழிலாளர்களுக்கு என தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும்

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நூற்றுக்கணக்கான அச்சகத் தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கம் அச்சகத் தொழிலாளர் மனதில்  புதிய நம்பிக்கை ஒளியை  ஏற்றியது என்றால் அது மிகை இல்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்