மேற்கு வங்கத்தில் 34 வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த இடது முன்னணி வன்முறையின் மூலம் ஆட்சியைத்தக்க வைத்து இருந்தது. தொழிலாளர்களின் தோழன் என்று சொல்லிக்கொண்டே முதலாளித்துவ சேவை செய்து கொண்டிருந்த இடது முன்னணியின் கோரமுகம் சிங்கூர், நந்திகிராமில் தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த நிலத்தை டாட்டவிற்கு பறித்து கொடுக்கும் புத்ததேவின் முயற்சிக்கு எதிராக போராடிய விவசாயிகளை துப்பாக்கி கொண்டு சுட்டுத் தள்ளிய போதே அம்பலப்பட்டு போனது. .கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் போராட்டங்களை அரசு இயந்திரத்தின் மூலமும், தனது கட்சி குண்டர்கள் மூலமும் வன்முறையை அரங்கேற்றி நசுக்கி டாட்டாவிற்கு தனது நன்றி விசுவாசத்தை காட்டியது அப்போது ஆட்சியில் இருந்த இடது முன்னணி.
இஸ்லாமிய மதத்தை விமர்சனம் செய்து எழுதிய தஸ்லிமா நஸ்ரூதின் என்ற பெண் எழுத்தளாரை மத அடிப்படைவாதிகள் பங்களாதேஷ்லிருந்து வெளியேற்றினர். அவர் மேற்கு வங்கத்தில் தங்கியிருந்தார். அங்கும் அவர் தங்குவதற்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது இஸ்லாமிய ஒட்டு வங்கியை காப்பாற்றி கொள்வதற்காக அப்போது ஆட்சியில் இருந்த புத்த தேவின் அரசு தஸ்லிமா நஸ்ரூதினை மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்றியது. இது தான் சி.பி.எம். கருத்துரிமையை காக்கும் லட்சணம்.
வன்முறையை
கட்டவிழ்த்து விட்டு அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று வந்த இடது முன்னணியை மக்கள் ஓரணியில் நின்று 2011 சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்தனர். கொள்கை கோட்பாடு எதுவுமற்ற மம்தா இடதிசாரிகள் எதிர்ப்பு என்ற ஒற்றை கோசத்தை மட்டுமே வைத்து ஆட்சியைப் பிடித்தார். மம்தா தற்போது மேற்கு வங்கத்தில் அரங்கேற்றி வரும் காட்சிகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களையும் நிலைகுலைய வைத்துள்ளது. எவ்வாறு சி.பி.எம். வன்முறையை கைகொண்டு தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொண்டிருந்ததோ , அதை போலவே மம்தாவும் தனது கட்சி தொண்டர்கள் மூலமாக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தனது அதிகாரத்தை நிலைநாட்டுகிறார். தனது ஆட்சியின் குறைகளை விமர்சித்த குற்றத்திற்காக மம்தா பானர்ஜி அவர்கள் இனிமேல் தன்னை விமர்சிக்கும் ஆனந்த பஜார் பத்திரிக்கா, அமிர்த பஜார் பத்திரிக்கா , டெலிகிராப் போன்ற பத்திரிக்கைகளுக்கு மேற்கு வங்கத்தின் நூலகத்தில் இடமில்லை என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சங்க பரிவாரங்களின் அடிச்சுவட்டில் பயணித்து மார்க்சிசத்தை வங்க மண்ணில் துடைத்தெறிவேன் என்று கொக்கரித்து இனிமேல் மேற்கு வங்க கல்வி சாலைகளில் மார்க்ஸ் , எங்கல்ஸ் போன்றவர்களின் கருத்துகளை உள்ளடக்கியதாக வரலாற்று பாடப்புத்தகங்களில் இராது என்று அறிவித்துள்ளார்.
தற்போது இதை எல்லாம் மிஞ்சும் வகையில் ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் வேதியல் பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா, மம்தாவின் அரசியலை விமர்சனம் செய்து கார்டூன் போட்டு அதை இமெயிலில் 65 பேருக்கு அனுப்பினார் என்று குற்றம் சாட்டி அவரை கைது செய்துள்ளது மேற்கு வங்க அரசு. அத்தோடு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்களை ஏவி விட்டு பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. மம்தாவின் இந்த கருத்துரிமைக்கு எதிரான பாசிச மனோபாவம் பலராலும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இவ்வாறு தன் மீது யாரும் சிறு விமர்சனத்தையும் கூட வைக்ககூடாது என்று கொக்கரிக்கும் மம்தா மேற்கு வங்க அரசு இயந்திரம் முழுவதையும் பாசிசமயமாக்கி வருகிறார். . முதலாளிகளின் கைப்பாவையாக பாசிச பாதையில் நடைபயிலும் மம்தா பானர்ஜியின் சர்வாதிகார போக்குகளை முறியடிக்கவும் கருத்துரிமை காக்கவும் ஜனநாயக எண்ணம் கொண்டோர் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக