செவ்வாய், 3 ஏப்ரல், 2012

குழந்தை தொழிலாளர்கள்

என்ன !
என்ன கேட்டீர் என்னை ? 
நவம்பர் 14 ஐ 
கொண்டாடவில்லை என்றா ? 

வாருமைய்ய வாரும் 
கட்டிவைத்த கங்குகளை 
கொட்டிப் பேச வேண்டும் 
செவி கொஞ்சம் தாரும். 
நாளிதழ் படிக்கும் 
நாட்டமுண்டா உமக்கு 
பாருமய்யா பக்கம்  புரட்டி 

'தீப்பெட்டி தொழிலில் சிறுவர்கள்' 
எவரெவரோ காசைக் கரியாக்க 
இந்த பிஞ்சு விரல் பூக்களில் 
ரேகை பள்ளங்களில் 
சிவகாசி மகரந்தமெழுதி
பட்டாசு பட்டறையில் 
அவர்கள் விரல் முனையில் 
தீப்பெட்டி தேய்த்தேன் 
தேசத்தை கொளுத்த 
தீ 
நாக்கு நீட்டியது !

'கட்டிட தொழிலில் சிறுவர்கள் '
உடற்துவாரம் ஒன்பது தானே 
எந்த சமூகத் தூணின் கோளாறு 
குழந்தைகள் உள்ளங்கையில்
இத்தனை துவாரங்கள் 
நீங்கள் சித்தாளா ?
இல்லை இல்லை இல்லை 
சிறு ஆளய்யா.

'உணவகத்தில் சிறுவர்கள்' 
நீங்கள் உண்ட 
தட்டுக்கழுவிட அம்மா 
மாற்றார் எச்சில் தட்டு கழுவ 
நீங்களா ?

'கல்குவாரியிலிருந்து குழந்தை 
தொழிலாளர்கள் மீட்பு '
பாறைகளும் உருகிடும் பட்டை வெயிலில் 
உளிமூக்கில் கல் பிளக்கும் 
கல்குவாரி ஈசல்களே 
போதும் நிறுத்துங்கள் 
உங்கள் உளி சுத்தியலை 
பாரளுமன்ற  திசைக்கு 
ஓங்குங்கள்.

உழைப்பை பேரம் பேசி 
ஒப்பந்த முதலீட்டால் 
குருத்து உடம்புகளின் 
நரம்புகளை சிதைக்கும்
'சுமங்கலி திட்டங்கள்' 

பஞ்சாலை கூடத்தின் 
அறுந்த நூலை இணைத்துவிடும் 
உங்களின் அறுந்து போன 
வாழ்க்கையை யார் ........? 

தம்பி,
நீ விநியோகிப்பது 
நாட்டு நடப்பு செய்திகளையா ?
இல்லை 
உன் வாழ்வை சிதைக்கும் 
'இரட்டடிப்பு காகிதங்கள்'
என்றெப்போது தெளியப் போகிறாய்? 

கொடிகாத்த குமரன் ஊரின் 
பஞ்சாலை சிறுவர்களே  
உங்கள் முதலாளி சொகுசு மெத்தை 
பாட்டாளி வயக்காட்டின் 
பருத்தி யென்று புரிய வைக்க
போவாதெப்போது?

இந்த மனிதனை மனிதன் சுரண்டும் 
தலை உடைக்காமல் போனால் 
எங்கள் சம்மட்டிகளல்லவா 
தீட்டுப்பட்டு விடும்  

இந்த இத்துப்போன சுவர்களை சுரண்டும் 
உப்புக் காகிதங்களை எரிக்க 
தீப்பந்தகளை தயாராக்குங்கள் 
இதோ ஒரு தீக்குச்சி 
கண் விழித்துவிட்டது.
வர்க்க விடுதலையை வென்றெடுக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்