புதன், 25 ஏப்ரல், 2012

சுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்


இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாடு ஒரு விசயத்தில் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. ஆம். சுய விளம்பரம் என்ற அம்சத்தில் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் தமிழ்நாடு விளங்குகிறது. ப்ளெக்ஸ் போர்டுகளும், சுவரொட்டிகளும் கண்ணைக்கவரும் இத்தனை வண்ணங்களில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பார்க்குமிடமெல்லாம் பளிச்சிடுவதை இந்தியாவின் வேறு எந்த மூலைக்குச் சென்றாலும் பார்க்கவே முடியாது.
எங்கும் எதிலும் சுயவிளம்பரம்

திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளுக்கு முன்பெல்லாம் பத்திரிகை அடித்துக் கொடுப்பது என்பதே அபூர்வமாக இருந்தது. வெற்றிலை பாக்கைத் தட்டில் ஏந்தி தங்களது உறவினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் கொடுத்து அவர்களை விழாவில் கலந்து கொள்ள வேண்டும் முறையே அப்போது பரவலாக இருந்தது. அதன்பின் பத்திரிகை அடித்து அழைக்கும் முறை வந்தது. நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் நாள், இடம் போன்றவற்றை நினைவில் நிறுத்த வேண்டிய அவசியத்தை அது குறைத்தது.

அதன் பின்னர் சுவரொட்டிகள் அடித்து விளம்பரம் செய்யும் முறை வந்தது. பொதுவாக அரசியல், கட்சிகளால் மட்டுமே அதுவரை செய்யப்பட்டு வந்த சுவரொட்டி ஒட்டும் பழக்கம் திருமணம் போன்ற விழாக்களை அறிவிக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அது வினோதமாகத் தோன்றியது. அதன் பின்னர் வண்ணமயமான ப்ளக்ஸ் போர்டுகள் அறிமுகமானபோது மணமக்களின் படங்களையும் சுவராட்டிகளாக ஒட்டும் பழக்கம் வந்தது. குறைந்த பட்சம் இன்று ஒரு நாளாவது அவர்கள் ராஜா, ராணி போல் ஊர் உலகிற்கெல்லாம் தெரிந்துவிட்டுப் போகட்டுமே என்ற அடிப்படையில் அதை ஜீரணிக்க முடிந்தது.

அதன் பின்னர் இப்போது பார்த்தால் மணமக்கள் படத்தோடு அந்த சுவரொட்டியை அடித்தவர்களின் படங்களும் பெரும் பெரும் அளவுகளில் பொது இடங்கள், சாலையோரங்களில் எங்கு பார்த்தாலும் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. அதாவது ஏதோ நான்கு பேருக்கு நல்லது செய்து அவர்களுக்குத் தெரிந்தவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்ள இனி அவசியம் எதுவுமில்லை. உங்களிடம் இருக்கும் பண வசதியைப் பொறுத்து உங்களது படங்களைப் பெரிது பெரிதாக சுவரொட்டியாக அடித்து நீங்கள் விரும்பும் போதெல்லாம் ஏதாவதொரு நிகழ்ச்சியை சாக்காக வைத்து உங்களைப் பிரபலமாக்கிக் கொள்ளலாம். அத்தகைய நிலை ஏற்பட்டுவிட்டது.

அரசியல் துறையை எடுத்துக் கொண்டால் ஒரு காலகட்டத்தில் தேர்தலில் நிற்பவர்கள் கூட, அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை வைத்தே கருதப்பட்டனர். அதன் பின் கட்சித் தலைவர்களின் படங்களைப் போட்டு வாக்கு கேட்கும் முறை நடைமுறையானது. அதன் பின்னர் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அனைத்துத் தலைவர்களின் பகாசுரப் படங்களையும் போட்டு விளம்பரங்கள் செய்யப்பட்டன. தற்போது மேல் மட்ட கீழ்மட்டத் தலைவர்களின் படங்களோடு வேட்பாளருக்கு வாக்குக் கேட்பவரின் படங்களும் இடம் பெறுகின்றன.

அடைமொழிக் கலாச்சாரம்

அதைப் போல் முன்பெல்லாம் பெரிய தலைவர்கள் அடை மொழிகள் எவற்றையும் போட்டுக் கொள்ள விரும்புவதில்லை. அதன் பின்னர் அடைமொழிகள் போடுவது அறிமுகமானது. அப்போதும், ஒருவருக்குக் கூறப்பெறும் அடைமொழியை வைத்து அத்தலைவரை எளிதில் இவர்தான் என்று கூறிவிடுவர். சிலம்புச் செல்வர், கோவைக் கம்பர், முத்தமிழ்க் காவலர் போன்ற அடைமொழிகளை அதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஏனெனில் மா.பொ.சி, கருத்திருமன், கி.ஆர்.பெ. விஸ்வநாதன் போன்றவர்களுக்கு அவர்கள் இலக்கியத்திற்குச் செய்த வழங்கல்களை வைத்துக் கொடுக்கப்பட்ட அடைமொழிகள் இவை.

ஆனால் அதன் பின்னர் அடைமொழிகள் கொடுக்கும் கலாச்சாரம் அசுர வேகத்தில் வளர்ந்து தற்போது அடை மொழிகள் அனந்தமாகிப் போய்விட்டன. அடைமொழி கொடுக்கப்படுபவர் சார்ந்திருக்கும் துறை அவரது அத்துறைக்கான வழங்கல் ஆகியவை இப்போதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல. ஒரு துறையைச் சார்ந்த, அதற்குக் குறிப்பிடத்தக்க வழங்கல்களைச் செய்தவர்களுக்கு அது குறித்த அடைமொழிகள் மட்டுமே கிடைக்கும் ஆனால் எத்துறைக்கும் எதுவும் வழங்காதவர்களுக்கு, மாறாக ஒழுக்கம், நீதி, நெறி, தன்னடக்கம், எளிமை, அர்ப்பணிப்பு போன்ற மனித குலம் போற்றும் குணங்களுக்கு தங்களால் முடிந்த அளவு சேதம் விளைவித்தவர்களுக்கு அனைத்து அடைமொழிகளும் அடைமழையயனப் பொழியப்படும் நிலை தோன்றிவிட்டது. ஒரு நாள் லெனினாக இருக்கும் அவர் மறுநாள் மாவோவாக ஆவார். நேற்று செகுவேராகவாக இருக்கும் அவர் இன்று பிடல் காஸ்ட்ரோவாக ஆகிவிடுவார். நாளை அவர் நெல்ஸன் மண்டேலா நாளை மறுதினம் அவர் சாக்ரடீஸ்.

சமூகமயமாகும் பொய்

இப்படி எல்லாம் சிந்திப்பதும் எழுதுவதும் இன்று தோன்றியுள்ள நிலையை மேலோட்டமாகப் பார்த்துப் பரிகசிப்பதற்காக அல்ல. அற்ப விசயங்கள், யாரும் பொருட்படுத்தாத விசயங்கள் எனப் பொதுவாகக் கருதப்படும் விசயங்கள் தான் பல சமயங்களில் ஒரு சமுதாயத்தை, அதன் பெருமையை ஆழமாகப் பாதிக்க வல்லவையாக ஆகிவிடுகின்றன. இது போன்ற விசயங்களில் மனதை ஈடுபடுத்துவது ஏன் அவசியமாகிறது? ஆம். இது போன்ற விசயங்கள் பொய்யைச் சமூகமயமாக்குகின்றன. பொய் என்றால் நீதிமன்றத்திலோ, பஞ்சாயத்திலோ சாட்சி, சம்பந்தம் என்று வரும் போது கூறுவது மட்டுமல்ல. அது சிலரைச் சில சமயங்களில் மட்டும் பாதிக்கக் கூடிய விசயம். ஆனால் தன்னை வரம்பிற்கப்பாற்பட்டு பெரிதாக்கிக் காட்டுவது, பார்ப்பது, தான் பெறுவதற்கு அருகதையில்லாத பெருமைகளை அடைய முயல்வது தங்களின் காரியத்திற்காக ஒருவரை அவருக்கு முற்றிலும் பொருந்தாத விதத்தில் வானளாவப் புகழ்வது ஆகியவை தனித்தனியாக யாரையும் குறிப்பாகப் பாதிப்பதில்லை. அதனால் அது நம்மால் கண்டு கொள்ளப்படாமலும் போய்விடுகிறது. ஆனால் பணம் செலவு செய்து சுயநல நோக்கங்களோடு செய்யப்படும் அது பொய்யை உறுத்தலின்றி நடமாட, கோர நர்த்தனம் ஆட அனுமதித்து சமூகத்தின் இன்றைய நியதி ஏதாவதொரு பொய்யே என்ற நிலையை நோக்கிக் கொண்டு செல்கிறது, வருந்தத் தகுந்த விதத்தில் தமிழ்ச் சமுதாயம் தலைவிரித்தாடும் இந்த சுயவிளம்பரப் போக்கினால் எந்தப் பொய்யையும் சிரமமின்றிச் சகித்துக் கொள்ளும் ஒரு சமூகமாக மாறிவருகிறது.

தனிப்பட்ட விழாக்கள் பொது நிகழ்வுகளா?

இதை ஒத்த விதத்தில் தமிழகத்தில் சமீப காலமாக ஒரு புதுப்போக்கு அதாவது தங்களது தனிப்பட்ட குடும்ப விழாக்களை சமூக விழாக்கள் போல் நடத்தும் போக்கு மிக வேகமாக நோய்க் கிருமிகள் போல் வளர்ந்து வருகிறது. மிகப் பரந்த அளவில் அவ்வாறு செய்யப்படும் அத்தனிப்பட்ட விழாக்கள் இந்த இல்லத்தின் விழா, அந்த இல்லத்தின் விழா என்று பெயரிடப்பட்டு விளம்பரம் செய்யப்படுகின்றன. இந்த இல்லம் அந்த இல்லம் என்று குறிப்பிடுகையில் அது பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒரு இல்லமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.ஒரு குடும்பம் தன்னுடைய நலனை மட்டும் பேணக்கூடிய ஒரு சுயநலக் குறியீடாக இருக்கும் வரை அது பிற மக்களுக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. தெரியவேண்டியதும் பிறர் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியமுமல்ல. அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் மக்களுக்கான பொது விசயங்களில் அக்கறை கொண்டவர்களாக, தன்னலப் போக்கைத் தாண்டி ஓரளவு பொதுநல எண்ணம் மிக்கவர்களாக இருக்கும் போது மட்டுமே அக்குடும்பம் மக்களின் குறிப்பானதும் சிறப்பானதுமான பார்வைக்கு வருகிறது.

நினைக்கப்பட்ட குடும்பங்கள்

அப்படிப்பட்ட குடும்பங்கள் தேசிய, பிராந்திய வட்டார அளவுகளில் முன்பு நிறைய இருந்தன. அக்குடும்பங்கள் இது எங்களது பிரபலக் குடும்பம் என்று பெரும் விளம்பரங்கள் செய்து சொல்லிக் கொள்ளாதிருந்தாலும் மக்கள் அனைவராலும் பெரிதும் அறியப்பட்டவையாய் இருந்தன. அது போன்ற குடும்பங்கள் தங்கள் பகுதியில் இருப்பது அனைவராலும் பெருமையாகக் கருதப்பட்டது. அக் குடும்பங்கள் குறித்த தகவல்களை பிறரிடம் அண்டை அயலார்களும் மிகவும் மகிழ்வுடன் கூறுவது வழக்கமாக இருந்தது. அதற்குக் காரணம் அவர்கள் தங்களது தன்னலம் சார்ந்த விசயங்கள் எதிலும் அக்கறை காட்டுவதோ அதற்காக அண்டை அயலாரிடம் பூசல்களில் ஈடுபடுவதோ கிடையாது. அவர்களிடம் இருந்த அக்குணம் ஒரு உயர்ந்த கலாச்சாரமாக சாதாரண மக்களின் பார்வையில் இருந்தது. ஆனால் தற்போது அத்தகைய பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பலவீனமாகி கடந்த கால நினைவுச் சின்னங்கள் போல் ஆகிவிட்டன. ஆனால் இப்போது எங்களது குடும்ப விழாக்கள் என்ற பெயரில் நாம் மேலே கூறிய விதத்தில் மிகுந்த ஆடம்பரத்துடன் பல தனிப்பட்ட அர்த்தமேயில்லாத விழாக்களை நடத்தி சுயவிளம்பரம் செய்து கொள்ளக்கூடியவர்கள் சிரமமின்றிக் குறுக்கு வழிகளில் தவறான முறைகளில் பணம் சேர்த்தவர்களாகவே இருக்கின்றனர்.

அதாவது கந்துவட்டி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் ஈடுபடுபவர்களே இன்று தங்களிடம் உள்ள பண பலத்தால் தங்களை ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல விளம்பரங்களின் மூலம் காட்டிக் கொள்கிறார்கள். நாம் மேலே விவரித்த அந்தப் பழைய காலத்திலும் பணவசதி படைத்தோர் இருக்கவே செய்தனர். ஆனால் அவர்கள் இந்த அளவிற்கு இப்படிப்பட்ட பொது அங்கீகாரத்திற்காக அலைந்தது இல்லை. பொதுவாக மக்கள் தங்களை உயர்ந்த முன்மாதிரிகளாகப் பார்க்கமாட்டார்கள். ஏனெனில் நாம் நமது பொருளாதார மேம்பாட்டுக்காகவே வாழ்பவர்கள்; எனவே மற்றவர்களுக்கு நம்மை நினைவு கொள்ளும் அவசியம் நேராது என்று அவர்களே எண்ணினர்.

தமிழ்ச் சமுதாயம்

இப்படிப்பட்ட சுயவிளம்பரம், தற்பெருமை போன்ற போக்குகள் சாதாரணமாக உயர்ந்த சமுதாய அமைப்புகளில் தோன்றுவதில்லை. தன்னைப் பற்றி மிக அதிகம் பேசுவது அரைவேக்காட்டுத்தனம் பக்குவமற்ற நடவடிக்கை என்ற எண்ணப்போக்குகளே இன்றும்கூட சமூகத்தில் உரைகற்களாக உள்ளன.

தமிழ்ச் சமுதாயத்தில் இப்போக்கு எப்படி வந்தது என்று அப்போக்குகள் தலைவிரித்தாடும் இன்றைய சூழ்நிலையில் பார்ப்பது அவசியமாகிறது. எந்த ஒரு போக்குமே திடீரென தற்செயலாகக் கிளர்ந்தெழுந்து வளர்வதில்லை. ஒரு நல்ல போக்கு இருப்பதற்கும், அழிவதற்கும் அதைப்போல் ஒரு தவறான போக்கு உருவாவதற்கும், வளர்வதற்கும் காரணங்களாக சில சமூகப் பின்னணிகள், சரியான அல்லது தவறான சமூக இயக்கங்கள் நிச்சயம் இருக்கின்றன. அதைப்போல் இப்போக்கிற்கும் ஒரு பின்னணியும் இதன் வளர்ச்சிக்கான பல காரணிகளும் இருக்கவே செய்கின்றன.

தமிழ்நாடு இந்தியாவில் முன்னேறிய சில மாநிலங்களில் ஒன்று. மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களோடு தமிழ்நாடும் ஒரு முன்னேறிய வளர்ச்சியடைந்த மாநிலமாக விடுதலைபெற்ற காலத்திலேயே விளங்கியது.அதற்கான காரணம் இன்று பலரும் உரத்து முழங்கி முன் வைப்பது போல் அதனுடைய தொன்மையும் பாரம்பரியமும் மட்டுமல்ல. பழைய நிலவுடைமைக் காலத் தமிழ்ச் சமூகத்தின் எந்தப் போக்குகள் இன்றைய அதன் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்று ஆக்கப்பூர்வமாகத் தேடினால் அப்படி எதுவுமில்லை என்பதே தெளிவாக நமக்குத் தெரியவரும். அப்படியானால் தமிழ்நாடு ஒரு முன்னேறிய மாநிலமாகக் கருதப்பட்டதற்கான காரணங்கள் எவை என்று பார்த்தால் அதன் வேர் வெள்ளையர் ஆட்சி காலம் தொடங்கி நமக்கு கிடைத்த கல்வியிலேயே உள்ளது என்பதை நாம் அறியமுடியும். கிறிஸ்தவ மிசனரிகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கல்வி நிலையங்களைத் தோற்றுவித்து அதற்கு முன்பு கல்வி என்ற பெயரில் இங்கிருந்ததைக் காட்டிலும் மேலான ஒரு தாராளவாதக் கல்வியை கற்பிக்கத் தொடங்கினர். அதன் விளைவாகக் கல்விகற்று வெளி வந்தோர் விஞ்ஞானம் அறிந்தவர்களாக தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக, பொருளாதார, இலக்கிய அறிவு பெற்றவர்களாக ஆயினர். அத்திறமைகளைப் பயன்படுத்தி பல்வேறு பணிகளில் அவர்கள் சென்றமர்ந்தனர். அவ்வாறு தங்களுக்கு வேலை தேடிக் கொண்டதோடு மட்டுமின்றி அதுவரையில்லாத விஞ்ஞான தொழில்நுட்ப, பொருளாதார, இலக்கியரீதியான புது விசயங்களை மற்றவர்களும் கற்கவேண்டும் என்று கல்விப் பரவலாக்களை அவர்கள் ஆதரித்தனர்.

அது மட்டுமின்றி கல்வி கற்க வசதியில்லாதவர்களிடமும் இக் கருத்துக்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். தங்களது முயற்சியின் மூலம் அக்கருத்துக்களின் பாலான ஒரு ஈடுபாட்டை அவர்கள் வளர்த்தெடுத்தனர். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நாம் தொன்மை, புராதானம் என்று பெருமையுடன் பேசிக் கொள்கிறோமே அவை உருவாக்கியிருந்த செயற்கையான ஜாதி சமூகப் பிரிவுகளை அக்கல்வி முறை தகர்த்தெறிந்தது. ஆனால் இது குறித்து இப்போது வேறொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதாவது இடையில் தமிழர் சமூக வாழ்க்கையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தக் கல்வி ஆற்றிய பங்கினை அக்கருத்து கண்டு கொள்வதில்லை.

அது, தமிழ்ச் சமூகம் தொன்று தொட்டே மிக நல்ல சமூகமாக இருந்து கொண்டே தான் இருந்தது; இடையில் வந்த ஆரியக் கலப்பின் போதுதான் அதில் தவறான போக்குகள் தலைதூக்கத் தொடங்கின; ஆரியக்கலப்பிற்கு முன்பு இருந்த தமிழ் சமூகத்தில் ஜாதிய முறை என்பது இருந்திருக்கவில்லை; ஆரியர்களே இந்த நாசகரக் கண்ணோட்டத்தை நம்மிடையே கொண்டு வந்து புகுத்தினர்; அவர்கள் மட்டும் இங்கு வந்து இது போன்ற வருணாசிரமப் போக்குகளை புகுத்தாதிருந்திருந்தால் தமிழ்ச் சமுதாயம் இந்தப் போக்குகள் இன்றி அப்படியே இன்னும் உன்னதமாக வளர்ந்திருக்கும் என்ற கருத்தினை முன்வைக்கிறது. இவ்வாறு கூறுவதில் தொடங்கி அது எந்த எல்லைவரை செல்கிறது என்றால் இன்று தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுபவர்களைத் தவிர வேறுயாரும் தமிழர்களே அல்ல என்று கூறுமளவிற்குச் செல்கின்றது. இக்கூற்று எவ்வகையான விஞ்ஞானபூர்வ வரலாற்று ஆதாரமும் இன்றி ஒன்றை வலிந்து கூறி நம்பவைக்கும் முயற்சியே என்பதைப் பெரிதும் நாம் விளக்கத் தேவையில்லை.

ஏற்றுக்கொள்ள முடிந்தவையே ஏற்றுக் கொள்ளப்படும்

எந்த ஒரு சமூகத்திலும் அச்சமூகத்தில் ஊடுருவும் வேறொரு சமூகப் பகுதியின் பழக்கவழக்கங்களும் வாழ்க்கை முறையும் அச்சமூகம் அன்றைய நிலையில் அவற்றில் சிலவற்றை அல்லது பலவற்றை ஏற்றுக் கொள்ள முடிந்ததாக இருந்தால் மட்டுமே அது ஏற்றுக் கொள்ளும். அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாதவற்றை அதாவது அன்றைய காலகட்டத்தின் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராதவற்றைப் புகுத்த முற்பட்டால் அது அதனை ஏற்றுக்கொள்ளாது. இதனால் தான் இந்திய சமூகத்தில் எத்தனையோ படையயடுப்புகள் நிகழ்ந்த போதும் அத்தகைய படையயடுப்புகளை நிகழ்த்தியவர்களின் பழக்கவழக்கங்களை அப்படியே அது ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவ்வாறு படையயடுத்து வந்த பல சமூகத்தினரும் இந்தியாவில் அப்போது நிலவிய வாழ்க்கை முறையில் பெரும்பாலும் ஐக்கியமாகிவிட்டனர் அதாவது இந்தியமயமாகிவிட்டனர். இதற்கு ஒரே விதிவிலக்கு வெள்ளையர்கள் தங்களது ஆட்சியை நிலைநாட்டியபோது ஏற்பட்டதுதான். அவர்கள் அதுவரை நிலவிய சமூக உற்பத்தி முறையைக் காட்டிலும் மேலானதொரு எந்திரத் தொழில் உற்பத்தி முறையை அறிமுகம் செய்து அதுவரை நிலவிய நிலவுடைமை உற்பத்தி முறையைக் காலாவதியானதாக ஆக்கினர். அதன் விளைவாக இந்திய சமூக வாழ்விலும் பல்வேறு அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டன. பழைய வாழ்க்கைக் கண்ணோட்டங்கள், போக்குகள் பலவும் அடிப்படையில் தகர்ந்துபோயின. எனவே, தமிழ்ச் சமூகம் ஆரியக்கலப்பின்றி இருந்திருந்தாலும் அது வெள்ளையரின் வருகைக்கு முன்பு அதாவது எந்திரத் தொழில் உற்பத்தி முறையின் அறிமுகத்திற்கு முன்பு அது தனது பழைய வாழ்க்கைப் போக்குகளாக கடைபிடித்து வந்த பலவற்றைத் தொடர்ந்து கடைபிடித்திருக்க முடியாது. மக்கட்தொகை மற்றும் மக்களின் தேவைகளின் பெருக்கம் ஆகியவற்றையயாட்டி பல மாறுதல்களுக்கு நிச்சயம் அது ஆட்பட்டே இருந்திருக்கும். ஒரு சமூகத்தின் பொருள் உற்பத்தி முறையே அடிப்படையானது. அது தற்போது இருப்பதைக் காட்டிலும் உயர்ந்த ஒன்றை எதிர்கொள்ளும் போது நிச்சயமாக எத்தனை முட்டுக்கட்டைகள் போட்டு அதனைத் தடுக்க நினைத்தாலும் அந்த மேலான உற்பத்தி முறையின் முன்பு அது சரணடைந்தே தீரும். அந்த முன்னேறிய பொருள் உற்பத்தி முறை நிலைகொண்ட பின்பு அது அதன் வளர்ச்சிக்கும் தற்காப்பிற்கும் உகந்த வகையிலான பல்வேறு சமூக, அரசியல், கலாச்சாரக் கருத்துக்களை அது உருவாக்கவே செய்யும். அது ஏற்கனவே நிலவிய சமூக, அரசியல் கலாச்சாரக் கருத்துக்களில் இருந்து பெரிதும் மாறுபட்டதாகவே இருக்கும். இத்தகைய மாறுதல் என்பதே அன்றும் இன்றும் என்றும் மாறாத விதி.

தேங்கிய குட்டை வளரும் சமூகமாகாது

தமிழ்ச் சமூகம் ஆரியம் போன்றவற்றின் கலப்பின்றி இருந்திருக்குமானால் மிக உன்னதமாக ஒரு வழிப்பாதையில் வளர்ந்தோங்கி இருக்குமென்று முன் வைக்கப்படும் கருத்து சுருக்கமாகச் சொன்னால் பாமரத்தனமானது. சமூக வாழ்க்கை பல சிக்கல்கள் நிறைந்தது. அதனுடைய வளர்ச்சிப் போக்கை இவ்வாறு பார்ப்பது எந்த வகையிலும் விஞ்ஞானபூர்வ பார்வையாக இராது. பிற சமூக கலப்புகள் இன்றி வாழ்ந்த சமூகம், இன்றும் வாழ்ந்து வரும் சமூகம் என்று எதுவுமே இருக்க முடியாது. அவ்வாறு ஒன்று இருக்குமானால் அது தேங்கிய குட்டைபோல் ஆகி அதன் மக்கட் தொகையும் சுருங்கி அச்சமூகமே ஒரு நாள் இல்லாதொழிந்துவிடும். பல ஆதிவாசிக் குழுக்கள் இவ்வாறு அழிந்துபோனதே அதற்கு எடுத்துக்காட்டு.

ஆரியம் முன்வைத்த ஜாதியக் கட்டமைப்பினை அது மிக மோசமானதாக இருந்த போதும் தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொண்டதற்கும் வரலாற்றுப் பூர்வமான காரணம் உள்ளது. உண்மையில் வருணாசிரம தர்மம் தமிழ்ச் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டத்தில் சமூகத்தின் பெருகிவந்த தேவைகளுக்கு உகந்த வகையிலான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ற உற்பத்தி உறவு நிலவவில்லை. வேலைப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட வருணாசிரம தர்மம் அன்றைய நிலையில் பெரிதும் தேவைப்பட்ட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்நது. அதனால் தான் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதே வரலாற்றை இயக்கவியல் பொருள் முதல்வாத ரீதியில் பார்த்த அதன் அடிப்படையில் பிரபல வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் அவர்கள் தொகுத்து வழங்கிய Recent perspectives of early Indian History என்ற நூலில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்தாகும்.

ஆனால் அந்த வருணாசிரம தர்மம் இன்றுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையோடு எள்ளளவும் ஒத்துப் போகாததாகும். அதனால் தான் அடிப்படையில் அது தகர்ந்துபோய் செங்குத்தாய் பிளவுபட்ட இரண்டு வர்க்கங்களுக்கிடையேயான முதலாளி, தொழிலாளி வேறுபாடு இன்று தோன்றியுள்ளது. இவ்வாறு நமது தமிழ்ச் சமூகத்தின் மேன்மை புதிய உற்பத்தி முறையினால் வித்திடப்பட்டு அதையயாட்டி நமக்கு கிடைத்த கல்வியினால் பெறப்பட்டது. அது அதனால் பலன் பெற்றோரால் பரப்பவும் விரிவாக்கவும் பட்டு வளர்ந்தோங்கியது. அந்தத் தன்மை விடுதலை பெற்ற காலத்தில் வந்த ஆட்சியாளர்களால் ஓரளவு பராமரிக்கவும் பட்டது. பள்ளிக் கல்வி வரை கல்வி அவர்களால் இலவசமாக்கப்பட்டது. கல்வி கற்பித்தவர்களிடமும் கூலிக்கு மாரடிக்கும் போக்கு நிலவாமல் அது இலட்சிய பூர்வபணி என்ற எண்ணப்போக்கு இருந்தது. இது அதிக மக்கட் தொகையைக் கொண்ட பல வடமாநிலங்களைக் காட்டிலும் நமது மாநிலத்தில் மிக அதிகமாக இருந்தது. அதனால் தமிழ்ச் சமூகம் ஒரு முன்னேறிய சமூகமாக இருந்தது; இவ்வாறு பலரால் பார்க்கவும்பட்டது.

பொருளாதார ரீதியாக குஜராத் போன்ற சில மாநிலங்கள் மேம்பட்டவையாக இருந்தாலும் அந்த மேம்பாடு இந்த எந்திரதொழில் உற்பத்தி முறை முன் வைத்த வியாபார வாய்ப்புகளை மட்டுமே அதிகம் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாகவே இருந்தது. இங்கு நிலவியது போல் கல்விப் பரவலாக்கல், பெண்கள் கல்வி போன்றவை குஜராத் போன்ற மாநிலங்களில் பெரிதாக நிலவவில்லை. எனவே பொருளாதார ரீதியாக மேம்பட்டதாக இருந்தாலும் கல்வி, பொதுஅறிவு போன்ற விசயங்களில் சிறந்தவர்களாகத் தமிழ் மக்களைப் போல் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் நாடெங்கிலும் சென்று வாழவில்லை.

கல்வி கற்றோர் எண்ணிக்கை நமது மாநிலத்தில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளைக் காட்டிலும் மிகக் கூடுதலாக இருந்ததால் தமிழர்கள் இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் சென்று வேலை தேட வேண்டிய, பணியமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அங்கெல்லாம் பணிகளுக்குச் சென்ற அவர்கள் பெற்றிருந்த கல்வி தந்த தகுதிகளையும் திறமைகளையும் வெளிப்படுத்தினர். அதை மையமாக வைத்தே தமிழர்கள் ஒரு முன்னேறிய பகுதியினர் என்ற எண்ணம் அறிவு சார்ந்த இந்தியா முழுவதிலும் உள்ள பலரிடம் ஏற்பட்டது.

சமூக இயக்கங்களின் பங்கு

எந்தவொரு சமூகத்தில் முற்போக்கான இயக்கங்கள் மக்களின் பங்கேற்புடன் நடக்கின்றனவோ அந்த சமூகத்தில் சமூக மதிப்புகள் பராமரிக்கப்படுவதும் அது உயர்ந்தது என்று பலரால் பாராட்டப்படுவதும் நிச்சயம் நடக்கும். அவ்விதத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த தேச விடுதலைப் போராட்டத்தில் வங்கம், பாஞ்சாலம், மராட்டியம் ஆகிய மாநிலங்களோடு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு இருந்தது. விடுதலை பெற்றவுடன் நிலவிய அரசியல் சூழ்நிலையும் சமூக மதிப்புகள் பேணிப் பாதுகாக்கப் படுவதற்கு உதந்ததாக இருந்தது. அதாவது தேசவிடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகளே அப்போது இங்கு செல்வாக்குடன் விளங்கின.

விடுதலை பெற்ற வேளையில் சிறந்த கல்விமான்களை மட்டுமல்ல, மூலதனத் திரட்சியினைக் கொண்டு ஓரளவு வளர்ந்திருந்த பிராந்திய முதலாளிகளையும் கொண்டதாகத் தமிழகம் இருந்தது. பர்மா போன்ற நாடுகளில் வட்டித் தொழில் செய்து திரட்டிய மூலதனமும் புதிதாக உருவான சுதேசி முதலாளிகளுக்குச் சாதகமான, சுதேசி அரசு உருவாக்கிக் கொடுத்த சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அது வளர்வதற்கு ஏதுவான சாதக நிலையும் அவ்வர்க்கத்திற்கு இருந்தது. தொழில்ரீதியாகத் தமிழக முதலாளிகள் வளர்ச்சியடைந்தவர்களாக மட்டுமல்ல அவர்களில் சிலர் வட இந்தியாவின் பார்சி, மார்வாடி முதலாளிகளுடன் போட்டியிடக் கூடிய அளவிற்கு வலிமை வாய்ந்தவர்களாகவும் இருந்தனர்.
பிராந்திய முதலாளிகளின் அச்சம்

ஒரு புறம் தேசிய முதலாளித்துவ அரசு வழங்கிய சலுகைளைப் பயன்படுத்தி வளர்ந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் அவர்களுக்கு அச்சம் ஒன்றும் இருந்தது. அதாவது தம்மைக் காட்டிலும் பெரிய அளவு மூலதனத்தைக் கொண்டுள்ள அனைத்திந்திய முதலாளிகளின் மூலதனம் தமிழகத்திற்குள்ளும் புகுந்துவிட்டால் நமது வளர்ச்சி தடைப்படும் என்று அவர்கள் அஞ்சினர். எனவே தங்களது இந்தக் கவலையைக் கணக்கிலெடுத்துச் செயல்படும் அரசியல் சக்தியை அவர்கள் தேடத் தொடங்கினர்.

ஒட்டு மொத்த இந்திய முதலாளித்துவத்தின் நலனைப் பாதுகாக்கும் அமைப்பாக காங்கிரஸ் கட்சி இருந்ததால் அது அனைத்துச் சூழ்நிலைகளிலும் பிராந்திய முதலாளிகளின் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாப்பதாக இராது என்ற சந்தேகம் பிராந்திய முதலாளிகளின் மனதில் வேரூன்றத் தொடங்கியது.

அந்தச் சூழ்நிலையில்தான், திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க. உருவாகி, பிராந்திய முதலாளிகளின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது போன்ற முழக்கங்களை முன் வைக்கத் தொடங்கியது. அம்முழக்கத்தின் தர்க்க ரீதியான உச்ச கட்டமாக தனிநாடுக் கோரிக்கையையும் அக்கட்சி எழுப்பியது. அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்ற அளவிற்குத் தனிநாடு கோரிக்கை இக்கட்சியினால் அலங்காரச் சொல்லாடல்களுடன் முன்வைக்கப் பட்டது.

அவ்வேளையில் தங்களுடைய விருப்பத்தைப் பிரதிபலிக்கும் குரலை உரத்து எழுப்புவதற்கு ஒரு கட்சி உதயமாகிவிட்டது என்ற அடிப்படையில் பிராந்திய முதலாளிகள் தி.மு.க. வை ஆதரிக்கத் தொடங்கினர். ஆனால் அதே சமயத்தில் தமிழகத்தின் பிராந்திய முதலாளிகளுக்கு அவர்கள் பிற மாநிலங்களிலும் தங்களது மூலதனத்தை ஓரளவு கொண்டு செல்ல விரும்பியதால் தி.மு.க. எழுப்பிய தனிநாடு கோரிக்கையில் உடன்பாடில்லை.

இருந்தாலும் தனிநாடு கோரிக்கை, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது போன்ற முழக்கங்கள் பெருமளவு வடக்கே உள்ள முதலாளிகள் மூலதனம் தமிழகத்திற்குள் படையயடுக்காமலும் பிற மாநிலங்களில் தமிழக முதலாளிகளின் வியாபார நலன் பாதிக்காமலும் இருக்க அவர்களால் நன்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

ஒட்டு மொத்தமாகவே உலக அளவில் முதலாளித்துவம் ஒரு பிற்போக்கான அமைப்பாக மாறி சமூகத்தின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க உதவாததாக இருந்ததோடு புதுப்புதுப் பிரச்னைகளை உருவாக்கக் கூடியதாகவும் மாறிவிட்ட சூழ்நிலையிலேயே இந்தியாவில் முதலாளித்துவம் வளர ஆரம்பித்தது. இச்சூழ்நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர், விடுதலை கிடைத்தவுடன் முடிந்து விட்ட வேளையில் புதிதாக அரசு கட்டிலில் ஏறிய முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டத்தை எந்த இடைவெளியும் இல்லாமல் கம்யூனிஸ்ட்கள் இங்கு தொடங்கியிருக்க வேண்டும்

அதனுடைய இந்தப் பிற்போக்குத் தன்மையை அம்பலப்படுத்தி அதனை வேரோடும் வேரடி மண்ணோடும் தூக்கி எறிந்து ஒரு சோசலிஸ சமூக அமைப்பை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்ட எழுச்சியையும் உடனேயே உருவாக்கியிருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் விடுதலைப் போராட்டச் சூழ்நிலையில் உருவாகி வளர்ந்த ஜனநாயக மதிப்புகளோடு, சுரண்டலற்ற அமைப்பினை உருவாக்கும் பின்னணியில் தோன்றும் சோசலிச மதிப்புகளும் தமிழ்ச் சமூகத்தில் நிலைபெற்றிருக்கும்

கம்யூனிஸ்ட் இயக்கம் தந்த இடைவெளி

பிராந்திய முதலாளிகளின் பின்பலம் தி.மு.க. விற்கு இருப்பதையும், பிராந்திய முதலாளிகளின் பிரச்சார சாதனங்கள் அக்கட்சியை முன்னிலைப்படுத்துவதிலும் மயங்கி உழைக்கும் மக்களும் அக்கட்சியின் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்து இங்கு செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்திய முதலாளி தமிழ் முதலாளி என்ற வேறுபாடின்றி அனைவரும் சுரண்டல்காரர்களே என்பதை உணர்த்தும் வகையிலான தீரம்மிக்க வர்க்கப் போராட்டங்களை நடத்தியிருந்தால் சாதாரண ஏழை, எளிய மக்கள் தி.மு.கழகத்தின் செல்வாக்கு வளையத்திற்குள் வருவதை அதனால் தடுத்திருக்க முடியும். ஆனால் இங்கு கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்பட்டவர்களோ அதனைச் செய்யத்தவறிவிட்டனர். மாபெரும் தலைவர் லெனின் ரஷ்யப் புரட்சியை வெற்றிகரமாகச் சாதித்ததன் மூலம் உழைக்கும் மக்களுக்கு வழங்கிய அரிய படிப்பினையை அவர்கள் எடுத்துப் பின்பற்றத் தவறிவிட்டனர்.

கொடுங்கோலன் ஜாரின் ஆட்சியில் ஒரு பிரிவு முதலாளிகள் உட்பட அனைத்துப் பகுதி மக்களும் உரிமையிழந்தவராக, கொடுங்கோன்மைக்கும் வறுமைக்கும் ஆட்பட்டவராக இருந்தனர். அந்நிலையில் உழைக்கும் வர்க்கத்தின் கட்சியாக லெனினது தலைமையில் இயங்கிய ஆர்.எஸ்.டி.எல்.பி.(போல்ஷ்விக்) கட்சி ஜாரின் ஆட்சிக்கெதிரான மனநிலை கொண்ட அனைத்து சமூகப்பிரிவினருக்கும் தலைமையேற்க வல்லதாக ஆக வேண்டும் என லெனின் விரும்பினார்; அவ்வாறு ஆக என்னென்ன செய்ய வேண்டும் என்பவைகளை வலியுறுத்தினார்.

ஆனால் 1917 பிப்ரவரி புரட்சியின் மூலம் ஜாரின் ஆட்சி அகற்றப்பட்டு அங்கு ரஷ்ய முதலாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே தனது பிரசித்திபெற்ற ஏப்ரல் ஆய்வுரைகள் மூலம் அந்தத் தருணத்திலிருந்து ஆட்சிக்கு வந்துவிட்ட முதலாளிவர்க்கமே உழைக்கும் வர்க்கத்தின் முழு முதல் எதிரியாகிவிட்டது என்பதை உணர்த்தி, சமூகம் சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதை அறிவுறுத்தினார்.

ஆனால் இங்கு செயல்பட்ட கம்யூனிஸ்ட்களோ விடுதலைக்குப் பின் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த வர்க்கம் இந்திய தேசிய முதலாளி வர்க்கமே என்பதையே பார்க்கத் தவறிவிட்டனர். அவர்களுடைய சமூகமாற்ற திட்டத்தில் தேசிய முதலாளிகளும் நேச சக்திகளாகக் கருதப்பட்டனர். எனவே தியாகங்கள் எத்தனையோ செய்திருந்தும் உரிய சமயத்தில் உறுதியான நிலை எடுக்கத் தவறி குழம்பி ஒரு இடைவெளி கொடுத்ததைப் பயன்படுத்திக் கொண்டு பிராந்திய முதலாளிகளின் ஆதரவுடன் மக்கள் மத்தியில் தி.மு.க. வளரத் தொடங்கியது.

தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மரபினையோ பாரம்பரியத்தையோ கொண்டிராத கட்சியாக, பிராந்திய முதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் எல்லாம் தங்களது கொள்கைகளையும் முழக்கங்களையும் மாற்றிக் கொள்ளக் கூடிய கட்சியாகவே அது விளங்கியது. அதனால் அக்கட்சி சமூகத்தில் புது மதிப்புகளை உருவாக்கத் தவறியதோடு இருந்த மதிப்புகளையும் பாழ்படுத்தத் தொடங்கியது. அதற்கு நிலையான கொள்கைகள் கோட்பாடுகள் என்று எதுவுமே இருக்கவில்லை. தனிநாடு கோரிக்கையை முன் வைத்த அக்கட்சி பிராந்திய முதலாளிகளின் முழு ஆதரவு அக்கோரிக்கைக்கு இல்லை என்று தெரிந்தவுடன் அதனைக் கைவிட்டுவிட்டு நாளடைவில் அதனை பிராந்திய முதலாளிகளின் நலனுக்குகந்த வகையில் மாநிலத்தில் சுயஆட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கமாக மாற்றிக் கொண்டது. பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்திய பின் அதில் சமரசம் செய்து கொண்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறிக்கொண்டது. இதுபோல் பல்லில்லாத பகுதறிவு வாதம், ஏழை மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பது போன்ற பாசாங்குத் தனங்களை எந்த வகையான கூச்சநாச்சமுமின்றி செய்து வந்த இக்கட்சி அதுதான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்றும் கூறிக் கொண்டது.

அத்துடன் ஆங்கிலத்தை ஆட்சிமொழி அந்தஸ்திலிருந்து அகற்றி அறிவைக் கட்டுப்படுத்தவும், மாநிலங்களுக்கிடையே பூசல்களை உருவாக்கி மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவும், மத்திய அரசு கொண்டு வந்த இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு பங்கினையும் ஆற்றாததையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தி.மு.க. வளரத் தொடங்கியது.

அக்கட்சியின் கொள்கையற்ற போக்கிற்கு முட்டுக் கொடுக்க கலைத்துறையும் முதலாளித்துவப் பிரச்சார சாதனங்களும் பெரிதும் முன்வந்தன. அதனை முழு வீச்சில் அம்பலப்படுத்தத் தேவையான முழுமை பெற்ற மார்க்சிய அறிவும் அதனை சுயமாகப் பொருத்திப் பார்க்கும் திறனும் கொண்டதாக அன்றைய கம்யூனிஸ இயக்கம் தமிழகத்தில் இல்லை. அது தி.மு.க.விற்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.

மூடிமறைப்பதைவிட திசை திருப்புவது எளிது
வர்க்கங்களால் பிளவுபட்டுள்ள ஒரு சமூக அமைப்பில் எத்தனை மூடி மறைத்தாலும் வர்க்கச் சுரண்டலையும் அது உழைப்பாளி மக்களிடையே உருவாக்கும் வேதனையையும் முற்றாக மூடி மறைக்க முடியாது. அவ்வாறு மூடி மறைக்க முயல்வதைக் காட்டிலும் அதனைத் திசை திருப்பி விடுவது எளிதென்று உணர்ந்து கொண்ட தி.மு.க.வினர் பிற்பட்டோர் நலன் என்ற பெயரில் ஜாதிய வாதத்தை உருவாக்கி வளர்த்துவிட்டனர். அதிலும் குறிப்பாக போர்க்குணம் மிக்க பிற்பட்ட வகுப்பினர் என்று கருதப்படும் ஜாதியினரைத் தங்களது அடிப்படை ஆதரவாளர்களாக ஆக்கிக் கொண்டனர்.

ஆண்டாண்டு காலமாக ஜாதியக் கட்டமைப்பில் அதன் உச்சத்தில் இருந்த பிராமணர்களை எதிர்க்கும் முழக்கங்களை முன்வைத்து இத்தகைய ஜாதியவாதத்திற்கு அவர்கள் வலுச்சேர்த்துக் கொண்டனர்.

பணம்தான் அனைத்தும் என்பதே முதலாளித்துவக் கண்ணோட்டம். பணம் வைத்திருந்தால் அது எந்தவகை சமூக மரியாதையையும் பெற்றுத் தந்துவிடும் என்ற சூழ்நிலையை அது உருவாக்கிவிடும். அச்சூழ்நிலையில் நிலவுடமை சமூக அமைப்பின் மேல்கட்டுமானமான ஜாதியக் கட்டமைப்பு அதன் சமூகப் பொருத்தத்தை முற்றாக இழந்துவிடும் இன்றையநிலையில் போர்க்குணமிக்க பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் ஜாதியக் கட்டமைப்பின் உச்சத்தில் உள்ளவர்கள் என்று கருதப்படும் பிராமணர்களில் முன்னேறியவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஜாதியம் சமூகப் பொருத்தத்தை இழந்துள்ளதையே இது தெளிவாகப் புலப்படுத்துகிறது. ஏனெனில் இன்று சம்பாதிப்பதற்கு பெரிய அளவில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் தொழில்கள் அரசியல், அரசுக் கட்டுமான வேலைகளுக்காக ஒப்பந்தம் எடுத்தல் போன்றவையே. அதுபோன்ற சட்ட ரீதியான வேலைகளிலும் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கள்ளச் சாராயம் போன்ற சட்ட விரோத வேலைகளிலும் ஈடுபட்டுச் சம்பாதிக்கும் வாய்ப்பு பிராமணர்களைக் காட்டிலும் போர்க்குணம்மிக்க பின்தங்கிய வகுப்பினருக்கே அதிகம் உள்ளது. வேறு தொழில்களைக் காட்டிலும் இந்தத் தொழில்களே கூடுதல் சம்பாத்தியத்தை ஈட்டித் தருபவையாக உள்ளன.

நிலவும் யதார்த்த சூழ்நிலை இதுவாக இருக்கும் நிலையில் செத்த பாம்பை சினம் தீர அடிப்பதைப் போல் தி.மு.கழகமும் அதன் தலைவர்களும் தேவைப்படும் போதெல்லாம் பிராமண எதிர்ப்பு முழக்கத்தை உரத்தக் குரலில் எழுப்பி ஒரு பொய்யைத் திரும்பத்திரும்பக் கூறி அதனை மெய்யயன நிரூபிப்பதில் கவனமாக இருந்தனர். அதாவது ஒரு பாசிஸ யுக்தியைக் திறமையாகக் கையாண்டனர். இந்தப் பின்னணியில்தான் கல்வியில் சிறந்து விளங்கிய தமிழகத்தில் வளர்ந்திருந்த தாராளவாத விஞ்ஞானப் பூர்வ மனிதாபிமான மதிப்புகள் அனைத்தும் கூச்ச நாச்சமற்ற சுய விளம்பரம், பாஸிசத்தன்மை வாய்ந்த பொய்ப் பிரச்சாரங்கள், அர்த்தமற்ற அடுக்குமொழி சொல்லாடல்கள் ஆகியவற்றின் மூலம் திசை திருப்பப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் தங்கள் பலத்தையும், கருத்து வளத்தையும் கொண்டு அக்கட்சி வளரவில்லை. கம்யூனிஸ்டுகளின் பலவீனத்தைக் கொண்டு அது வளர்ந்தது. தி.மு.கழகம் ஆரம்பிக்கபட்ட காலத்தில் அதில் இருந்த தலைவர்கள் எல்லாம் இவ்வாறு ஒரு மோசமான அமைப்பை சுயலாபத்திற்காக உருவாக்குகிறோம் என அறிந்தே இதைச் செய்தார்கள் என்பதில்லை. சமூகத்தின் அடிப்படை முரண்பாட்டைப் புரியாத பல நல்லவர்களும் கூட தி.மு.க. கூறும் வழிமுறைகள் மூலம் தமிழ்ச் சமூகத்தை முன்னேற்ற முடியும் என்ற எண்ணத்திலும் அக்கட்சியில் இருந்தனர். அவர்களில் பலர் நாளடைவில் அக்கட்சி எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதையறிந்து ஒதுங்கிவிட்டனர்.

முதன்மை பெற்ற சுயவிளம்பரக் கலாச்சாரம்
இவ்வாறு வளர்ச்சியடைந்து அக்கட்சி ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த பின்பு அதனுடைய பின்பலமாக போர்க்குணமிக்க பிற்பட்ட வகுப்பிலிருந்து தோன்றிய உடைமை வர்க்கங்கள் ஆகிவிட்டன. வர்க்கப் போராட்டம் யாராலும் முன்கையயடுத்து முழு முயற்சியுடன் கட்டப்படாததால் அவ்வகுப்பினைச் சேர்ந்த உணர்வற்ற உழைக்கும் மக்களில் பலரும் அக்கட்சியின் வாக்கு வங்கியாக தேர்தல் அரசியலில் ஆகிவிட்டனர். பார்த்தறிய முடியாத பழம்பெருமை, புதுமை என்ற பெயரில் வலம்வரும் வெற்றுப் பகட்டு இவ்விரண்டையும் அக்கட்சியினர் தங்களுடைய நலனுக்காகப் பயன்படுத்தி, சுயவிளம்பரத்தைக் கூச்சமின்றிப் பரவலாகச் செய்வதன் மூலமே தங்கள் செல்வாக்கைப் பராமரிக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்படத் தொடங்கினர். பழைய மன்னராட்சிக் காலத்தைப் போல இலக்கியவாதிகள் கலைஞர்கள் போன்றவர் அனைவருக்கும் அவர்கள் எந்த அளவிற்கு தங்களுக்குச் சாதகமாக இச்சகம் பாடுகிறார்கள் என்ற அடிப்படையில் விருதுகள் வழங்குவது போன்ற போக்குகள் ஊக்குவிக்கப்பட்டன.

இந்த பின்னணியில் ஒரு நாசகரமான சூழ்நிலையை அதாவது இந்தியாவில் பொய் கூறுவதை எந்தவகையான மன உறுத்தலும், எதிர்ப்புமின்றி எங்கேனும் எளிதாகச் செய்ய முடியுமென்றால் அவ்வாறு செய்ய முடிந்த இடங்களில் தமிழகமும் ஒன்றாக நிச்சயம் இருக்கும் என்ற சூழ்நிலையை அக்கட்சி உருவாக்கிவிட்டது. தங்களுக்குள்ளேயே ஒருவருக்கு மற்றொருவர் பட்டங்கள் கொடுத்துக் கொள்வது அது தகுதி அடிப்படையில் பெறப்பட்டது போன்ற பொய்த் தோற்றத்தை இடைவிடாத விளம்பரம் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் ஏற்படுத்துவது போன்ற போக்குகள் சகிக்க முடியாத அளவிற்கு வளர்ந்ததும் இந்தப் பின்னணியில்தான்.

இதையயல்லாம் கண்ட சிந்திக்கும் பகுதியைச் சேர்ந்த மக்களும் இது ஒரு தனி உலகம். இங்கு எது வேண்டுமானாலும் நடக்கும். இந்த இரும்படிக்கும் இடத்தில் நம்மைப் போன்ற ஈக்களுக்கு வேலையில்லை என்று ஒதுங்கத் தொடங்கினர். அது தங்கு தடையின்றி இது போன்ற வேலைகளில் ஈடுபடுவதை அவர்களுக்கு மிக மிக எளிதாக்கிவிட்டது. நாம் விரும்புகிறோமோ விரும்பவில்லையோ இது ஒரு சமூகத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. மற்ற கட்சிகளையும் இது பற்றிக் கொண்டு தமிழக அரசியலே இதுதான் என்றாக்கிவிட்டது. ‘தேன் பானையில் கையைவிட்டவன் தலையில் தடவிக் கொள்ளமாட்டான்’ என்பது போன்ற சைத்தானின் வேதம் ஓதுதல்களில் தொடங்கி, இன்று ‘அரசியல் என்பது சம்பாதிப்பதற்காகத்தான்’ என்பது தத்ரூபமாக நிலை நாட்டப்பட்டுவிட்டது. அடுத்த கட்டமாகச் சம்பாதிக்க வாய்ப்பளிக்கும் அரசியலில் இருக்க அப்பணத்தில் ஒரு பகுதியை தங்களது சுயவிளம்பரத்தில் தொடங்கி வாக்கிற்குப் பணம் கொடுப்பது வரை செலவிடுவது என்ற புது நியதியும் இவர்களால் உருவாக்கப்பட்டுவிட்டது.

பல்லிளிக்கும் பணக்காரத்தனமும் பாசிஸமும்
அதனால் இருவகைப் பலன்கள் இதனைச் செய்பவர்களுக்குக் கிட்டுகின்றன. ஒன்று வாக்குகளை எளிதில் பெறுவது. இரண்டு, மக்களை இவர்கள் செய்யும் எந்த முறைகேடுகளையும் கேட்க முடியாதவர்களாக ஆக்குவது. இந்தப் பின்னணியில் தான் பொது வாழ்விலோ, பொது நல எண்ணத்துடனோ இல்லாதவர்கள் கூட பொது இடங்களைத் தங்களின் தனிப்பட்ட விழாக்களுக்காக ஆக்கிரமித்து, வாந்தி வரும் அளவிற்கு வானளாவ அவர்களது குடும்பங்களைப் பற்றி புகழ் பாடும் போக்கு சகஜமாகி விட்டது. இது போன்ற புதுப்பணக்காரக் கூட்டங்கள் இன்று பெரிய கட்சிகளாகக் கருதப்படும் அனைத்துக் கட்சிகளிலும் உள்ளன. இந்தப்போக்கு மார்க்சிய அறிஞர் டி.டி.கொசாம்பி அவர்கள் கூறுவது போல் ‘பல்லிளிக்கும் புதுப்பணக்கார கொச்சைத்தனம்’ மட்டுமல்ல; மறைமுகமாக சாதாரண மக்களை அச்சுறுத்தும் ஒரு பாசிஸப் போக்கும் ஆகும். இதனைத் தங்கு தடையேதுமின்றிச் செய்ய ஊழல் மலிந்து போன அரசு நிர்வாகமும் உதவி செய்கிறது.

இந்த அம்சங்களை வைத்து தமிழர்களையும் தமிழக அரசியல் சமூகப் போக்குகளையும் அகில இந்திய அளவில் ஏளனமாகப் பார்க்கும், எழுதும், பேசும் போக்கு வளர்ந்து வருகிறது. தமிழகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முத்திரை பதித்த பல வாதங்களை முன் வைத்துத் தமிழகத்தின் பெருமையை நிலை நாட்டிய சூழ்நிலை மாறி தமிழக எம்.பிக்கள் என்று ஒரு பகுதியினர் நாடாளுமன்றத்தில் இருக்கும் இடமே தெரியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எந்த இயக்கம் தமிழர் பெருமை, தமிழ்ச் சமூகத்தின் மேன்மை என்று வாய்கிழியக் கூறி வந்ததோ அந்த இயக்கம்தான் இத்தகைய இழிநிலைக்குச் சமூகத்தைத் தள்ளிச் சென்றுள்ளது.

கற்றவர்களின் கையறுநிலை
இன்னும் தமிழகத்தில் கற்றவர்களுக்குப் பஞ்சமில்லை. உயர்ந்த அறிவாளிகளும், சிந்தனையாளர்களும் மிக அதிக எண்ணிக்கையில் நமது மாநிலத்தில் இருக்கவே செய்கின்றனர். ஆனால் அவர்களின் நிலைதான் ஆஸ்ட்ரிச் பறவையைப் போல், காந்தியடிகள் வைத்திருந்த மூன்று குரங்குப் பொம்மைகளைப் போல ஆகிவிட்டன. ஆம். வேறென்ன செய்யமுடியும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். பிடல் காஸ்ட்ரோவே, செகுவேராவே, மாவோவே என்று இந்தத் தலைவர்களின் பெயர்களை அவர்களைப் பற்றி அறவே தெரியாதவர்கள், அறவே தெரியாத ஒருவருக்கு அடைமொழியாகக் கூறும் போது காதை மூடிக் கொள்வதைத் தவிர அவர்களைப் பற்றி அறிந்தவர்களுக்குச் செய்வதற்கு என்ன இருக்கிறது. அவ்வாறு கூறும் விளம்பரங்களைப் பார்க்கும் போது பார்த்தும் பாராதது போல் செல்வதைத் தவிர இந்நிலையில் இதற்கு எதிராக நம்மால் என்ன செய்ய முடியும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். பாவம் அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே கூறிக் கொள்வது பக்குவமில்லாத போக்கு என்ற பாரம்பர்யத்தில் வளர்ந்து தொலைத்துவிட்டவர்கள் அல்லவா?

பாசிஸத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்

இங்கு தமிழகத்தில் இப்போது நிலவும் அரசியல் போக்கு பாசிஸக் கலாச்சாரத்தின் பல பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஏழை எளியவர்களை இலவசத் திட்டங்கள், வாக்குக்குப் பணம் கொடுப்பது போன்றவற்றின் மூலமாக வாயடைத்துவிட்டு, படித்த மத்திய தர வர்க்கத்தைப் பயமுறுத்தி பொது வி­யங்களை வெளிப்படையாகப் பேசாமல் தங்களுக்குள் முணுமுணுக்க வைத்துவிட்டு, திட்டவட்டமாக அராஜக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு போக்காகும் இது. இதனை எதிர்த்துப் போராட இங்குள்ள பெரிய அரசியல் கட்சிகள் எவற்றிற்குமே திராணியில்லாமல் போய்விட்டது. உண்மையான ஜனநாயக வாதிகளும், இடதுசாரி மனநிலை கொண்டோரும் மட்டுமே இதனை எதிர்த்துப் போராட முடியும். இன்று பெரிய கட்சிகள் என்று கருதப்படக்கூடிய அனைத்துக் கட்சிகளிலும் ஜனநாயகப் பூர்வமான மனம் திறந்த விவாதங்களுக்கு வாய்ப்பளிக்கப்படாத தனிநபர் தலைமைகளே நிலைநாட்டப்பட்டுள்ளன. அந்நிலையில் தங்களின் கட்சிக்குள்ளேயே ஜனநாயகத்தைப் பராமரிக்க முடியாதவர்கள் அரசியலில் நிலவும் ஜனநாயக விரோதப் பாசிஸப் போக்கிற்கு எதிராக எப்படிக் கிளர்ந்தெழ முடியும்?

அதைப் போல் அடிப்படையான சமுதாய மாற்றக் கருத்தை வலியுறுத்தாது சில சீர்திருத்தங்கள் மூலம் சமூகத்தைச் சரிசெய்துவிடலாம் என்ற எண்ணப் போக்கோடு இருப்பவர்களாலும் வளர்ந்து வரும் இந்தப் பாசிஸப் போக்கின் கூறுகளை ஆய்ந்து கணித்து அதற்கு எதிராகத் தங்களது அணிகளைத் தேவைப்படும் போர்க்குணத்தோடு தயார் செய்ய முடியாது. அதனால்தான் வளர்ந்து வரும் இப்போக்கின் மீதான இடதுசாரிக் கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சிகளின் எதிர்ப்பு அப்போது அவர்கள் யாருடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர் என்பதைப் பொறுத்தே அமைகிறது. துரதிஷ்டவசமாக சில சட்ட, நாடாளுமன்ற இடங்களுக்காக இத்தகைய பாசிஸ சக்திகளுடனான கூட்டணியில் அவர்கள் இருந்தால் அப்போது இந்தப் போக்கிற்கெதிராக அவர்கள் மூச்சுக்கூடவிடமாட்டார்கள் அல்லவா? அதைத்தான் அவர்கள் செய்து கொண்டுள்ளனர்.

அரசியல் வாதிகளின் வேலை மட்டுமல்ல
ஆனால் இதனை உணர்ந்த உணர்வு பெற்ற பொதுமக்களும் இது அரசியல் வாதிகளின் வேலை, நம்மை இது ஒன்றும் பாதிக்கப் போவதில்லை என்று இருந்து விடுகிறார்கள். அவ்வாறு இருப்பது பெரும் தவறு. ஏனெனில் இந்த நிலை வளர்ந்துள்ளதன் விளைவாக உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படுவதில் கால் பகுதி கூட செலவிடப்படாமல் முக்கால் பகுதிக்கு மேல் அதிகாரவர்க்கம், அரசியல்வாதி, ஒப்பந்தக்காரர் கூட்டத்தினரால் கபளீகரம் செய்யப்படுகிறது. அலுவலகங்களில் சிபாரிசுகள் இன்றி பணிமாற்றம் உட்பட எதுவும் நடக்காது என்ற நிலை உருவாகியுள்ளது. பணம் இல்லாமல் சிபாரிசு கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டு அது கீழ் மட்ட அளவுகளிலும் ஊழல் மலியும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.தோன்றியுள்ள இச்சூழ்நிலை மூச்சுமுட்டக் கூடியதாக இருந்தபோதிலும் இது என்றென்றும் நின்று நிலவப்போவதல்ல.

சமூகமாற்றத்தைக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றவல்ல உழைக்கும் வர்க்கத்தை என்றென்றும் இலவசத் திட்டங்கள் மூலம் மயக்கத்தில் வைத்திருக்க முடியாது. தோன்றியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி அரசின் வருவாயைக் குறைத்து இலவசத் திட்டங்களைத் திரும்பப் பெறும் பாதையில் அதனை நிறுத்தத் தொடங்கியுள்ளது. இலவசத் திட்டங்கள் நிறுத்தப் பட்டால் தோன்றும் பொருளாதார நெருக்கடி அதாகவே மக்களை இயக்கப் பாதையை நோக்கித் திருப்பிவிடும் என்பதல்ல.

மேலும் இலவசத் திட்டங்கள் நிறுத்தப்படட்டும். பிரச்னைகள் உருவாகட்டும். அதுவரை இத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டிருப்போம் என்பதும் சரியானதல்ல. எந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் தமிழ்ச் சமூகத்திற்கு பல ஜனநாயக மதிப்புகளை வழங்கி அதனை உன்னத உயரத்தில் நிறுத்தியதோ, அதைக் காட்டிலும் உன்னதமான, உயர்ந்த சோசலிச மனிதாபிமான மதிப்புகளை உருவாக்கவல்ல சமூகத்தின் அடிப்படை மாற்றத்தை வலியுறுத்தும் மகத்தான கம்யூனிஸ்ட் இயக்கமே இந்தப் பொய்மையையும், பிணந்தின்னும் நியதிகளையும் சாஸ்வதம் போல் கருதச் செய்துவிட்ட இன்றைய சூழலையும் மாற்றும். அத்தகைய அரசியலை நாம் செய்தாக வேண்டும்.

அது முறைகேடான வழிகளில் சுரண்டிப் பணம் சேர்க்கும் ஒட்டுண்ணிகளுக்கு எதிரானதாக அடிப்படையில் இருக்க வேண்டும். ஏனெனில் அதுதான் இத்தனை சீரழிவுகளுக்கும் ஊற்றுக்கண். அதனை எதிர்த்து உழைக்கும் மக்களுடன் மக்களாக வாழ்ந்து அவர்களைத் திரட்டி அவர்களது சமூகப் பாத்திரத்தை உணர்த்தி செய்யப்படும் அரசியலாக அதாவது அது உண்மையான மார்க்சிய அரசியலாக இருக்க வேண்டும். அத்தகைய அரசியலின் மீது ஒரு குறைந்த பட்ச நம்பிக்கையை உருவாக்குவதில் நாம் வெற்றி பெற்றுவிட்டால் கூட, அதற்கான ஆதரவு குறைவின்றி மக்கள் மத்தியிலிருந்து வரவே செய்யும். ஏனெனில் உணர்வுள்ள மக்கள் இந்த நிலையைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேசாமலிருக்கவில்லை. இதற்கு எதிராக அவர்கள் அடி மனதில் குமுறிக் கொண்டே உள்ளனர். ஒரு குறைந்தபட்ச நம்பிக்கையை நாம் கொடுக்க முடிந்தால் போதும். இந்தப் பாசிஸப் போக்கிற்கெதிரான தீர்மானகரமான போராட்டத்தை அவர்களின் துணையோடு நாம் நிச்சயம் தட்டயெழுப்ப முடியும். தமிழகத்தைச் சூழ்ந்துள்ள இந்தக் கலாச்சாரச் சீரழிவிலிருந்து அதனை மீட்டெடுக்கவும் முடியும்.

ஜனவரி 2010, மாற்றுக்கருத்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்