தியாகி பகத்சிங்கின் 80வது நினைவு தினம் நாடெங்கும் மார்ச் 23 அன்று அனுஷ்டிக்கப்பட உள்ளது. அவரது நினைவு நாளில் அவரது வீரமும் தியாகமுமே பெரும்பாலும் நினைவுகூரப் படுகின்றன. மரணத்தைக் கூடத் துச்சமெனக் கருதும் மகத்தான வீரமும், சமூகத்தின் நலனுக்கான முழுமையான அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்ட தியாக உணர்வும் அதாகவே எவரிடமும் வந்து விடுவதில்லை. மாறாக மகத்தான உண்மைகள் அவர்களை வழிநடத்தும் போதே அவை உருவாகின்றன. பகத்சிங் வியத்திலும் அத்தகைய மகத்தானதொரு உண்மையுணர்வே அவரை வழி நடத்தியது.
ஆம். விடுதலைப் போரில் ஈடுபட்ட அனைவரும் வெள்ளையரிடம் நாம் அடிமைப்பட்டுக் கிடந்த அந்த வியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட வேளையில் அதையும் தாண்டி வேறொரு முரண்பாட்டைப் பார்க்க வல்லவராக அவர் இருந்தார். அப்போது விடுதலைப் போரைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் அமைப்பின் மூலம் நமது நாட்டின் விடுதலை சாதிக்கப் பட்டால் அது முழுமையான விடுதலையாக இந்தியாவின் மிகப் பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரையில் இராது என்பதை அவர் பார்த்தார். அன்னியச் சுரண்டல் இருந்த இடத்தில் உள்நாட்டுச் சுரண்டல் கோலோச்சி கோடானகோடி உழைக்கும் மக்களை வாட்டிவதைக்கும் என்பதை அவர் கண்டு கொண்டார்.
எத்தனையோ மாற்றங்கள் அவர் மறைந்த பின்னர் இந்த 80 ஆண்டுக் காலத்தில் நிகழ்ந்துள்ளன. சமூகத்தில் எந்த மாற்றமுமே திசை வழியின்றித் தன்னிச்சையாக நிகழ்வதில்லை. சமூகத்திற்குத் தேவையான பொருளுற்பத்தி நடைபெறும் தன்மை மற்றும் அதன் போக்கினை அடிப்படையாகக் கொண்டவையாகவே சமூக மாற்றங்கள் நிகழ்கின்றன. 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போலன்றி எந்திரத் தொழிலுற்பத்தி முறை அனைத்துத் துறைகளையும் தழுவிய ஒன்றாகப் பன்மடங்கு வளர்ந்துள்ளது. பொருள் மற்றும் கருத்து சார்ந்த உற்பத்திகள் அனைத்தும் சந்தைச் சரக்குகளாக ஆகியுள்ளன.
ஆனால் இன்றைய நிலையிலும் நமது சமூகத்தை அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவம் என்று கருதும் ‘சமூகமாற்ற’ சக்திகள் உள்ளன. ஆனால் சமூக அமைப்பு எது வளரும் தன்மை கொண்டதோ அதைக் கொண்டே கணிக்கப்பட வேண்டும் என்ற விதியின்படி 80 ஆண்டுகளுக்கு முன்பே அன்று சமூகத்தில் வளரும் தன்மை கொண்டதாக இருந்த முதலாளித்துவத்தை இனம் கண்டு, அந்த உற்பத்தி முறையே மக்களின் உண்மையான விடுதலைக்குக் குறுக்கே நிற்கப் போகிறது என்று பகத்சிங் பார்த்தார். சமூகத்தை விஞ்ஞான பூர்வமாகப் பகுப்பாய்வு செய்த மார்க்சியத்தை முழுமையாகக் கற்றதனால் அந்தப் பார்வையினை அவர் கொண்டிருந்தார் என்று கூற முடியாது. ஏனெனில் மார்க்சிய இலக்கியங்கள் ஒன்றிரண்டினைத் தவிர மற்றவை எளிதில் கிடைக்காத காலம் அது. அப்படியிருந்தும் மார்க்சிஸத்தின் அடிப்படையினை அவரால் முழுமையாகக் கிரகிக்க முடிந்தது.
அதன் காரணம் அவரது இலக்கு தெளிவானதாக இருந்தது தான். அதனை விரைவில் அடைய உதவும் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் ஒரு முதல் தரப் புரட்சியாளனாக அவர் தேடியலைந்தார். அந்தத் தேடுதலின் விளைவாக மார்க்சிஸத்தை அவரால் அறிய முடிந்தது. அதன் சாராம்சத்தை அது வழங்கிய உலகப் பார்வையை அவரால் கைக்கொள்ள முடிந்தது. அதைக் கொண்டு சமூக நிகழ்வுகளைத் தெளிவுடன் பார்க்க முடிந்ததால் காந்தியடிகளின் தலைமையிலான தேச விடுதலைப் போராட்டம் முதலாளித்துவ ஆட்சி முறையைக் கொண்டு வருவதிலேயே சென்று முடியும் என்பதை அவர் பார்த்தார்.
எனவே அன்னிய அடிமைத் தளையையும், முதலாளித்துவச் சுரண்டலையும் எதிர்த்துப் போராட வல்லதொரு அமைப்பைத் தேவை அடிப்படையில் உருவாக்க அவர் நினைத்தார். அதுவே அவரை ஒரு முதல்தரக் கம்யூனிஸ்ட் ஆகும் போராட்டத்தில் ஈடுபட வைத்தது. ஆனால் அவர் எடுத்த பணியினை முனைப்புடன் தொடங்குவதற்கு முன்பே அவரும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்டு விட்டனர். அவர்களது தலைவராக இருந்த சந்திர சேகர் ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.
நாம் பகத்சிங்கிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் இன்றுள்ள சமூக முரண்பாட்டை அவரைப் போன்ற தெளிவுடன் கற்று நமது இலக்கைத் தீர்மானித்து அதனை அடையும் பாதையில் உறுதியுடன் நடை போட வேண்டுமென்பதே. அன்றே கோளாறானது என்றும் பல அடிப்படைப் பிரச்னைகளை உருவாக்க வல்லது என்றும் பகத்சிங்கால் அறியப்பட்ட முதலாளித்துவம் இன்று கோளாறுகளின் ஒட்டுமொத்த உறைவிடமாக ஆகியுள்ளது. முதலாளித்துவ அமைப்பைக் காக்கும் இன்றைய நமது நாட்டின் அரசு இயந்திரம் பெயரளவிற்குக் கூட நடுநிலையானது என்று பாவனை இன்று காட்ட முடியவில்லை. ராடியா ஒலி நாடாக்கள் தனியார் முதலாளித்துவ நிறுவனங்களின் இசைக்கேற்ற விதத்தில் நாட்டியமாடுவதே அது என்பதைப் பட்டவர்த்தனப் படுத்தியுள்ளன.
பொது வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு பொதுச் சொத்துக்கள் அரசியல் வாதிகளால் சூறையாடப் படுகின்றன. அத்தகைய அரசியல் வாதிகளை மூடிமறைத்துக் காப்பதற்கு சமூக நீதிக் கண்ணோட்டங்களும் இன உணர்வுப் பிதற்றல்களும் மூடு திரைகளாகின்றன. அரசியல் வாதிகளும், அதிகார வர்க்கமும் மட்டுமின்றி வாக்கிற்குப் பணம் கொடுப்பது போன்ற நடைமுறைகளின் மூலம் ஏழை எளியவர்களும் ஊழல் அமைப்பின் பங்கும் பகுதியுமாக்கப்பட்டு யாரும் எதையும் தட்டிக் கேட்க முடியாது என்ற நிலை தோற்றுவிக்கப் பட்டுள்ளது. ஓரிரு நாடுகளில் மட்டும் என்ற நிலை கடந்து அமைப்பு என்ற ரீதியில் உலகம் முழுவதுமே முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. இப்போது தோன்றியுள்ள நிலை சில அல்லது பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றின் மூலம் அமைப்பைச் சரி செய்து விடலாம் என்ற எண்ணத்தைப் பகற்கனவாக்கியுள்ளது.
இந்த நிலையில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் பயணிக்க விரும்பிய பாதையில் பயணித்து ஆளும் முதலாளி வர்க்க ஆட்சியை அகற்றப் பாடுபடுவதே பகத்சிங்கின் நினைவு நாளில் நாம் அவர்களுக்குச் செலுத்த வேண்டிய உரிய முறையிலான அஞ்சலியாகும். அதனைச் செய்ய முன்வருமாறு அனைத்து உழைக்கும் மக்களையும் குறிப்பாக மாணவர் இளைஞரையும் அறைகூவி அழைக்கிறோம்.
வணக்கம் உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.
பதிலளிநீக்குநன்றி
தோழமையுடன்
சூப்பர்லிங்ஸ்