வியாழன், 22 மார்ச், 2012

மேல் நோக்கியே எழுந்தாடும் நெருப்பு : பகத்சிங்தீ ஞான தன்மானத்தின் அடையாளம் 
தலைகீழாய் பிடித்தாலும் தீ 
மேல்நோக்கியே எழுந்தாடும் 
பகத்சிங் ஒரு வாலிப நெருப்பு 

தன்னை உரசினாலும் 
தான் உரசினாலும் 
பாதகமில்லை நெருப்புக்கு 
'பகத்சிங்' 
இது வெறும் பெயரல்ல 
ஒரு மாபெரும் நிலப்பரப்பின் 
மனசாட்சி 

கிழக்கிந்திய வெள்ளை முதலாளிகளின் 
சிம்ம சொப்பனம்

சமரசமற்ற வாலிப தீ பந்தம் 
அதனால் தான் இனி பிறக்கும் தலைமுறைக்கும் 
அவன் வாலிப பந்தம்.

அவன் ஒவ்வொரு மீசை முறுக்கிலும் 
இருந்தது ,சமூகத்தின் 
சில சுளுக்கு நிவாரணி.

பீரங்கிகளும் துப்பாக்கிகளும் 
அசுரத்தனமாய் தும்மிக் கொண்டிருத்த போது
அவனுக்குள் ஒரு அணுகுண்டு 
கருவாகிக் கொண்டிருந்தது. 

ஜாலியான் வாலாபாக்கின் குருதித் தீ 
வைத்த ராஜத் தீ பகத்சிங் 
உள்ளங்கை அள்ளிய குருதி மண்ணில் 
இழுத்த ஆக்ஸிஜனில் 
சிவக்க சிவக்க மூளையானான் 
தேச, வர்க்க விடுதலையின் மூலக்காரனான் 

கழுதை புலிகளிடமிருந்து 
செம்மறிகளை விடுதலை செய்தோம் 
கடைசியில் என்ன ஆனது ?
உள்ளூர் ஓநாய்களிடம் 
ஒப்படைப்பு ஆனது

நரிவந்து நாட்டமை செய்ததில் 
கிடைக்கு இரண்டு ஆடுகளை 
இழந்ததே மிச்சம் 

தூக்கு மேடையில் 
தொண்டை குருத்தெலும்புகளின் 
மெல்லிய நொறுங்கலை 
கால் கட்டைவிரல் நுனியில் 
இந்த பூமிக்குள் பதிவு செய்ததில் 
அர்த்தம் இன்னும் ஆரமலிருக்கிறது,
எங்கள் சுரனைகளிலும் 
கணுக்கால் நரம்புகளிலும் 
முழக்கங்களாய், கவிதைகளாய் 
பிரசாரங்களாய் , கண்டனங்களாய் 
வியூகங்களாய், சுரணைகளாய்
இன்னும் தீர்ந்துபோகவில்லை 
நாடாளமன்றத்தில் அவன் விட்டெறிந்த வெடிகுண்டுகள்! 

1 கருத்து:

 1. "கழுதை புலிகளிடமிருந்து
  செம்மறிகளை விடுதலை செய்தோம்
  கடைசியில் என்ன ஆனது ?
  உள்ளூர் ஓநாய்களிடம்
  ஒப்படைப்பு ஆனது"
  அற்புதம் தோழர்....

  பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்