புதன், 14 மார்ச், 2012

இருபது வருடங்களாக தொழிலாளர்களை பாடாய் படுத்தி வரும் புகலூர் பாரிஸ் சுகர் பேக்டரி நிர்வாகம்


நமக்கு இனிப்பு சுவை தரும் பண்டங்களை சாப்பிடும் பொது சந்தோசம் பிறக்கும் , ஆனால் அந்த இனிப்பு சுவைக்கு காரணமான  சர்க்கரையை விளைவிக்கும் விவசாயிகளும் , சர்க்கரை ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் அது போன்ற சந்தோசத்தை அனுபவித்த தருணங்கள் மிக குறைவே ஆகும். மிகப்பிரமாண்டமான ஆலையில் ராட்சத அரவை இயந்திரங்களில் அறைபடுவது கரும்பு மட்டுமல்ல ஏழை தொழிலாளர்களும் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். தொழிலாளி  அவன் விளைவிக்கும் பொருள்களில் இருந்தே அன்னியமாக்கபடும் தனிச் சொத்துடமை ஒழியும் வரை இந்த கொடுமைகள் தொடரவே செய்யும் .


 சர்க்கரை உற்பத்திக்கு பெயர்போனவை நாமக்கல், கரூர் மாவட்டங்கள் ஆகும். கரூர் மாவட்டம் புகலூரில் உள்ள டெக்கான் சுகர்ஸ் என்ற சர்க்கரை ஆலையில் 700 க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தார்கள் , அவர்களில் 115 பேர் தினக் கூலிகள். இந்த ஆலையில் ஏழு தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வந்தன. 1992 ம் ஆண்டு டெக்கான் சுகர்ஸ் ஆலையை பாரிஸ் சுகர் பேக்டரி என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது.

 பாரிஸ் சுகர் பெக்டரியின் கைகளுக்கு நிர்வாகம் வந்தவுடன் அந்த ஆலையில் அது வரை வேலை பார்த்து வந்த 731 தொழிலாளர்களையும் ஒரே உத்தரவு மூலம் ஒரே நாளில் வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்தது. மறுநாள் வேலைக்கு சென்ற தொழிலாளர்களை வேலை செய்ய நிர்வாகம் அனுமதிக்கவில்லை. தொழிலாளர்கள் போராடத்  தொடங்கினார்கள் . ஆலை  வாயிலில்    திரண்டிருந்த தொழிலாளர்களை காவல் துறை சுற்றி வளைத்தது. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள்  காவல் துறை காட்டுமிராண்டி தனமாக தொழிலாளர்களை தாக்க தொடங்கியது. அத்தோடும் மனநிறைவு அடையாத காவல் துறை 3 தொழிலாளர்களை சுட்டு கொன்றது. 

தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது நிர்வாகம். அதற்கு உதவுவதற்காக துப்பாக்கி சூடு நடத்தி தனது முதலாளித்துவ விசுவாசத்தை காட்டியது அரசு. நிர்வாகத்தின் வேலை நீக்கம், அரசின் துப்பாக்கி சூடு இரண்டையும் கண்டித்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் , கண்டன ஆர்ப்பாட்டம் என்று அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இறங்கின. போராட்டம் தீவிரம் அடைந்ததால் அரசு தொழிலாளர் நல ஆணையர் முன்பு இந்த  வழக்கை  விசாரிக்க அரசு உத்தரவிட்டது .  

தொழிலாளர் நல ஆணையம் தொழிலாளர் விபரங்களை தொழிற் சங்கத்திடம் கேட்காமல் நிர்வாகத்திடம் தொழிலாளர்களின் பட்டியலை பெற்றது. அந்த பட்டியலில் தினக் கூலிகளாக வேலை பார்த்த  115  தொழிலாளர்களின் பட்டியலை நிர்வாகம் தரவில்லை. தொழிலாளர் நீதிமன்றத்தில் தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த போதும் இன்று வரை அதை நடைமுறைப்படுத்தாமல் , மேல் முறையீடு செய்து வழக்கை இழுத்தடிக்கிறது.

 நவீன தொழில்நுட்பத்துடன் லாபத்தை குவிக்கும் பாரிஸ் சுகர் பேக்டரி தொழிலாளர்களின் சிறிய கோரிக்கையை கூட காது கொடுத்து கேட்க தயாராயில்லை . அந்த நிறுவனத்தின் அத்துனை கொடுஞ்செயலுக்கும் ஆளும் அரசுகள் துணை போகின்றன என்றால் அது மிகை அல்ல. தொழிலாளர் நலத்துறையில் ஆள் பற்றாக்குறை திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் 10 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கின்றன. அத்தோடு தொழிலாளார் நீதிமன்றங்களில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அதாவது முதலாளி எவ்வளவு குறைவாக கூலி கொடுத்தாலும் தொழிலாளர்கள் தட்டி கேட்க கூடாது.  அடக்குமுறையை மீறி தொழிற்சங்கம் உருவாகுமானால் அவை கடுமையாக ஒடுக்கப்படும் , அரசு நிர்வாகமும், காவல் துறையும் நிர்வாகத்தின் பக்கமே நிற்கும், தொழிலாளர் துறையும் தொழிலாளர்களை கிள்ளு கீரையாகவே கையாளும் , நீதிமன்றங்கள் சென்றாலும் உரிய நிவாரணம் கிடைக்காது என்ற நிலையை ஆளும் வர்க்கம் வெற்றிகரமாக உருவாக்கி வைத்துள்ளது.

 ஆனால் பாரிஸ் சுகர் பேக்டரி தொழிலாளர்கள் அதனால் எல்லாம் சோர்ந்து போய் விடவில்லை. தொழிலாளர்களில் பலர் இறந்து போனாலும், பலர் வேலை செய்யும் தகுதியை இழந்து விட்டாலும் தொழிற் சங்கம் தோற்ககூடாது என்ற வைராக்கியத்தோடு இன்று வரை சளைக்காமல் போராடி வருகிறார்கள் . அந்த வீரம் செறிந்த பாரிஸ் சுகர் பேக்டரி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்போம். உழைக்கும் வர்க்கத்தின் கரங்களை வலுப்படுத்துவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்