ஞாயிறு, 11 மார்ச், 2012

தொழிற் சங்க கொடியை அறுத்தெரிந்து அட்டகாசம் செய்யும் ஹூண்டாய் நிறுவனம்



பூந்தமல்லி , இருங்காட்டுக்கோட்டை , ஸ்ரீபெரும்புத்தூர் , திருவள்ளூர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்த தொழிலாளர்களான இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ மிகவும் குறைவாகும். முதலில் ட்ரெயினியாக வேலைக்கு சேரும் இவர்களுக்கு ரூ.3000௦௦ ற்கும் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. பிறகு என்ன தான் குட்டி கரணம் அடித்து வேலை செய்தாலும் இவர்களின் மாத சம்பளம் ரூ.6000 த்தை தாண்டுவதில்லை. வேலை நிரந்தரமாக்கப்படுவது என்பது அறவே ஒழிக்கப்பட்டு விட்டது. 
தொழிலாளர் சட்டங்களை இந்த நிருவனங்கள் எல் முனையளவும் மதிப்பதில்லை. ஆனால் இவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் லாபம் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு குவிந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக உலகமயத்திற்கு பிறகு ஒட்டு மொத்த மக்களை தொகையில் குறிப்பிடத்தக்க  பகுதியினரின்  வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலைகள் தாங்கள் உருவாக்கும் வாகனங்களை சந்தையில் தயாரிப்பு செலவை விட பன்மடங்கு அதிகாமாக விற்று தீர்க்கின்றன.  ஆனால் டிப்ளமோ முடித்து விட்டு  21 வயதில் வேலைக்கு வரும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. வீட்டு வாடகை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில் மனித வாழக்கையில் சந்தோசமான தருணமான உரிய வயதில் திருமணம் செய்ய கூட தயங்கும் படியான நிலைக்கு தொழிலாளர்களை இந்த நிறுவனங்கள் தள்ளியுள்ளன. 

தொழிலாளர்கள் உரிமையை பாதுகாக்கும் தொழிற்சங்கங்களை வரவிடாமல் செய்வதில் இந்த நிறுவனங்கள் வெற்றிகரமாக கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன. அப்படியே தப்பி தவறி எழக்கூடிய தொழிற்சங்கங்களை நசுக்கி எறிவதில் முனைப்புடன் உள்ளன. கடந்த வருடத்தில் பாஸ்கான் தொழிற்சாலையில் நடந்த தொழிலாளர் போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்க தலைவரான திரு. செளத்தராஜன் அவர்கள் கடும் குற்றம் செய்த குற்றவாளி போல கைவிலங்கு மாட்டப்பட்டு  கைது செய்யப்பட்டார்.

 அந்த அளவிற்கு தொழிலாளர்களின் மீதும், தொழிற்சங்கங்களின் மீதும் கடும் அடக்கு முறையை இந்த நிறுவனங்கள் அரசின் உதவியோடு அரங்கேற்றுகின்றன. இதில் அடக்குமுறையில் முதலிடத்தில் இருப்பது ஹூண்டாய் தொழிற்சாலை ஆகும். அங்கு தொழிற்சங்கம் ஆரம்பிப்பதற்குள் பல முக்கிய தொழிற்சங்க தலைவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டார்கள். அத்தோடு அங்கு தொழிற்சங்க கொடியை நடுவதற்கும்  நிர்வாகம் அனுமதிக்கவில்லை. கடும் போராட்டத்திற்கு பிறகே அங்கு தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டது. கொடி ஏற்றப்படும் போது ஏற்பட்ட சச்சரவில் பல தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்ட சில தொழிலாளர்களை  இன்று வரை வேலைக்கு சேர்த்து கொள்ளாமல் உள்ளது நிர்வாகம். தொழிலாளர் நல அலுவலகமோ பெயர் தான் 'தொழிலாளர் நல அலுவலகம்' என்று வைத்துள்ளதே தவிர முதலாளிகளுக்கு சேவகம் செய்வதையே தனது தலையாய கடமையாக கொண்டுள்ளது.  

இந்த நிலையில் மார்ச் ஒன்றாம் தேதி அன்று தொழிற்சங்கத்தின் கொடியினை அறுத்தெறிந்து உள்ளது ஹூண்டாய் நிர்வாகம் . தொழிற்சங்க கோடி என்பது வெறுமனே துணி மட்டுல்ல அது தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் , நிலைநாட்டுவதற்குமான அடையாளம் ஆகும். ஆனால் லாப வெறி நிரம்பிய ஹூண்டாய் நிர்வாகமோ அதிகார போதையில் தொழிற்சங்கங்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறது. அதை கண்டும் காணாததும் போல இந்த முதலாளித்து அரசு நிர்வாகத்திற்கு ஆதரவாக உள்ளது. 

இது போன்ற தொழிலாளர் விரோத போக்குகள் இந்த ஒரு நிறுவனத்தில் மட்டுமல்ல அங்குள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் நிலையும் அவ்வாறு தான் உள்ளது. அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தம்மை அடிமைகளாக பாவித்து வாழ் நாள் ,முழுவதும் இப்படியே அடிமை சேவை செய்து துன்பத்தில் உழல்வது தான் வழி என்று எண்ணி மயங்காமல்,  தற்போது நாடு முழுவதும் பல்வேறு தனியார் மருத்துவ மனைகளில் வேலை பார்க்கும் செவிலியர்கள் ஓன்று பட்டு போராட்டத்தில் குதித்து குறிப்பிட தக்க வெற்றியை ஈட்டியதை போல பல்வேறு நிருவனங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சங்கமாக ஓன்று பட்டு மாபெரும் போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களின் உரிமைகளை நிலை நாட்ட முடியும். அது அங்குள்ள தொழிலாளர்களின் விடுதலைக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கும் இட்டுச்செல்லும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்