சனி, 17 மார்ச், 2012

நெருக்கடியில் தள்ளும் பட்ஜெட்கள் : பி.எப். வட்டி குறைப்பும், ரயில்வே கட்டண உயர்வும்


கடும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், என்று நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் சாதாரண மக்களை மேலும் நெருக்கடியில் தள்ளும் விதத்தில் 2012 -2013 ம் நிதி ஆண்டுக்கானா பொது  பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் , ரயில்வே பட்ஜெட்டை  ரயில்வே அமைச்சர் திரிவேதியும் தாக்கல் செய்துள்ளனர். பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு சலுகை அளித்திருப்பதும் , அந்நிய முதலீட்டளர்களுக்கு  வரி சலுகைகள் வாரி வழங்கியிருப்பதும் பெரும் முதலாளிகள் மேலும் மேலும் லாபம் சம்பாதிக்க வழி வகுக்குமே அல்லாமல் சாதாரண மக்களுக்கு எந்தவித பயனையும் அளிக்காது.

அதே போல் பெரும் முதலாளித்துவ நிருவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் எதுவும் குறைக்கப்படவில்லை. அவர்களுக்கான வரிவிதிப்பிலும் எந்த மாற்றமும் இல்லை.  பொது துறையில் அரசின் முதலீட்டை 30,000  ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்பதன் மூலம் குறைத்துக் கொள்வதன் மூலம் பொது துறையை ஒட்டுமொத்தமாக கைகழுவி விடவே அரசு முயற்சிக்கிறது.  ,உணவு பொருள் ,எரிபொருள் ,உரம் ஆகியவற்றிற்கு  வழங்கப்படும் மானியம் 14 % குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் சாதாரண ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய அரசு. 

முதலாளித்துவ நிறுவனங்களுக்கு வரி / மானியம் போன்ற  சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசு( தற்போது தான் விஜய் மல்லையா 3000 கோடி அளவிற்கு கடன் பாக்கி வைத்துள்ள செய்தி வெளியானது )  , சாதாரண  மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ரயில்வே கட்டணங்களை அந்த மக்களின் சுமை மேலும் கூடும் என்பதை கணக்கில் கொள்ளாமல் ஈவு இறக்கம் இன்றி கூட்டியுள்ளது. ரயில்வே கட்டணங்களை கூட்டியுள்ளதற்கு காரணம் சொன்ன திரிவேதி இது நாட்டு மக்களுக்கு நன்மை தருவதற்காக கூட்டியுள்ளேன். இதன்  மூலம் ஆண்டுக்கு 4,000 கோடி கூடுதலாக வருமானம் கிடைக்கும்,அதன் மூலம் ரயில்வேயில் புதிய திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று கூறியுள்ளார். இப்படி சாதாரண மக்களுக்கு பயன்படும் திட்டத்தில் கணக்கு பார்க்கும் மத்திய அரசு, முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசு ,தற்போது தொழிலாளர்கள் வயிற்றில் ஈட்டியை ஏற்றியதை போல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான ( பி.எப். ) வட்டி விகிதத்தை 9 .5 % த்தில் இருந்து 8 .25 சதவிகிதமாக குறைத்துள்ளது. 

தொழிலாளர் வைப்பு நிதி என்பது தொழிலார்களின் ஒரு நாள் சம்பளத்தோடு அவர்கள்  வேலை பார்க்கும் நிர்வாகம் அதே அளவு பங்கையும் சேர்த்து பி.எப் அலுவலகத்தில் செலுத்தி வருவதாகும், இந்த நிதி அந்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம்,  போன்ற செலவுகளுக்கு உதவுக்கூடியது.  இதில் 50 %  மேற்பட்ட நிறுவனங்கள் இது போல தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வைப்பு நிதியை செலுத்தாமல் மோசடி செய்கின்றன. அந்த நிறுவனங்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்கும் , நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்துவதற்கும் போதுமான நிதியில்லாமல் தவித்து வரும் பி.எப். அலுவலங்கள் , மத்திய அரசின் வட்டி குறைப்பினால் மேலும் நிதி நெருக்கடியில் சிக்கி முதலாளித்துவ நிறுவனங்கள் செய்யும் எந்த முறைகேடுகளையும் தட்டி கேட்க முடியாத நிலையே ஏற்படும். இப்படி தொழிலாளர்கள்  உழைத்து சேர்த்து வைத்த பணத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை தான் ஆளும் மன்மோகன் அரசாங்கம் ஏற்படுத்த முனைகிறது. இதன் மூலம் முதலாளிகளின் மனதை குளிர்விப்பதையே முதலாளித்துவ அடிவருடி மன்மோகன் சிங் விரும்புவார். 

இப்படி சாதாரண மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் நெருக்கடி நிறைந்ததாக மாற்றுவதையே மத்திய அரசு விரும்புகிறது.  ரயில்வே கட்டணங்களை கூட்டியுள்ளதும் , பி.எப். வட்டி விகிதத்தை குறைத்துள்ளதையும் சமூக ஜனநாயக சக்திகள் வன்மையாக கண்டிப்பதோடு ,இது தொடர்பான மக்களை இயக்கங் களை கட்டி கடுமையான எதிர்ப்பை மத்திய அரசிற்கும் ,சாதாரண மக்களுக்கு எதிரான மத்திய அரசின் அராஜக போக்குகளை கண்டிக்காத அரசியல் கட்சிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். 

1 கருத்து:

முகப்பு

புதிய பதிவுகள்