புதன், 7 மார்ச், 2012

சென்னை நகர செவிலியர் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரள்வோம்


கல்வியும் மருத்துவமும் தொழில்களாக கருதப்படுவதில்லை. அவை சேவையாக கருதப்படுகின்றன. சேவை என்பதன் பொருள் ஆதாயம் கருதமால் மனித குலத்திற்கு ஆற்றும் பணியாகும். ஆனால் இவ்விரு துறைகளும் சேவையாக இல்லாமல் லாபம் ஈட்டுவதையே முதல் மற்றும் முழு நோக்கமாகக் கொண்டு செயல்படுபவையாக இன்று ஆகி விட்டன. அதற்கான காரணம் அரசு இவ்விரு துறைகளையும் கைவிட்டுருப்பதாகும். அரசு மருத்துவ மனைகளை மட்டுமே பல காலம் நம்பியிருந்த சாதாரண மக்கள் கூட இன்று தனியார் மருத்துமனைகள் பக்கம் தள்ளப்படுகின்றனர். அம்மருத்துவமனைகள் அப்பட்டமான வணிக வளாகங்கள் போல் ஆகிவிட்டன. அறை வாடகையிலிருந்து மருத்துவர் கட்டணம் வரை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவை கட்டணங்களை வசூலித்து குவிக்கின்றன.

இவ்வாறு மிதமிஞ்சிய வகையில் கட்டணங்கள் வசூலிக்கும் தரமானவை என்று கருதப்படும் மருத்துவமனைகள் அதில் வேலை செய்யும் செவிலியர்களுக்கும் பல இடங்களில் மருத்துவர்களுக்கும் கூடத் தரமான ஊதியம் வழங்குவதில்லை. அவ்வாறு கூடுதல் ஊதியம் வழங்காதிருப்பதற்கு வழிவகுப்பது பட்ட மற்றும் பட்டயக் கல்வி கற்ற செவிலியர்கள் கூடுதல் எண்ணிக்கையில் இருப்பதாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை மனதிற்கொண்டு நமது பெற்றோர் தங்களது சொத்து சுகங்களை விற்றுக்கூட இன்று மாநிலம் முழுவதும் விரவிக் கிடக்கும் செவிலியர் கல்லூரிகளில் தங்களது பிள்ளைகளை அவர்களது எதிர்காலம் நிச்சயமானதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் சேர்த்து விடுகின்றனர். அதனால் பல்லாயிரக் கணக்கில் செவிலியர் உழைப்புத்திறன் வேலைச் சந்தையில் வந்து குவிவதைச் சாதகமாக்கிக் கொண்டு நமது மாநிலத்தின் தனியார் மருத்துவமனைகள் 5000 மதல் 7000௦௦௦ ௦௦௦ வரை மாத ஊதியம் கொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. ஆனால் இந்தச் செவிலியர் கல்வியைக் கற்பதற்கு ஆகும் செலவோ பல லட்சங்களாக இருக்கிறது. ஏனெனில் தற்போதைய மருத்துவமனைகளுக்குக் சிறிதும் விட்டுக் கொடுக்காத வகையில் கல்வியும் வணிகமயம் ஆகியுள்ளது. 

இந்தத் தரமானவை என்று கருதப்படும் மருத்துவமனைகள் இத்தனை கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு ஆதாரமாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது செவியலர்களின் மருத்துவச் சேவையாகும். செவிலியர் பணி மற்றப் பணிகளைப் போல் அத்தனை எளிதானதல்ல. மிதமிஞ்சிய பொறுமையும், சகிப்புத் தன்மையும் , அர்ப்பணிப்பு உணர்வும் இப்பணிக்கு அத்தியாவசியமானவை. உடல் உபாதைகளுடன் இருக்கக் கூடியவர்கள் அவர்களது உபாதைகளின் காரணமாகக் கொடுக்கும் சிரமங்கள் அனைத்தையும் புன்முறுவலுடன் எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் கட்டாயமாக இருந்தாக வேண்டிய பணி அது. அப்பணியின் தன்மை அவர்கள் செவிலியர் பட்டம் பெறுவதற்காக செலவழித்துள்ள மிகப்பெரும் தொகை அந்த செவிலியர்களின் சேவையை மையமாக வைத்தே மிதமிஞ்சிய வைத்தியக் கட்டணங்களைத் தாங்கள் வசூலித்துக் கொண்டிருப்பது இவை எதையும் கருத்திற் கொள்ளாது. செவிலியர் பட்ட மற்றும் பட்டயதாரிகளை மருத்துவமனை நிர்வாகங்கள் காட்டுத்தனமாகச் சுரண்டி வருகின்றன. சென்னை போன்ற நகரங்களில் வீட்டு வாடகை, உணவுப் பொருள்களின் விலை இவை இன்றுள்ள நிலையில் இந்த அளவு ஊதியத்தைக் கொண்டு எத்தகைய வாழ்க்கையினை செவிலியர் பணியாற்றுபவர்கள் நடத்த முடியும் ? 

இந்தப் பின்னணியில் தாமாகவே முன்வந்து சம்பள உயர்வினை இந்த மருத்துவமனை நிர்வாகங்கள் ஒருபோதும் தரப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட செவிலியர்கள் தற்போது ஒரு தீரமிக்கப் போராட்டத்தினைத் துவங்கியுள்ளனர். அவர்களைப் பல வகைகளில் பலகாலம் சுரண்டி ருசி கண்டுவிட்ட மருத்துவமனை நிர்வாகங்கள் அவர்களது போராட்டத்தினை முறியடிக்க அவர்களை வேலைநீக்கம் செய்வது போன்ற அடாவடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளன. இப்போராட்டத்தில் உள்ள நியாத்தை உணர்ந்து அதற்கு ஆதரவாக அரசு முன்வராமல் இருந்து கொண்டுருக்கிறது. அவர்கள் கோரியுள்ள சம்பள உயர்வான மாதம் ஒன்றிற்கு ரூபாய் 15 ,000 என்பது சென்னையில் நிலவும் வாழ்க்கைச் செலவினங்களைப் பொறுத்த வரை அத்தனை பெரிய தொகையில்லை . இந்நிலையில் செவிலியர்களுக்கு ஆதரவாகத் திரண்டெழு வது உழைக்கும் வர்க்கத்தின் தலையாய கடமையாகும். உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பு என்ற ரீதியில் அப்போராட்டத்திற்கு உறுதுணையாக அணிதிரள்வோம். கருத்தாலும் கரத்தாலும் பாடுபடும் தமிழக உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவு கரம் நீட்ட அறைகூவல் விடுப்போம். 

சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்