வெள்ளி, 2 மார்ச், 2012

பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து காலை இழந்த 6 ம் வகுப்பு மாணவி



அனைவருக்கும் கல்வி திட்டத்தின் ( எஸ்.எஸ்.ஏ) கீழ், ஒவ்வொரு பள்ளியும் முறையான கட்டிட வசதி, மாணவ மாணவிகளுக்கு தனித்தனியான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, சுற்றுப்புற சுகாதாரம் , மாணவர்களின் முழு வருகை , மாணவர்களின் இடை நிற்றல் இல்லாமல் இருத்தல், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு , பள்ளி நூலகம், புத்தக பூங்கொத்து திட்டத்தின் முழுமையான பயன்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்த கோடிக்கணக்கான நீதி ஒதுக்கப்பட்டு ஆண்டு தோறும் அந்த நிதி செலவழிக்கப்பட்டு விட்டதாக கணக்குக் காட்டப்படுகிறது. ஆனால் கல்விக்கூடங்களோ அந்த நிதியினால் எந்தவிதப்  பயனையும் அடைய வில்லை என்று சாட்சியம் பகர்கின்றன. அப்படி கட்டப்படும் கட்டிடங்களின் தரமும் மிகவும் மோசமாக இருக்கின்றன, எவ்வாறெனில் அந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியை போல. 
கட்டிடம் கட்ட ஒதுக்கப்படும் நிதியில் கல்வி அதிகாரிகளும் , ஒப்பந்ததாரர்களும் பங்கு பிரித்து கொண்டு கொள்ளையடிக்கின்றனர். அரசியல் வாதிகளும் , அதிகாரிகளும் சேர்ந்து மக்கள் பணத்தில் செய்யும் ஊழலினால் ஏழை மாணவர்களின் கல்வி பெரும் உரிமை பறிக்கப்படுவதொடு, ஏழை மாணவர்கள் உயிரையும் பறிக்கும் அளவுக்கு அபாயகரமாகிவிடுகிறது. 

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் 6 ம் வகுப்பு மாணவிகள் மோனிஷா, மகாலட்சுமி , கௌசல்யா மூவரும் கடந்த செவ்வாய் கிழமை ( 28 .02 .2012 )அன்று குடிநீர் பிடிப்பதற்காக பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கருகே சென்ற போது , அந்த தொட்டி இடிந்து விழுந்து மாணவிகள்  மூவரும் பலத்த காயமடைந்தனர். மொனிஷாவின் இடது கால் பலமாக அடிப்பட்டதால் அந்த கால் எடுக்கப்பட்டு விட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு இது வரை எந்த உதவியும் தமிழக அரசு செய்யவில்லை. 

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை என்று தான் இது நாள் வரையிலும் நிலைமை இருந்தது. ஆனால் இப்போது அரசு பள்ளிகளில் பயிலும் எழை   மாணவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்று இந்த நிகழ்வு பறைசாற்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்