வியாழன், 16 ஜூன், 2011

தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகள்: புரட்சித் திட்டத்தில் நேச சக்தி; நடைமுறைத் திட்டத்தில் எதிரி சக்தி

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ),  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்), ம.க.இ.க.-வின் அரசியல் கட்சியான மாநில அமைப்புக் குழு உட்பட அனைத்து எம்.எல். அமைப்புகளுக்கும் இடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இவை அனைத்திற்கும் இடையே ஒரேயொரு ஒற்றுமை உண்டு. அது என்னவென்றால் இக்கட்சிகள் அனைத்தின்
புரட்சித் திட்டத்தின்படியும் தேசிய முதலாளிகள் புரட்சியின் நேச சக்திகள். அவர்கள் நடத்தப் போவதாகக் கூறும் புரட்சியை, தேசிய ஜனநாயகப் புரட்சி, மக்கள் ஜனநாயகப் புரட்சி, புதிய ஜனநாயகப் புரட்சி என்று என்ன பெயரிட்டு அவர்கள் அழைத்தாலும், அவை அனைத்திலும் நேச சக்தியாக தேசிய முதலாளிகள் வருவார்கள். இத்தேசிய முதலாளிகளை புரட்சியின் நேச சக்தியாக வைத்திருக்க பல செயல் தந்திரங்கள் வகுத்து அவர்களை நம்மோடு வைத்திருக்க வேண்டும் என்றும் கூறுவார்கள்.

இவர்கள் தேசிய முதலாளிகளுக்குச் சொல்லும் வரையறையின்படி தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகள் தேசிய முதலாளிகளே. இவர்கள் தரகு முதலாளிகளுக்குச் சொல்லும் வரையறையின்படி பார்த்தாலும் தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகள் தரகு முதலாளிகள் அல்ல; தேசிய முதலாளிகளே. ஆனால் தேசிய முதலாளிகளான தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக இன்று இவர்கள் போராடுகிறார்கள் அல்லது குறைந்தபட்சம் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். 

இவர்களது தேசிய ஜனநாயக அல்லது மக்கள் ஜனநாயக அல்லது புதிய ஜனநாயகப் புரட்சித் திட்டத்தின்படி தங்களது நேச சக்தியான கல்வி முதலாளிகளை - பல செயல் தந்திரங்கள் வகுத்து தங்கள் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டிய கல்வி முதலாளிகளை - இவர்களே எதிர்த்துப் போராட வேண்டியநிலையை இன்றைய வாழ்க்கையின் யதார்த்தம் உருவாக்கியுள்ளது.

இந்தக் கல்வி முதலாளிகள் எதிர்த்துப் போராடப்பட வேண்டியவர்களே. தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகள் ஒருபக்கம் குறைந்த சம்பளம் கொடுத்து ஆசிரியர்கள் - ஊழியர்களையும் மறுபக்கம் அளவுக்கதிகமான கட்டணங்களை வசூலித்து பெற்றோர்களையும் ஒரேநேரத்தில் சுரண்டும் கொடூரமான சுரண்டல்காரர்கள். 

இப்படிப்பட்ட கொடூரமான சுரண்டல்காரர்களை இந்தக் கட்சிகளின் புரட்சித் திட்டம் தங்களின் நேசசக்தி என்று சொல்கிறது. தங்களது புரட்சித் திட்டத்திற்கு உண்மையுள்ளவர்களாக இருந்து இந்தக் கல்வி முதலாளிகளை தங்களோடு கூட்டாளியாக வைத்திருக்க உதவும் செயல்தந்திரங்களை இவர்கள் வகுக்க முடியாதவாறு வாழ்க்கையின் யதார்த்த நிலைமை உள்ளது. நியாயமாகப் பார்த்தால் இந்த யதார்த்த உண்மைக்கு மதிப்பளித்து தங்களது புரட்சித் திட்டத்தை மறுஆய்வுசெய்து தேசிய முதலாளிகளையும் எதிரி வர்க்கமாக ஆக்கி வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். ஆனால் இவர்களோ கட்சித் திட்டத்திற்கும் நடைமுறைச் செயல்பாட்டுக்கும் ஒருசம்பந்தமும் இல்லை என்பதுபோல் செயல்படுவதால், தனியார் பள்ளி-கல்லூரி முதலாளிகள் ஒரேசமயத்தில் இவர்களது புரட்சித் திட்டத்தில் நேசசக்தியாகவும் நடைமுறையில் எதிரியாகவும் இருக்கும் விநோதம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 

"ஓ! நண்பனே, உனது தத்துவத்திற்குத் தலை நரைத்து விட்டது; ஆனால் வாழ்க்கை என்றும் மாறாத பசுமையுடன் இருக்கிறது" என்று கதே-யை மேற்கோள் காட்டும் லெனின்தான் இங்கே நம் நினைவுக்கு வருகிறார்.

3 கருத்துகள்:

  1. தோழர் தாங்கள் சொல்வது சரியான கருத்து,இன்றைய சூழலில் மக்களை கொள்ளையடித்து,கொன்று குவித்து க்கொண்டு இருக்கிற திறந்த பொருளாதார சந்தையை எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன.முதலாளித்துவம் தேசியத்தின் அடையாளத்தில் தனது உற்பத்தி சுரண்டலை மூடிமறைத்துக்கொண்டு இருந்தது ஒரு காலம், ஆனால் இன்று அது உலக ஏகாதியத்தியத்தின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு அடியாள் வேலைபார்க்கவும் தயாராகிவிட்டது. தேசிய முதலாளித்துவம் என்பதே இப்பொழுது இல்லை என்று அடித்துக்கூறலாம்.ஏகாதியபத்தியத்தை ஏற்றுக்கொண்டவனை எப்படி தேசிய முதலாளிவர்க்கமாக பார்க்கமுடியும், இன்று இருக்கிற கல்விமுறையை எடுத்துக்கொள்ளுங்கள் எல்லாம் முன்னேறிய நாட்டுக்கு கழிவு வேலை செய்வதற்க்காக தான் இன்றைக்கு இருக்கிற கல்விமுறையே இருக்கிறது.இப்படி இருக்கையில் தேசியம்,தேசிய முதலாளிவர்க்கம் நண்பன் என்று பார்க்கப்படுவதை கம்யுனிஸ்ட்டுகள் விஞ்ஞான இயக்கவியல்ரிதியில் ஆராயவேண்டிய தேவை இப்பொழுது இருக்கிறது.அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் நகரங்களின் குடியேரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.இன்றைக்கு முதியோர் இல்லமாக கிராமபுறங்கள் மாறிவருகின்றன.தொழிலாளிவர்க்கத்தின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. //இன்று இருக்கிற கல்விமுறையை எடுத்துக்கொள்ளுங்கள் எல்லாம் முன்னேறிய நாட்டுக்கு கழிவு வேலை செய்வதற்க்காக தான் இன்றைக்கு இருக்கிற கல்விமுறையே இருக்கிறது.//

    முற்றிலும் உண்மை.

    ஆனால் "சமச்சீர் பாடத்திட்டம்: ஒரு சின்ன யோசனை" என்ற கட்டுரையில் மெட்ரிக் பள்ளிகளின் பாடத்திட்டத்தையே அரசு பள்ளிகளின் பாடத்திட்டமாக கொண்டுவரலாமே என்று "இயக்கம்" சொல்லுகிறது.

    "சமச்சீர் பாடத்திட்டம்: ஒரு சின்ன யோசனை" என்ற உங்கள் யோசனைக்கான பதில் http://www.vinavu.com/2011/06/14/samacheer-kalvi-injustice/ இந்த சுட்டியில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. Redmeera //தொழிலாளிவர்க்கத்தின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.//என்ற தங்கள் கூற்று முற்றிலும் உண்மை. இந்தியாவில் இன்னமும் நிலப்பிரபுத்துவம் இருப்பதாகக் கூறும் கம்யூனிஸ்டுகள் பார்க்க மறுக்கும் உண்மை.

    பாசிஸ்ட் நானும் அந்த இணைப்பைப் பார்த்தேன். அதில் //நமது நாட்டின் தேவை, மக்களின் தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டோ, வரலாறு முதல் பண்பாடு வரையிலானவற்றைக் கற்பித்து மனிதனை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டோ கல்வியை அணுகாமல், தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு ஏற்ப கார்ப்பரேட் கொள்ளைக்கு ஏற்ப கல்வி மறுவார்ப்பு செய்யப்படுகிறது. இதயமில்லாத மனித எந்திரங்களை உருவாக்கும் அத்தகைய கல்வி முறையைத் திணிப்பதைத்தான் “மேம்படுத்துவது” என்று கூறுகிறார் கல்வி அமைச்சர்.// என்று வினவு கற்பனையில் கோட்டைகட்டி அதில் நின்று கொண்டு //“இப்போதைக்கு மெட்ரிக் பள்ளிகளின் தரமான பாடத்திட்டத்தையே வைத்துக்கொள்ளலாம்” என்று கூறி அவற்றைத் திணிப்பதற்கும், அவற்றையே மேம்படுத்தி அந்த திசையில் கல்வியை எடுத்துச் செல்வதற்குமான வாய்ப்பு அதிகம். உலகமயமாக்கலை முன்னேற்றம் என்று கருதுவோர், இந்தக் கல்வியையும் முன்னேற்றம் என்று கருத வாய்ப்புண்டு. அந்த வகையில் கடுமையானதொரு போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டியிருக்கிறது.// என்று கூறுகிறது.

    முதலில் நாம் இன்று இருப்பது சோசலிச நாடு அல்ல முதலாளித்துவ நாடு என்பதை வினவு வசதியாக மறந்துவிட்டது. ஒரு முதலாளித்துவ நாட்டில் கல்வியின் நோக்கம் மனிதனை உருவாக்குவதல்ல; முதலாளித்துவ உற்பத்திக்கு தேவையான தொழிலாளர்களை உருவாக்குவது. அதுபோல அம்முதலாளித்துவ நாட்டில் வாழும் மக்களுக்கு அக்கல்வியைக் கற்று சிறந்த உழைப்புத்திறன் மிக்க தொழிலாளியாகத் தன்னைத் தயார்செய்து அதிக சம்பளத்தில் ஒரு வேலையைப் பிடிப்பது. அதற்காகத்தான் பெற்றோர்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி தங்கள் பிள்ளைகளை தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். மெட்ரிக் பள்ளிகளின் பாடத்திட்டம் ஆகச்சிறந்த தரமான பாடத்திட்டம் என்பது எங்கள் வாதமல்ல. ஆனால் இந்த வேலைவாய்ப்புச் சந்தையில் போட்டியிட்டு நல்ல வேலையைப் பிடிக்க, அரசுப்பள்ளிப் பாடத்திட்டத்தைவிட ஒப்பீட்டளவில் அது கூடுதல் தரமானது என்பதுதான் எங்கள் வாதம். ஆனால் பெருகிவரும் படித்த வேலைஇல்லாத இளைஞர்களின் கூட்டத்தைக் கண்டு அஞ்சும் ஆளும் வர்க்கம் படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்று திசைதிருப்பி வருகிறது. அதற்காகத்தான் யஷ்பால் கமிட்டி, கல்வியின் நோக்கம் வேலை அல்ல; அறிவுக்காகவே கல்வி என்றது. முத்துக்குமரன் கமிட்டியும் தான் யஷ்பால் கமிட்டியின் வழிகாட்டுதலையே பின்பற்றியதாக வெளிப்படையாகவே சொல்கிறது. யஷ்பால் கமிட்டியும் முத்துக்குமரன் கமிட்டியும் அறிவுக்காகவே கல்வி என்று சொன்னதைத்தான் வினவு மனிதனை உருவாக்கும் கல்வி என்று பசப்பி முதலாளித்துவ சேவை செய்கிறது.

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்