வெள்ளி, 24 ஜூன், 2011

அரசு பள்ளி மாணவன் தற்கொலையும் , ஆசிரியர்களின் ஆணவப்போக்கும்


 சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி  அரசு மேல்நிலை பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் தாசநாயக்கன் பட்டி காலனியை சேர்ந்த சேகர் - அமலா தம்பதியின் கடைசி மகனான   சீனிவாசன்  தன்னுடைய வகுப்பில் கணிதப்பாடம் நடத்தும் ஆசிரியரிடம் அவர் பாடம் எடுப்பது மாணவர்களுக்கு சுத்தமாக  புரியவில்லை என்றும்  புரியும்படி வகுப்பு எடுக்குமாறும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் கணித ஆசிரியரோ மாணவர்கள் சொல்வதை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல், கணிதப்பாடத்தை கரும்பலகையில் எழுதிப்போட்டுவிட்டு சென்றுவிடுவார்.


தொடர்ந்து இதுபோலவே இருந்ததால்  புகார் மனு எழுதி அதில் அனைத்து மாணவர்களிடமும் கையெழுத்து வாங்கி அதை தலைமை ஆசிரியரிடம் அளித்துள்ளனர். அதில்  கணித ஆசிரியர் புரியும் படி பாடம் நடத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவருக்கு பதிலாக வேறு ஆசிரியர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுருந்தார். ஆனால் அந்த புகாரை விசாரித்து  கணித ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவர் சீனிவாசனை தனியாக அழைத்து தமிழ் , வேதியியல் , உயிரியல் , கணித ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து அந்த மாணவனை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அத்தோடு அவரை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து விடுவதாகவும் மாற்று சான்றிதழில் அவரது நடத்தையை பற்றி மோசம் என்று எழுதி விடுவதாகவும், செய்முறை தேர்வுகளில் பெயில் ஆக்கிவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். ஏழை குடும்பத்தை சேர்ந்தவரான (அவரது தந்தை பாத்திரம் அடைக்கும் வேலை செய்பவர்) தனது  வாழ்க்கையே  கல்வியால் தான் உயரும் என்று எண்ணி இருந்த அவர் , ஆசிரியர்களின் மிரட்டலால் தனது வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டதால் இது குறித்து கடிதம் எழுதி வைத்து விட்டு 18 .06 .2011 சனிக்கிழமை,  அன்று தற்கொலை செய்து கொண்டார்.

அரசு ஊழியர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் , வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதையே எரிச்சலோடு தான் செய்கின்றனர். ஆசிரியர் ஊழியர் சங்கங்கள் தங்கள் பொருளாதார கோரிக்கைகளோடு நின்று விடுகின்றனர். மாணவர்கள் கல்வி குறித்த எந்த அக்கறையும் அந்த அமைப்புகளுக்கு இருப்பதில்லை. கல்வி என்பது நாளுக்கு நாள் புதிய முறையில்  உலகம் முழுவதும் மாறி வரும் போது இந்த ஆசிரியர்கள் மட்டும் தங்கள் தகுதியை உயர்த்தி கொள்ளாமல் அப்படியே உள்ளனர். ஆனால் டியுசன் எடுப்பது, கந்துவட்டிக்கு கடன் கொடுப்பது , வீடுகளை கட்டி வாடகைக்கு விடுவது என   பணம் சம்பாதிக்கும் எண்ணம் தான் அவர்கள் மனம் முழுவதும் நிரம்பி உள்ளது. மாணவர்களுக்கு நல்ல கல்வியை தர வேண்டும் என்ற எண்ணம் 90 % அரசு பள்ளியில் வேலை பார்க்கும்  ஆசிரியர்களிடம் கிஞ்சித்தும் இல்லை என்பதே இன்றைய உண்மையாகும்.

கல்வியாளர்  டாக்டர்.வசந்திதேவியின் அறிக்கையின் படி அரசு பள்ளி மாணவர்கள் எழுதப்படிக்க மட்டுமே தெரிந்தவர்களாக தான்  வெளிவருகிறார்கள். கல்வி உரிமை சட்டம் என்ற ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் ஏழை மாணவர்கள் அதிக அளவில் படிக்கும் அரசு பள்ளிகளில் அந்த மாணவர்கள் தங்களுக்கு புரியும் படி பாடம் நடத்த கேட்கக்கூட உரிமையற்றவர்களாக இருக்கின்றனர். அந்த மாணவர்கள் உரிமைக்காக போராட சரியான மாணவர் அமைப்புகள் இங்கு இல்லை என்பதும் உண்மையே ஆகும். அவ்வாறு ஒரு அமைப்பு இருந்திருந்தால் அந்த மாணவனின் உயிராவது  காப்பற்றப்பட்டிருக்கும். அந்த மாணவன்  10 வது  பொது  தேர்வில் 409  மதிப்பெண்கள் பெற்றுள்ளார் . 11 வகுப்பில் அந்த மாணவன் தான் கணித ஆசிரியர் இல்லாத போது மற்ற மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார். அந்த மாணவன் கடிதத்தில் ஒரு சந்தேகத்தை எழுப்பியிருந்தார் , அதாவது கணித ஆசிரியர் பாடம் நடத்துவது புரியவில்லை என்றால் அதை தட்டி கேட்கும் உரிமை  தனக்கு உண்டு என்று தான் நினத்திருந்ததாகவும் அந்த உரிமையின் படியே தான் தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதியதாகவும் , ஆனால் அவ்வாறு எழுதியது பெரிய குற்றமாக பார்க்கப்பட்டது என்றும் தான் அவ்வாறு எழுதியது  தனது தவறாக இருக்காது  என்று  நினைப்பதாகவும், ஆனால் அதுவே தான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக அமைந்து விட்டது, என்றும் தனது தற்கொலையின் மூலம் இது போன்ற ஆசிரியர்களின் அகம்பாவப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தான் நினைப்பதாகவும் அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார். இது பனைமரத்துபட்டியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் இது தான் இன்றுள்ள நிலைமை.

அந்த மாணவனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அரசால்  வழங்கப்பட வேண்டும். அந்த மாணவன் தற்கொலைக்கு காரணமான அந்த ஆசிரியர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களின், இது போன்ற கடமையை செய்யமறுக்கும் போக்கை கண்டிப்போம் , தகுதியற்ற ஆசிரியர்களை அரசு வேலை நீக்கம் செய்ய வேண்டும். தரமான கல்வியை ஏழை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்