செவ்வாய், 14 ஜூன், 2011

சமூக மாற்றம் நோக்கிச் சரியான பாதையில் மார்க்சியச் சிந்தனை மையமும் அதன் 3 ஆம் நாகர்கோவில் கூட்டமும்

 கடந்த மே 22ஆம் தேதி நாகர்கோவில் மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற மார்க்சிய சிந்தனை மையத்தின்  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மீதான விளக்க இரண்டாவது அரங்க  கூட்டத்தில் ஒரு பங்கேற்பகாளனாக நான் கலந்து கொண்டேன். தமிழகத்தில் குறிப்பாக தமிழக இடது சாரி அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளரான தோழர் பொன்னீலன் அவர்களால் நடுவண் ஏற்று நடத்தப்பட்ட கூட்டம் அது. அக்கூட்டம் நாகர்கோவில் மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் போஸ், பிரசாத் மற்றும் தோழர் மகிழ்ச்சி அவர்களின் கூட்டுச் செயல்பாட்டினால் உருப்பெற்று தொய்வுறாத சமூக மாற்றச் சிந்தனையுடைய பல இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த இடது சாரித் தோழர்களின் சீரிய பங்கேற்புடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 சுமார் இரண்டரை மணி நேரம் கலந்து கொண்டோரின் சீரிய பங்கேற்புடன் நடைபெற்ற அக்கூட்டத்தில் சமூக மாற்றத்திற்கான சரியான வழிகாட்டியாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இரண்டாம் பாகமான பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்டுகளும் தீர்க்கமாக விவாதிக்கப்பட்டது.தொழிலாளி வர்க்கப் போராட்ட வரலாற்றின் மிக முக்கிய மாதமான மே மாதத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் மேதினம் அனுஷ்டிப்பதின் முக்கியத்துவத்தை தமது எழுச்சிமிகு உரையின் மூலம் கூட்டத்தில் பங்கேற்ற சி.டபிள்யு.பியின் தென்மாநிலங்களுக்கான செயலாளர் தோழர் ஆனந்தன் அவர்கள் பறைசாற்றினார். இன்றைய நவீன சமூக அமைப்பிலும் உண்மையான பெண் விடுதலை என்பது எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதை எழுச்சியுடன் எடுத்துரைப்பதாக அக்கூட்டத்தில் பங்கேற்ற பெண் தோழர் அவர்களால் சிறப்புடன் பாடப்பட்ட பாடல் அக்கூட்டத்தின் முகவுரையாக அமைந்தது.


       மனிதகுல வரலாறென்பதே எக்காலத்திலும், எச்சமூக அமைப்பிலும் சமூகத்தில் தீர்க்கமுடியாப் பகையோடு போராடிக் கொண்டிருக்கும் இரண்டு முக்கிய வர்க்கங்களுக்கடையிலான வர்க்கப் போராட்டங்களின் வரலாறேயாகும் என்பதை வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் இவ்வுலகுக்கு சமூக விஞ்ஞானப் பார்வை கொண்டு  மார்க்சியமும், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்ஸால் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் தெளிவுபடுத்தின. அதனடிப்படையில் நோக்கும் பொருட்டு உலகம் முழுவதிலும் குறிப்பாக இந்தியாவிலும் உச்ச கட்ட இலாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையும்; சமூக உற்பத்தியனைத்தையும் உருவாக்கி அதன் கைமாறாக கொடுஞ்சுரண்டலை அனுபவித்துக் கொண்டிருக்கும் நவீனத் தொழிலாளி வர்க்கம் ஒருபுறமும், கணம்தோறும் கொடுஞ்சுரண்டலைத் தொழிலாளி வர்க்கத்தின் மேல் கட்டவிழ்த்துக் கொண்டுள்ள ஆளும் முதலாளி வர்க்கம் மறுபுறமுமாக மிகக்கூர்மையடைந்த தொழிலாளி-முதலாளி வர்க்க முரண்பாட்டைக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்புமே நீக்கமற நிலைபெற்றுள்ளது. மேலும் ஒன்றன்பின் ஒன்றாக உலகம் முழுவதிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தீராத முதலாளித்துவச் சந்தை நெருக்கடியும், பொருளாதார மந்த நிலையும், பொருளுற்பத்தித் தேக்கமும் முதலாளித்துவச் சமூக அமைப்பானது அழிந்து கொண்டிருக்கும் அமைப்பாக, அழுகி நாற்றமெடுக்கும் அமைப்பாக இன்று உலகம் முழுவதிலும் மாறிப்போயுள்ளது என்பதை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டுள்ளன.   

          மார்க்சியமும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் உணர்த்தும் உண்மை மேற்கூறியவையாக இருந்தாலும் இன்று இந்தியாவில் செயல்படும் பல்வேறு இடதுசாரி இயக்கங்களும், கட்சிகளும் தத்தம் புரிதலுக்கேற்ற வகையில் பல்வேறு கருத்துகளையும், செயல்பாட்டையும் கொண்டுள்ளன. சரியான சமூக மாற்றத்தை வேண்டுவோர் மத்தியிலும் இந்தியச் சமூக அமைப்பு குறித்து பல்வேறுபட்ட புரிதல்கள் உள்ளன.

      இச்சூழ்நிலையில் உண்மையான சமூக மாற்றத்திற்கானப் போராட்டப் பாதையை மார்க்சியத்தின் சரியான புரிதலின் அடிப்படையில் காணும் பொருட்டு நடைபெற்ற அக்கூட்டம் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் விடுதலையை காண உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் என் போன்றோரின் மனதில் சிந்தனையைச் சீர்தூக்கும் நிகழ்வாகப் பதிந்து போனது. இவை போன்ற அமைப்புகளை தமிழ்நாடு முழுவதிலும் துவங்கும் வண்ணம் அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும்; அதன் அடுத்த கட்டமாக மதுரை மற்றும் ஊட்டியில் இது போன்ற கூட்டங்களை நடத்துவது என்ற முடிவுகளும் ஓர் சமூக மாற்ற ஒளிக்கற்றையாக என் முன்னே தோன்றின.
  
    வளப்படுத்துவோம் மார்க்சிய சிந்தனையை!
   
    வளர்த்துவோம் மார்க்சிய சிந்தனை மையங்களை!
    

1 கருத்து:

  1. இத்த​கைய முயற்சிகள் ​பெரும் உற்சாகத்​தையும் நம்பிக்​கை​யையும் ஏற்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்