திங்கள், 13 டிசம்பர், 2010

இங்கிலாந்தின் சமீபத்திய எழுச்சிமிகு மாணவர் போராட்டம்

  
                           இங்கிலாந்தின் சமீபத்திய எழுச்சிமிகு மாணவர் போராட்டம்


            நவம்பர் 10 மற்றும் 24 ஆம் தேதிகளில், பொருளாதார மந்தநிலை எனும் காரிருள் சூழ்ந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக சூரியன் மறையாத தேசமாய் இருந்த மாபெரும் இங்கிலாந்தில் ஒர் ஒளிக்கற்றை அக்காரிருளை கிழித்துக்கொண்டு வீசத் தொடங்கியுள்ளது.

        ஆம். இங்கிலாந்தின் தற்போதைய கல்விக்கட்டண உயர்வு, கல்விச்சலுகை விலக்கு மசோதாக்களை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்களால் நவம்பர் 10 அன்று துவங்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர் இயக்கம் நவம்பர் 24 அன்று 10 வயது நிரம்பியுள்ள பள்ளி மாணவர்களையும் தன்னுள்ளே ஈர்த்துக்கொண்டுள்ள ஒரு மாபெரும் மாணவர் இயக்கமாக உருவெடுத்துள்ளது.

             மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று கன்சர்வேடிவ் கட்சி அலுவலகத்தையும், பாராளுமன்ற வளாகத்தையும் முற்றுகையிடுகிறார்கள்.கல்வி விரோத மசோதாக்களை எதிர்த்த கோசங்களை எழுப்புகிறார்கள். எதிர்ப்பு கோ­சம் பொருந்திய அட்டைகளை உயர்த்திப் பிடித்து முன்னேறிச் செல்கிறார்கள்.

            இனப்பாகுபாடின்றி அனைத்து மாணவர்களும் போராட்டத்தில் பங்கு பெறுகிறார்கள். புரட்சி கீதங்களை இசைக்கிறார்கள். ஆளும் வர்க்க கருவியான போலீசாருடன் மோதுகிறார்கள். இங்கிலாந்து பாராளுமன்ற வீதி பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள் குவிந்த மாணவர் சமுத்திரமாக காட்சி தருகிறது. ஒவ்வொரு மாணவனும் திரத்தன்மையுடன் பங்கு கொள்கிறான்.


மரணத்தின் பிடியில் முதலாளித்துவ சமூக அமைப்பு

        உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் முன்னிலும் தீவிரமான தற்போதைய பொருளாதார மந்தநிலை ‡ அமெரிக்காவில் தொடங்கி இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா என வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகளைனைத்திலும் கோர உருவமாக உருவெடுத்துள்ளது. இப்பொருளாதார மந்த நிலையின் தீவிர இழப்பீடனைத்தும் மாணவர் உட்பட சமூகத்தின் அனைத்து அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தின் மீதும் திணிக்கப்படுகிறது.

         கொள்ளை லாபம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட இம்முதலாளித்துவ சமூக அமைப்பு மக்களுக்கு இனி எதுவுமே வழங்க முடியாத சமூக அமைப்பாக மாறி விட்டது. அதன் எதிரொலியாகவே கீரிஸ் நாடு மீளமுடியாத பொருளாதார பிரச்னையில் சிக்கியுள்ளது. அமெரிக்காவில் தொடங்கி இந்தியா வரை இப்பொரளாதார மந்த நிலையால் பாதிக்கப்படாத நாடு உலகில் எதுவுமில்லை.
 
          உலகம் முழுவதும் நிலவும் இப்பொருளாதார மந்த நிலை முதலாளித்துவத்தின் பிற்போக்கு மற்றும் செல்லுபடியாகாத்தன்மையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ஓடி ஒளிய வழி தெரியாமல் மரணத்தின் வாயிலில் ஊசலாடிக்கொண்டிருக்கும் இம்முதலாளித்துவ சமூக அமைப்பு தாங்கொண்ணாச் சுரண்டலையும், அடக்குமுறையையும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு மரணப் பெருமூச்சு வாங்கிக் கொண்டுள்ளது.

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரை


       இவையனைத்தும் சேர்ந்துதான் மக்கள் நல அரசாங்கங்கள் என்ற பெயரில் கல்வி, மருத்துவம் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை ஓரளவையினும் சலுகை அளவில் வழங்கிக் கொண்டிருந்த இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட மாணவ, மக்கள் விரோத நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன.

         இவற்றிற்கு எள்ளளவைனும் குறையாமல் இந்தியாவிலும் சரி கல்வி விரோத, தொழிலாளர் விரோத மநோதாக்களும், நடவடிக்கைகளும் ஒவ்வொரு நாளும் அமலாக்கப் படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ‡ இக்கல்வியாண்டு தொடங்கிய காலத்தில் இருந்தே தமிழக அரசாங்கத்தின் கல்வி கட்டண உயர்வு, கல்வி விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மாணவர்களும், பெற்றோர்களும் போராடுவதைக் காண்கிறோம்.

இங்கிலாந்து மாணவர் போராட்டம் வலுப்பெறட்டும்! வெல்லட்டும்!


          நண்பர்களே! தோழர்களே! இனி உலகிற்கு உருப்படியாக ஒன்றுமே வழங்க முடியாத இந்த லாப நோக்க உற்பத்தி முறைக்கு முடிவு கட்ட இயக்கமாக அணி திரள்வோம். பிழைக்கவே பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் இம்முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு சாவு மணி அடிக்க ஒன்றுபடுவோம். போராடுவோம்.

           கிளர்ந்தெழுந்துள்ள இங்கிலாந்து மாணவர் போராட்டத்திற்கு நம் கைகளையும் உயர்த்தி வலுச்சேர்ப்போம். போராட்டம் வலுப்பெற, வெற்றி பெற உரக்க வாழ்த்துவோம்.

                                                                                                            ம. பிரேம் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்