செவ்வாய், 10 செப்டம்பர், 2013

பாரதியிடம் கம்யூனிஸ்ட்டுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் -1

         
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் ’கஞ்சி குடிப்பதற்கு இலாராய்’, ’அதன் காரணங்கள் இவை என்ற அறிவும் இலாராய்’ இருந்த மக்களை, அவர்களது நீண்ட உறக்கத்தில் இருந்து தட்டியெழுப்பி ஒரு சுதேச முதலாளித்துவ அரசை  உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவன் பாரதி.

          இன்று இந்திய முதலாளித்துவத்தின் கீழ் உள்ளடக்கத்தில் கிட்டத்தட்ட அதே நிலமையில் இருக்கும் மக்களைத்  தட்டியெழுப்பி ஒரு புரட்சியின் மூலம் சோசலிச சமுதாயத்தை  உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

   எனவே மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்புவதில், மக்களைத் திரட்டுவதில், வாழ்க்கையின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் இந்த முதலாளித்துவ அரசுக்கு எதிராக மக்களின் கோபங்களை ஒருமுகப்படுத்துவதில்.. என பலவகைகளிலும் அன்று பாரதி கையாண்ட யுக்திகளும் நடைமுறைத் தந்திரங்களும், வழிமுறைகளும் வாழும் முறைகளும் இன்றும்  கம்யூனிஸ்ட்டுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களாகவே இருக்கின்றன.

          அது 1907. பழைய காங்கிரஸின் மனுப் போடும் சகாப்தம் முடிந்து சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்று முழங்கிய சுதேசிய சகாப்தம் துவங்கிய காலம். இதுவரை மனுப் போட்டுப் பார்த்ததில் மக்களுக்குக் கிடைத்த அனுபவங்களைச் சொல்லியே அவர்களை மெல்ல புதிய சகாப்தத்திற்குள் நடத்திச் செல்லும் பாரதியின் வாக்கில் நின்று ஒளிவிடும் உண்மை இதோ:

காங்கிரஸ் சபையும் ‘பல்லவ கிரஹ பாண்டித்யமும்’ அதாவது இலைபறிக்கும் புத்தியும் (’இந்தியா’:01.19.1907)

          ஒரு மனிதன் ஒரு மரத்தை நாசம் செய்ய விரும்பினான். இவன் மிகுந்த விடாமுயற்சியுள்ளவன். ஆனால் முயற்சிக்குத் தகுந்தபடி அறிவுடையவனில்லை. இவன் பின்வருமாறு ஆலோசிக்கலானான். அந்த மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாய்ப் பிடுங்கி எறிந்து விட்டால் கால அளவில் நாசமாய்விடும் என்று இவன் நினைத்தான். இவ்வாறு நிச்சயித்துக் கொண்டு ஒவ்வொரு இலையாக நாள் தவறாமல் ஒரு வருஷ காலம் பறித்துக் கொண்டே போனான். அடுத்த வருஷத்து வசந்த காலத்தின் போது மறுபடியும் மரத்திலிருந்து இலைகளெல்லாம் நன்றாய்த் தழைத்து விட்டன. மரம் முன்னைக் காட்டிலும் வெகு ஷேமமாக இருந்தது. இதன் பேரில் இவனுக்கு, தான் செய்து வரும் முயற்சியிலே அவநம்பிக்கை பிறந்துவிட்டது. கோடரியைக் கொண்டு மரத்தை வேரோடு வெட்டி வீழ்த்தினாலொழிய அது நாசமாக மாட்டாதென்பதைத் தெளிவாக அறிந்து கொண்டான். இது போலவே காங்கிரஸ் சபையையும் சொல்லலாம்.

          இது வரையில் சபை பிரிட்டிஷ் ராஜாங்கத்திலே நமக்குள்ள குறைகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. வருஷந்தோறும் புதிய புதிய குறைகள் ஏற்பட்டு வந்தன. புதிய புதிய நஷ்டங்கள் உண்டாயின. அவற்றையும் சேர்த்துச் சேர்த்து காங்கிரஸ் சபையில் முறையிடலானார்கள். ஒரு பிரதிநிதி ஆப்காரி சட்டத்திலே பெரிய குறைகளிருப்பதாக அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டி முறையிட்டார். மற்றொரு பிரதிநிதி வந்து ராணுவச் செலவை கவர்மெண்டார் சுருக்கியே தீர வேண்டுமென்றார். மற்றொருவர் நிலவரி பளுவாக இருக்கிறதென்றார். மற்றொருவர் இந்தியர்களுக்கு அதிக உத்தியோகங்கள் வேண்டுமென்று பிரர்த்தனை புரிந்தார். இவ்வாறு உப்பு வரி திருத்தம், ஏககாலப் பரீட்ஷைகள், வங்காளப் பிரிவை மாற்றுதல், சட்டசபை திருத்தம், அந்தத் திருத்தம், இந்தத் திருத்தம் என்பதாக நம்மவர்கள் ஒவ்வொரு அம்சமாக எடுத்தெடுத்து ஆலோசனை புரிந்து கஷ்டம் அடைந்தனர். 

          இந்த எல்லாக் குறைகளுக்கும் மூல காரணம் என்ன? அந்நிய ராஜாங்கமல்லவா? அந்நிய ராஜாங்கத்தின் தீமைகளைப் பற்றி ஸ்ரீதாதாபாய் நவுரோஜி மட்டுமேயன்றி, மிஸ்டர் டிக்பி, மிஸ்டர் ஹைண்டுமன், ஸ்ரீரமேஷ் சந்திரதத்தா முதலிய எத்தனையோ அறிஞர்கள் ஓயாமல் அத்தியாயக் கணக்காய் எழுதி வற்புறுத்தியிருக்கிறார்கள். எனவே, நாம் இப்போது கேட்க வேண்டுவதெல்லாம் ஸ்வராஜ்யம் வேண்டுமென்பதே. வாயால் கேட்டவுடனே யாராவது ராஜ்யத்தை ஒப்புக் கொடுத்துவிட்டு ஊருக்குப் போய்விடுவார்களா? ஸ்வராஜ்யம் நமக்குக் கொடுக்கும் வரை நாட்டில் அமைதி இராதென்பதையும், ஸ்வராஜ்யம் கொடுத்தால்தான் ஆங்கிலேய ஜாதியாருக்கு நன்மை உண்டாகுமென்றும் நமது காரியங்களின் மூலமாக விளக்கிக் காட்ட வேண்டும்......... (பாரதி தரிசனம் : 2ஆம் பாகம், பக்.54).

இன்றும் நாம் அந்த இலைபறிக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

          பெட்ரோல் விலையைக் கூட்டாதே, கேஸ் விலையைக் குறை, விலைவாசியைக் கட்டுப்படுத்து, இந்த ஜாதிக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்து, அந்த ஜாதிக்கு இட ஒதுக்கீடு கொடுக்காதே, சிறுபான்மை மதத்தினருக்கு இந்தச் சலுகை வழங்கு அல்லது அந்தச் சலுகை வழங்காதே, இந்தச் சட்டம் இயற்று அல்லது அந்தச் சட்டம் இயற்றாதே, சமச்சீர் கல்வி கொண்டுவா அல்லது கொண்டுவராதே.....என்று நாம் அன்றாடம் பறித்துக் கொண்டிருக்கும் இலைகள் ஏராளம்.

          ஆனால் நமது பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் மூலகாரணமான இந்த முதலாளித்துவ அரசைத் தூக்கி எறிந்துவிட்டால் இவை எல்லாம் தீர்ந்துவிடும் என்ற எண்ணத்தை மக்களிடம் கம்யூனிஸ்டுகள் உருவாக்கவே இல்லை என்றே சொல்ல வேண்டும். மக்கள் இன்னமும் இங்கு தம்முடைய ஆட்சி நடப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இது மக்களாட்சி என்று எல்லோரும் சொல்வதை அவர்கள் உண்மை என்று நம்புகின்றனர். உண்மையில் நடப்பது இந்திய முதலாளிகளின் ஆட்சி என்பதை உழைக்கும் மக்களுக்கு எப்போது புரிய வைக்கப் போகிறோமோ அப்போதுதான் புரட்சிக்கான பாதையில் வெளிச்சக் கீற்றையையாவது நாம் காணமுடியும்.

                                                                                            ...........தொடர்ந்து கற்போம் பாரதியிடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்