வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

வெட்கப்பட வேண்டியது யார் ?

முதலாளித்துவ நாடளமன்றங்கள் வெறும் அரட்டை மடங்கள் என்று தோழர்.லெனின் கூறினார். வேறெந்த நாடுகளை காட்டிலும் அது இந்திய முதலாளித்துவ அரசின் நாடளமன்றங்களுக்கும் , சட்டமன்றங்களுக்கும் சாலப்  பொருந்துவதாக இருக்கும். இங்கு அனைவருக்கும்  வாக்களிக்கும் உரிமை உள்ளது, இது தான் உண்மையான மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்திய ஆளும் வர்க்கம் அடிக்கடி கூறிக்கொள்ளும். ஆனால் இங்கு ஆளும் வர்க்கம் முன் நிறுத்தும் மோசமானவர்களில் யாரவது ஒருவருக்கு  வாக்களிக்கும் உரிமை மட்டும் தான் மக்களுக்கு உள்ளது , ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி மாறினாலும், ஆளும் வர்க்கத்தின் நலன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதில் மத்திய அரசுகளும் , மாநில அரசுகளும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. 

விலை வாசி ஏற்றம் தடுக்கப்படும், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும், ஊழல் இருக்காது என்று பல்வேறு முழக்கங்களை வைத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த தற்போதைய ஆளும் கட்சியும் , தேர்தலில் ஆளும் கட்சியின் கூட்டணி  கட்சியாகவும், தற்போது பிரதான எதிர் கட்சியாகவும் இருக்ககூடிய கட்சியும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்ட தொடரில் மக்கள் பிரச்னைகள் பற்றி உருப்படியாக எதையும்  பேசாமல், உன்னோடு கூட்டணி வைத்ததற்கு நான் வெட்கப்படுகிறேன், வேதைனைப் படுகிறேன் என்று மாறி மாறி வசை பாடுகின்றன. மிகவும் அநாகரிகாமான முறையில் இரண்டு கட்சி உறுப்பினர்களும் நடந்து கொள்கிறார்கள். 

மக்கள் நலன் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் , பால், பஸ் கட்டண விலையை பல மடங்கு தமிழக அரசு கூட்டியுள்ளது. மின்சார கட்டணத்தை இரண்டு மடங்கு கூட்டப் போகிறது, தினம் தினம் கொலை , கொள்ளை என்று தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு கிடக்கிறது, சென்ற அரசில் நடந்த ஊழல்களை பல்வேறு தரப்பினர் ஆதாரத்தோடு இந்த அரசிடம் கொடுத்த போதும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர், ஆனால் அவர்களின் குரல் வெளியே தெரியாமல் முடக்கப்படுகிறது. தான்தோன்றி தனமாக சென்ற அரசு அறிவித்த திட்டங்களில் நல்ல திட்டங்களையும் மாற்றி அறிவிக்கிறது. இவ்வாறு சட்டமன்றத்தில் பேச ஆயிரம் பிரச்னைகள் இருந்த போதும், அதை பற்றி எதுவுமே பேசாமல் அனைத்து கட்சிகளும் இதை அரட்டை மடங்களாகவும் , சந்தை கூடங்களை போலவும் ஆக்கி கொண்டு இருக்கிறதே தவிர , இந்த சட்டமன்றங்களினால் உழைக்கும் மக்களுக்கு யாதொரு நன்மையையும் இல்லை என்பதையே நிரூபிக்கிறது. 

உண்மையிலையே வெட்கப்பட வேண்டியது தற்போதைய ஆளும் கட்சியோ, அல்லது பிரதான எதிர் கட்சியோ அல்லது அதன் தலைவர்களோ அல்ல , இவர்களுக்கு எல்லாம் ஒட்டு போட்டு சட்டமன்றதிற்கு அனுப்பி வைத்த மக்கள் தான் வெட்கப்பட வேண்டியவர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்