வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கட்டுச் சோற்றுக்குள்ளிருந்து வெளியேறும் பூனை: மாவோவின் கலாச்சாரப் புரட்சிக்கு எதிராக பிரகாஷ் காரத்


சி.பி.ஐ.யிலிருந்து பிரிந்தவுடன் சி.பி.ஐ.(எம்) கட்சி சர்வதேசப் பிரச்னைகளில் நிலைபாடுகள் எதையும் உடனடியாக எடுப்பதில்லை என்ற நிலைபாட்டினை எடுத்தது. அதன்மூலம் அக்கட்சி அப்போது தீவிரமடைந்து வந்த ரஷ்ய, சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டின் பின்னணியில் இவ்விரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் எந்தக் கட்சியினர் நிலையைத் தாங்கள் ஆதரிக்கிறோம் என்பதை அறிவிக்காமல் தள்ளிப்போட விரும்பியது. இதுவே ஒரு சந்தர்ப்பவாத முடிவு. இது அப்பட்டமான திருத்தல்வாதப் பாதையில் சென்று கொண்டிருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் மாசேதுங் மேற்கொண்ட மார்க்சிஸத்தை திருத்தல் வாதத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியை ஆதரிப்பதில் அவர்கள் காட்டிய தயக்கமே தவிர வேறெதுவுமில்லை


தற்போது அந்த நிலைபாட்டிலிருந்து ஒரு விசயத்தில் மாறுபட்டு சர்வதேசக் கம்யூனிஸ்ட்களை இனம் பிரிக்கும் மிக முக்கியமானதொரு பிரச்னையில் சி.பி.ஐ.(எம்) கட்சியின் பொதுச் செயலாளர் திருவாளர். பிரகாஷ் கரத் அவர்கள் தனது நிலையை திருவாய் மலர்ந்து தெரிவித்துள்ளார். லால்கர் பகுதியில் தற்போது நடந்துவரும் சி.பி.ஐ.(எம்) மற்றும் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) கட்சிகளுக்கிடையிலான மோதல் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் “இந்திய மாவோயிஸ்ட்கள் சீனாவில் கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் தோன்றிய இடதுசாரி பிளவுவாதப் போக்கினை கவ்விப்பிடித்துக் கொண்டுள்ளனர். அந்த நாடே(சீனாவே) தற்போது அதனைக் கைவிட்டுவிட்டது” என்று கூறியுள்ளார்.

திருவாளர். பிரகாஷ் கரத் அவர்களை கலாச்சாரப் புரட்சி தனிப்பட்ட முறையில் பாதித்திருந்தால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஏனெனில் அதன் ஒரு அம்சம் மாவோ தலைமை தாங்கிய மக்கள் சீனத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருந்தவர்களிடையே நிலவிய அதிகாரவர்க்க மனநிலையை எதிர்த்துக் கடுமையாகப் போராடுவது என்பதே. அதனால் அவரையறியாமலே கூட கலாச்சாரப் புரட்சிக்கு எதிரான மனநிலை அவரிடம் தோன்றியிருக்கலாம். யதார்த்தத்தில் கலாச்சாரப் புரட்சியைத் தொடங்கிவைத்து நடத்தியவர் தோழர் மாவோ; மாவோவின் மறைவிற்குப்பின் அதனைக் கடுமையாக எதிர்த்தவர் சீனாவில் தற்போது பின்பற்றப்படும் முதலாளித்துவப் பாதைக்கு அடித்தளமிட்ட டெங்சியோபிங். கலாச்சாரப் புரட்சி குறித்து தனது எதிர்ப்பினைத் தற்போது வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் டெங்சியோபிங் அணியில் தன்னை பிரகாஷ் கரத் வெளிப்படையாக எவ்வித ஒளிவுமறைவுமின்றி இணைத்துக் கொண்டுள்ளார். அத்துடன் தற்போது சீனாவில் ஆட்சியிலிருக்கும் முதலாளித்துவத்தை அமுலாக்கும் கூட்டம் அதனைக் கைவிட்டு விட்டது என்று உவகையுடன் குறிப்பிடுவதன் மூலம் அதை இன்னும் உறுதி செய்கிறார். இறுதியாக அவரது கட்சி சர்வதேச நிலவரம் குறித்து நிலைபாடு எடுப்பதை ஒத்திப்போட்டதன் பின்னணியில் இருந்த சந்தர்ப்பவாத நிலைபாடு தற்போது சந்தேகத்திற்கிடமின்றி அம்பலமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்