செவ்வாய், 10 ஜனவரி, 2012

நினைவில் நிற்கும் மனிதர்கள் - எஸ்.எஸ்.கண்ணன்


சமூகப் பிரச்னைகளில் அக்கறையோடு இருப்பவர்களுக்கு முதல் எதிர்ப்பு தற்போதெல்லாம் அவர்களின் பெற்றோர்களிடமிருந்துதான் வருகிறது. அதிலும் குறிப்பாகத் தாய்மார்கள் கண்ணீர் வடித்தேனும் சமூக அக்கறையுடன் செயல்படும் தங்களது பிள்ளைகளை அப்பாதையில் செல்லவிடாமல் அதிகபட்சம் தடுத்து விடுகிறார்கள். இதைப் பார்த்துப் பார்த்து பழகிப்போன நமக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் நடந்ததாக ஒருவரால் கூறப்பட்ட நிகழ்ச்சியைக் கேட்டபோது அப்பாடா இது போன்ற நிலை எல்லாக் காலங்களிலும் நிலவியிருக்கவில்லை என்ற மனதிற்கு இதமான ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஒரு தந்தை தன் மகனுக்கு கிண்டியிலிருந்த பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான மதிப்பெண்கள் இருந்தும், அவர் சென்னையைச் சேர்ந்தவராக இருந்தும் வாரணாசி ஹிந்துப் பல்கலைகழகத்திற்கு அவனை படிக்க அனுப்புகிறார்.

அவ்வாறு அவர் படிக்க அனுப்பியதற்கான காரணம் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் கிண்டியிலிருந்த பொறியியல் கல்லூரி வெள்ளை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. தன் மகன் வெள்ளையரின் கல்வி நிறுவனங்களுக்கு மாற்றாக தேசியத் தலைவர்களால் உருவாக்கப்பட்ட கல்லூரி ஒன்றில் தான் படிக்க வேண்டும் என்ற எண்ணம்.

அதைக் காட்டிலும் மிகமுக்கிய விசயம் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கம்யூனிஸ்ட்கள் அந்த இயக்கத்தில் பங்கேற்கவில்லை அதற்கான காரணம் ஹிட்லர் சோவியத் யூனியனைத் தாக்கத் தொடங்கியவுடன் சோசலிசத் தாய் நாட்டை நாசிசத்திலிருந்து காப்பாற்ற அணி திரளுமாறு உலகத் தொழிலாளருக்கு மாபெரும் தலைவர் தோழர் ஸ்டாலின் விடுத்த அறை கூவலை இந்திய கம்யூனிஸ்ட்கள் தவறாகப் புரிந்து கொண்டதே.

அந்நிலையில் சோவியத் யூனியனும் நம்மை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் பேரரசும் ஹிட்லரை எதிர்த்த போரில் ஓரணியில் இருந்தார்கள். அவ்வாறு ஓரணியில் இருந்த போதும் ஜெர்மன் துருப்புகளின் ஒட்டுமொத்தத் தாக்குதலுக்கு ஆளாகியிருந்த சோவியத் யூனியனுக்கு பெருமூச்சு விடும் இடைவெளி தரக்கூடிய விதத்தில் இன்னொரு போர்முனையில் ஜெர்மனிக்கெதிராக தாக்குதலைத் தொடங்குமாறு இங்கிலாந்தையும் , அமெரிக்காவையும் பலமுறை தோழர் ஸ்டாலின் வற்புறுத்திய போதும் அந்நாடுகள் அதனைச் செய்யவில்லை. ஜெர்மனியும், சோவியத் யூனியனும் கடும் சண்டையிட்டு ஓய்ந்து போகட்டும். அவ்வாறு அவ்விரு நாடுகளும் ஓய்ந்திருக்கும் நிலையில் போரைத் துவக்கி பாசிஸத்தை ஒருபுறமும், சோசலிச சோவியத் யூனியனை மறுபுறமும் ஒருசேர ஒழித்துவிடலாம் என்ற எண்ணத்தில் அந்த நாடுகள் இருந்தன.

இந்த நிலையில் தோழர் ஸ்டாலின் விடுத்த சோசலிஸத் தாய்நாட்டைக் காப்பாற்ற அணிதிரளுங்கள் என்ற அறைகூவலை அப்போது ஒன்றாய் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இங்கு நிலவிய வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போர் உக்கிரமடைந்திருந்த நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அமல்படுத்த முயன்றிருக்க வேண்டும். அதாவது அந்த நிலையில் விடுதலைப் போரை உக்கிரமாக நடத்தி விடுதலை உடனே கிடைத்திருக்கும் நிலையை ஒருவேளை ஏற்படுத்தியிருந்தால் அவ்வாறு விடுதலை பெற்ற இந்திய அரசை நாசிசத்திற்கெதிராகவும், சோவியத் யூனியனுக்கு ஆதரவாகவும் எந்தவித ஊசலாட்டமுமின்றி நிறுத்தச் செய்திருக்கலாம். அதைவிடுத்து எந்திர கதியில் ஸ்டாலின் விடுத்த அறைகூவலைப் புரிந்து கொண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் வாரணாசி ஹிந்துப் பல்கலைகழகத்தில் பயின்ற பல மாணவர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு விடுவர் என்ற அச்சத்தில் வெள்ளை அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். ஆனால் சென்னையிலிருந்து அங்கு பொறியியல் படிப்பு படிக்கச் சென்ற அந்த மாணவன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தொடர்பு கொண்டிருந்ததால் அவ்வியக்கம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காததைக் கருதி வெள்ளை அரசின் காவல்துறை அந்த மாணவனைக் கைது செய்யவில்லை. அந்த நிலையில் சென்னையில் இருந்த தனது வீட்டிற்கு வந்த அந்த மாணவனை அவனுடைய தந்தை இனிய முகத்தோடு வரவேற்கவில்லை. அவர் கூறினார். நீ வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு கைதாகியி ருந்தால் நான் மிகவும் மகிழ்வுற்றிருப்பேன். அதைச் செய்யாமல் நான் அந்த இயக்கத்தில் இருந்தேன், இந்த இயக்கத்தில் இருந்தேன் என்று இங்கு வந்து நிற்கிறாய் என்று திட்டினார்.
அதன் பிறகு அந்த மாணவன் சென்னை மாகாண மின்வாரியத்தில் பொறியாளராகப் பணியமர்ந்தார். விடுதலை பெற்ற இந்தியாவில் அரசுடைமையாக்கப்பட்டதாக விளங்கிய அந்த மின்வாரியத் துறையில் மிகுந்த அக்கறையுடனும், பொறுப்புடனும் பணியாற்றினார்

புதிதாகத் தொடங்கப்பட்ட பல மின் திட்டங்களில் பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு அக்கறையுடன் செயல் பட்டார். அவர் ஒரு பொறியாளர் போராட்டமொன்றில் கலந்து கொண்டபோது அப்போதைய தமிழ்நாடு அரசாங்கம் பொறுப்பும் அக்கறையுமற்ற போக்கில் போராடும் பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை விட்டது. அத்தகைய அறிக்கையினைப் பார்த்த அந்த பொறியாளரின் தாய் எத்தகைய இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு கடமையுணர்வுடன் நீ வேலை செய்கிறாய் என்பதை நான் நீ கூறிக் கேட்டிருக்கிறேன். இருந்தும் இந்த அரசாங்கம் உங்களைப் பொறுப்பில்லாதவர்கள் என்று கூறுகின்றது. இந்த அரசின் கீழ் நீ வேலை செய்ய வேண்டாம். உடனடியாக இராஜினாமாக் கடிதம் கொடுத்துவிட்டு வந்துவிடு என்று கூறினார்கள். உண்மையிலேயே எத்தனை பெருமிதம் இந்த தாய், தந்தையரை நினைத்துப் பார்க்கையில் நமக்கு ஏற்படுகிறது. இவர்கள் வாழ்ந்த மண்ணில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உவகை மேலோங்குகிறது.

இத்தகைய பெருமைமிக்க பெற்றோருக்கு பிள்ளையாகப் பிறந்து தற்போது சென்னை சி.ஐ.டி. நகர், வடக்கு சாலை, நந்தனத்தில் வசிப்பவர்தான் கண்ணன் ஐயா என்று அவரின் பரிவு மற்றும் ஆதரவின் அரவணைப்பில் இருக்கும் பார்வையற்ற கல்லூரி மாணவர்களால் அன்புடன் அழைக்கப்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளாராக இருந்து ஒய்வு பெற்ற தோழர் எஸ்.எஸ்.கண்ணன் அவர்கள் ஆவார். அவருடைய பெருமைக்குரிய பெற்றோர் திரு.சீனிவாசன் ஐயங்கார், லட்சுமியம்மாள் ஆவார்கள்.

தற்போது தனது இல்லத்தில் பல அரிய மார்க்சிய நூல்களை ஒருங்கிணைத்து கார்ல் மார்க்ஸ் பெயரில் நூலகம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். பொதுவாக அரசியல் பொருளாதாரப் புத்தக வாசிப்பு என்பது அரிதாகிவரும் இந்நாளில் வயதாகிவிட்ட நிலையிலிருக்கும் அவர் தான் விரும்புமளவிற்கு தன்னால் படிக்க முடியவில்லை என்று ஆதங்கத்துடன் கூறுகிறார். தான் வேலை செய்த காலத்தில் மிகப் பொறுப்புணர்வுடன் பணியாற்றியவராகவும் அதே சமயத்தில் தான் வகிப்பது அதிகாரி என்ற நிலையிலுள்ள பதவி என்பதற்கு எந்தவொரு முக்கியத்துவமும் தராமல் சரியான விசயங்களுக்காக உரிய முறையில் போரிட்டவராகவும் அவர் இருந்திருக்கிறார்.

தற்போதும் குறிப்பாகப் பார்வையற்றோருக்குக் கல்வி பயில உதவியும் செய்து கொண்டிருக்கிறார். அவரது இல்லம் அங்கு வரும் பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு அவர்களின் சொந்த இல்லம் போல் விளங்குகிறது. அன்புப் பெருக்குடன் அவர் குறித்த உயர்வான விசயங்களை சிறிது தயக்கத்துடன் அவர் வருகிறாரா என்று பார்த்துப் பார்த்தே அவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அவருக்கு அவர் குறித்த இதுபோன்ற தனிமனித ரீதியில் சிறப்புச் சேர்க்கும் விசயங்களை பிறரிடம் பேசுவது பிடிக்காதாம். விளம்பரத்தை இந்த அளவிற்கு வெறுக்கும் உயர்ந்த மனிதர்கள் இந்த கால கட்டத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தங்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும் பெருமையை எங்களுக்கு நீங்கள் வழங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டபோது என்னைப்பற்றிச் சிறப்பாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது. நான் சாதிக்க வேண்டிய எதையும் சாதிக்கவில்லை. பார்வையற்றோரைத் திரட்டி அவர்களது அமைப்பை ஒரு இயக்கப் பாதையில் வழிநடத்தி பெறவேண்டிய உரிமைகளை அவர்கள் தலை நிமிர்ந்து பெறவேண்டும் என்று விரும்பினேன். அதுவும் கூட எவ்வளவு தூரம் சரியாக நடந்தது என்று கூறமுடியாது.

நான் நிறைய எழுதியிருக்க முடியும், அதையும் கூட நான் சரியாகச் செய்யவில்லை என்று வருத்தம் கலந்த சுய விமர்சனத் தொனியில் அவர் பேசியவற்றை நாங்கள் குறிப்பெடுக்கத் தொடங்கினோம். உடனேயே எதற்காக குறிப்பெடுக்கிறீர்கள் என்னைப் பற்றி எதையும் உங்கள் பத்திரிக்கையில் எழுதி விடாதீர்கள். அவ்வாறு எழுத நான் அருகதை உடையவனல்ல என்று கூறி எழுத விடாமல் தடுத்து விட்டார்.

சிறப்பிற்குரிய பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்து அடுத்தவர் எவருக்கும் தெரியாமல் பல அரசியல், பொதுக் காரியங்களை ஆற்றி இன்றைக்கும் எங்களைப் போன்றோரின் அறிவுப் பசிக்கு அமுத சுரபியாக விளங்கும் ஒரு நூலகத்தையும் மிகுந்த சிரத்தையுடன் பராமரித்துக் காத்து நடத்திவரும் அவருடன் செலவழித்த நேரம் எங்கள் வாழ்க்கையில் கருத்திற் கொள்ளக்கூடிய நேரமாகவே மனதில் நிறைந்திருந்தது.

அவருடன் பேசிக் கொண்டிருந்த முப்பது , நாற்பது நிமிடங்கள் எங்களால் செலவிடப்பட்ட மிக பயனுள்ள நேரங்களில் ஒரு சிறப்பான பகுதி என்று மனதில் பட்டது. அவர் கூறிய வெகு சில வி­சயங்களைக் கூட எழுத்தில் பதிவு செய்யாமல் இருந்தால் அது ஒரு குற்றம் போல் மனதில் பட்டது. எனவேதான் எங்களது நினைவிலிருந்த அவர் குறித்த விசயங்களை இங்கு சிறிதளவு பதிவு செய்துள்ளோம். அதுவும் அவரது விருப்பத்திற்கு விரோதமாக.

அவருடைய தந்தை குறித்த உணர்வு எங்கள் மனதில் மேலோங்கிய நிலையில் அவர் குறித்து இன்னும் ஏதாவது கூறுங்கள் என்று நாங்கள் கேட்டபோது அவர் கூறினார். என் தந்தை அவரது இறுதிக் காலத்தில் உடல் நலிவுற்று கோமா நிலைக்கு சென்றுவிட்டார். நாங்கள் சிகிச்சை செய்து அவரைக் காப்பாற்றினோம். காப்பாற்றியவுடன் உணர்வு மீண்ட சில நாட்களுக்குப் பின்பு என் தந்தை என்னைத் தனியாக அழைத்துக் கூறினார்: ஒரு மனிதன் சமூக ரீதியாக உபயோக மற்றவனாக ஆகிவிட்டால் அவன் வாழக்கூடாது. எனவே இனிமேல் இவ்வாறு நான் கோமா நிலைக்குச் சென்றால் வைத்தியம் பார்க்காதே. என்னை என் மன விருப்பப்படி இறக்க அனுமதித்துவிடு என்று. இது அவர் குறித்து என் மனதில் நிற்கும் மறக்க முடியாத விசயம் என்று எஸ்.எஸ்.கண்ணன் அவர்கள் கூறினார். அப்போது அவர் முகத்தில் இருந்த புன்முறுவல் இப்போதும் எங்கள் மனதில் நிறைந்துள்ளது.

தங்களது பொது வேலைகளில் துணைவியார் உறுதுணையாக இருந்திருக்கா விட்டால் நீங்கள் இந்த அளவிற்குப் பொதுப் பணிகளை செய்து கொண்டிருக்க முடியாதே எனவே அவர்கள் குறித்து ஒரு வார்த்தை என்று நாங்கள் கேட்டபோது மிகவும் சிறப்பாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. நான் இப்போது இருக்கும் இந்த இல்லமே என் துணைவியாருடையது தான் என்று கூறினார்.

சராசரி மனிதர்களைச் சந்தித்து, சந்தித்து அவர்களின் செக்குமாட்டுத் தனமான வாழ்க்கையினைப் பார்த்துப் பார்த்து சலித்தும் , புளித்தும் போயிருந்த எங்களுக்கு ஒரு வேறுபட்ட சிறப்பான மனிதரின் வேறுபட்ட சிறப்பான அனுபவங்களைக் கேட்டது ஒரு மகிழ்வுடன் கூடிய மாற்றமாக இருந்தது.

(மாற்றுக்கருத்து இதழில் வெளிவந்தது )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்