ஜூலை - ஆகஸ்ட் ,2005 மாற்றுக்கருத்து
கடந்த 02 .07 .2005 அன்று சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோரா வெடி விபத்து குறித்து உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர். வரதராஜ் அவர்களும் விருதுநகர் மாவட்ட பட்டாசு தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் தோழர்.தங்கராஜ் அவர்களும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி -சாத்தூர் ரோட்டில் உள்ள அனுப்பங்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மீனம்பட்டிக்கு அருகிலுள்ள வடிவேல் பயர் ஒர்க்ஸ்ஸில் 02 .07 .2005 ஆம் தேதியன்று ஏற்பட்ட ஒரு கோர வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.தொழிற்சாலை புனரமைக்க முடியாத அளவிற்கு முழுமையாக சேதமடைந்து விட்டதால் அதில் வேலை செய்யும் அனைத்துத் தொழிலாளரும் வேலையிழந்துள்ளனர்.
சிவகாசி வட்டாரத்தில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் இது போன்ற கோர விபத்துகள் அடிக்கடி நேர்கின்றன.அதற்கான காரணம் என்ன என்பது இத்தருணத்தில் நினைவு கூறப்பட வேண்டும் பட்டாசுத் தொழிற்சாலைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுவதால் தான் இவை அடிக்கடி நேர்கின்றன.
1 . பட்டாசு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் ஒரு அறையில் ஒரு சமயத்தில் 5 கிலோ அளவிற்கு வைத்திருக்கலாம் என்று விதி கூறினால் அதைப் போல பல மடங்கு அப்பொருள்கள் ஒவ்வொரு அறையிலும் வைத்திருக்கும் , பயன்படுத்தும் போக்கு நிலவுகிறது.
2 . ஒரு அறையில் 4 பேர் மட்டும் வேலை செய்யலாம் என்று விதி கூறினால் அந்த அறையில் 30 பேருக்குக் குறையாமல் வேலை செய்வது நடைமுறையில் உள்ளது.
3 .வேதிப்போருட்கலவையில் செய்யப்பட்ட பட்டாசு திரிகளை அறுப்பதற்கு பித்தளை கத்திகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக இரும்புக் கத்திகள் பயன்படுத்தப் படுகின்றன.
4 .பட்டாசு தயார் செய்யும் அறைகளின் நான்கு வாயில்களும் திறந்தே இருக்க வேண்டும் என்ற விதியும் அதன் கதவுகளின் தாழ்ப்பாள்களும் ,ஆணிகளும் தாமிரத்தினால் ஆனவையாக இருக்க வேண்டும் என்ற விதியும் கடைபிடிக்கப்படுவதில்லை.
5 .பட்டாசுத் தொழிற்சாலை ஒவ்வொன்றிலும் முறையாக வேதியல் கற்ற ஒரு வேதியியல் வல்லுநர் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும் என்ற விதி பல பட்டாசுத் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படுவதில்லை.
6 .தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடித்துச் சோதனை செய்வது காயவைக்கப்பட்ட பட்டாசு, வேதிப்பொருள்கள் அனைத்தும் அறைகளில் வைத்து பூட்டப்பட்டு தொழிலாளர்கள் அனைவரும் ஆலையை விட்டுச் சென்ற பின்னர் இரவிலையே நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுவதில்லை .
இந்த அனைத்து விதி மீறல்களும் ஏற்கனவே ஏறக்குறைய அனைத்து தொழிற்சாலைகளிலும் நடைமுறையில் இருந்து வந்திருந்தாலும் சமீபகாலங்களில் குறிப்பாக கான்ட்ராக்ட் தொழிலாளர் முறை பரவலாக அமலாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தான் மிக அதிகமாக வருகின்றன. எந்தப் பொறுப்பையும் பட்டாசு ஆலை அதிபர்கள் எடுத்துக் கொள்ளாது காண்ட்ராக்ட் முறையில் விட்டு விடும் போக்கு அனைத்துப் பட்டாசு ஆலைகளிலும் மிக அதிக அளவில் பின்பற்றப்படுகிறது. பட்டாசுத் தயாரிப்பில் நேரடியாக ஈடுபடாத விரல் விட்டு எண்ணக்கூடிய காண்டரக்டர்கள் தான் பட்டாசு ஆலைகளின் பதிவு பெற்ற தொழிலாளர்களாக காட்டப்படுகின்றனர். நேரடியாக ஈடுபட்டுவருவபருக்கு விபத்து நேர்ந்தால் பாதிப்பிற்கு ஆளாகுபவருமான பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டாசு தொழிலாளர்களாகப் பதிவு செய்யப்படுவதே இல்லை. அவர்கள் பி.எப் ., இ.எஸ் .ஐ., போன்ற தொழிலாளர்களுக்கான எந்த திட்டத்திலும் கொண்டு வரப்படுவதில்லை.
விழிப்புணர்ச்சி தரும் பதிவு...நல்ல தகவல்..... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
பதிலளிநீக்குஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com